முடிவை மாணவர்கள் வசம் விட்டுவிடுங்கள்!- வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேட்டி

By வ.செந்தில்குமார்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், சிறந்த கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.விசுவநாதன். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர். டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கு நடுவில், அதில் இருக்கும் சாதக, பாதகங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் அளித்த பேட்டி:

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கைக்குத் தமிழ்நாட்டில் ஆரம்ப கட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதுடன் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அந்த வரையறை அறிக்கை இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

எந்த அடிப்படையில் இதை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எதிர்ப்பவர்கள் எல்லாம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கையை முழுதாகப் படித்தார்களா என்று தெரியவில்லை. அரசியல் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தது. 1975-ல் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியாகிவிட்டது. அப்போது, அதை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்களில் நானும் ஒருவன்.

நானும் மாநில சுயாட்சியை ஆதரித்தவன்தான். ஆனால், கல்வியைப் பொறுத்தவரையில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்தே பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு அதிகமாக நிதி கொடுக்கும். மாநில அரசிடம் கொடுத்தால் நிதி கொடுக்காமல் விட்டுவிடுவார்கள்.

கல்விக்காக இந்தியாவில் செலவழிப்பது குறைவு. நாட்டின் மொத்த வருவாயில் 3.5% கல்விக்கான நிதி ஒதுக்கீடாக இருக்கிறது. இதை 6%-ஆக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கை. ஆனால், அதை விட அதிகமாகச் செலவிட வேண்டும் என்றுதான் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்திருக்கிறது. அதிகப்படியான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசால் மட்டும் செய்ய முடியாது. அதற்குப் போதுமான பண வசதி மாநில அரசிடம் கிடையாது. மாநில அரசிடம் அதிகாரம் மட்டும் இருந்தால் போதாது. பணமும் வேண்டும்!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக விமர்சனம் உண்டு. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. புதிய கல்விக் கொள்கை வரையறை அறிக்கையில் இதற்குத் தீர்வு ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா?

தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இந்த நிலைதான். கட்டமைப்பு வசதிகளில் உலக அளவில் இந்தியா பின்தங்கியிருக்கிறது. நம்மிடம் அடிப்படை வசதிகள் இல்லை. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. நவீன வசதிகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லை. இந்த அறிக்கையில் இவையெல்லாம் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

பள்ளிகளுக்குக் கணினி, ஸ்மார்ட் போர்டு என்று நவீன வசதிகள் வரவேண்டும். இதற்கெல்லாம் நிறைய பணம் தேவைப்படும். ஆசிரியர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்கள்கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கல்வித் துறை இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழுவைச் சந்தித்து என்ன பேசினீர்கள்? உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?

நான் இந்திய கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் சந்தித்துப் பேசினேன். அப்போது, கல்வியில் ஒளிவுமறைவற்ற தன்மை இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நன்கொடை, லஞ்சம், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர்கள் நியமனம் தொடங்கி துணைவேந்தர்கள் நியமனம் வரை நடைபெறும் தவறுகளையும், பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் என எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு இருப்பதை அக்குழுவினரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றைக் கடுமையான தொனியில் அவர்கள் சொல்லவில்லை. ஆனால், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அந்தஸ்து கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் சாதக, பாதகங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…

முதலாவது ஒளிவுமறைவு அற்ற நிர்வாகம். லஞ்சம், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பதை வரவேற்கிறேன். ஆசிரியர்களுக்கான பயிற்சியைப் பலப்படுத்துவது; அகில இந்தியக் கல்வி முறையைக் கொண்டுவருவது; ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்குவது என்பன போன்ற பரிந்துரைகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 கோடிப் பேர் உயர்கல்வி படிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இவர்களில் 3 கோடி பேர் மட்டும்தான் உயர்கல்வி படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றக்கூடிய அம்சங்கள் இதில் உண்டு.

இப்போது, ‘நீட்’ தகுதித் தேர்வு குறித்து எல்லாரும் பேசுகிறார்கள். நாட்டில் ஆண்டுக்கு 17 லட்சம் பேர் பொறியியல் பட்டம் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 50 ஆயிரத்துக்கும் குறைவானோர்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை இருக்கிறது. அதிலும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஆண்டுதோறும் பல்வேறு காரணங்களைக் கூறி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் இடங்களை ரத்து செய்துவிடுகிறது. ‘நீட்’ தகுதித் தேர்வில் நாலரை லட்சம் பேர் தேர்வாகி இருக்கிறார்கள். ஆனால், 50 ஆயிரத்துக்கும் குறைவான இடங்கள்தான் இருக்கின்றன எனும்போது, தேர்வில் வெற்றி பெற்ற பலரின் மருத்துவக் கனவு என்னவாகும்? எனவே, குறைந்தபட்சம் 5 லட்சம் மருத்துவ இடங்களாவது இருக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள், தனியார் தொழில் நிறுவனங்கள் இணைந்து மருத்துவக் கல்வி நிலையம் தொடங்க அனுமதிக்க வேண்டும். லோதா கமிட்டி இப்போதுதான் 26 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. அனுமதி பெற்றவர்கள் நான்கு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள்.

பாதகமான அம்சங்கள் என்றால் சம்ஸ்கிருதம், இந்தி, மும்மொழிக் கொள்கையைக் கூறலாம். என்னைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் மொழியில் தலையிடக் கூடாது. பாடத் திட்டங்கள், மொழிக்கல்வி உள்ளிட்டவற்றைத் தேர்வு செய் வதை மாணவர்களும் பெற்றோரும் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்தான் படிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு படிக்கிறார்கள். அதற்கேற்பப் பாடத்திட்டம் இருக்க வேண்டும். விஐடி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. இரண்டு இந்திய மொழிகள், எட்டு அந்நிய மொழிகளைக் கற்றுக்கொடுக்கிறோம். ஒரு மொழியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வுசெய்து கூடுதலாகப் படிக்கலாம்.

இந்தியா முழுவதும் மொழியை அமல்படுத்துவதில் வளைந்துகொடுக்க வேண்டும். மாநிலப் பற்று, மொழிப் பற்று இருக்கலாம். அதற்காக, எல்லாரும் என் மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது. தாய்மொழிக் கல்வியில் படிக்க விரும்புபவர்கள் படிக்கட்டும். அதற்காக இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது.

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதற்கு அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறீர்கள்…

2007-ல் வெளியான, சாம் பித்ரோடா தலைமையிலான தேசிய அறிவுசார் ஆணையத்தின் அறிக்கை, தற்போதுள்ள பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் 1,500 பல்கலைக்கழகங்கள் கூடுதலாகத் தொடங்க வேண்டும் என்று சொன்னது. அதை அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால், நடைமுறைப்படுத்தவே இல்லை.

கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த நடைமுறையால் கல்லூரிக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அனுமதி கொடுக்கும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளைக் கண்காணிப்பதில்லை. இதை மாற்ற வேண்டும். சிறப்பாகச் செயல்படும் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வியில் உலகளவில் நாம் பின்தங்கியிருக்கிறோம். சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் எனும் அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடுகிறது. இந்தியாவும் அதில் இணைந்தது. மொத்தம் 63 நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு 62-வது இடம்தான் கிடைத்தது. அதன் பிறகு இந்தியா அந்த அமைப்பில் பங்கேற்கவில்லை. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பதால் கல்விக் கட்டணம் அதிகரித்து, கல்வி வியாபாரமாகிவிடும் என்ற கருத்து பரவலாக இருக்கிறதே?

பொதுவாக அரசு கல்விக்கூடங்கள் நடத்தினால் அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி கொடுப்பதில்லை. எனவே, தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசு குறைவாகத்தான் நிர்ணயிக்கிறது. அதை வைத்துக்கொண்டு கல்வி நிறுவனத்தை நடத்த முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாணவர்களிடம் ரசீது கொடுக்கும். ஆனால், அத்துடன் சேர்த்து வசூலிக்கும் மீதித் தொகையை வேறு வகையில் அவை பெற்றுக்கொள்கின்றன. அந்தத் தொகை கருப்புப் பணமாக மாறுகிறது. என்னைப் பொறுத்தவரை அரசுக் கும் தனியாருக்கும் இடையில் போட்டி இருக்க வேண்டும்.

தனியார் கல்லூரிகள் என்ன சாதித்திருக்கின்றன?

தனியார் கல்லூரிகள் இல்லாவிட்டால் ஐடி தொழில் துறையே இல்லை என்று கூறலாம். தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்க எம்ஜிஆர் அனுமதி கொடுத்த தால் இன்று தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 300-350 பொறியியல் கல்லூரிகள் போதும். ஆனால், 550-க்கும் அதிகமான கல்லூரிகள் இருக்கின்றன. இதே அரசு கல்லூரியாக இருந்தால் குறைவாகத்தான் தொடங்கி இருப்பார்கள். கட்டமைப்பு, நிர்வாகச் செலவுகள் அதிகமாகிவிடும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களை நிரப்புகிறார்கள். ஆனால், அரசுக் கல்லூரிகளில் ஏன் நிரப்புவதில்லை? அரசுக் கல்லூரிகளில் நிர்வாகம் செய்ய போதுமான ஆட்கள் இல்லை. வைஃபை, இணையம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் உட்கார்வதற்குப் போதுமான இருக்கை வசதி இல்லை. இதையெல்லாம் அரசு கவனிக்கிறதா என்று தெரியவில்லை!

மத்திய அரசுக்கு இணையான பாடத்திட்டத்தை ஒரே நேரத்தில் மாற்றும்போது கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே? இதற்கு என்ன தீர்வு?

மத்திய அரசுக்கு இணையான பாடத்திட்டம் தமிழ்நாட்டில் இல்லை என்பது உண்மை. விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் வருவதில்லை. ஐஐடி, பிட்ஸ் பிலானி உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி மிக மிகக் குறைவு. அகில இந்தியத் தேர்வுகளில் போட்டியிடும் அளவுக்கு மாணவர்களின் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

கல்வித் துறையில் ஆசிரியர்கள் சங்கங்கள்தான் பலமாக இருக்கின்றன. மற்றவை எல்லாம் பின்தங்கித்தான் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செயல்படுத்த வேண்டும். மாணவர்களால் எல்லா பாடத் திட்டத்தையும் படிக்க முடியும். கிராமத்தில் இருந்து வந்த நான் படித்திருக்கிறேன். நகரத்தில் உள்ள மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்களால் அதிகம் படிக்க முடியும். ஆனால், அரசும் ஆசிரியர்களும் அதற்குத் தயாராக இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

தேர்ச்சி விகிதத்தை மட்டுமே அரசு பார்க்கிறது. இயற்பியல் பாடத்தில் 30 ஆயிரம் மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெறுகிறார்கள். இது எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தத் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அகில இந்தியத் தேர்வு என்று வந்தால் நம்மால் ஒன்றும் செய்ய முடிவ தில்லை.

சமச்சீர் கல்வித் திட்டம் அனைவரையும் சமமாக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் மேலிருந்த மாணவர்களைக் கீழிறக்கிவிட்டது. இதைத் தவறு என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்பும் மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தைப் படிக்கட்டும். அகில இந்திய அளவிலும், வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் படிக்கட்டும். முடிவை அவர்கள் வசம் விட்டுவிடுங்கள்.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவில் கல்வியாளர்கள் யாருமே இல்லை என்று புகார் உள்ளது. கல்வியாளர்கள் அடங்கிய புதிய குழு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது…

கல்வியாளர்களாகிய எங்களைக்கூட குழுவில் அவர்கள் இணைக்கவில்லை. அதேசமயம் அதிகாரிகள் மட்டும் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் கொடுத்த அறிக்கையை வெறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

புதிய கல்விக் கொள்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமை பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25% வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே அமலில் இருக்கிறது. இதில், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு அளிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு எந்த அம்சமும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பேசலாம்!

- வ.செந்தில்குமார், தொடர்புக்கு: senthilkumar.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்