குடிக்க 18... வாங்க 21
1937ம் ஆண்டு மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1950ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47வது பிரிவில் மருத்துவ காரணங்களைத் தவிர வேறு எக்காரணத்துக்கும் போதையூட்டும் பானங்கள் பருகுவதைத் தடை செய்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லை. மாறாக, மாநில அரசுகளே மதுவிற்கும் போக்குதான் உள்ளது.
தமிழக அரசோ உச்சகட்டமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் பட்டிதொட்டி எல்லாம் மது விற்பனையை கொடிகட்டிப் பறக்கச் செய்கிறது. ஓர் ஆண்டு கலால் வரி வசூல் மட்டும் 25000 கோடி ரூபாய் என்றால் மொத்த மது விற்பனை எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். இன்று பத்திரிகைகளைப் புரட்டினால் பள்ளி மாணவர்கள்கூட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதைக் காணலாம்.
மதுக்கடைகளில் முழு பாட்டிலும், அத்துடனுள்ள மதுக்கூடங்களில் சில்லறை விற்பனையும் நடக்கிறது. இக்கடைகள் 2003ம் ஆண்டு தமிழ்நாடு சில்லறை (கடை மற்றும் மதுக்கூடம்) விற்பனை விதிகளின்படிதான் இயங்க வேண்டும். 1937ம் ஆண்டு மது விலக்குச் சட்டத்தின் கீழ்தான் இவ்விதிகளும் இயற்றப்பட்டுள்ளன என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்படுவதை வரவேற்று 2006ல் அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவு இது. "மாநிலங்கள் எல்லாம் சாராய பானங்களை சிறு மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதை அனுமதிக்கின்றன. விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சமூகமே நகரங்களில் மதுக்கூட கலாச்சாரத்தை (Pub Culture) ஏற்றுக்கொண்டுவிட்டது."
2003ம் ஆண்டு விதிகளில் எண் 15ன் கீழ் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை இருந்தாலும் மது அருந்துவதற்குத் தடை இல்லை. டெல்லியில் இருந்து வந்த ஒரு சட்ட மாணவர் இவ்விதியை எதிர்த்து வழக்கு தொடுக்கப்போவதாக என்னிடம் கூறினார். அவர் கூறிய காரணம் விசித்திரம்.
"இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1989ல் திருத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர் தேர்தலில் ஓட்டுப் போட உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மது விலக்குக் கொள்கையை உருவாக்கும் அமைச்சரவையை நாங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஆனால், மதுபானம் வாங்கக் கூடாது என்பது எவ்விதத்தில் நியாயம்? 18 வயதுக்கு மேற்பட்டோர் மது அருந்துவதை தடுக்காத சட்டம் எப்படி வாங்குவதை மட்டும் தடை செய்ய முடியும்?"
அந்த மாணவர் சொன்னதில் லாஜிக்கும் வேகமும் இருந்தது. அவரிடம், 'முதலில் சட்டம் படியுங்கள். வக்கீல் தொழில் செய்யப் பதிவு பெற்று Bar (சட்ட அறைக்கு) வாருங்கள்; பிறகு அந்த BARக்கு (மதுக்கூடம்) போகலாம்' என்றேன். எது எப்படியோ! இளைஞர்கள் குடிக்கலாம்.. ஆனால் வாங்கக் கூடாது என்ற விதியில் லாஜிக் உதைக்கிறது.