இந்தியப் பிரிவினை: இன்னொரு சாட்சியம்

By செய்திப்பிரிவு

நான் சொல்ல விரும்பிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டேன். 1947 ஆகஸ்ட்14-ம் தேதி பாகிஸ்தான் டொமினியனை (ஆட்சிப் பரப்பை) தொடங்கிவைப்பதற்காக லார்ட் மவுண்ட்பேட்டன் கராச்சிக்குச் சென்றார். மறுநாள் இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்தார். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 12 மணிக்கு இந்திய டொமினியன் பிறந்தது.

தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் விடுதலை வெற்றி உணர்ச்சிகளை மக்கள் முழுவதும் அனுபவித்து மகிழ்வதற்கு முன் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு மகத்தான சோக அனுபவம் தமக்குக் காத்திருந்ததை உணர்ந்தனர். நாம் நிம்மதியாக சுதந்திரத்தின் பயன்களை அனுபவிப்பதற்கு முன் தொல்லைகள் நிறைந்த காரியங்களை நீண்ட காலம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தோம்.

ஏன் ஒப்புக்கொண்டார்கள்?

ஒரு விஷயம் இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பு. எல்லா இந்தியர்களின் மனதிலும் பிரிவினையானது கோபத்தையும் வெறுப்பையும் இவ்வாறு விளைவித்திருக்குமேயானால், ஏன் இந்திய மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்? அதற்கு ஏன் இன்னும் அதிகமான எதிர்ப்பு காணப்படவில்லை? தவறானது என்று பெரும்பாலும் எல்லோரும் கருதிய ஒரு விஷயத்தைக் குறித்து அவ்வளவு அவசரப்பட்டு முடிவுசெய்திருப்பானேன்?

கைவிட்டார் ஜின்னா

சோகம், நகைச்சுவை ஆகிய இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்ட நிலை அது. பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலிருந்த முஸ்லிம் லீக் தலைவர்களின் நிலைமை கேலிக்கூத்தாகிவிட்டது. ஜின்னா கராச்சிக்குப் போகுமுன் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஒரு செய்தியை விடுத்தார். ‘தேசம் இப்போது பிரிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் இந்தியாவிடம் விசுவாசமுள்ள குடிமக்களாகச் செயலாற்ற வேண்டும்’ என்பதே அந்தச் செய்தி. இந்தக் கடைசிச் செய்தி அவர்களிடையே ஒரு பலவீன உணர்ச்சியையும் ஏமாற்றத்தையும் விளைவித்தது.

கானல் சித்திரம்

பிரிவினையைப் பற்றி அவர்கள் தமது மனதில் கொண்டிருந்த ஒரு சித்திரம் உண்மை நிலைமைக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாதது என்பதை அவர்களோடு பேசியவுடன் நான் உணர்ந்துகொண்டேன். பாகிஸ்தான் என்பதன் உட்பொருளை அவர்கள் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். நடந்தேவிட்டது

இது அதிசயம், ஆனால் உண்மை. முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்கள் இப்போது இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டன. வங்காளமும் பஞ்சாபும்கூட பிரிக்கப்பட்டுவிட்டன. ஜின்னா கராச்சிக்குப் போய்விட்டார். தமக்குப் பிரிவினையால் லாபம்ஒன்றுமில்லை, ஆனால் எல்லாமே நஷ்ட மாகிவிட்டன என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். ஜின்னா போகிறபோக்கில் விடுத்த செய்தி, ஒட்டகத்தை வீழ்த்தும் கடைசித் துரும்பாக அமைந்தது.

எச்சரிக்கை

1946 ஏப்ரல் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்திய முஸ்லிம்களைத் திட்டவட்டமாக எச்சரித்தேன். எப்பொழுதேனும் பிரிவினையானது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஒருநாள் அவர்கள் விழித்தெழுந்து முஸ்லிம்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானுக்குப் போய்விட்டபின், தாம் இந்தியாவில் பொருட்படுத்த வேண்டாத அளவுக்குச் சிறியதான சிறுபான்மையினராகத் தங்கியிருப்பதைக் காண நேரிடுமென நான் அப்போது கூறியிருந்தேன்.

சுதந்திர உதயம்

ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர உதயத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் ஏற்பாடாகியிருந்தது. அரசியல் நிர்ணய சபை கூடி, இந்தியா விடுதலையாகி சுதந்திர அரசாங்கமாகிவிட்டது என்று பிரகடனம் செய்தது. மறுநாள் காலை 9 மணிக்கு அசெம்பிளி மீண்டும் கூடியது. நகரம் முழுவதுமே கோலாகலமான மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. பிரிவினையின் வேதனைகள் அப்போதைக்கு மறக்கப்பட்டிருந்தன.

சுதந்திர உதயத்தைக் காண்பதற்காக லட்சக் கணக்கான மக்கள் வந்திருந்தனர். சுதந்திர இந்தியாவின் கொடியை மாலை 4 மணிக்குப் பறக்கவிடுவதாக ஏற்பாடு. ஆகஸ்ட் மாதம் என்பதால் சூரிய வெப்பம் மிகக் கடுமையாக இருந்தது. எனினும் லட்சக் கணக்கில் மக்கள் கூடி வெயிலைப் பொருட்படுத்தாமல் மணிக் கணக்கில் காத்திருந்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் தமது காரிலிருந்து வெளியே வர லார்ட் மவுண்ட்பேட்டனால் முடியவில்லை. காரிலிருந்தே அவர் பேச வேண்டியதாயிற்று. மகிழ்ச்சி எல்லை கடந்து காணப்பட்டது. ஆனால் அது 48 மணி நேரத்துக்கு மேல் நீடிக்கவில்லை.

மீண்டும் வன்முறைகள்

வகுப்புக் கலவரங்கள்பற்றிய செய்திகள் வந்து தலைநகரை வருத்தத்தில் ஆழ்த்தின. கொலை, மரணம், கொடுமை பற்றிய செய்திகள் அவை. கிழக்கு பஞ்சாபில் இந்து, சீக்கிய மக்கள் கூட்டங்கள் முஸ்லிம் கிராமங்களைத் தாக்கின. வீடுகளை எரித்து நிராயுதபாணியான ஆண், பெண் குழந்தைகளைக் கொன்றன. மேற்கு பஞ்சாபில் அதே மாதிரி நிகழ்ந்ததாகச் செய்திகள் கிடைத்தன. அங்கிருந்த முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இந்து, சீக்கிய ஆண், பெண் குழந்தைகளைக் கொலை செய்துகொண்டிருந்தனர். கிழக்கு, மேற்கு பஞ்சாப் முழுவதும் மரணமும் அழிவும் மலிந்த இடுகாடாகிவிட்டது. டெல்லியையும் கலவரங்கள் சூழ்ந்தன.

காந்திஜியின் வேதனை

இந்தக் காலம் முழுவதும் காந்திஜி ஆழ்ந்த மனவேதனையில் துயரப்பட்டார். வகுப்புகளிடையே நல்லுணர்ச்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும், முஸ்லிம்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காகவும் அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தமது முயற்சி எதிர்பார்த்த அளவு பயன் தராதது கண்டு அவர் பெரிதும் வேதனைப்பட்டார், துயருற்றார். அடிக்கடி ஜவாஹர்லால், சர்தார் படேல் ஆகியோரையும் என்னையும் அழைத்து நகரின் நிலையைக் கேட்பார். என்ன நடைபெறுகிறது என்பதைப் பற்றிக்கூட எங்களிடையே வேற்றுமைகள் இருப்பது கண்டு அவருடைய வேதனை இன்னும் அதிகமாயிற்று.

படேலின் சமாளிப்பு

சர்தார் படேல் உள்துறை மந்திரி. எனவே டெல்லி நிர்வாகம் நேரடியாக அவரது பார்வையில் இருந்தது. கொலை, தீயிடல் பட்டியல் நீண்டுகொண்டே போனது. காந்திஜி படேலுக்குச் சொல்லியனுப்பி, இந்தக் கொலைவெறியைத் தடுத்து நிறுத்த அவர் செய்துகொண்டிருப்பது என்னவென்று கேட்டார். காந்திஜிக்குக் கிடைக்கும் தகவல்கள் மிகையானவை என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையை உண்டு பண்ண சர்தார் படேல் முயன்றார்.

நேருவின் துயர்

டெல்லியிலுள்ள நிலைமையைத் தம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை என்று ஜவாஹர்லால் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார். பூனைகள், நாய்களைப் போல டெல்லியில் முஸ்லிம் குடிமக்கள் கொல்லப்படுவதாகச் சொன்னார். தாம் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிராதரவான நிலையில் இருப்பதாகச் சொன்னார். மனசாட்சி அவரை உறுத்தியது. பயங்கரமான நிகழ்ச்சிகளைப் பற்றி முறையிட்டவர் களுக்குத் தாம் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று கேட்டார். நிலைமை சகிக்க முடியாததாக இருக்கிறது என்று அவர் பல தடவை சொன்னார். மனசாட்சி தம்மைச் சும்மாயிருக்க விடவில்லை என்றார்.

காந்திஜியின் இறுதி முயற்சி

காந்திஜியின் வேதனை நாளுக்கு நாள் அதிகரித்தது. முன்னரெல்லாம் அவரது மிகச் சிறிய விருப்பத்தையும் உடனே நடத்திவைக்க தேசம் முழுவதுமே தயார் நிலையில் இருந்தது. இப்போது அவரது மிக உருக்கமான வேண்டுகோள்கூட காதில் ஏறாத நிலைமை வந்துவிட்டதாகத் தோன்றியது. இந்த நிலைமையை இனி தாம் சகித்துக்கொண்டிருக்க முடியாதென்று கருதி, எனக்கு அவர் சொல்லியனுப்பினார். டெல்லியில் அமைதி மீண்டும் ஏற்படும் வரை பட்டினி இருப்பது தவிர தம்மிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லையென்று அவர் கூறினார். டெல்லியில் அமைதியும் ஒழுங்கும் ஏற்படும் வரை காந்திஜி பட்டினி கிடப்பார் என்று தெரிந்ததும், அதுவரை சோம்பிக் கிடந்த பலர் வெட்கம் கொண்டு, நடவடிக்கையில் இறங்கினர். இந்தத் தள்ளாத வயதில், அப்போதைய உடல்நிலையில், அவர் பட்டினியை மேற்கொள்ளாதபடி தடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தனர். அந்த எண்ணத்தை விட்டுவிடவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் உறுதி தளராமல் இருந்தார்.

படேலால் முடியாதா?

தமது கண் முன்னாலேயே டெல்லியில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதாகக் காந்திஜி கூறினார்: “என்னுடைய வல்லபபாய் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருக்கையில், தலைநகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு அவரிடம் இருக்கையில், இப்படி நடக்கிறதே” என்றார்.

ஆத்திரம் வீசிய குண்டு

காந்திஜியின் உண்ணாநோன்பு ஒரு கோஷ்டிக்கு மேலும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க முடிவு செய்தனர். மீண்டும் பிரார்த்தனையைத் தொடங்கியவுடன் ஒரு வெடிகுண்டு அவரை நோக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடைய வில்லை. காந்திஜியைத் தாக்க இப்படி ஒருவர் முன்வந்தது தேசமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸார் தம் புலன்விசாரணையைத் தொடங்கினர். அந்தக் குண்டை போட்டது யார்? பிர்லா மாளிகைத் தோட்டத்துக்குள் எப்படி அவர்களால் நுழைய முடிந்தது என்பதை போலீஸார் கண்டுபிடிக்க முடியாதது விசித்திரமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்குப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த போதிலும், காந்திஜியைக் கொல்வதற்கு உறுதியுடன் ஒரு கோஷ்டி இருக்கிறதென்பதை இந்தத் தகவல் தெளிவாக்கியது.

வெட்கக்கேடு

எனவே, டெல்லி போலீஸாரும், இரகசிய போலீஸாரும் காந்திஜியின் பாதுகாப்புக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது இயல்பே. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்கூட மிகச் சர்வ சாதாரணமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதை நீங்காத வெட்கத்துடனும் துக்கத்துடனும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அந்த நாள்

1948 ஜனவரி 30-ம் தேதி பிற்பகல் இரண்டரை மணிக்கு நான் காந்திஜியிடம் சென்றேன். அவருடன் பேச வேண்டிய பல முக்கிய விஷயங்கள் இருந்தன. ஒரு மணிநேரம் தங்கியிருந்தேன். பிறகு வீடு திரும்பினேன். நான் அவரது யோசனையைக் கேட்டாக வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருப்பது ஐந்தரை மணிக்கு நினைவுக்கு வந்தது. பிர்லா மாளிகைக்குச் சென்றேன். வாயில் மூடப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கான மக்கள் புல்வெளியில் நின்றுகொண்டிருந்தனர். தெருக்களிலும் கூட்டம் குழுமியிருந்தது. விஷயம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. என் காரைக் கண்டதும் எல்லோரும் வழி விட்டார்கள். வெளிவாயில் அறையில் இறங்கி வீட்டுக்குள் நடந்து சென்றேன். கதவுகள் தாளிடப்பட்டிருந்தன. கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து உள்ளேயிருந்த ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். பெண்மணி ஒருவர் கண்ணீரும் கம்பலையுமாக ‘‘காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், பிரக்ஞை இல்லாமல் இருக்கிறார்’’ என்று கூறினார். இச்செய்தி எனக்கு அதிர்ச்சியை விளைவித்தது. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்தச் சொற்களின் பொருளைக் கிரகிக்க என்னால் இயலவில்லை. அடித்துப்போட்ட உணர்ச்சி இருந்தது. காந்திஜியின் அறைக்குச் சென்றேன். அறையில் அவர் படுத்தபடி இருந்தார். முகம் வெளிறிக் கிடந்தது. கண்கள் மூடிக்கிடந்தன. இரண்டு பேரன்களும் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள். “காந்திஜி காலமாகிவிட்டார்” என்ற சொற்கள் கனவில்போல் காதில் விழுந்தன.

ஆசாத் எழுதி, அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட ‘இந்திய விடுதலை வெற்றி’ நூலிலிருந்து சில பகுதிகள்.

மொழிபெயர்ப்பு: ஏ.ஜி. வேங்கடாச்சாரி, க. பூரணச்சந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்