உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொதுநல வழக்குகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்துத் தெளிவு பெற, உயர் நீதிமன்றங்களிடம் 10 கேள்விகளை முன்வைத்தது. ஆனால், இன்று வரை எந்த ஒரு உயர் நீதிமன்றமும் நீதிபதியும் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால், உயர் நீதிமன்றங்கள் தங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை!
நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக, பொதுநல வழக்குகள் பார்க்கப்படும் சூழல் உள்ளது. இந்த வழக்குகள் மூலமாகத் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு சாரா அமைப்புகள், சாமானியர்கள் பலர் உண்டு. இந்நிலையில், பொதுநல வழக்குகளின் மறுபக்கத்தைப் பற்றிப் பேச மிகச் சிலரே உள்ளனர். அனுஜ் புவானியா அவர்களில் ஒருவர்.
அடிப்படையில் வழக்கறிஞரான இவர், தற்போது டெல்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். பொதுநல வழக்குகளின் பின்னுள்ள அரசியலைப் பற்றி ‘கோர்ட்டிங் தி பீப்பிள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பொதுநல வழக்குகளின் மூலம் திரையரங்கு களில் தேசிய கீதம் இசைப்பது, திருக்குறளைக் கட்டாயமாக்குவது, யோகாவைக் கட்டாயமாக்குவது போன்ற ‘தேசபக்த’ முயற்சிகள், வேகமாக நடந்துவரும் இந்தத் தருணத்தில், பொதுநல வழக்குகளின் தன்மை குறித்து நாம் உரையாட வேண்டியது அவசியமாகிறது. அதுதொடர்பாக, சமீபத்தில் சென்னை வந்திருந்த அனுஜ் புவானியிடம் பேசியதிலிருந்து...
சாமானியர்களுக்குப் பயன்பட வேண்டிய பொதுநல வழக்குகள், சாமானியர்களுக்கு எதிராகவே பயன் படுத்தப்படுகின்றன என்று குறிப்பிடுகிறீர்கள். பொதுநல வழக்குகளால் நன்மைகள் விளையவே இல்லையா?
நான் அப்படிச் சொல்லவில்லை. பொதுநல வழக்குகளால் சில நன்மைகளும் விளைந்திருக்கின்றன. ஆனால், அந்தப் பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களுக்குத் தரும் அபரிமிதமான அதிகாரங்களை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன்.
ஒரு இடத்தில் நிறைய குடிசைகள் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தினால் எந்தப் பிரச்சினையும் சந்திக்காத ஒருவர், ‘இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்’ என்று பொதுநல வழக்கு தொடரலாம். மற்ற வழக்குகளில், யாருக்கு எதிராக வழக்குத் தொடரப்படுகிறதோ அவரிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால், பொதுநல வழக்கில் அதற்கான அவசியமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு வழக்கு தொடுப்பதற்கு என்று தனியாக ஒருவர் தேவையே இல்லை. ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில், நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடரலாம்.
இப்படித்தான் போபால் விஷவாயுக் கசிவு தொடர்பான வழக்கிலும் நடந்தது. எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒருமுறைகூட பாதிக்கப்பட்டவர்களிடம் நீதிமன்றம் கருத்து கேட்கவில்லை. அதேபோல, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக டெல்லியில் ஓடும் டீசல் ஆட்டோக்கள் எல்லாம் இயற்கை எரிவாயுவுக்கு (சி.என்.ஜி) மாற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பிரச்சினையிலும் ஆட்டோ சங்கங்களின் கருத்துகளை நீதிமன்றம் கேட்கவில்லை. இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த அதிகாரங்களை நீதிமன்றம் எப்படிப் பெற்றது? இதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
எத்தனையோ வழக்குகளில் ‘நீதிமன்ற நண்பன்’ (அமிகஸ் க்யூரி) நீதிமன்றங்களுக்கு உதவியிருக் கிறார்கள். ஆனால், பொதுநல வழக்குகளில் அவர்களின் கைதான் ஓங்கியிருக்கிறது என்கிறீர்கள். அதுகுறித்துக் கொஞ்சம் விளக்க முடியுமா?
பெரும்பாலான நேரங்களில் ‘நீதிமன்ற நண்பர்’களின் பணி என்பது, ஒரு வழக்கின் விசாரணையில் நீதிபதிகளுக்கு உதவுவது என்ற நிலையில்தான் இருக்கும். ஆனால், பொதுநல வழக்கில் அப்படியல்ல. அந்த வழக்கையே ‘நீதிமன்ற நண்பர்’தான் நடத்துவார்.
உதாரணத்துக்கு, 2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கை எடுத்துக்கொள்வோம். அந்தப் பொதுநல வழக்கை தீஸ்தா செடல்வாட் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு உதவிசெய்ய ஹரீஷ் சால்வே என்பவரை ‘நீதிமன்ற நண்ப’ராக நீதிமன்றம் நியமித்தது. விசாரணையின்போது, அந்தக் கலவரம் தொடர்பாக வழக்கு தொடுத்தவரின் அதாவது, தீஸ்தா தரப்பு வாதங்களைக் கேட்க நீதிமன்றம் மறுத்தது. மாறாக, ஹரீஷ் சால்வேயின் வாதங்களையே அது ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் வழக்கு தொடுத்தவர் தேவை யில்லாதவராகிவிடுகிறார்.
இதேபோன்று, இன்னொரு வழக்கு. 1988-ல் ஷீலா பார்ஸ் எனும் பத்திரிகையாளர், சீர்திருத்தச் சிறையில் உள்ள சிறுவர்களின் உரிமைகள் குறித்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் போகவே, அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஷீலா தெரிவித்தார். ஆனால் நீதிமன்றமோ, ‘இந்த வழக்கிலிருந்து வழக்கு தொடுத்த நீங்கள் வேண்டுமானால் வெளியேறலாம். ஆனால், இந்த வழக்கைத் திரும்பப் பெற முடியாது. நீங்கள் இல்லாவிட்டாலும் ‘நீதிமன்ற நண்பர்’களை வைத்து இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும்’ என்று சொன்னது.
இவ்வளவு ஏன்? எம்.சி.மேத்தா என்ற வழக்கறிஞர் தொடுத்த ஒரு பொதுநல வழக்கில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹரீஷ் சால்வே ‘நீதிமன்ற நண்ப’ராக இருந்துவருகிறார். இத்தனைக்கும், ஒரு கட்டத்தில் எம்.சி.மேத்தா வுக்கும் அந்த வழக்குக்கும் தொடர்பே இல்லாமல் போனது. ஆனால், ஹரீஷ் சால்வே மட்டும் தொடர்கிறார். இந்த வழக்குகளின் பின்னணியில்
‘நீதிமன்ற நண்பர்’களின் கை ஓங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே, பல வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இப்படியான நிலையில், பொதுநல வழக்குகள், இதர வழக்குகளின் மீது செலுத்தும் தாக்கம் எப்படியிருக்கும்?
ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘யமுனா நதியைச் சுத்தப்படுத்த வேண்டும்’ என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதற்குத் தீர்வு காண்பதற்குள் அந்த நதியின் கரையோரத்தில் வசிக்கும் ‘ஆக்கிரமிப்பாளர்’களை அகற்ற வேண்டும் என்று, இன்னொரு வழக்கு முதல் வழக்கின் கீழேயே தொடரப்பட்டது. அதற்குத் தீர்வு காண்பதற்குள் ‘விதிமுறைகள் மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும்’ என்று இன்னொரு வழக்கு. அதற்குத் தீர்வு காண்பதற்குள் ‘டெல்லியில் உள்ள ஆபத்தான தொழிற்சாலைகளை மூட உத்தரவிட வேண்டும்’ என்று இன்னொரு வழக்கு. அதற்குத் தீர்வு காண்பதற்குள் ‘டெல்லியில் உள்ள தெருவோரக் கடைகளை அகற்ற வேண்டும்’ என்று இன்னொரு வழக்கு.
பொதுநல வழக்குகளால்தான் டெல்லி மாநகரத்தின் நிர்வாகமே நடைபெறுகிறது என்று சொல்லும் அளவுக்கு ஒரு கட்டத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் அத்தனை வழக்குகளை மேற்கொண்டது. அந்த வழக்குகளில் இன்று வரை தீர்வு காணப்படாமல் இருக்கும் மூன்று முக்கியமான வழக்குகளை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொண்டு, பொதுநல வழக்குகளின் பின்னுள்ள அரசியல், அவை நீதிமன்றங்களுக்குத் தரும் அபரிமிதமான அதிகாரங்கள், அதனால் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்டவற்றைப் பற்றி எனது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.
ஒரே வழக்கு அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நீட்டிக்கப்படுவதும் (ஆங்கிலத்தில் இதை ‘ஆம்னிபஸ் பி.ஐ.எல்.’ என்றழைக்கப்படுகிறது), ஒரு வழக்குக்குத் தீர்வு காணாமல், வெறும் உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக்கொண்டு செல்வதும், நிச்சயம் பொதுநல வழக்கு அல்லாத இதர வழக்குகளின் விசாரணையைத் தாமதப்படுத்தவே செய்யும்.
ஏற்கெனவே, பல பிரச்சினைகளில் சிக்கி யி ருக்கும் ஒருவர், இன்னொருவரின் ிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்பதுபோலத்தான் இதுவும். நீதிமன்றமே பல நிர்வாகப் பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. அப்படியான நிலையில்தான், இன்று நீதிபரிபாலனம் நடைபெற்றுவருகிறது.
வழக்கு தொடுப்பவர்களை, பாதிக்கப்பட்ட வர்களாக மாற்றும் தன்மை கொண்டிருப்பதாகப் பொதுநல வழக்குகளைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால், இன்று மக்களிடையே பொதுநல வழக்குகள் மீது பெரும் மோகம் இருக்கிறது. அதை எப்படிச் சரிசெய்வது?
அது அவ்வளவு எளிதல்ல! பொதுநல வழக்கை, சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும்போக்கு மக்களிடம் உள்ளது. நீதிமன்றங்களும், நீதிபதி களும், வழக்கறிஞர்களும் விளம்பரத்துக்காக வேனும் பொதுநல வழக்குகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள். தமிழகத்தில்
‘டிராபிக்’ ராமசாமி போன்றவர்கள் சளைக்காமல் பொது நல வழக்குகளைத் தொடர்ந்துகொண்டேயிருக் கிறார்கள். அது போன்ற மனிதர்களை ஊக்கப் படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும் பங்கிருக்கிறது.
அவசர நிலை காலகட்டத்தில், ‘வளைந்து கொடுங்கள் என்று பத்திரிகைகளிடம் சொன்னால், அவை தவழ்ந்து சென்றன’ என்று சொல்லப்படுவது உண்டு. பத்திரிகைகள் மட்டுமல்ல, நீதிமன்றங்களும் அன்று அப்படித்தான் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் தான் செய்த தவறுகளைச் சரிசெய்யும் விதமாகத்தான் நீதிமன்றங்கள் பொதுநல வழக்குகளை மேற்கொள்ள ஆரம்பித்தன. ஆனால் பொதுநல வழக்குகள், விசாரணை நடைமுறைகளைச் சீர்குலைத்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். பொதுநல வழக்கு என்பது ஒரு சோகம்!
1983-ல் சுதீப்த் மஜூம்தார் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொதுநல வழக்குகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்துத் தெளிவுபெற உயர் நீதிமன்றங்களிடம் 10 கேள்விகளை முன்வைத்தது. ஆனால், இன்று வரை எந்த ஒரு உயர் நீதிமன்றமும் நீதிபதியும் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால், உயர் நீதிமன்றங்கள் தங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நீதித் துறை மீளாய்வு மீது நீதிமன்றங்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, நீதித் துறை ஜனரஞ்சகவாதமே முன்னணியில் நிற்கிறது. இது நல்லதல்ல!
- ந.வினோத் குமார், தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago