என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!

By சமஸ்

தகவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?

நேற்று முன்தினம் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. “அடுத்த மூன்று ஆண்டுகளில் - 2018-ல் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும்” என்றும் “இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் - 2023-ல் அப்படியே இரட்டிப்பாகும்” என்றும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இது நடக்கச் சாத்தியமற்ற கதை அல்ல என்பதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ அமைப்பின் ஆய்வறிக்கை ஒரு சான்று. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதைப் பட்டியலிட்ட அந்த ஆய்வறிக்கை பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை புணேவில் மட்டும் 317% அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியது.

ஒருபக்கம் நாடு வளர்கிறது, பொருளாதாரம் மேல் நோக்கி எழுகிறது என்றெல்லாம் இதுபோன்ற தகவல்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் சூழலில்தான், மறுபக்கம் தலைகீழான வேறு தகவல்களும் வெளியாகின்றன. எந்த அரசாங்கம் பொருளாதாரம் மேலே போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறதோ, அதே அரசாங்கம் தொகுத்த தகவல்கள் அமிலச் சொட்டுகளாக நம் மீது விழுந்து அதிரவைக்கின்றன.

சரிபாதி வறிய இந்தியா

இந்தியாவின் ஆன்மா எங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்தக் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 49% பேர் வறுமையில் இருக்கிறார்கள் என்கிறது. இந்திய அரசின் ‘சமூகப்பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011'-ன் அறிக்கை. கிராமப்புற இந்தியாவில் உள்ள 17.91 கோடிக் குடும்பங்களில், 10.08 கோடிக் குடும்பங்களுக்கு (56%) சொந்தமாக ஒரு பிடி நிலம் கிடையாது. 13.34 கோடிக் குடும்பங்கள் (74.5%) ரூ.5000-க்கும் குறைவான வருமானத்திலேயே பிழைக்கின்றன. 9.16 கோடிக் குடும்பங்கள் (51%) வருமானத்துக்கு உடல் உழைப்பு வேலைகளையே நம்பியிருக்கின்றன. 5.39 கோடிக் குடும்பங்கள் (30%) விவசாய வேலைகளை நம்பியிருக்கின்றன. 4.21 கோடிக் குடும்பங்கள் (23.5%) இன்னமும் எழுத்தறிவு அற்றவை. கிட்டத்தட்ட 2.37 கோடிக் குடும்பங்கள் (13.25%) சுற்றிலும் மண் சுவர் எழுப்பி, ஒப்புக்கு மேலே கூரைபோல மஞ்சம் புல்லையோ, தென்னை ஓலைகளையோ கொண்டு மூடிய, கதவுகள் அற்ற அல்லது கோணிச் சாக்கு போன்றவற்றைக் கதவுபோல மூடிய கச்சா வீடுகளிலேயே வசிக்கின்றன.

நகர்ப்புற இந்தியாவின் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது என்றாலும், அங்கும் அவலங்கள் வேறு முகங்களில் வெளிப்படுகின்றன. நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 6.5 கோடிக் குடும்பங்களில், 65 லட்சம் குடும்பங்களை (10%) அடிப்படை வசதியான குடிநீர் வசதியே இன்னமும் எட்டவில்லை எனும் ஒரு தகவல் போதுமானது, நம்முடைய நகர்ப்புற ஏழைகளின் நிலையைச் சொல்ல. குடிநீரில் தொடங்கி குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று ஒவ்வொரு காரணிகளும் நகர்ப்புறப் பெரும்பான்மை இந்தியர்களை வேட்டையாடும் கதையைச் சொல்கின்றன.

யார் அந்தக் குப்பை பொறுக்கிகள்?

இந்தியச் சமூகக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நரம்புகளும் சாதிய அதிகார அடுக்குகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தையின் உணவு, உடை, வாழ்விடம், கல்வி, தொழில், திருமணம், எதிர்காலம் என யாவுமே அந்தக் குழந்தையின் சாதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், சாதியின் பெயரால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தள்ளப்பட்டவர்களையும் தூக்கிவிட இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கான வழிகளை நாம் தேடுகிறோம். ஆனால் உண்மையில், அரசின் சமூகநலத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைந்திருக்கின்றன? இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் சமூகநீதித் திட்டங்கள் எந்த அளவுக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன? இதற்கான நிச்சயமான பதில்கள் நம்மிடம் இல்லை.

டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், வெளியிலிருந்து தம் வீட்டுக்கு வரும் ஒரு அலுவலரிடம், “என் குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்; அதை வைத்துத்தான் பிழைக்கிறோம்” என்றோ, “என்னுடைய வீட்டுக்காரர் பிச்சை எடுக்கிறார்; அதை வைத்துத்தான் நாங்கள் பிழைக்கிறோம்” என்றோ எத்தனை பேர் நம்முடைய சமூகச் சூழலில் சொல்லிவிடுவார்கள்? கிராமப்புற இந்தியாவில் குறைந்தது, 4.08 லட்சம் குடும்பங்கள் குப்பை பொறுக்கிப் பிழைப்பதாகவும் 6.6 லட்சம் குடும்பங்கள் பிச்சையை நம்பிப் பிழைப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிச்சையையும் குப்பையையும் பிழைப்புக்கு வழியாக நம்பி வாழ்பவர்கள் எந்தெந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய இந்நிலைக்கான அடிப்படையான காரணங்கள் என்ன, அந்தக் காரணங்களில் சமூகம்சார் காரணிகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டாமா?

மத்திய - மாநில அரசுகள் செய்வதென்ன?

சாதிவாரியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டால், இந்தியாவில் அழுத்தப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது மட்டும் வெளிவரப்போவதில்லை; மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய நிலைமை எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்கிற விவரங்களும் வெளியே வரும். கூடவே, ஆதிக்க அரசியல்வாதிகளின் உண்மையான முகமும் வெளியேவரும்.

இதே காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் யுனிசெப் அமைப்பின் ‘குழந்தைகள் தொடர்பான துரித ஆய்வறிக்கை’யின் தரவுகள் இதற்குச் சரியான உதாரணம். அரசின் ஆய்வறிக்கையோடு, இந்த ஆய்வறிக்கையை ஒப்பிடும்போது குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் நிலை மேம்பட்டதாக இருப்பது தெரியவருகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மோசம்; எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் அவர்கள் கடைசி அடுக்கிலேயே இருக்கிறார்கள் என்றாலும், மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மாறுபாடு இருக்கிறது என்கிற உண்மையை ‘யுனிசெப்’ அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும் சத்தீஸ்கரில் உள்ள பெரும்பான்மைக் குழந்தைகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியே வரும்போதுதான், முட்டை அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும். தமிழகப் பள்ளிகளில் மதிய உணவில் ஐந்து முட்டைகள் வழங்கப்படுவதற்கும் சத்தீஸ்கரில் சைவத்தின் பெயரால் முட்டையே மறுக்கப்படுவதற்கும் பின்னணியிலுள்ள அரசியல் வெளியேவரும். ‘குஜராத் மாதிரி’ என்று வளர்ச்சிக்கு உதாரணமாகக் கொண்டாடப்பட்ட குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயர்ந்திருக்கும் உண்மை வெளியே வரும்போதுதான், எந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சி, யாருக்கான வளர்ச்சி உண்மையான வளர்ச்சி எனும் சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும்.

குடிநீர் முதல் சுடுகாடு வரை சாதி ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில், ‘சாதி மறுப்பு’ அல்லது ‘சமூக நல்லிணக்க நோக்கம்’ என்ற பெயரில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிரீயிலான விவரங்களை மறைப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. மோடி அரசு சாதிவாரியிலான தகவல்களை உடனே வெளியிட வேண்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

36 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்