ஒரு ஆரோக்கியமான மாற்றம் உருவாகியிருந்தது. லண்டன் வந்தது முதலாக அன்றாடம் சுமார் 20 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்திருந்தேன். நடை, மிகுந்த விருப்பத்துக்குரியதாக ஆகியிருந்தது. மரங்களின் நிழல் தரித்த, மேடு பள்ளங்கள் - குறுக்கீடுகள் அற்ற, அகல விரிந்த நடைபாதைகள் மேலும் மேலும் நடக்கும் உத்வேகத்தை அளித்தன. உடலைத் துளைக்கும் குளிரானது நடையில் அபாரமான ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது. கதகதப்பான கோட்டும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய மழையை எதிர்கொள்ள கையில் ஒரு குடையும் இருந்தால் நாளெல்லாம் நடந்துகொண்டே இருக்கலாம்போல் இருந்தது.
நகரம் சில்லிட்டிருந்தது. நகரின் கடைவீதிகளைச் சுற்றிவர அன்றைய மதியப் பொழுதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நண்பகலுக்குப் பிந்தைய, சாயங்காலத்துக்கு முந்தைய, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பொழுதானது கடைகளை வேடிக்கைபார்த்தபடி நடக்கவும், விருப்பமான கடைகளில் சடாரென்று உள்ளே நுழைந்து ஒரு பார்வையிட்டுத் திரும்பவும் வசதியானது. எந்த நகரின் கடைவீதியும் சோம்பல் முறிக்கும் நேரம் அது.
வாடிக்கையாளர்கள் சாலையை வேடிக்கைபார்த்தபடி சாப்பிட ஏதுவாக உணவு விடுதியின் வாசல் பகுதியில் போடப்பட்டிருந்த மர மேஜை ஒன்றின் முன் அமர்ந்தேன். நடைபாதையை ஆக்கிரமிக்காமல், தங்களுடைய கடைகளின் முன் பகுதியிலேயே இடம் ஒதுக்கி, நடைபாதையின் ஒரு பகுதிபோல இப்படி மேஜை நாற்காலிகளை அவர்கள் போட்டிருந்த விதம் பிடித்திருந்தது. ஒரு காபி சொல்லிவிட்டு சாலை அமைப்பைக் கவனிக்கலானேன். தற்செயலாகக் கண்கள் சந்திக்க நேர்ந்த, எதிரே உட்கார்ந்திருந்த பெண் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவள் முன்னிருந்த பிஷ் அண்ட் சிப்ஸை சாப்பிடலானாள்.
சாலையின் இரு மருங்கிலும் மரங்கள். நடைபாதைகளையும் சாலைகளையும் பிரிக்கும் இடத்தில் சின்னத் தடுப்புகள். பல பிரிவுகளாகத் தடம் பிரிக்கப்பட்ட சாலைகளில், சைக்கிள் ஓட்டிகளுக்கான தடம் தீர்க்கமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இரு புறமும் விரிந்திருக்கும் நடைபாதைகளில் மனிதர்கள் வேக வேகமாக நடந்து கடக்கிறார்கள். கடைவீதி நடைபாதைகளில் பூக்கள் - பூங்கொத்துகள் விற்பவர்கள், முந்திரி பாதாம் பருப்பு வறுவல் விற்பவர்கள், உடைகள் விற்போர், கைவினைப் பொருட்களை விற்போர் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு பேரையும் தாண்டி இடையூறின்றி நடப்பதற்கு நடைபாதையில் தாராளமான இடம் இருக்கிறது. பெரிய வீதிகளில் ஒரு பஸ் செல்லும் அளவுக்கு, சின்ன வீதிகளில் ஒரு கார் செல்லும் அளவுக்கு நடைபாதைகள் அகலமாக இருக்கின்றன.
பாதசாரிகளின் சொர்க்கம் என்று லண்டனைச் சொல்ல முடியாது. “ஐரோப்பாவின் பல நாடுகளில், குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகளில் பாதசாரிகளுக்கு உள்ள வசதிகளோடு ஒப்பிட்டால் லண்டன் சாலைகளில் பாதசாரிகளுக்கு உருவாக்கப்பட வேண்டிய வசதிகள் இன்னும் அதிகம்; அதேபோல, ஏனைய பல ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிட லண்டன்வாசிகள் நடப்பது குறைவு” என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், மக்கள்தொகை பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் மிக்க இந்திய நகரங்கள் லண்டனிடமிருந்தே நிறைய பாடங்களைப் பெற முடியும் என்று எனக்குத் தோன்றியது.
இப்படி நினைக்க இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஸ்காண்டிநேவியன் நகரங்களைப் போல அல்லாமல் மக்கள் நெருக்கடிமிக்க நகரம் லண்டன் - உலகிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று. அடுத்து, இரண்டாயிரம் வருடப் பழமையான நகரம் அது.
லண்டன் நகரின் மையப் பகுதியிலுள்ள பல சாலைகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கேற்றபடி அமைக்கப் பட்டவை. நகரில் மேற்கொள்ளும் எந்தச் சீரமைப்பையும் மேம்பாட்டையும் பழைய கட்டுமானங்களினூடாக இருக்கும் குறுகலான சாலைகள் வழியாகவே மேற்கொள்கிறார்கள். இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களுடன் நெருக்கமானது இது. தொழில்மயமாக்கல் காலகட்டத்திலேயே உலகின் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரம் என்ற இடத்துக்கு லண்டன் நகர்ந்துவிட்டதால், அதற்கேற்ப பொதுப் போக்குவரத்து வலையமைப்பை விஸ்தரிக்கும் வேலைகளை நூறாண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டது பிரிட்டன்.
உலகிலேயே முதன்முதலாக - 150 ஆண்டுகளுக்கு முன்னரே - நிலத்துக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் லண்டனில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிகப் பெரிய பஸ் சேவைக் கட்டமைப்பும் லண்டனுடையது. படகு, ரயில், பஸ், கேபிள், டிராம், விமானம் என்று அத்தனை சாத்தியங்களும் நகருக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1933-ல் உருவாக்கப்பட்ட லண்டன் பயணியர் போக்குவரத்து வாரியத்தில் ரயில்கள், டிராம்கள், பஸ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டது பொதுப் போக்குவரத்து இயக்கத்தில் முன்னோடிச் செயல்பாடு. இவ்வளவையும் தாண்டி மக்களிடம் நடையை ஊக்குவிக்கவே பிரதான கவனம் அளிப்பதாகத் தெரிவித்தார் லண்டன் மேயர் சாதிக் கான்.
ஒவ்வொரு பிரிட்டிஷ்காரரும் குறைந்தபட்சம் 10,000 அடிகள் - தோராயமாக ஐந்து மைல்கள் - அன்றாடம் நடப்பது சூழலை மேம்படுத்துவதுடன் வலுவான உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்று பிரிட்டிஷ் அரசின் தேசிய சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. அலுவலகம், பள்ளி கல்லூரி, கடைகளுக்குச் செல்வதற்காக அன்றாடம் பதினைந்து மைல்கள் வரை நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்களை நான் சந்தித்தேன். “வருஷத்துக்குப் பத்தாயிரம் பேர் வரை காற்று மாசால் லண்டனில் உயிரிழக்கிறார்கள். தவிர்க்க முடியாத சூழலின்றி மோட்டார் வாகனத்தில் ஒரு தனிநபர் கை வைப்பது கொலைபோலவே தோன்றுகிறது” என்றார்கள்.
நடையை ஊக்குவிப்பது எதிர்காலப் போக்குவரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்தச் செயல்திட்டம் என்பதைத் தாண்டி பெரிய நிதியாள்கைத் திட்டமும் ஆகும் என்று பொருளாதார ஆய்வறிஞர்கள் தெரிவித்தனர். “லண்டனில் வசிக்கும் ஒவ்வொருவரும் அன்றாடம் வெறும் 20 நிமிஷங்கள் நடந்தாலே, அடுத்த 25 ஆண்டுகளில் அரசின் தேசிய சுகாதார சேவைக்கான செலவில் 100 கோடி பவுண்டுகளை மிச்சப்படுத்தலாம். அதாவது, நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டால் அடுத்த 25 ஆண்டுகளில் 85,000 பேருக்கு இடுப்பு எலும்பு முறிவு, 19,200 பேருக்கு நினைவிழத்தல், 18,800 பேருக்கு மன அழுத்த நோய்கள் வராமல் தடுத்துவிடலாம்” என்று அவர்கள் மதிப்பிடுகிறார்கள்.
உலகிலேயே நடப்பதற்கு மிகவும் எளிதான நகரமாக லண்டனை மாற்றும் செயல்திட்டத்தை இப்போது லண்டன் மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது. “பத்தாண்டுகளுக்குள் பாதசாரிகள் இடையே மேலும் பத்து லட்சம் நடைகளை அதிகரிக்க வேண்டும் என்பது லண்டன் மாநகர நிர்வாகத்தின் இலக்கு. இதற்கேற்ப சாலைகள் மறுவடிவமைக்கப்படும், நிர்வகிக்கப்படும். நடைபாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு, நடப்பவர்களுக்கான வழிகாட்டும் அமைப்புகள், வசதிகள் யாவும் மேம்படுத்தப்படும். இன்று லண்டன்வாசிகளில் 60% பேர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதை 25 ஆண்டுகளுக்குள் 80% ஆக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கெனவே 200 கோடி பவுண்டுகளை முதலீடு செய்கிறோம்; நடைபாதைகளை இதயத்துக்கு நெருக்கமானதாக மாற்றவிருக்கிறோம்” என்றார் நகரின் நடைபாதைத் திட்டங்களுக்கான ஆணையர் வில் நார்மன்.
எனக்கு லண்டனைச் சுற்றிக்காட்டிய டாக்ஸி ஓட்டுநர் ஜான் பிலிப், “எதிர்காலத்தில் நகருக்குள் டாக்ஸி நீங்கலாக காரே இல்லாமல் அரசாங்கம் செய்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார். இப்படிச் சொன்னவர், “நாளை டாக்ஸிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டாலும்கூட நான் வரவேற்கவே செய்வேன். தனிப்பட்ட வகையில் எனக்கு அது சிக்கல். நான் வேறு வேலை தேட வேண்டி இருக்கும். ஆனால், பொது நன்மைக்கு இது அவசியம். காற்று மாசு வருஷந்தோறும் அத்தனை பேர்களைக் கொல்கிறது” என்றார். கேட்க சந்தோஷமாக இருந்தது.
லண்டனில் தனியார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஜான் பிலிப் சொல்லிக்கொண்டே வந்தார். மத்திய லண்டன் பகுதியில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ‘நெரிசல் கட்டணம்’ என்று ஒரு நாளைக்கு 10 பவுண்ட் வசூலிப்பதை 2003-ல் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தில் 10% வாகனங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்த்து எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை அடுத்த சில ஆண்டுகளில் ஆச்சரியமூட்டும் வகையில் மூன்றில் ஒரு பங்கு வாகனங்களைக் குறைத்திருக்கிறது. “இதற்கெல்லாம் கார் உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லையா?” என்று கேட்டேன். “முதலில் எதிர்த்தார்கள். ஆனால், நாளாக நாளாகப் புரிந்துகொண்டார்கள். அரசாங்கம் வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டுவருவதில்லை. மக்களிடம் பிரச்சினைகளை விளக்கவும் செய்யும்” என்றார் ஜான் பிலீப்.
நம்முடைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சம் இது. இந்தியா வேகவேகமாக நகர்மயமாக்கலைச் சுவிகரீத்துக்கொண்டிருக்கிறது. பீதியூட்டும் வகையில் நம்முடைய நகரங்கள் வளர்கின்றன. நகரங்களை மக்கள் ஆக்கிரமிக்கிறார்கள். ஆனால், நகரக் கலாச்சாரம் ஒன்றை இந்திய அரசு வளர்த்தெடுத்திருக்கிறதா?
டெல்லிக்கு முதல் முறை செல்கிறேன். காசியிலிருந்து டெல்லி செல்லும் ரயில் அது. கோடைகாலம். சீக்கிரமே விடிந்துவிட்ட காலை. ரயில் ஜன்னல்வழி கோதுமை வயல்களை வேடிக்கைபார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். டெல்லியின் புறநகர்ப் பகுதியில் ரயில் நுழைந்துகொண்டிருக்கிறது. பாதையின் இருமருங்கிலும் மலம் கழித்தபடி மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். முந்தைய வாரம் நெடுகிலும் கிராமங்களில் நான் பார்த்த காட்சிக்கும் இதற்கும் ஒரே வேறுபாடுதான் இருந்தது. கிராமப்புற இந்தியாவில் சொம்பு. நகர்ப்புற இந்தியாவில் பாட்டில்.
இந்திய அரசு தொழில்மயமாக்கலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அதையொட்டியும் ஒரு ஆழமான கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள முடியும். தொழில்மயமாக்கலை நோக்கி மக்களைத் தள்ளும் அரசு எந்த அளவுக்குத் தொழில் சிந்தனையை மக்களிடம் உருவாக்குகிறது? அதற்கேற்ற சூழலை உருவாக்க முனைகிறது? மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு, அச்சங்களுக்குப் பதில் அளிக்க முற்படுகிறது?
பிரிட்டனில் தொழில்மயமாக்கல் நடந்த காலகட்டத்தில் காபி ஹவுஸ்களில் நிகழ்த்தப்பட்ட தொழில்மயமாக்கல் குறித்த விளக்கவுரைகள், அறிவியல் செயல்விளக்கங்களை இங்கே நினைவுகூரலாம். தொழில்மயமாக்கல் காலகட்டத்தில்தான் அங்கே கல்வி, சுகாதாரத்துக்கான பொதுச் செலவுகள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் அறிவொளிக்கும் அறிவியல் புத்தொளிக்குமான காலகட்டமாகவும் தொழில்மயமாக்கல் காலகட்டமே அங்கு இருந்திருக்கிறது. இங்கே நடப்பதென்ன? கல்வி, சுகாதாரத்துக்கான செலவினங்கள் குறைக்கப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. தொழில்மயமாக்கலைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள் தேச விரோதிகளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிவேக கார்களுக்காக எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்பட சாமானியர்களுக்கான நடைபாதைகளோ மேலும் மேலும் சுருங்கி ஆவியாகின்றன.
எங்கு தொடங்கும், எங்கு அறுந்துபோகும் என்று தெரியாத, காலோடு ஆளை வாரி இழுத்துவிடக்கூடிய பள்ளங்கள் நிறைந்த, மரங்களும், மின் கம்பங்களும், அரசியல் கட்சிகளின் விளம்பரப் பதாகைகளுக்கான அடிக்கம்பங்களும், பாலங்களின் தூண்களும் குறுக்கிடக்கூடிய, நடக்க முற்படும் ஒரு சாமானியனை எந்த நேரத்திலும் கொன்றுவிடும் அபாயம்மிக்க நம்மூர் நடைபாதையை நினைத்துப்பார்க்கையில், அது வெறுமனே நம்முடைய ஆளும் வர்க்கத்தின் அறியாமையாகவோ, அசட்டையாகவோ தெரியவில்லை. ஒட்டுமொத்த இந்தியக் குடிமைச்சமூக மனநிலைக்கான, சாதாரண மக்களின் மீதான நம்முடைய அலட்சியத்துக்கான ஒரு குறியீடுபோலவே தெரிகிறது!
(இனி திங்கள்தோறும் பயணிப்போம்…)
- சமஸ், தொடர்புக்கு: SAMAS@THEHINDUTAMIL.CO.IN
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
48 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago