கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜ்குமாரை வீரப்பன் கடத்திவைத்திருந்தபோது, தமிழக அரசின் சார்பில் தூதர்களாக வீரப்பனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் ஒருவர், கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பிரபா கல்விமணி. இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருடன் பேசினேன்.
ராஜ்குமார் மீட்புக் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள். இந்தத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தாமதமான தீர்ப்பானாலும், வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்ற வழக்கறிஞர் பாப்பா மோகனின் வாதம் நிரூபணமாகியிருக்கிறது.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் என்ன பேசினீர்கள்?
மனித உரிமைக்கான செயல்பாட்டாளர் என்ற வகையிலேயே நான் பேசினேன். “முதியவரான ராஜ்குமாரைக் கடத்தியது நியாயமே அற்றது. இது அடிப்படையில் மனித உரிமை மீறல்தானே?” என்பதுதான் எங்கள் வாதமாக இருந்தது. இது வீரப்பனுக்குத் தார்மிகரீதியாக ஒரு சவாலாக இருந்தது. ஏனென்றால், “தேடல் வேட்டை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நீதி வேண்டும்” என்ற கோரிக்கையை ராஜ்குமாரைக் கடத்தியபோது அவர் முன்வைத்திருந்தார். போலீஸார் எவ்வளவு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் அவர் பட்டியலிட்டிருந்தார். “உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இரண்டு மாநில அரசுகளும் உறுதியளிக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், நாங்கள் அதற்காகப் போராடுவோம்” என்றும் வீரப்பனிடம் சொன்னேன். இதற்கு அவர் காது கொடுத்தார்.
பழங்குடி மக்கள் தொடர்பில் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?
எங்கே நிறைவேற்றினார்கள்? தூதுவர்களாகச் சென்ற எங்களுக்கே சம்மன் அனுப்பி சாட்சிகளாக்கினார்கள். இவ்வளவுக்கும் தூதுவர்களாகச் செல்பவர்களுக்கு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் சம்மன் அனுப்ப மாட்டோம் என்று இரண்டு மாநில உள்துறைச் செயலர்களும் முன்பு கூறியிருந்தார்கள். அதையே மீறினார்கள். எங்களுக்கே இந்தக் கதி என்றால், குரலற்ற பழங்குடி மக்கள் நிலைமையை யோசியுங்கள்.
வீரப்பனை நீங்கள் பார்த்த நாட்களில் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்தது?
எனக்கு ஒரு விஷயத்தில் அவர் மீது மதிப்பு இருந்தது. அது என்னவென்றால், கடத்திச் சென்றிருந்தாலும், ராஜ்குமாரை மிகவும் கண்ணியமாக நடத்தினார் வீரப்பன். ராஜ்குமாரை விடுவிக்கும்போது புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார் வீரப்பன். இருவரும் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர். இங்கே படித்து, பயிற்சி பெற்று போலீஸ் வேலைக்குச் செல்பவர்கள் காவலில் வைக்கப்படுபவர்களை எத்தனை மோசமாக நடத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது அது மரியாதையைத் தந்தது.
தமிழக அரசுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
அப்பாவி மலைவாழ் மக்கள் மீது போலீஸார் நடத்திய அட்டூழியங்கள் சொல்லவே முடியாத அளவுக்குக் கொடுமையானவை. பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கான உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கொடுமையிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!
- சந்தனார்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago