தண்ணீர் பஞ்சம்: இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்!

By செல்வ புவியரசன்

இந்தியாவில் ஏறக்குறைய 40% நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகப் பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என்று தென்னிந்திய மாநிலங்களும் இதிலிருந்து தப்பவில்லை.

மகாராஷ்டிரத்தின் சரிபாதிப் பகுதிகள் கடும் வறட்சிக்கு ஆளாகியிருக்கின்றன. இங்கே ஏறக்குறைய 28,000 கிராமங்கள் தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்திருக்கின்றன. மராத்வாடா பகுதியிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முற்றிலுமாகத் தண்ணீர் இல்லாமல்போய்விட்டது.

எட்டுத்திக்கும் வறட்சி

வெளிமாவட்டங்களிலிருந்து தண்ணீர் கொண்டுவருவதற்காக 6,000 தண்ணீர் லாரிகள் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தண்ணீர் லாரிகளை நம்பித்தான் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் இருக்கின்றன. மகாராஷ்டிரத்துக்கு வறட்சி என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதுபோல் படுமோசமான தண்ணீர்ப் பஞ்சத்தை இதற்கு முன் மகாராஷ்டிரம் சந்தித்தது இல்லை. “1972-ல் ஏற்பட்ட மிகப் பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தைக் காட்டிலும் தற்போது நிலைமை மோசமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார்.

குஜராத்தில் 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்ச் பகுதியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து 500 தண்ணீர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 5,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. ஆந்திரத்தில் 11 மாவட்டங்களில் வறட்சி. கர்நாடகத்தில் உள்ள 176 வட்டங்களில் 156 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மத்திய இந்தியாவுக்குத் தெற்கே அனைத்து மாநிலங்களுமே வறட்சியை எதிர்கொண்டுள்ளன. வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக வீசும் அனல் காற்றும், எல் நினோ விளைவுகளும்தான் இந்த ஆண்டில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால், அது மட்டும்தான் காரணமா என்றால், நிச்சயமாக இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசோ நிர்வாகமோ மக்களோ யாருமே தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

நீரை உறிஞ்சும் கரும்புச் சாகுபடி

குஜராத்தின் தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்துக்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும் வறட்சி ஏற்பட்டது எப்படி என்று கேள்வி எழுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியைச் சந்தித்துவரும் மாநிலமான குஜராத், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் கவனமாக இருந்திருக்க வேண்டாமா? மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் இந்த ஆண்டும் வழக்கத்துக்குக் குறையாமல் மழை பொழிந்திருக்கிறது. அங்கு ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணம் அதிக நீர் தேவைப்படும் கரும்பைப் பயிரிடுவதுதான் என்று கூறப்படுகிறது. வறட்சியின் மறுபெயராக இருக்கும் மராத்வாடா பகுதியில் மட்டும் இரண்டு லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் மட்டுமே 50 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டுவருகின்றன.

கர்நாடகத்தில் பாசனப் பரப்பு அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலங்கள், கரும்புச் சாகுபடிக்கு மாற ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை மானாவாரியாக இருந்த ராய்ச்சூர், பெல்லாரி பகுதிகள் நெற்பயிருக்கு மாற ஆரம்பித்திருக்கின்றன. மல்நாடு பகுதியில் தோட்டப் பயிர்களை நோக்கியும் பெரும்பாலானவர்கள் நகர ஆரம்பித்திருக்கிறார்கள். தவிர, கர்நாடகத்தில் மட்டுமே சிறிதும் பெரிதுமாக 35,000 ஏரிகள் இருக்கின்றன. ஆனால், தூர்வாரும் நடவடிக்கைகளில் மாநில அரசோ உள்ளாட்சி நிர்வாகங்களோ அக்கறை காட்டவில்லை.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வறட்சி அனுபவங்களும், அதற்கான காரணங்களும் தமிழ்நாட்டுக்கும் மிகவும் பொருந்தும். கிராமப்புறங்கள் விவசாயத்துக்கும் கால்நடைப் பராமரிப்புக்கும் தண்ணீரின்றித் தவிக்கின்றன. நகர்ப்புறங்கள் குடிநீருக்கு வழியின்றித் தவிக்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நான்கு பெரிய ஏரிகளுமே வறண்டுவிட்டன. சென்னையின் பல பகுதிகளில் குழாய் வழியாகத் தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது.

நீண்ட காலத் தீர்வுகாண வேண்டும்

தண்ணீர் லாரிகளின் வழியாகவே நீர் விநியோகம் நடக்கிறது. வணிக நிறுவனங்கள், கடைகள், அடுக்ககக் குடியிருப்புகள் தண்ணீருக்குத் தனியார் லாரிகளை மட்டுமே நம்பியுள்ளன. அணைகளின் நீர் மட்டம் அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் அணைக்கட்டு நீரைக் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது தேசிய நீர் ஆணையம். விவசாயத் தேவையைக் காட்டிலும் தற்போது குடிநீர்த் தேவையே முந்திக்கொண்டு நிற்கிறது.

வட கிழக்குப் பருவமழை உரிய காலத்தில் தொடங்கிவிட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று இனியும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தள்ளிப்போட முடியாது. பருவநிலை பாதிப்புகளால், இனிமேல் பருவமழைக் காலங்கள் தாமதிக்கலாம், தள்ளிப்போகலாம், மழையளவு குறையலாம். தற்போதைய உடனடித் தேவை நீர்நிலைகளைப் பாதுகாப்பதுதான். மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத் தகவல்களின்படி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் திட்டமிடப்பட்ட 7,90,000 வறட்சித் தடுப்புப் பணிகள் நிறைவடையாத நிலையில் அல்லது தொடங்கப்படாத நிலையில் இருக்கின்றன. வறட்சித் தடுப்பு நடவடிக்கைகளில் நீர்நிலைகளைத் தூர்வாருவதுதான் முதன்மையானது. தூர்வாரும் பராமரிப்புப் பணி என்பது அடுத்து வரும் மழைக்காலம் வரையிலும் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காக மட்டுமல்ல, அதன்வழியாக நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கவும்தான். ஆக, மத்திய - மாநில அரசுகளின் கையிலுள்ள பணி என்பது தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்துக்கொண்டே நீண்ட காலத் தீர்வை நோக்கியும் பயணிப்பதே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

57 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்