அதிமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டி, சமகால அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி (இன்றைய தேதிக்கு தீபா களத்தில் இல்லை) என்று பிளவுபட்டுக் கிடக்கிறது. அதிமுகவின் கட்சி சின்னமான ‘இரட்டை இலை’ இரு அணிகளுக்கும் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுதான் அதிமுகவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்ற சூழலில் கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். உண்மையில், இதுபோன்ற சூழல் அக்கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. 27 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலை அதிமுக எதிர்கொண்டது.
1986 சட்டமன்றத் தேர்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே அதிமுகவை அரியணை ஏற்றினார் எம்.ஜி.ஆர். அவரது உடல் நிலையை நன்றாகவே கணித்து வைத்திருந்த ஆர்.எம்.வீரப்பன், அந்தத் தேர்தலில் தனது விசுவாசிகள் பெருவாரியானவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஆக்கியிருந்தார். சைதை துரைசாமி, வளர்மதி உள்ளிட்ட சாமானியர்களும் சட்டமன்றம் போனது இப்படித்தான். இந்த உத்தி எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஆர்.எம்.வீ.க்குக் கைகொடுத்தது.
ஆர்.எம்.வீரப்பன் கணக்கு
எம்.ஜி.ஆர். மறைந்ததும் தற்காலிக முதல்வராக மூத்தவர் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சினை எழுந்தபோது, 28 எம்.எல்.ஏ.க்களை உறுதியாகவும், 7 எம்.எல்.ஏ.க்களை மதில்மேல் பூனை மனதோடும் தன் வசம் வைத்திருந்த ஜெயலலிதா, நெடுஞ்செழியனே தொடர வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக திருநாவுக்கரசர், குழந்தைவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்டோர் நின்றனர்.
நெடுஞ்செழியன் முதல்வராகத் தொடர்ந்தால், கட்சி தன் கையை விட்டுப் போய்விடுமோ என்று ஆர்.எம்.வீ. பயந்தார். அதேசமயம், தன்னை முதல்வராக முன்னிறுத்திக்கொண்டால் கட்சி பிளவுபடும் என ஊகித்த அவர், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி முதல்வராக வேண்டும் என்று முன்மொழிந்தார். தலைவரின் மனைவி என்பதால் ஜானகிக்கு எதிர்ப்பு இருக்காது; அரசியல் அனுபவம் இல்லாத ஜானகி முதல்வரானால், அரியணை அவருக்கு, அதிகாரம் தனக்கு என்பது ஆர்.எம்.வீ. போட்ட கணக்கு.
ஜானகியை எதிர்த்த ஜெயலலிதா
ஆனால், ஜானகியை ஜெயலலிதா அணி கடுமையாக எதிர்த்தது. அதைச் சட்டை செய்யாமல் அவரை முதலமைச்சராக்கினார் ஆர்.எம்.வீ. இதையடுத்து, ஜானகி ஆட்சிக்கு ஆதரவாக, நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர நாள் குறிக்கப்பட்டது. ஜானகி அரசைக் கவிழ்க்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிய ஜெ. அணி, 22 எம்.எல்.ஏ.க்களை புணேவுக்குக் கடத்தியது. ஆர்.எம்.வீ. அணி சுமார் 90 எம்.எல்.ஏ.க்களை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரசிடென்ட் ஓட்டலில் வைத்திருந்தது. பிரசிடென்ட் ஓட்டல் அன்றைக்குக் கூவத்தூர் விடுதியாகத் திமிலோகப்பட்டது.
இதற்கிடையில், அதிமுக தலைமைக் கழகத்தைக் கைப்பற்ற அதன் வாயிலில் மறியல் போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. ஆட்சி அதிகாரம் தங்கள் பக்கம் இருந்ததால் காவல் துறையை வைத்துத் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தது ஆர்.எம்.வீ. தரப்பு. நகர முடியாது எனப் பிடிவாதம் பிடித்த ஜெயலலிதாவைக் கைதுசெய்து வேனில் ஏற்றப்போனது போலீஸ். உள்ளே போய் சிக்கிவிடக் கூடாது என நினைத்த ஜெயலலிதா, “நான் வீட்டுக்குப் போகிறேன்” எனச் சொல்லி வீட்டுக்கே கிளம்பிப் போய்விட்டார்.
கழுத்தறுத்த காங்கிரஸ்
இந்தச் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயலலிதா அணி வசம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் விரும்பியதைச் செய்துகொடுத்து, அவர்களையும் தங்கள் பக்கம் இழுப்ப தற்காகப் பல விதமான முயற்சிகளையும் ஆர்.எம்.வீ. முன்னெடுத்தார். இன்னொரு பக்கம், சட்ட அமைச்சர் செ.மாதவன் ஜானகிக்காக திமுகவிடம் ஆதரவு கேட்டுத் தூது போனார். இதையெல்லாம் அறிந்து, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங், ‘எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக வசப்படுத்தும் வேலைகளைச் செய்ய வேண்டாம். நம்பிக்கையோடு இருங்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று சொல்லி ஆர்.எம்.வீ.யின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ், தன்னுடைய ஆதரவு நிச்சயம் என்று ஜானகி அணியிடம் கடைசிவரை சொல்லிக்கொண்டே இருந்தாலும், வாக் கெடுப்பு நாளன்று, ‘யாருக்கும் ஆதரவில்லை’ என்று சொல்லிவிட்டது. ஜானகி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, அதிமுக தலைமைக் கழகக் கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. இறுதியில், ஜெயலலிதாவுக்கே சொந்தம் எனத் தீர்ப்பானது. இதைக் கடுமையாக ஆட்சேபித்த ஆர்.எம்.வீ. உள்ளிட்டவர்கள், ‘இது வாங்கப்பட்ட தீர்ப்பு’ என விமர்சித்தார்கள்.
தலைமைக் கழக கட்டிடத்தைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற உரிமைப் பிரச்சினை வெடித்தது. பஞ்சாயத்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் போனது. அந்த சமயத்தில், எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘அண்ணா’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர் அண்ணா நாராயணன். இரட்டை இலைச் சின்னம் குறித்த விசாரணையில் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்ட அவர் அப்போது நடந்த நிகழ்வுகளை இங்கே நினைவுகூர்கிறார்…
‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் பெரிசாஸ்திரி, ஆணையச் செயலாளர் பி.ஆர்.பல்லா ஆகியோர் முன்னிலையில் இரட்டை இலை வழக்கின் விசாரணை நடந்தது. ஜானகி அணிக்கான ஒருங்கிணைப்பாளராக செ.மாதவனும், ஜெயலலிதா அணிக்கான ஒருங்கிணைப்பாளராக (சசிகலா) ம.நடராஜனும் செயல்பட்டார்கள். ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாதாடுவதற்கு ஜெயலிதா தரப்பில் காங்கிரஸ் கட்சியின் கபில் சிபலும், ஜானகி தரப்பில் கே.கே.வேணுகோபாலும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இப்போது, ஓ.பி.எஸ். அணிக்காகத் தேர்தல் ஆணை யத்திடம் வாதிட்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அன்றைக்கு கே.கே.வேணுகோபாலின் ஜூனியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலும் குழம்பிய ஆணையமும்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் யார் யார் என்ற விவரங்களை இப்போது கணிப்பொறியில் பதிந்து வைத்திருக்கிறது அதிமுக. ஆனால், எம்.ஜி.ஆர். காலத்தில் அப்படி இல்லை. கட்சிக்குள் தான் வைத்ததே சட்டம் என நினைத்த எம்.ஜி.ஆர்., தனக்குப் பிடிக்காதவர்களை, தனக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்பவர்களைப் பொறுப்பைவிட்டுத் தூக்கிவிடுவார். அதனால், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய தெளிவான பட்டியல் அன்றைக்குத் தலைமைக் கழகத்திலேயே இல்லை.
அன்றைய தேதியில் அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 850 பேரும், செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 80 பேரும் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் கணக்குச் சொல்லப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களில் 700 பேரும் செயற்குழு உறுப்பினர்களில் சுமார் 70 பேரும் தங்களுக்கு ஆதரவளிப்பதாக ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் பட்டியல் கொடுத்தன. கட்சி யாரிடம் போகப்போகிறது என்ற குழப்பம் இருந்ததால், பலபேர் இரண்டு பட்டியல்களிலும் வஞ்சனையில்லாமல் கையெழுத்துப் போட்டிருந்தார்கள்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் என்னிடம் குறுக்கு விசாரணை செய்தார். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை எம்.ஜி.ஆர். நீக்கிவிட்டார் என்ற தகவல்
‘அண்ணா’
பத்திரிகைக்கு யார் மூலம் வரும் என்று அவர் கேட்டார். ‘அவரே போன் பண்ணிச் சொல்வார்’ என்றேன். ‘அவரால் சொல்ல முடியாத நேரங்களில்?’ என்று கேட்டார். ‘அவரது உதவியாளர்கள் சொல் வார்கள். ஆட்சியில் இருந்தபோது அவரது செயலாளர் களான பிச்சாண்டி, சிவக்கொழுந்து, பரமசிவம் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்’ என்றேன்.
15 நாட்கள் நடந்த விசாரணை
கிட்டத்தட்ட 15 நாட்கள் மாறி மாறி விசாரணை நடந்தது. அதற்குள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி நெருங்கிவிட்டதால், யாருக்கும் இந்தத் தேர்தலில் இரட்டை இல்லைச் சின்னம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம். முடிவு இப்படித்தான் வரும் என்பது இரண்டு தரப்புக்குமே முன்கூட்டியே தெரியும் என்பதால், பெரிதாக யாரும் அதிர்ச்சியடையவில்லை. அதேசமயம், இப்போது சொல்லியிருப்பதுபோல கட்சிப் பெயரையும் கொடியையும் பயன்படுத்தத் தடை ஏதும் விதிக்கவில்லை ஆணையம். அதனால், அதிமுக ஜா அணியும், ஜெ அணியும் அதிமுக கொடியைப் பயன்படுத்தின’’ என்கிறார் அண்ணா நாராயணன். தேர்தலுக்குப் பிறகு ஜெ அணியின் கை ஓங்கியது. கட்சியும் சின்னமும் ஜெயலலிதாவின் வசம் வந்தன. ஜானகி அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
சின்னம், கொடி ஆகியவற்றுக்கான சண்டை மீண்டும் நடக்கிறது. பழைய வரலாறு திரும்புகிறது. பெரிய ஆளுமைகள் யாரும் இல்லாத நிலையில், இன்றைய அதிமுக என்னவாகும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!
- குள.சண்முகசுந்தரம்,
தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago