தாமதமாக வந்திருந்தாலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனை உணர்ந்து, இத்தீர்ப்பை முன்வைத்து உடனடியாக ஓர் அரசியல் விழிப்புணர்வுச் செயல்திட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இப்போதைக்கு பொதுமக்கள் இத்தீர்ப்பை மிகவும் எளிமைப்படுத்தி புரிந்துவைத்திருக்கின்றனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கத் துணிந்த சசிகலாவின் அகந்தையை அடக்கி அவரையும் அவருடைய உறவினர்களையும் (சுதாகரன், இளவரசி) சாட்டையைச் சுழற்றி சிறைக்கு விரட்டிய 'நாயகன்' என்றே இத்தீர்ப்பை அவர்கள் பார்க்கின்றனர். அதுவே அவர்களுக்கு உடனடிப் பரவசத்தையும் மனநிம்மதியையும் அளிக்கிறது. அதனாலேயே ஊடகங்களும் இந்த உணர்வுகளுக்கு மட்டும் பிரத்யேக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. அடுத்தடுத்து நிகழும் அரசியல் பரபரப்புகளும்கூட இதற்கொரு காரணம்.
இந்த ஆரவாரத்தில், நாம் பெரிதும் விவாதிக்க மறக்கும் அல்லது விவாதிக்க மறுக்கும் ஒரு முக்கியமான அம்சம் இது: இந்த வழக்கின் முதன்மையான குற்றவாளி ஜெயலலிதாவே என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் பொருள் ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் தன் முதல்வர் பதவியை இழந்திருப்பார், சிறையும் சென்றிருப்பார் என்பதே!
வரலாறு விடுவிக்காது
மரணம், இந்த இரண்டிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது. ஆனால், வரலாறு அத்தனை சுலபத்தில் அவரை விடுவிக்கப்போவதில்லை. விடுவிக்க நாம் அனுமதிக்கவும் கூடாது. காரணம், இது ஜெயலலிதா எனும் ஒரு தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஊழல்வாதிக்கும் இது எச்சரிக்கையாக அமைய வேண்டும்.
அந்த வகையில், உடனடியாக நாம் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. இத்தீர்ப்பின் ஒளியில் ஜெயலலிதா என்னும் புனித பிம்பத்தை வெளிப்படையாக நொறுக்க வேண்டும் என்பதே அது. ஏனென்றால், தீர்ப்பு வெளிவந்த பிறகும், ஜெயலலிதாவை வணங்கப்பட வேண்டிய ஒரு திருவுருவாகத்தான் அதிமுக உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்ட இரு துண்டுகளும் 'அம்மாவின் புக'ழுக்கு உரிமை கோருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
'சிறு தெய்வ' வழிபாடு
ஓபிஎஸ் தரப்பு சாதுரியமாக, சசிகலாவை மட்டும் வில்லியாக மாற்றி ஜெயலலிதாவை ஒரு சிறு தெய்வமாக உயர்த்திக்கொண்டிருக்கிறது. 'அம்மா வழியில் ஊழலற்ற ஆட்சி' என்னும் நகைமுரண் முழக்கத்தை மேலதிகப் பலத்துடன் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். சசிகலா குடும்பத்தின் நிழலில் உயிர்த்திருக்கும் இரண்டாவது துண்டு, ஒருபடி மேலே சென்று, அம்மாவோடு சேர்த்து சின்னம்மாவையும் ஒரு சிறு தெய்வமாக மாற்ற முடியுமா என்று முயன்றுவருகிறது. 'அம்மா'வை ஏற்றவர்களால் 'சின்னம்மா'வை ஏற்க முடியாமல்போனதால், இந்த முயற்சி எடுபடாமல் போய்விட்டது. மொத்தத்தில் பிரச்னை, 'சின்னம்மா'தானே தவிர, 'அம்மா' இல்லை. சிறைக்குச் சென்றவர் அவர்தானே?
திமுக, அதிமுக இரண்டும் அண்ணாவை முன்னிறுத்தியதைப் போல், பிளவுபட்ட இரு குழுக்களும் 'அம்மா'வை முன்னிறுத்தி பலப்பரீட்சையில் இறங்கியிருக்கின்றன. ஓபிஎஸ், சசிகலா இருவருமே மெரினா வில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத் துக்குச் சென்று வணங்கி, தங்களுடைய விசுவாசத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக் கின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசாகத் தங்கள் தரப்பைக் காண்பித்துக்கொள்வதன் மூலமே இந்தப் போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. 'ஜெயலலிதாவின் ஆன்மா' குறித்து இருவருமே பேசுகிறார்கள்.
கலக அரசியலும் மறு வருகையும்
ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் தியானம் செய்ததன் மூலம் தன் கலக அரசியலை ஒருவர் தொடங்கினார் என்றால், சிறைக்குச் செல்வதற்கு முன் அதே சமாதியின் மீது சத்தியம் செய்து, தன்னுடைய அரசியல் மறுவருகை தொடர்பில் சபதம் போட்டிருக்கிறார் இன்னொருவர். அந்த வகையில், அதிமுக முகாமுக்குள் இப்போது நடைபெறுவது ஜெயலலிதாவின் பிம்பத்துக்கு உரிமை கோருவதற்கான வெளிப்படையான அதிகாரப் போட்டியே தவிர வேறில்லை.
ஜெயலலிதாவை முதன்மையான குற்ற வாளியாக இவர்கள் இருவராலும் ஏற்க முடியாது. அவ்வாறு செய்வது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்களுடைய இரு தரப்பையும் எதிர் காலத்தையும்கூட கேள்விக்கு உட்படுத்தும். அவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் இந்தத் தீர்ப்பை ஆன்மாவின்வழி கடந்துசெல் கிறார்கள். இந்தச் சந்தர்ப்பவாத நிலைப் பாட்டைக் கொண்டு அவர்கள் தங்களுடைய அரசியல் பிரவேசத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகக் கடமை
ஆனால், தீர்ப்பின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ளும் எவரொருவராலும் இந்த இரு அரசியல் பிரவேசங்களையும் சகித்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் பிம்பம் என்பது முறைகேடுகளைக் கொண்டு வளர்த் தெடுக்கப்பட்ட ஒன்று என்பதை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. ஊழல், மிரட்டல், அதிகார முறைகேடு, ஜனநாயகமற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டு வளர்க்கப்பட்ட பிம்பம் அது என்பதற்கான அதிகாரபூர்வமான சாட்சியம்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒரு குற்றவாளி முதல்வராவதிலிருந்து இந்தத் தீர்ப்பு நம்மைக் காப்பாற்றியிருக்கிறது. அதேசமயம், ஒரு குற்றவாளியைத்தான் நாம் பல்லாண்டுகள் ஆட்சியாளராக வைத்திருந்தோம் என்பதையும் இதே தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் குற்றவுணர்வையும் இது நமக்கு ஏற்படுத்துகிறது.
இந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட வேண்டும் என்றால், முதலில் ஜெயலலிதா என்னும் பிம்பத்திலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அவருடைய பெயரை முன்னிறுத்தி புதிய அரசியல் வாய்ப்புகள் உருவாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒட்டுமாத்த பிம்ப வழிபாட்டு உணர்விலிருந்தும் விடுபடும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை இது.
பிம்ப வழிபாடு என்பது வலிமை மிகுந்த போதை. அந்த மயக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றால், இந்தத் தீர்ப்பை ஒரு கருவியாக, அறிவார்ந்த சமூகம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். அணுக முடியாத கடின ஆங்கிலத்தில் இருக்கும் தீர்ப்பைத் தமிழில் கொண்டுசென்று அனைவருக்கும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இதுவே தோதான தருணம் என்பதை தீபா என்னும் புதிய அரசியல் பிரவேசம் உணர்த்துகிறது!
- மருதன், எழுத்தாளர், தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago