முடிவுறாப் பயணங்கள், முடிவில்லாச் சிக்கல்கள்

By மருதன்

அலசல் - வெளியுறவு



*

ஆட்சிக்கு வந்த பிறகு தன் கவனம் எதில் இருக்கப்போகிறது என்பதைத் தன்னுடைய பதவியேற்பு விழாவிலேயே போதுமான அளவுக்கு அழுத்தமாகவும் தெளிவாகவும் உணர்த்திவிட்டார் மோடி. முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மே 2014-ல் நடைபெற்ற மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது பலருடைய புருவங்களை உயர்த்தின. அயல்நாடுகளோடு நல்லுறவு கொள்வதில் தனக்கிருந்த நாட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டமான தருணமாக மோடி இந்நிகழ்வை அமைத்துக்கொண்டார். பல முனைகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளை மீறி, நவாஸ் ஷெரீஃப், மகிந்த ராஜபக்‌ச இருவரையும் விழாவில் பங்குபெறச் செய்ததன்மூலம் உறுதியான, திடமான முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியும் என்பதையும் எந்தவிதச் சலசலப்புகளுக்கும் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் மோடி உணர்த்த விரும்பினார்.

எதிர்பார்த்ததைப் போலவே, பதவியேற்ற 100 நாட்களுக்குள் பூடான், நேபாளம், ஜப்பான், மியான்மர், பிஜி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகள் சென்றுவந்தார் மோடி. ஜூன் 2016 முடிய, ஐந்து கண்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 40 நாடுகளில் மோடி கால் பதித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, ஆட்சிக்கு வந்த 2014 முதல் செப்டம்பர் 2015 வரை மட்டும் மோடியின் பயணங்களுக்காக இந்தியா செலவழித்த தொகை ரூ.41.1 கோடி. ஒருமுறை மட்டும் போன நாடுகள், இரண்டு முறை சென்ற நாடுகள், நான்கு முறை (அமெரிக்காவுக்கு மட்டும்) என்று பிரித்து, வகைப்படுத்தி ஆராயும் அளவுக்கு அவருடைய சுற்றுப்பயணங்கள் விரிவாகவும் விமரிசையாகவும் அமைந்திருந்தன.

அடுத்த கட்டத்துக்கு இந்தியா

மோடி பயணம் செய்த நாடுகளின் பட்டியலைப் பார்வையிடும்போது, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா போன்ற பலம்மிக்க நாடுகளுடன் மட்டுமல்ல; மங்கோலியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற சிறிய, பிரபலமற்ற நாடுகளுடனும் நல்லுறவுடன் நீடிக்க வேண்டியதன் அவசியத்தை மோடி அரசு உணர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இதுபோக, இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு 41 ஆப்பிரிக்கத் தலைவர்களை வரவழைத்து ஆப்பிரிக்க மாநாடு ஒன்றை நடத்திக்காட்டியதும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் என்று ஐநா அறிவிக்க வைத்ததையும் மோடியின் சாதனைகளாக அவருடைய கட்சியினரும் ஆதரவாளர்களும் முன்நிறுத்துகிறார்கள். அதே போல் அமெரிக்காவுடன் கூடுதலாக நெருங்கிச் சென்றதையும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு தனது உறவை இந்தியா வலுப்படுத்திக்கொண்டிருப்பதையும் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டி, இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு மோடி நகர்த்திச் சென்றுவிட்டார் என்றும் அறிவித்துவருகிறார்கள்.

நிஜத்தில் நடந்திருப்பது என்ன? அறிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு கள யதார்த்தத்தைப் பார்ப்போம். 40 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, வங்கதேசத்துடனான எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘ஒரு பெண்ணாக இருந்தாலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறார்’ என்று மோடி சொன்னதை ஒருவரும் ரசிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச விடைபெற்று மைத்ரிபால சிறீசேனா பொறுப்பேற்ற பிறகு, மோடி அவருடன் நெருங்கிச் சென்றது நிஜம். ஆனால், ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரக்கூட முடியவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்குப் பயணம் செய்த பிரதமர் என்னும் பெயர் மட்டுமே கிடைத்தது.

சிக்கலைச் சந்தித்த மோடி அரசு

நேபாள நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு மோடிக்குக் கிடைத்தது. அதே சமயம், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்துப் போராடிய மாதாசி இனத்தவர்களின் போராட்டத்தை ஆதரித்துச் செயல்பட்டதால், அந்நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் காரணம் இந்தியா என்று நேபாளம் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியது. அதே போல் மாலத்தீவின் உள்விவகாரங்களிலும் தலையிட்டு, சிக்கல்களைச் சந்தித்தது மோடி அரசு.

ஒபாமா அரசுடன் மோடி நெருங்கிச் சென்றது நிஜம். இரு நாடுகளின் ராணுவமும் இணைந்து பணியாற்றும், ராணுவ ரீதியிலான பரிமாற்றங்கள் சாத்தியப்படும், பொருளாதாரத்திலும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை மட்டுமே ஒபாமா அரசு அளித்திருக்கிறது. மற்றபடி, அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அடையும் ஆதாயத்தைவிட இந்தியாவிடம் இருந்து அதிக ஆதாயத்தை அமெரிக்கா அடையவிருக்கிறது. குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அச்சங்களை இதுவரை அமெரிக்கா போக்கவில்லை. இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு இல்லை என்று அமெரிக்க நிறுவனங்கள் அங்கலாய்க்கின்றன. உங்களுக்குச் சங்கடமளிக்கும் வரி விதிப்பு நடைமுறைகள் களையப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார் மோடி.

பல்டி அடித்த மோடி

ஏப்ரல் 2016-ல் மோடி அரசு டோல்கன் இசா என்னும் சர்ச்சைக்குரிய உய்குர் தலைவருக்கு தர்மசாலாவில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மோடி அரசு விசா வழங்கியது. சீனாவுக்கு வேண்டப்படாத ஒருவருக்குத் துணிச்சலாக விசா வழங்கிய செயலை மோடியின் ஆதரவாளர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். பதான்கோட் தாக்குதலோடு தொடர்புடையவராகக் கருதப்பட்ட பாகிஸ்தானி ஒருவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட சீனாவுக்கு மோடி தக்க பதிலடி கொடுத்துவிட்டார் என்றும் சீனாவின் முகத்தில் அறைந்துவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் பலர் விதந்தோதினார்கள். ஆனால், சீனா தன் எதிர்ப்பைப் பதிவுசெய்த மறுநாளே மோடி யூ டர்ன் அடித்து, விசாவைத் தடுத்துநிறுத்தினார். கொண்டாட்டம் அடங்கிப்போனது மட்டுமல்ல, எவருக்கும் அஞ்சாமல் உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடியவர் என்னும் இமேஜும் அடிபட்டுப்போனது.

மன்மோகன் சிங் சீனாவோடு பலவீனமான உறவையே வளர்த்துவைத்திருந்தார் என்று 2014 தேர்தலுக்கு முன்பு குற்றம்சாட்டிவந்த மோடியால், அதேபோன்ற உறவையே அந்நாட்டுடன் தற்போதும் தொடரமுடிகிறது. அமெரிக்காவுடன் நெருங்கிச்சென்று கைகுலுக்கிக்கொண்டே இன்னொரு பக்கம் சீனாவோடும் நெருங்க முயலும் மோடியின் முயற்சிகள் ‘முரண்பாடானவை’ என்று சீனாவின் பத்திரிகைகள் விமரிசித்துள்ளன. மோடியின் இந்த முரணான அயல்துறை கொள்கை ‘கடினமான நிலைக்கே’ இந்தியாவை அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றன.

சீனாவைப் போலவே பாகிஸ்தானும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. மும்பை தாக்குதலோடு தொடர்புடைய பாகிஸ்தான் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை, காஷ்மீரில் எந்த முன்னேற்றமும் இல்லை. எல்லைப் பகுதியிலும் அவ்வப்போது அத்துமீறல்கள் நடந்துவருகின்றன.

இந்தியாவை உற்றுநோக்கும் சீனா

இரானுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்ள மோடி எடுத்துள்ள முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், அமெரிக்கா ஏற்காத எந்தவொரு செயலையும் இரானுடன் இணைந்து இந்தியாவால் மேற்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். மற்றொரு பக்கம் சீனாவும் இந்தியா - இரான் உறவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது.

மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போது, மோடி அரசின் அயலுறவுக் கொள்கையால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சாதனை அல்லது பெரும் பாய்ச்சல் என்று எதுவொன்றையும் தனித்துக் காட்ட முடியவில்லை. ஆனால், அடிப்படைப் பிழையொன்று சட்டென்று புலப்படுகிறது. அயலுறவுக் கொள்கை என்பது ஓர் அரசுக்கு முக்கியமானது. அதே சமயம், உள்நாட்டுப் பிரச்சினைகளைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவத்தை அதற்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, மின்சாரம், சுகாதாரம் என்று தொடங்கி அடிப்படைத் தேவைகள்கூடப் பூர்த்திசெய்யப்படாத நிலையில், அயல் துறை கொள்கைக்கு ஓர் அரசு அளவுகடந்த முக்கியத்துவத்தைக் கொடுப்பது எந்தவிதப் பலனையும் ஏற்படுத்தாது.

- மருதன், எழுத்தாளர், தொடர்புக்கு marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்