சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவது என்பது தீராத சிக்கலாகவே தமிழ் அச்சுலகில் இருந்துவருகிறது. பலரும் தத்தமது விருப்பப்படி இதைக் கையாளலாம் என நினைப்பதாகத் தெரிகிறது. ‘ஆறுதல் அளிக்கின்றன’ என்னும் சொற்களைப் பிரித்தும் எழுதலாம், ‘ஆறுதலளிக்கின்றன’ எனச் சேர்த்தும் எழுதலாம். பிரிப்பதால் இங்கே பொருள் மாறுபாடு ஏற்படவில்லை. அளித்தல் என்னும் வினை சேர்த்தாலும் பிரித்தாலும் ஒரே பொருளைத் தருகிறது.
ஆனால், இருக்கிறது, வருகிறது போன்ற வினைச் சொற்கள் அப்படி அல்ல. ‘வந்திருந்தான்; என்னும்போது இருந்தான் என்பது துணைவினையாகவும் ‘வந்து இருந்தான்’ என்னும்போது தனி வினையாகவும் மாறுவதுடன், பொருளும் மாறுகிறது.
‘மதுரையிலிருந்து வந்தார்’ என்பதை ‘மதுரையில் இருந்துவந்தார்’ என்று எழுதினால் பொருள் மாறுகிறது. முதல் வாக்கியம் (மதுரையிலிருந்து) வருதல் என்னும் வினையைக் குறிக்கிறது. இரண்டாவது வாக்கியம் (மதுரையில்) அவர் வசித்துக்கொண்டிருந்ததைக் குறிக்கிறது.
வா என்னும் வேர்ச் சொல், வருதல் என்னும் பொருளைத் தர வேண்டிய இடங்களில் பிரித்து எழுத வேண்டும். வா, வந்தார், வருகிறார், வருவார் என்றெல்லாம் இது பல வடிவம் எடுத்தாலும் வருதல் என்னும் பொருளைக் குறித்தால் பிரித்து எழுத வேண்டும். மாறாக, தொடர்நிகழ்வைக் குறிக்கும் இடங்களில் பயன்படும்போது சேர்த்து எழுத வேண்டும். அதாவது, வருதல் என்னும் பொருளைத் தராமல் மாறுபட்ட பொருளைத் தருவதால், குழப்பம் ஏற்படாமல் இருக்க இப்படிச் செய்ய வேண்டும்.
இருந்துவந்தார், பணிபுரிந்துவந்தார், வணிகம் செய்துவந்தார், பதவி வகித்துவருகிறார் ஆகிய வாக்கியங்களில் வருதல் என்னும் பொருளுக்கு வேலை இல்லை. குறிப்பிட்ட நபர் தொடர்ந்து செய்யும் செயலைக் குறிக்க இங்கே வந்தார், வருகிறார் போன்ற சொற்கள் பயன்படுகின்றன. இங்கே வா என்னும் வேர்ச் சொல், தனி வினையாக வரவில்லை. வருதல் என்னும் பொருளைத் தரவில்லை. இன்னொரு வினைச் சொல்லுக்குத் துணையாக வருகிறது. எனவே, சேர்த்து எழுத வேண்டும்.
துணை வினை, தனி வினை என்பது மேலும் பல சிக்கல்களைக் கொண்ட வகைப்பாடு. ஒவ்வொன்றையும் துணை வினையா, தனி வினையா எனப் பார்த்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் இயலாது. ஒரு சொல்லை அதற்கு முன்பு வரும் சொல்லுடன் சேர்த்து எழுதினால், அதன் வழக்கமான பொருள் மாறுகிறதா இல்லையா என்பதுதான் எளிமையான அளவுகோல். மாறும் என்றால் சேர்த்து எழுதலாம்.. மாறாது என்றால் பிரிக்கலாம்.
கொள், தான், மாட்டாது, வேண்டும், செய்து, கூட, கூடும், பார் என மேலும் பல சொற்கள் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago