நூற்றாண்டு பழமையான கிணற்றின் கதை!

By முகம்மது ரியாஸ்

கடுங்கோடையிலும் தங்களுக்கான நீராதாரத்தைக் கிணற்றிலிருந்து ஒரு கிராமம் எடுத்துக்கொள்கிறது என்பதில் பெரிதாக ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், சென்னை போன்ற ஒரு நகரத்தில் அப்படி நடக்கிறதென்றால், அது அதிசயம்தான் இல்லையா? உண்மையில், சென்னையின் சில பகுதிகள் இன்னும் தங்களுக்குள் கிராமத்தின் கூறுகளைப் பசுமையோடு வைத்திருக்கின்றன. அப்படியான ஒன்றுதான் சென்னை புறநகர்ப் பகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் ஈஸ்வரி நகர். அங்கேதான் இருக்கிறது அந்த நூற்றாண்டு பழமையான கிணறு.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் குறைந்திருக்கும் இந்தச் சமயத்திலும் அந்தக் கிணற்றில் கணிசமான அளவில் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கிறது. எவ்வழியிலேனும் தண்ணீரைப் பெறுவதற்காக அரசும் மக்களும் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஈஸ்வரி நகர் மக்கள் தங்கள் தண்ணீர்த் தேவைக்கு இந்தக் கிணற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஆச்சரியமான நிகழ்வாகப் பல்வேறு ஊடகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், நேரில் காண அங்கு சென்றேன்.

நகருக்குள் ஒளிந்திருக்கும் கிராமம்

பல்லாவரம் புறநகர் ரயில் பாதையை ஒட்டி அமைந்திருக்கிறது ஈஸ்வரி நகர். தெருவின் நுழைவாயிலில் ஒரு மாதா சிலை. அந்தத் தெருவின் உள்ளமைப்பில் எங்கும் சென்னையின் எச்சத்தைக்கூட உணர முடியவில்லை. மலையடிவாரப் பகுதியான அந்தத் தெருவில், வீடுகளெல்லாம் சரிவுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஐந்தாறு நீல நிற டிரம்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. தெருவின் மையப் பகுதியை அடைகையில் பள்ளிவாசல் ஒன்று தென்படுகிறது. அங்கிருந்தவர்களிடம் கிணறு எங்கே என்று கேட்டபோது, சற்றுத் தொலைவில் இருந்த கோயிலைக் காட்டி, அதன் பின்புறம் இருப்பதாகச் சொன்னார்கள்.

அது ஒரு மைதானம். அந்த மைதானத்தின் கடைக்கோடி மூலையில் குப்பைகளும் முட்செடிகளுமாக இருக்க, பன்றிகள் அங்கே புழங்கிக்கொண்டிருந்தன. அதன் எதிர்மூலையில் சிறு பகுதிக்கு வேலி அடிக்கப்பட்டிருந்தது. அதனுள்ளே இருக்கிறது அந்தச் சிறிய கிணறு. அந்தக் கிணற்றைப் பராமரிப்பவர்களில் ஒருவரான, அந்தப் பகுதியின் முன்னாள் கவுன்சிலர் முத்துவைத் தொடர்புகொண்டேன். நடை செல்லும் உடையணிந்து வளர்ப்பு நாயுடன் வந்தார். கூடவே, 60 வயது மதிக்கத்தக்க தெருவாசி விஜயராகவனும்.

“முப்பது முப்பத்தஞ்சு வருஷமா இந்தக் கிணத்துத் தண்ணியப் புழங்கிட்டு இருந்தாலும் இந்த அளவு மோசமான பஞ்ச காலத்த என் வாழ்க்கைல பாத்ததில்ல” என்ற முத்து, “இந்த ஏரியால இருக்கிற 500 குடும்பத்துல100 குடும்பத்துக்கு இந்தக் கிணறுதான் தண்ணி கொடுக்குது” என்றார். இருவரும் கிணற்றின் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கிணறு வெட்டப்பட்ட கதை

சென்னை துறைமுகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், அதற்குத் தேவையான கற்கள் இந்தப் பகுதிகளில் உள்ள மலைகளிலிருந்துதான் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கற்களை இங்கிருந்து கொண்டுசெல்வதற்கு நீராவி ரயில்கள் பயன்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், அந்த நீராவி இன்ஜின்களுக்குத் தேவையான தண்ணீரை நிரப்புவதற்காகக் கிணறு வெட்டப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்தக் கிணறு கைவிடப்பட்டது. பிறகு, அந்தப் பகுதியில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படவும் - அதாவது, 1975-ல் அந்தக் கிணறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மக்கள் கைகளுக்கு வந்த பிறகு அதை அவர்கள் பத்திரமாகப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.

இப்போது தண்ணீர்ப் பஞ்சத்தை உணர ஆரம்பித்த தும் ஈஸ்வரி நகர் மக்கள் ஒரு புதிய வழிமுறையை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் மூன்று குடம் தண்ணீர் மட்டும்தான் எடுக்க வேண்டும். காலை 7 மணியிலிருந்து 8 மணி, அதன் பிறகு மதியம் 11மணியிலிருந்து 1 மணி, இறுதிச் சுற்றாக சாயங்காலம் 6மணியிலிருந்து 8 மணி வரை என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டும் அந்தக் கிணறு திறக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கள் அன்றும் காகிதத்தில் எண்கள் எழுதப்பட்டு, சீட்டு குலுக்கப்படுகிறது. அதில் வரும் வரிசையின்படி தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். நாளொன்றுக்குச் சராசரியாக 100 குடும்பங்கள் என ஒரு குடும்பத்துக்கு மூன்று குடங்கள் வீதம் 300 குடம் தண்ணீர் அந்தக் கிணற்றிலிருந்து எடுக்கப்படுகிறது.

ஈஸ்வரி நகர் மக்கள் சொல்லும் செய்தி

இவ்வளவு தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு தண்ணீர் ஊற்றெடுக்கக் காரணம், முன்பு அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஏரிகளும் குளங்களும்தான் என்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஏரிகளும் குளங்களும் காணாமல்போய்க்கொண்டிருப்பதன் வருத்தத்தை அவர்களிடம் உணர முடிந்தது.அதன் மகிமையை இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. சீக்கிரமே சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பாதுகாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களுக்குள் விதைத்திருக்கிறது.

தண்ணீர்ப் பஞ்சம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கான அனைத்து முகாந்திரங்களும் சென்னையில் இருந்தபோதும், அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதையும் நமது அரசு மேற்கொள்ளவில்லை. தண்ணீர்த் தட்டுப்பாட்டை அரசும் அதிகாரிகளும் எதிர்கொள்ளும் விதமோ அவர்களின் அலட்சிய மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நெருக்கடியான மூன்று மாத காலத்துக்குள் நமது அரசு விழித்துக்கொண்டிருந்தால்கூட எதிர்வரும் பருவமழைக் காலத்தை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நீரின்மையின் நேரடிப் பாதிப்பைத் தற்போது மிகத் தீவிரமாக உணர ஆரம்பித்திருக்கிறோம். இதை வெறும் தண்ணீர்ப் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், தண்ணீர் நெருக்கடி நாம் எதிர்கொள்ளப்போகும் பேரழிவின் சிறு வெளிப்பாடு. ஒரு கிணற்றைக் காப்பாற்றி அதைப் பராமரிப்பதில் ஒரு நகரத்துவாசிகள் காட்டிய அக்கறையை ஒட்டுமொத்த சமூகமும் அரசாங்கமும் காட்ட வேண்டும்.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்