விவசாயிகளின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, அவர்களது உரிமைக்குரல்களை வெளியே கேட்காமல் செய்திருக்கிறது கட்சி அரசியல். ஆனால் அதே கட்சி அரசியல்தான், உற்பத்தித் தொழில்துறையில் தொழிலாளர் சங்கங்களை வலுவாக்கியது என்பது ஒரு விநோதம். தொழிற்சாலைகளில் மட்டுமின்றி வங்கி, காப்பீடு, போக்குவரத்துத் துறைகளிலும்கூட தொழிலாளர் சங்கங்கள் வலுப்பெற்றன. ஆனால், இதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொழில் துறையின் பங்களிப்பு 15-16%-லேயே மாறாமல் நிற்கிறது. தொழில்துறையின் வேலைவாய்ப்பு களிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. தற்போது உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் சேவைப் பணித் துறையையே நம்பியுள்ளன. இந்நிலையில், தொழில் துறையில் பெயரளவுக்காவது கடைப்பிடிக்கப் பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் தற்போது இல்லாமலாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள 90% தொழிலாளர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. அரசு, தனியார் இரண்டையும் உள்ளடக்கிய அமைப்பு சார்ந்த தொழில் துறையின் அளவு மிகவும் சிறியது. மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 2%-க்கும் குறைவு. இந்த மிகக் குறைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த சமூகப் பாதுகாப்பும் தற்போது படிப்படியாகக் குறைந்துவருகிறது.
அமைப்பு சார்ந்த தொழிலாளர்களோடு தொடர்புடைய தொழில் தகராறுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக்கூட அரசு முறையாகச் சேகரிக்கவில்லை. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 1985-ம் ஆண்டு உடன்பாடு, உறுப்பினர் நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அந்த உடன்பாட்டில் இந்தியா, 1992-ல் கையெழுத்திட்டது. அதன்படி, தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் விபத்துகள், சமரச அலுவலர்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.
ஆனால், உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்திய அரசு அதை முறையாகப் பின்பற்றவில்லை. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவைப் போன்ற நிலையற்ற பொருளாதார நாடுகளில் 20,000 தொழிலாளர்களுக்கு ஒரு தொழிலாளர் நலச் சட்ட அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளர் நலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் எத்தனை பேர், அல்லது எத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய தேசிய அளவிலான விவரமே இல்லை என்பது வேதனைக்குரியது.
இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையையும் தேவையான வேலைவாய்ப்பு களையும் கவனத்தில் கொண்டால், அனைவருக்கும் அமைப்பு சார்ந்த பணி வாய்ப்பு என்பது சாத்தியமில்லாதது. அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவே அதைச் சமாளிக்க வேண்டும்.
அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதி, சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் போட்டியிடும் திறனைப் பாதிக்காது, அதை வலுப்படுத்தவே செய்யும். எனவே, அது விரயமில்லை, முதலீடு என்று கருத வேண்டும். அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு, முழுமை யான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும், அவர்களின் வேலை நிலை மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
முதலீடா, தொழிலாளர் நலமா?
பொருளாதாரம் தாராளமயமாகிவிட்ட நிலையில், வளரும் நாடுகள் அந்நிய முதலீடு களைக் கவர்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டன. ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், சந்தை வாய்ப்புகள், தொழில் திறனுள்ள தொழி லாளர்கள் ஆகியவற்றின் சாதகங்களைச் சொல்லி முதலீடுகளைக் கவர வேண்டும். ஆனால் இந்தியாவோ குறைந்த கூலியில் வேலையாட்கள் கிடைக்கும் நாடு என்ற அடிப்படையிலேயே அந்நிய முதலீடுகளை வரவேற்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஏற்றபடி, தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்துவதற்கு இந்தியா தயாராகிவிட்டது.
இதுவரையிலான தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக நான்கு புதிய சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவரு வதற்கு மத்திய அரசு முயற்சித்துவருகிறது. முதற்கட்டமாக, கூலி மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான இரண்டு சட்டத் தொகுப்புகளின் வரைவு தயாரிக்கப்பட்டு விவாத நிலையில் உள்ளது. இதன்மூலம் குறைந்தபட்ச கூலிச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழில் தகராறுகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றால் உறுதிசெய்யப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூன்று முக்கிய கொள்கைகள்
மத்திய அரசு மேற்கொண்டு வருகின்ற தொழிலாளர் சட்டத்திருத்தங்களின் அடிப்படை யாக மூன்று கொள்கைகள் முன்வைக்கப் படுகின்றன. தொழில் நடத்துபவர் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்ளவும், அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் முழு உரிமையுள்ளவர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவர் தொழிலை நிறுத்திக்கொள்ளச் செய்யலாம். அவரது முடிவில் நிர்வாகக் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. தொழில் நடத்துபவர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டு பேர நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை.
மாநில அரசுகளும் அந்நிய முதலீடுகளைப் பெற அனுமதி உண்டு. கூட்டுறவுமுறை கூட்டாட்சி என்ற கோட்பாட்டின்படி, மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்குகிறது. அதற்கேற்ப, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.
தொழிலாளர் சட்டத் திருத்தங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நோக்கம், தொழிலாளர் நலன் பாதுகாப்பு என்பதைக் காட்டிலும் தொழில் தொடங்குபவர்களின் நலனே என்பதாக இருக்கிறது. அரசு சார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, இஎஸ்ஐ மருத்துவமனைகளை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டது என்று மத்திய அரசு தொழிலாளர் நலன் சார்ந்த தனது பொறுப்புகளை ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டே வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கோ தடையாக இருக்கும் என்பது தவறான கணிப்பு.
சீனாவில் இந்தியாவைக் காட்டிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டம்ஒழுங்குமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பேராசிரியர் பிரவீண் ஜா போன்ற பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறார்கள். சீனாவில் தொழிலாளர்கள் பெறுகின்ற ஊதியம், சராசரியாக இந்தியாவைக் காட்டிலும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகம். அந்நிய முதலீடுகளைப் பெறுவதிலும்கூட, இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவைக் காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான அந்நிய முதலீட்டை சீனா பெற்றிருக்கிறது.
உலகப் பொருளாதாரத்தில், கூலியின் வளர்ச்சி விகிதமும் அந்நிய முதலீட்டின் வளர்ச்சிவிகிதமும் ஒருசேர அதிகரித்துக்கொண்டிருக்கும் நாடாக சீனா விளங்குகிறது. ஆனால், இந்தியாவோ தொழிலாளர்களின் தொழில்திறனை வளர்த்தெடுக்காமல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் இந்தியர்களின் உழைப்பை சர்வதேசச் சந்தையில் மலிவுவிலைக்கு விற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாததுதான் வறுமைக்குக் காரணம் என்ற நிலைமாறி, வேலைவாய்ப்பு கிடைத்தாலும் வறுமை தொடரும் என்ற நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
- செல்வ புவியரசன்
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago