ரபேல் விமான ஊழல்: பேசுங்கள் மோடி!

By வெ.சந்திரமோகன்

மூச்சுக்கு முன்னூறு முறை ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்று பேசி ஆட்சிக்கு வந்த மோடியை வாயடைக்க வைத்திருக்கிறது ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு. மாநிலங்களில் பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெடிக்கும்போதெல்லாம் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல ஒதுங்கிக்கொண்ட மோடியின் வழக்கமான ஒதுங்கல் அஸ்திரம் இந்த முறை பலிக்கப்போவதாகத் தெரியவில்லை. நேரடியாக மோடியைத் திருடர் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. “எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை. இந்திய அரசு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. தஸ்ஸோ (Dassault) நிறுவனம் அம்பானியுடன் பேசியது” என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந் அளித்திருக்கும் பேட்டிக்குப் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

விமான பேரத்தின் முன்கதை

2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக அறிவித்தார். தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 விமானங்கள் வாங்கவிருப்பதாக அப்போது குறிப்பிட்டிருந்தார் மோடி. முன்னதாக 2008-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒப்பந்தம் இது. அப்போது 126 விமானங்களை வாங்க பேசப்பட்டிருந்தது.

பறக்கத் தயார் நிலையில் 18 விமானங்களை அந்நிறுவனத்திடமிருந்து வாங்குவது, 108 விமானங்களை பொதுத் துறை நிறுவனமான பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் (ஹெச்ஏஎல்) தயாரிப்பது, அதற்கான தொழில்நுட்பத்தை பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸோ நிறுவனம் வழங்குவது என்றுதான் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது இந்தத் திட்டம் மாறியது. 36 விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்குவது என்று முடிவானது. 2016 செப்டம்பரில் இதுதொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் புதிய ஒப்பந்ததின்படி பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனம் முன்பிருந்த இடத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டுவரப்பட்டது. 10 ஏப்ரல் 2015-ல் தஸ்ஸோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் பெயர் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டதுதான் இங்கு மிக மிக முக்கியமான விஷயம்.

விமானத் தயாரிப்பில் பெரும் அனுபவம் கொண்ட ஹெச்ஏஎல் நிறுவனத்தைத் தவிர்த்துவிட்டு, அனுபவமே இல்லாத வாராக்கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும், ரூ.1.21 லட்சம் கோடி கடன் கொண்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஏன் என்ற கேள்விதான் மோடி அரசை இன்று எதிர்க்கட்சிகள் துளைத்தெடுக்கும் கேள்வி. அம்பானிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பைத்தான் எதிர்க்கட்சிகள் வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றன.

ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசு எங்கெல்லாம் தள்ளாடியிருக்கிறது என்பதை பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மூவர் கூட்டணி புட்டுபுட்டு வைக்கிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இவர்களின் வாதங்கள் வலுசேர்க்கின்றன. இவர்களில் அருண் ஷோரியும், யஷ்வந்த் சின்ஹாவும் முந்தைய பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளாடும் சமாளிப்புகள்

முதலில் ‘‘இந்த ஒப்பந்தத்தில் ஹெச்ஏஎல் நிறுவனம் வெளியேறியதற்கு முந்தைய அரசுதான் காரணம்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவந்தார். ஆனால், 2015 மார்ச், செய்தியாளர் சந்திப்பின்போதுகூட ‘ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இனி இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள் வேகமாக நடக்கும் என்று நம்புகிறேன்’ என்று தஸ்ஸோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் ட்ராப்பியர் கூறியிருந்ததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவது இந்த விவகாரத்தில் பாஜக அரசின் முழுத் தள்ளாட்டத்தை அம்பலப்படுத்துகிறது.

விமானங்களின் விலை தொடர்பாகவும் மத்திய அரசு முறையாக அறிவிக்கவில்லை. தேசப் பாதுகாப்பை சாக்காக்கி சப்பைக்கட்டு கட்டியது. “போர் விமானத்தின் விலையைப் பகிரங்கமாக அறிவித்தால், அந்த விமானத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பது வெளியில் தெரிந்துவிடும். எனவே, தேசப் பாதுகாப்பைக் கருதியே விமானத்தின் விலையை வெளியிட மறுக்கிறோம்” என்று அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்று முன்பு முடிவுசெய்திருந்ததாகவும், தற்போது அதே விமானத்தை ரூ.1,670 கோடிக்கு, அதாவது மூன்று மடங்குக்கு மேற்பட்ட விலையில் மோடி அரசு வாங்குவதாகவும் குற்றம்சாட்டுகிறது காங்கிரஸ். இந்த விலை உயர்வுக்குப் புதிய ஆயுதங்கள் பொருத்தப்படுவதால் விலை அதிகமாகியிருக்கிறது என்று அரசுத் தரப்பு சொல்வதையும் விமர்சகர்கள் மறுக்கிறார்கள். ஏற்கெனவே, இந்த அம்சங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது அவர்கள் வாதம்.

முக்கியமான இன்னொரு விஷயம், “சம்பந்தப்பட்ட பிரெஞ்சு நிறுவனம்தான், இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என்று முடிவுசெய்யும்” என்று மத்திய அரசு சொன்னாலும் 2015-ல் பிரதமர் பிரான்ஸ் சென்றபோது கூடவே சென்ற அம்பானியின் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கிடைத்தது சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகி இருக்கிறது. ரபேல் விமான ஊழல் இதுவரை இந்திய அளவில் மட்டும் பேசப்பட்டுவந்த நிலையில், பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஒல்லாந் பிரான்ஸில் இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டி இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அரசின் பரிந்துரையே காரணம் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார் ஒல்லாந். பிரான்ஸின் இன்றைய அரசும், தஸ்ஸோ நிறுவனமும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளபோதிலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக நிற்பதாக தெரிவித்திருக்கிறார் ஒல்லாந்.

சுழலும் பூமராங்

இந்த ஆட்சி முழுவதும் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று எப்போதெல்லாம் அரசு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை உதாரணப்படுத்தி “எல்லையில் வீரர்கள் நிற்கிறார்கள், ரத்தம் சிந்துகிறார்கள், மக்களால் இதைக்கூட தாங்க முடியாதா” என்று கேட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பாஜக இன்று அதே ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிலைகுலைந்து நிற்பதுதான் நகைமுரண். “பிரதமர் நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டார். நமது வீரர்கள் சிந்திய ரத்தத்தை அவமதித்துவிட்டார்” என்று பாஜகவின் வார்த்தைகளை அவர்களுக்கே திருப்பியளித்திருக்கிறது காங்கிரஸ்.

பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் குரலை இதுவரை பாஜக ஏற்கவில்லை. கூடவே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவோ சிஏஜியோ விசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறிவருகிறது. எல்லா விசாரணைகளிலிருந்தும் அரசு தப்பலாம். மோடியும் மௌனம் காக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் பேசித்தான் ஆக வேண்டும். தப்பவே முடியாது!

- வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்