விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை: என்ன செய்கிறது அரசு?

By வெ.சந்திரமோகன்



“பெட்ரோல் விலை மிகப் பெரும் அளவில் உயர்ந்திருப்பது மத்திய அரசின் தோல்விக்கு ஓர் உதாரணம்” என்று நரேந்திர மோடி ட்வீட் செய்திருக்கிறார். அதாவது, 2012-ல். அப்போது அவர் குஜராத் முதல்வர். பிரதமராகப் பதவியேற்று நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.80-ஐயும், டீசல் விலை ரூ.72-ஐயும் தாண்டிவிட்டது. நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. எரிபொருட்கள் விலை உயர்வின் தொடர்ச்சியாகப் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களும் விலையேறும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். ஆனால், அன்று பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக சீறிப்பாய்ந்த மோடி இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எதையும் இன்றுவரை எடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வையும் மக்கள் மத்தியில் கடுமையான அவதியையும் கொண்டுவரும்.

கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலையில் ரூ.3 அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் விலைக்கு இணையாக டீசல் விலையும் போட்டி போட்டு அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.4 விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது டீசல். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் எனும் நடைமுறை 2017 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகக் குறைவான தடவைகள், மிகக் குறைவான தொகைதான் பெட்ரோல் விலை குறைந்தது. மற்றபடி, ஏவுகணைப் பாய்ச்சலில்தான் எரிபொருள் விலை இருந்துவருகிறது. டெல்லியில் கடந்த சனிக்கிழமை அன்று பெட்ரோல் விலை முதன்முதலாக ரூ.80-ஐக் கடந்தது. வெள்ளிக்கிழமை அன்று ரூ.79.99 ஆக இருந்த பெட்ரோல் விலை, மறுநாள் 39 பைசா உயர்ந்து ரூ.80.38 ஆகிவிட்டது. அதேநாளில் டீசல் விலையும், 44 பைசா உயர்ந்து ரூ.72.51 ஆகிவிட்டது. நாடு எங்கும் பல்வேறு நகரங்களில் இதே நிலை. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் என்று கருதப்படும் மும்பையில் ரூ.87.77-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.76.98.

இந்தச் சூழலில், ‘கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ உறுதியளித்தபடி நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் நமக்கு வழங்கப்படவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது’ என்று காரணம் சொல்கிறது அரசு.

தனது தேவையில் 85% வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு உற்பத்தி வரி விதிக்கிறது. மாநில அரசு விற்பனை வரி விதிக்கிறது. இவை தவிர கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகின்றன. பெட்ரோல் விலையில் ரூ.2 குறைக்கப்பட்டாலும் அரசுக்கு ரூ.28,000 கோடி இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எவ்வளவு எதிர்ப்பு, விமர்சனங்கள் வந்தாலும் பெட்ரோல் விலைக் குறைப்புக்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசின் பிடிவாதத்தின் பின்னணி இதுதான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஒரு பீப்பாய் விலை 111 டாலருக்கும் அதிகமாக இருந்தபோதும் பெட்ரோல் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. அப்போது ரூ.65-க்கு விற்பனையானது. தற்போது சர்வதேச அளவில் பெட்ரோல் விலை பீப்பாய்க்கு 69.61 டாலர்தான். ஆனால், இந்தியாவிலோ விலை விண்ணைத் தாண்டுகிறது” என்று கொந்தளிக்கும் காங்கிரஸ், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறது மத்திய அரசு. மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வரியிலிருந்து பெருமளவில் வருவாயைப் பெறும் நிலையில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள்கூட இதற்குத் தயாராக இல்லை என்பது வேறு விஷயம். அதிக அளவில் பெட்ரோலுக்கு வரிவிதிக்கும் மாநிலம் மகாராஷ்டிரா (39.54%). இது பாஜக ஆளும் மாநிலம், அடுத்த இடத்தில் இருக்கும் மத்திய பிரதேசத்திலும் பாஜக ஆட்சிதான்.

2014 நவம்பர் 2016 ஜனவரி காலகட்டத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை. மாறாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 11.77% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக விளக்கமளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளின் காரணமாகவும் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண்போம்” என்று சில மாதங்களுக்கு முன்னர் சொன்னார். ஆனால், இன்றைக்கு பெட்ரோல் டீசலுக்கான வரி குறைக்கப்படாது என்றும், விலை உயர்வை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றும் பேசிவருகிறார்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று சொல்லிவந்த மத்திய அரசு, மறுபுறம் பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் தருணத்தில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யவே பெட்ரோல் பொருட்களுக்கான உற்பத்தி வரியிலிருந்து பெரும் தொகையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. எல்லா ஊடகங்களுமே இதை வெளிப்படையாக விமர்சிக்கின்றன. பாஜகவினர் இடையிலும் முணுமுணுப்பைப் பார்க்க முடிகிறது.

வரிகளைக் குறைப்பதன் மூலமே பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்திருந்த சமயத்திலும் உற்பத்தி வரியைக் குறைத்துக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை. இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபோது அரசு சொன்ன விளக்கம் இதுதான்: “இதில் மிச்சமாகும் தொகை மக்கள் நலத் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.” ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று மக்களையும் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையும் வணிகர்களையும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகளைத்தான் மத்திய அரசு எடுத்தது. பெட்ரோல் இறக்குமதி செய்யும் இலங்கை, சீனா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், ஜிஎஸ்டி வரிவிதிப்பின்கீழ் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட 90%-க்கும் அதிகமாக பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கும் சூழலில், 28% எனும் அளவுக்கு ஜிஎஸ்டியின்கீழ் வரி விதிக்கப்படுவதற்கெல்லாம் தற்சமயம் வாய்ப்பே இல்லை. இதைத்தான், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாரும் சுட்டிக்காட்டுகிறார்.

எல்லாவற்றுக்கும் சர்வதேசக் காரணிகளைச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. பெட்ரோல் விலையைக் குறைப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதை மத்திய அரசு எளிதாகப் புறந்தள்ள முடியாது. நிர்வாகரீதியான கொள்கை முடிவை எடுக்காவிடில், ஆபத்து இன்னும் அதிகமாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்