ஆசிரியர் பணிக்கு வந்த என்னுடைய இருபதாவது வயதில், என் அப்பாவிடம் இந்தி கற்றுக்கொள்ள அனுமதி கேட்டேன். “இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் செய்தவன் நான். என்னுடைய மகளை இந்திப் படிக்க அனுப்பினால் ஊர் என்னைக் காறி உமிழும்” என்று மறுத்துவிட்டார். நானும் பிடிவாதக்காரி. ஒரு வாரம் அழுகை; அடுத்து உண்ணாவிரதப் போராட்டம். “நீங்கள் பள்ளிக்கூடத்தில், திணிக்கப்படும் இந்திதானே வேண்டாம் என்கிறீர்கள்? நான் என் விருப்பத்தின் அடிப்படையில் வெளியில் படிக்கச் செல்வதில் என்ன பிரச்சினை?” என்று கேட்டுப் போராடினேன். பக்கத்து வீட்டுப் பெரியப்பா எனக்காக வாதாடியதன் விளைவாக சீக்கிரமே இந்தி படிக்க அப்பா அனுமதியும் அன்றைக்கு அதற்கான மாதக் கட்டணமான முப்பது ரூபாயும் கொடுத்தார். ஆனாலும், அப்பாவுக்கு அதில் ஏனோ ஒரு குற்றவுணர்வு இருந்தது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் இந்தித் திணிப்பை எதிர்ப்பதிலோ, தமிழைத் தாங்கிப் பிடிப்பதிலோ எந்த அளவிலும் எங்கள் முந்தைய தலைமுறைக்கு சளைத்தவர்களாக இல்லை; ஆனால், கொள்கையுடன் யதார்த்தத்தையும் பார்க்கக் கற்றோம்.
இந்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான பாடத்திட்ட வரைவில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்றபோது, 1965-ல் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சிமிக்க எதிர்ப்பு எப்படி இருந்ததோ அப்படியே இப்பொழுதும் இருப்பதை உணர முடிகிறது. தலைவர்களின் எதிர்ப்பைப் பார்க்கும்போது தமிழகம் இன்னும் தன் எழுச்சியை மறந்து விடவில்லை என்ற ஆறுதலும் எழுகிறது. ஆனால், ஒரு கேள்வி இன்று நம் கண் முன்னே நிற்கிறது: நாம் பேசிக்கொண்டிருக்கிற இருமொழிக் கொள்கை யாருக்கு மட்டுமானது?
ஆங்கில வழிப் பள்ளிகளுக்குப் போக போதுமான பணம் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கு மட்டும்தானா இருமொழிக் கொள்கை? ஏனென்றால், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் பெரும்பான்மையினரின் குழந்தைகள் இன்று தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சின்னஞ்சிறிய கிராமத்தின் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்கி, மாநிலப் பாடத்திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டம் எனப் பல்வேறு பாடத்திட்டங்களையும் பின்பற்றும் எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது. அவர்களே தனியாக இந்தி ஆசிரியர்களையும் வைத்து, தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவின் மூலம் இந்தித் தேர்வுகளையும் நடத்திவிடுகிறார்கள்.
ஏறக்குறைய பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் பலர் இந்தியில் இளநிலைப் பட்டமே வாங்கிவிடுகிறார்கள். இன்னும் பணக்கார தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிரெஞ்சு, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளை இரண்டாம் மொழிகளாகக் கொடுக்கிறார்கள்; மாணவர்கள் கற்கிறார்கள். ஆக, இருமொழிக் கொள்கையை வலியுறுத்துபவர்கள் யாருக்கு மட்டும் வலியுறுத்துகிறார்கள்? அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் இருமொழிக் கொள்கை என்றால், அது நியாயமா? சம வாய்ப்பு அற்ற சூழலைச் சமூக நீதி என்று சொல்ல முடியுமா? நான் வளர்ப்பாலும் உணர்வாலும் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவானவள்தான். ஆனால், அது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தானா; ஏன் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இல்லை என்று கேட்கிறேன்.
என்னுடைய எளிய கேள்வி இவைதான். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தவிர அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தி கற்றுத் தரப்படுகிறதே, அது நம்முடைய மாநில இருமொழிக் கொள்கைக்கு எதிரானது இல்லையா? அப்பள்ளிகள் எல்லாம் தமிழக அரசின் ஆணைக்கு கட்டுப்பட்ட பள்ளிகள் இல்லையா? இந்தி தமிழகத்திற்கு வேண்டாம் என்றால், தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் (மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா தவிர) அது பொருந்தும்தானே? ஏன் அங்கே மட்டும் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படுகிறது? இந்த இரட்டை நிலை இரட்டை வேஷம் இல்லையா? பாகுபாடு இல்லையா? இதைச் சரிசெய்யும் வகையில் நம்முடைய மொழிக் கொள்கை மாற வேண்டாமா?
தமிழ்நாட்டின் பெரும்பான்மைத் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நல்லது. உங்கள் பின்னால்தான் நாங்கள் அணிவகுத்து நிற்கிறோம் தலைவர்களே! மாநில அரசின் தனித்துவமான உரிமையில் மத்திய அரசு கை வைக்கும்போதெல்லாம் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம். ஆதிக்கத்தை எதிர்த்து உரத்து கோஷமிடுவோம். அதற்கு முன்னால், உண்மையில் உங்கள் போராட்டம் யாருடைய கதவுகளை மட்டும் அடைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அகக்கண் திறந்து பாருங்கள் என்றுதான் கேட்கிறோம்!
-அ.வெண்ணிலா, ஆசிரியர்-எழுத்தாளர்,
தொடர்புக்கு: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago