சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு?

By களந்தை பீர் முகம்மது

16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கூட்டணிகள் குழப்பமாக இருக்கின்றன. ஒரு புகைமூட்டத்துக்குள் நின்று விளையாட வேண்டிய நெருக்கடி இந்திய வாக்காளருக்கு! தேசிய அளவில் உண்டான கூட்டணிகளில் நட்பு சக்திகள் அனைத்தும் ஒரே அணியாக இல்லை.

இதனால் சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் தங்களின் கூட்டணி எது என அடையாளம் காண்பதில் குழப்பங்கள் உருவாகியுள்ளன. அவர்களுக்கு ஆதரவான கட்சிகள் மூன்று அணிகளிலும் உள்ளன. குழப்பத்தின் நதிமூலம் இதுதான்.

பா.ஜ.க-வுக்குப் பெருநிறுவனங்களின் ஊடக ஆதரவும் பணபலமும் இருப்பதால் அது ஒரு பிரம்மாண்டமான கட்சி என்கிற மதிமயக்கம் பல கட்சிகளுக்கும் உண்டாகிவிட்டது. இன்னும் மாநிலத்தில் நிலவும் சொந்த மோதல்களால் பல கட்சிகள் பா.ஜ.க. அணியில் போய்ச்சேர்ந்துள்ளன. ராம்விலாஸ் பாஸ்வான், வைகோ, சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் இவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

இவர்கள் அணிமாறியிருப்பதால் சிறுபான்மையினருக்கும் தலித் மக்களுக்கும் விரோதிகள் ஆகிவிடப் போவதில்லை. அதேபோன்றுதான் ஃபாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் முஸ்லிம் லீக்கும் காங்கிரஸின் அணியில் இருப்பதால், காங்கிரஸ் சிறுபான்மையினருக்கும் தலித் மக்களுக்கும் பாதுகாப்பான கட்சி என்றும் ஆகிவிடப்போவதில்லை.

பா.ஜ.க-வைப் பலவீனப்படுத்த ஒரே வழி

காங்கிரஸ் எங்கெல்லாம் வலிமையாக இருக்கிறதோ அங்கெல்லாம்தான் பா.ஜ.க-வும் வலிமையாக இருக்கிறது. அவர்களுக்கிடையே இருந்த கொள்கை, கோட்பாடுகளின் இடைவெளிகள் கரைந்து காணாமல் போய்விட்டன. பா.ஜ.க-வைப் பலவீனப்படுத்த ஒரே வழி காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதில் தொடங்குகிறது.

இந்த நோய்க்கு இதுதான் மருந்து. காங்கிரஸ் வலிமையாக இல்லாத மாநிலத்தி லெல்லாம் பா.ஜ.க. பெயரளவுக்குக்கூட இல்லை என்பதை அவதானித்தால் பா.ஜ.க. பற்றிய பீதியை முடிவுக்குக் கொண்டுவரலாம்.

2002 கைகொடுக்கும்

அன்றைக்கு மன்மோகன்சிங்கைக் கொண்டுவர விரும்பிய அதே கார்ப்பரேட் சக்திகள் இன்று நரேந்திர மோடியை முன்நிறுத்துகின்றன. கறைபட்டிருப்பதாகக் கருதப்படும் மன்மோகன்சிங்கை முன்நிறுத்தினால் தாங்கள் விரும்பும் ஆட்சியை நிறுவ முடியாது என்று உணர்ந்துகொண்டன அவை. அதனால் மோடிக்கு இல்லாத தகுதிகளை பூதாகரமாக்கி அவரைத் தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

மோடியையும் மன்மோகனையும் தேர்ந்தெடுத்துக்கொண்ட நிறுவனங்களுக்குக் கட்சி பேதம் இல்லை. மன்மோகனின் ஆட்சி சின்னாபின்னமானதற்கு அவர் பெருநிறுவனங்களின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டதுதான் காரணம். அதன் பொருட்டாக இந்திய சமூக மாண்பு சிதைந்துபோயிருக்கிறது. ஆனால், மோடி இவற்றில் தொட்டுப்பேசுவது ஊழல் பற்றி மட்டும்தான். அதாவது இந்த மாபெரும் சோதனைக் காலத்தை ஒற்றைத் தன்மைப் பிரச்சினையால் வெல்ல மோடி எண்ணியுள்ளார்.

பெருநிறுவனங்களின் நலன் கருதியே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இத்தனை ஊழல்களும் நடந்துள்ளன. அப்படியானால் பெருநிறுவனங்களின் கைப்பாவையாக இருந்துகொண்டே அவற்றின் ஊழலை மோடி ஒழிப்பது எங்ஙனம்? அதில் தோல்வியடைய நேரிடும்போது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வகுப்புவாதத்தை மோடி கைக்கொண்டாக வேண்டியிருக்கும். அதற்கு குஜராத் 2002 அனுபவம் கைகொடுக்கும்.

கூட்டணிக் கட்சிகளின் கணக்கு

இந்நிலையில் பா.ஜ.க-வுடன் இணைந்துகொள்ளும் மற்ற கட்சிகளுடன் பகைமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. வெற்றியோடு தம் கட்சிகளின் வெற்றியையும் பெற இக்கட்சிகள் விரும்புகின்றனவே அன்றி, அதனோடு சேர்ந்து தம்மையும் வகுப்புவாதத்தில் அந்தக் கட்சிகள் தோய்த்துக்கொள்ளாது என்று நம்பலாம்.

ஏனெனில், இந்தக் கட்சிகளின் தலைமைகள் எப்படி இருந்தாலும் இந்தக் கட்சிகளின் தொண்டர் பலம் சிறுபான்மையினரையும், தலித் மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவேளை, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிராக பா.ஜ.க. ஏதாவது முன்னெடுப்புகளைச் மேற்கொள்ளுமென்றால் இந்தக் கட்சிகளிடமிருந்து நிச்சயம் எதிர்ப்பு வரும் என்று சொல்லலாம். மேலும், தேர்தலுக்குப் பின் மாறிவரும் சூழ்நிலையில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருந்தால் இவை நிச்சயம் கைகொடுக்கும்.

பல நாடுகளும் முன்னேறும் காலத்தில் இன்னமும் வகுப்புவாதத் தன்மையைப் பேசியே நம் தேர்தல் காலங்களை எதிர்கொள்வதும், நம் அளப்பரிய வாய்ப்புகளை அதிலேயே விரயம் செய்வதும் இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறது. ‘வளர்ச்சி' என்ற கோஷத்தை முழக்கியபடியே நாட்டைப் பிளவுபடுத்துவது என்ன வகையான அரசியல்? இந்நிலையில் காங்கிரஸின் மீதான மனமாச்சரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு கட்சிகளும் பாசிச அமைப்புகளுடன் கைகோர்ப்பதைத் தடுக்க முடியாமல் போயிற்று!

சில அசந்தர்ப்பங்களில் காங்கிரஸும் பா.ஜ.க. அணியின் ஏதோ ஒரு கட்சியும் களத்தில் இருந்தால் அங்கு சிறுபான்மையினரும் தலித்துகளும் தங்கள் வாக்கினை எப்படிச் செலுத்துவது என ஊகிப்பது நல்லது. மேலும், பா.ஜ.க-வை வெல்ல களம் உண்டு. ஆனால், முதுகில் தொற்றிக்கொண்ட காங்கிரஸை எதிர்கொண்டு வாள்வீச வாய்ப்பில்லை.

காங்கிரஸ், மதச்சார்பின்மைக்கு விசுவாசம் காட்டும் கட்சியல்ல. பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸின் பக்கபலம் அவ்வளவு உறுதியாக இருந்தது. மசூதி இடிப்பு நடைபெற்றபோது சுற்றிநின்ற ராணுவச் செயல்பாடுகுறித்து நாம் இன்னும் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவில்லை. தலித் மக்களின் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், குடிசை எரிப்புகளைக் கட்டுப்படுத்தவும் இன்றுவரை முடியவில்லை.

சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும், ஆட்சியில் இருந்தால் பாசிச சக்திகள் தரும் அதே துயரங்களை, நேச சக்தியாகக் காட்டியே காங்கிரஸ் செய்து முடித்திருக்கிறது. மோடி, காங்கிரஸை வர்ணிப்பதுபோல ஒரு போலிமதச்சார்பின்மை கட்சியாகக்கூட அது இல்லை. காங்கிரஸ் ஊழலில் திளைக்கப் போய்த்தான் இன்று அதை மட்டுமே பேசி பா.ஜ.க. அறுவடை செய்யப்பார்க்கிறது. ஆக, குழப்பங்களையும் பீதியையும் விட்டுவிட்டால் பாதை தெளிவாகத்தான் இருக்கிறது என அறிய முடியும்.

தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்