தமிழ் அறிவுலகில் மக்களிடமிருந்து உருவாகி, கல்விப்புலத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்ததுடன், இறுதிவரையில் மக்களுடனேயே பயணித்தவர்கள் வெகு சிலர்தான். அப்படிக் கல்விப்புலத்துக்கு வெளியே, எவ்வித நிறுவனப் பின்புலமுமின்றி இயல்பாக உருவானவர் நா.வானமாமலை. நீண்ட படைப்பு மரபும், அறிவுத் தொடர்ச்சியும் மிக்க தமிழ் மக்களின் வரலாற்றை, பண்பாட்டை, இலக்கியத்தை அறிவியல் வழிப்பட்ட சமூகவியல் நோக்கில் கண்ட ஆய்வாளர் அவர்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், ஆச்சாரமான வைணவக் குடும்பத்தில் 7.12.1907-ல் பிறந்தவர் நா.வானமாமலை. நாடறிந்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை இவரது பள்ளித் தோழர். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுகப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டமும் பெற்றார். பின்னாளில் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் கார்மேகக் கோனாரின் வலியுறுத்தலில், முதுகலை படிப்பையும் முடித்தார். 1942 தொடங்கி சில வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தார்.
சமூகப் போராளி
சமூக ஆர்வம் காரணமாகப் பணியிலிருந்து விலகிய அவர், அக்காலகட்டத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே துணைநிற்பதை அறிந்து, 1948-ல் பாளையங்கோட்டையில் தனிப்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார். அதேநேரத்தில், நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார்.
கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் நா.வா. முன்னின் றார். இதற்காக 1948, 1970 என இருமுறை கைதானார். புகழ்பெற்ற நெல்லைச் சதிவழக்கு விசாரணைக் கைதிகளில் இவரும் ஒருவர். நகராட்சி உறுப்பினராகவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கல்விப் பிரிவு பொறுப்பாளராகவும் செயல்பட்டவர்.
தமிழால் முடியும்
அடிப்படையான விஞ்ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல அறிவியல் கட்டுரைகளை எளிமையுடனும் சுவையுடனும் எழுதினார். சிறுவர்களுக் கென 'காகிதத்தின் கதை', 'இரும்பின் கதை', 'ரப்பரின் கதை' முதலிய நூல்களை எழுதினார். 'விண்வெளி ரசாயனம்', 'விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும்' போன்ற இவரின் அறிவியல் நூல்கள் முக்கியமானவை.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உபவிளைவாக 'அனைத்தும் ஆங்கிலம்' என மாறிய சூழலில், சி.சுப்பிரமணியம், மோகன்குமாரமங்கலம் போன்றவர்கள் தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறை கொண்டனர். அத்தருணத்தில் 'தமிழில் முடியும்' என்னும் தொகுப்பு நூல் ஒன்றை நா.வா. வெளிக்கொணர்ந்தார்.
நாட்டார் வழக்காற்றியல்
முதல் விடுதலைப் போரின் நூற்றாண்டு விழா (1957) கொண்டாடப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷி நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் பணியை ஒழுங்கமைத்தார். அவரின் ஊக்கத்தால் நா.வா. நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார். அவரின் தலைமையில் தமிழ்நாட்டில் பரவலாக நாட்டுப் புறப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன. அதற்கு முன்னர் தி.நா.சு., கி.வா.ஜ, செ.அன்னகாமு, பெ.தூரன் போன்றவர்கள் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர். நா.வா. நாட்டுப்புறப் பாடல்களைப் பொருண்மை, நிலவியல், சூழல் அடிப்படையில் வகை தொகைப்படுத்தினார். மேலும் பாடியோர், வழங்கும் இடம், சேகரித்தோர் பெயர் விவரங்களையும் குறிப்பிட்டார். இந்தப் புதிய முறையோடு 'தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்'(1960), 'தமிழர் நாட்டுப் பாடல்கள்'(1964) ஆகிய தொகுப்புகள் வெளிவந்தன.
'Folklore' என்பது குறித்து தமிழ்ச் சூழலில் பெரும் விவாதம் நடைபெற்றது. 'நாட்டுப்புறவியல்' என்ற கலைச் சொல் உருவானது. நா.வா. 'நாட்டார் வழக்காற்றியல்' என்றார். இந்த இரு சொற்களும் இன்றும் தொடர்கின்றன. நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்ற எதுவுமே முறையாக அறிமுகமாகாத தமிழ்ச்சூழலில் நா.வா. இப்புலத்தில் செயல்பட்டார். நாட்டார் கதைகள், பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதோடு பலர் நிற்க, இவர் அவற்றின் சமூகப் பெறுமானங்களையும் கவனித்தார். வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றின் துணைகொண்டு, ஆய்வுகளை நடத்தினார்.
தொ.பெ.மீனாட்சிசுந்தரம் துணைவேந்தராக இருந்தபோது, நா.வா.வின் கதைப்பாடல் தொகுப்புகளை, மதுரைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது. கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன. இவற்றுக்கு நா.வா. எழுதிய ஆய்வு முன்னுரைகள் நாட்டாரியல் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இன்றும் திகழ்கின்றன. 1975-ல் வ.அய்.சுப்பிரமணியம் உதவியால் தார்வார், திராவிட மொழியியல் பல்கலைக்கழகத்தில் இவர் ஆய்வுத் தகைமையாளராகத் திகழ்ந்தார். இக்காலத்தில் நா.வா. உருவாக்கிய 'இன்டர்பிரட்டேஷன்ஸ் ஆஃப் தமிழ் ஃபோக் க்ரியேஷன்ஸ்' எனும் ஆய்வு நூல், புதிய வெளிச் சங்களைத் தரவல்லது. இவரின் இந்நூலும் இன்னும் பல கட்டுரைகளும் இன்னமும் தமிழில் வரவில்லை.
1967-ல் 'நெல்லை ஆய்வுக் குழு' என்னும் அமைப்பை உருவாக்கினார். விடாமுயற்சி, படிப்பில் ஆர்வம், ஆய்வு ஈடுபாடு, அறிவியல் நோக்கு, சமூக அக்கறை உடையோர் யாரும் இக்குழுவில் உறுப்பினராகலாம். ஆய்வுக் குழுக் கூட்டங்களுக்கு நா.வா. தலைமை தாங்குவார். கூட்டச் செலவுகளை அவரே ஏற்பார். கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட வேண்டும். விவாதங்கள் நடைபெறும். வெறும் பத்து பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நாளடைவில் பாளையங்கோட்டை மட்டுமின்றி, தென்மாவட்டங்களிலும் பரவலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. பல துறைகள் சார்ந்து கட்டுரைகள் எழுதப்படுவதும், புதிய அறிவுத் துறை வரவுகள் குறித்த அறிமுகமும் இக்கூட்டங்களில் நடந்தேறின. இந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்றோர் பலர் இன்று படைப்பு, ஆய்வுத் துறைகளில் சுடர்விடுகின்றனர்.
ஆராய்ச்சி இதழ்
ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969-ல் 'ஆராய்ச்சி' என்னும் ஆய்விதழைத் தொடங்கினார். பல்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன் ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன. பொருளாதார நெருக்கடியிலும் இறக்கும் வரை அதனை நடத்தினார். இதன் பின்னரே எண்பதுகளில் சமூக, அரசியல், பொருளாதார, ஆய்விதழ்கள் பல வெளிவரத் தொடங்கின. இன்றும் நா.வா.வின் 'புதிய ஆராய்ச்சி'யாக அது வெளிவருகிறது.
தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளை வரலாறு, தொல் லியல், மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைந்த பல்துறை கூட்டாய்வுகளாக - தமிழியலாக வளர்த்தெடுத்ததில் நா.வா. முதன்மை யானவர். வரலாறு, பண்பாடு, தத்துவம், இலக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த வர், மார்க்ஸியம் கல்விப்புலத்தில் ஒருமுறையியலாக வும், அணுகுமுறையாகவும் இன்று நிலைபெற்றிருப்பதற்கு வித்திட்டவர், நாட்டார் வழக்காற்றியலுக்குத் தமிழ்க் கல்விப்புலத்தில் உரிய அங்கீகாரம் பெற்றுத்தந்தவர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பிறரை எழுதச்செய்து, சுடர்களேற்றும் சுடராக விளங்கினார். கல்விப்புலத்துக்கு வெளியே ஒரு சிந்தனைப் பள்ளியை அவரால் உருவாக்க முடிந்தது. எனவேதான் எந்தப் பல்கலை, கல்லூரியிலும் தொழில்முறைப் பேராசிரியராக இல்லாத அவர் 'பேராசிரியர்' என்றே கொண்டாடப்பட்டார்.
- இரா.காமராசு,இலக்கியத் துறைப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: kamarasuera70@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago