நாம் வாழும் காலத்தைத் தகவல் தொழில்நுட்பம் முதலான ஆக்கப் படைப்புகளும் மனித உரிமை முதலான ஆக்கச் சிந்தனைகளும் அடையாளப்படுத்தும். அதே சமயம், மொழிகளின் இழப்பு, சுற்றுச்சூழலின் சிதைவு முதலான அழிவுகளும் இந்தக் காலத்தை நினைவுபடுத்தும். ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இடையே சிக்கலான உறவு உண்டு.
உலகில் ஏறக்குறைய ஏழாயிரம் மொழிகள் உள்ளன; அவை ஒரு தலைமுறைக்கு 20 % வேகத்தில் அழிந்துவருகின்றன என்பது மொழியியலாளர்கள், மானிடவியலாளர்களின் கவலை. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கும் அழியும் ஆபத்து இருக்கிறது. அழிவைப் பற்றிப் பேசும்போது மொழிகளின் எண்ணிக்கையையே குறிக்கிறோம். ஆனால், மொழிகளை எண்ணுவது காட்டிலுள்ள புலிகளை எண்ணுவது போன்ற வேலை அல்ல. அதில் அரசியல் நோக்கங்களும் பண்பாட்டுப் பார்வைகளும் தலையிடும். இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2001) வகைப்படுத்தப்பட்ட மொழிகள் 122; இந்திய இனக்குழுக்களின் கணக்கெடுப்பின்படி (சர்வே ஆஃப் பீப்பிள் ஆஃப் இண்டியா, 2003) இனக்குழுக்கள் தாங்கள் பேசுவதாகச் சொன்ன தாய்மொழிகள் 3,372; இந்திய மக்களுடைய மொழிகளின் கணக்கெடுப்பு (பீப்பிள்’ஸ் லிங்விஸ்டிக் சர்வே ஆஃப் இண்டியா, 2013) கணக்கிட் டுள்ள மொழிகள் 780. முதல் எண்ணிக்கை, மக்கள் தரும் தகவல்களிலிருந்து அரசின் கணிப்பு; இரண்டாவது, மக்கள் தங்கள் பார்வையில் நேரடியாகத் தரும் தகவல். மூன்றாவது, களப்பணியாளர்கள் மக்களிடம் கேட்ட மொழிகள். மொழிகளின் மொத்த எண்ணிக்கையையோ அவற்றின் அழிவுக் கணக்கையோ புள்ளிவிவரக் கணக்காக மட்டும் பார்ப்பது நம்மைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்.
உயிரினப் பன்மையும் மொழிப் பன்மையும்
ஓர் இடத்தில் உருவாகும் மொழிகளின் எண்ணிக்கைக் கும் அந்த இடத்தின் சுற்றுச்சூழலுக்கும் தொடர்பு உண்டு. உயிரினப் பன்மை (பயோ-டைவர்சிட்டி) உள்ள இடங்களில் மொழிப்பன்மை (லிங்விஸ்டிக் டைவர்சிட்டி) இருக்கிறது. சுற்றுச்சூழலைக் காத்து உலகம் இயங்குவதற்குக் காரணமாக உள்ள இயற்கைச் செறிவுடைய 238 இடங்களில் 4,635 மொழிகள் பழங்குடிகளால் பேசப்படுகின்றன. உயிரின அழிவுக்கும் மொழி அழிவுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்தியாவில், முதுகெலும்புள்ள விலங்குகளில் 373 அழியும் நிலையில் உள்ளன; 309 பழங்குடி மொழிகள் அழிவுப்பாதையில் உள்ளன. இவை இரண்டிலும் உள்ள தொடர்பு தற்செயலானது அல்ல என்று நினைப்பதற்கு இடம் இருக்கிறது. சுற்றுச்சூழல் வேறுபாடுகளுக்கு ஏற்ப உயிரினங்கள் தனித்தன்மைகளை வளர்த்துக்கொண்டு பெருகுவதைப் போல, மனித இனத்தில் இனக்கூட்டங்களின் உயிர்வாழும் தேவைகளுக்கு ஏற்ப மொழிகளும் வேறுபடு கின்றன. மொழிகளின் எண்ணிக்கைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் அதிக மொழிகள் பேசப்படுவதைப் பொதுவாகப் பார்க்கலாம்; அல்லது மொழிகளுக்கு இடையே ஒருவகைச் சமத்துவம் இருப்பதைப் பார்க்கலாம். மொழிப்பன்மை பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமானது அல்ல என்று இந்தத் தொடர்பு சொல்லவில்லை; மாறாக, பொருளாதார வளர்ச்சி மொழிப்பன்மையைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.
மூன்று வகை மதிப்புகள்
ஒரு தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரிட மிருந்து அதன் மொழியைப் பெறாதபோதே மொழி இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை பல காரணங்களால் ஏற்படுகிறது. ஒரு மொழி பேசும் சமூகம், தன் மொழிக்கு மூன்று வகையான மதிப்புகளைத் தருகிறது. அவை கலாச்சார மதிப்பு, அரசியல் மதிப்பு, பொருளாதார மதிப்பு. மொழியால் பெறும் கலாச்சார அடையாளம், அரசியல் ஆதாயம், பொருளாதார வாய்ப்பு ஆகியவை மொழியின் தேவையை நிர்ணயிக்கின்றன. இந்த மூன்று மதிப்புகளிடையே முரண்பாடு ஏற்படும்போது பொருளாதார வாய்ப்பு தரும் மதிப்பே மக்களால் முன்னிறுத்தப்படுகிறது. பொருளாதார வசதிக்கு உதவாத தன் மொழி தனக்குப் பாரம்; அதை இழப்பது தனக்கு நன்மையே என்று ஒரு மொழிச் சமூகம் நினைக்கலாம். அப்போது வருங்காலத் தலைமுறையினர் தங்கள் மொழியைத் தொடர்ந்து எடுத்துச்செல்லத் தேவை இல்லை என்று அது நினைக்கும். இந்தக் குறுகிய காலப் பார்வை இயல்பானதே. மனிதநேயக் கல்வி வாழ்க்கைக்குத் தேவை இல்லை; தொழிற்கல்வியே போதும் என்று எண்ணுவதைப் போன்றதே இது. மொழியில் இந்த எண்ணப் போக்கைத் தடைப்படுத்த மொழியின் கலாச்சார அடையாளமும் அரசியல் ஆதாயமும் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதும், மொழி அழிவது தடைப்படும் என்பதைத் தவிர, மொழி வளரும் என்று சொல்ல முடியாது. மாறாக, மொழியின் பயன்பாடு குறைவதால் மொழி சுருங்கும் எனலாம்.
மொழிகளை அழிவிலிருந்து காக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும். ஒரு நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமையும். அதாவது, ஆதிக்க மொழியை அறியாதவர்களும் பொருளாதார வாய்ப்புப் பெறும் வகையில் பொருளாதார அமைப்பும் நன்மைகளும் பரவலாக்கப்பட வேண்டும். இதைச் செய்ய அரசியல் மனஉறுதி இருந்தால் எந்த மொழியும் அதைப் பேசுகிறவர்களின் முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக இருக்காது. ஆதிக்கமற்ற மொழியும் சுருங்காது; பாரமாகக் கருதப்படாது. மக்களின் மொழிக் கணக்கெடுப்பு காட்டும் இரண்டு உண்மைகள் இவை. இவை பலமற்ற மொழிகளை அழிவிலிருந்து காக்கும். நவீன சமூக-பொருளாதார அமைப்பில் உள்ள குறையை மொழி உணர்ச்சியோ சிந்திக்கும் மனமோ இல்லாமல் மக்கள் தங்கள் மொழியைக் கைவிடத் தயாராக இருக்கும் குறையாகச் சுட்டும் தவறும் நீங்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பொருளாதார வளர்ச்சியைச் சிந்திப்பதைப் போல் மொழிகளின் அழிவு இல்லாத பொருளாதார வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
மொழி பேசுபவர்கள் தங்கள் மொழியின் அழிவு நிகழாமல் பார்த்துக்கொண்டாலும், மொழி அழிப்பு நடக்குமா என்ற கேள்வி எழலாம். அரசின் பொருளாதாரக் கொள்கைபோல், கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும் சில மொழிகளை அழிப்பதற்கென்றே அமைக்கப்படலாமா என்பது கேள்வி. இது நடக்கலாம். ஆனால், ஜனநாயக அரசியல் அமைப்பில் இதைத் தடுக்க முடியும். இந்தியாவில் இந்த இரண்டு கொள்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்கும் சாத்தியம் இருக்கிறது.
சிறு மொழிகளின் தனித்தன்மை
தற்காலத்தில் மக்களின் கைக்கு மீறிய ஆதிக்க சக்தி களால் மொழிகள் அழிவதற்கான சாத்தியம் கூடியிருந் தாலும், இதைத் திசைதிருப்ப முடியும். சிறு மொழிகளை ஏன் காக்க வேண்டும் என்ற கேள்விக்கு வலுவான பதில் வேண்டும். அழிந்துவரும் விலங்குகளையும் பறவை களையும் காப்பதில் இன்று காட்டப்படும் ஆர்வம் மொழிகளைக் காப்பதில் இல்லை. இந்த மனப்பாங்கு அதிகாரத்தில் இருப்பவர்களிடமும் மக்களிடமும் மாற வேண்டும். மொழிகள் தோன்றிய காலத்திலிருந்தே சில மொழிகள் மறைந்துகொண்டுதான் இருக்கின்றன. எழுதப் பட்ட மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துகள் அந்த மொழிகளைப் பேசுவோர் இல்லையென்றாலும், இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. எழுதப்படாமல் மறைந்துபோன மொழிகளின் அடையாளமே இன்று இல்லை. இந்த நிலை நீடிக்காமல் இருக்க மொழிகளின் அழிவைத் தடுக்க வேண்டும்.
சில உயிரினங்கள் அழிந்ததைப் போல, சில மொழிகள் அழிந்ததும் வரலாற்று நடைமுறை என்றாலும், இன்று மனிதர்களின் நடத்தையால் இந்த ஆபத்து பல மடங்கு பெருகியிருக்கிறது. மக்கள்தொகை, அரசியல் பலம் போன்ற வலிமைகள் இல்லாத சிறு மொழிகள், ஆதிக்கமுள்ள பெரிய மொழிகளால் அழிவது சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடுகிற இயற்கையின் நியதி அல்ல. இது மனித சமூக-பொருளாதாரக் கட்டுமானத்தின் விளைவு. இதை மாற்றுவது மனிதர்களின் கையில் இருக்கிறது. இதைச் செய்வது மனிதர்களின் தார்மீகக் கடமை; நலிந்தவரை வலியவரிடமிருந்து காக்கும் கடமை; திருப்பித் தன்னால் உருவாக்க முடியாத ஒன்றைப் பாதுகாக்கும் கடமை. மனித உரிமைகளில் ஒன்றான மொழியைப் பறிக்காத கடமை. மொழிகளைக் காப்பதில் மனிதனின் நன்மையும் அடங்கியிருக்கிறது. மனிதனைத் தனித்துக் காட்டும் மொழியின் இன்னும் நமக்குத் தெரியாத இலக்கணக் கூறுகள் சிறு மொழிகளில் இருக்கலாம். உலகை அழிவிலிருந்து காக்கும் வாழ்க்கை மதிப்பீடுகளும் இயற்கையோடு இயைந்து வாழத் தேவையான அறிவும் அழியவிருக்கும் மொழிகளில் வடிக்கப்பட்டிருக்கலாம்.
- இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்
தொடர்புக்கு: annamalai38@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago