பாசன நீருக்கும் கட்டுப்பாடு வேண்டும்

By செல்வ புவியரசன்

இந்தியாவில் பாசனத் தேவைகளுக்காக நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்படுவதே தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணமாகிவிட்டது என்று கூறப்படுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சாகுபடி செய்த பயிருக்கு உரிய விலை கிடைக்கும் என்றால், எதற்காக நாங்கள் கரும்பு பயிரிட்டு சர்க்கரை ஆலைகளிடம் பணத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், இந்தியாவின் நீர்த் தேவைகளில் 80%-க்கும் அதிகமான நீர் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு நீட்டிக்க முடியும்? பாசன நீருக்கு மாற்று கிடையாதா? இஸ்ரேல் வழிகாட்டுகிறது...

வறட்சியிலிருந்து மீண்ட இஸ்ரேல்

கடும் வறட்சிப் பிரதேசமாக இருந்த இஸ்ரேல், தற்போது தனது பயன்பாட்டுக்கும் அதிகமாக உபரிநீரைச் சேமிக்கிறது. 2008-ல் கடும் வறட்சியைச் சந்தித்த இஸ்ரேல், அப்போது அந்நாட்டின் முக்கிய விவசாயப் பரப்பான ‘பிறைப்பகுதி’யில் விவசாயப் பயன்பாட்டுக்கான நீரை நிறுத்திவைத்தது. அதன் விளைவாக, இஸ்ரேலின் பெரும் ஏரிகளில் ஒன்றான கலிலீ ஏரியில் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டிய அளவைக் காட்டிலும் ஒரே ஒரு அங்குலம் தண்ணீரை அதிகமாகச் சேகரிக்க முடிந்தது.

அந்த ஒரே ஒரு அங்குலம் குறைந்திருந்திருந்தால் ஏரிக்குள் உவர்தன்மை உட்புகுந்து, மொத்த நீரும் பயன்படுத்த முடியாமல்போயிருக்கும். தொடர்ந்து, பிறைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ரேஷன் முறையில் தண்ணீர் விநியோகத்தைத் தொடங்கியது. பெரும்பாலான விவசாயிகள், அந்த ஆண்டு விவசாயத்தைக் கைவிட்டனர். அது ஒரு அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால், அரசு பின்வாங்கவில்லை. தண்ணீர் சேமிப்பின் அவசியத்தைப் பற்றியும், அதில் அலட்சியம் காட்டினால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது.

அதேநேரத்தில், பாசன முறையிலும் பெரும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாசனத்துக்காக நன்னீரைப் பயன்படுத்தாமல் மறுசுழற்சி செய்யப்பட்ட உவர்நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தி பரிசோதனைகளைச் செய்தார்கள். உவர்நீரைக் குடிநீராக்குவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும், பாசன நீராக்குவதற்கு ஆன செலவு ஒப்பீட்டளவில் குறைவு. மேலும், நன்னீரில் கழிவுநீர் கலந்து மாசாக்குவதையும் மறுசுழற்சி முறையால் கட்டுப்படுத்த முடிந்தது.

கைகொடுத்த சொட்டுநீர்ப் பாசனம்

திறந்தவெளி வாய்க்கால்களுக்கு மாற்றாக, குழாய்கள் வழியாகப் பாசன நீரைக் கொண்டுசெல்லும் முறைக்கு இஸ்ரேல் மாறியது. சொட்டுநீர்ப் பாசனத்தையும் ஊக்குவித்தது. சொட்டுநீர்ப் பாசன முறையால் தண்ணீர்ப் பயன்பாடு மட்டுமின்றி, வேதியுரப் பயன்பாடும் வெகுவாகக் குறைந்தது. இதன் மூலம், பாசனத்துக்குச் செலவாகும் நீரில் நான்கில் மூன்று பங்கு நீரை அந்நாட்டில் சேமிக்க முடிந்தது. கட்டுப்பாடு இல்லாமல் நீரைப் பயன்படுத்தியதோடு ஒப்பிட்டால், சொட்டுநீர்ப் பாசன முறையில் 15% விளைச்சலும் அதிகரித்தது. தற்போது உலகிலேயே குறைந்த தண்ணீர்ப் பயன்பாட்டில் அதிக விளைச்சல் காணும் நாடு இஸ்ரேல்தான். தற்போது அங்கு தண்ணீர் சிக்கனத்தோடு, அதிக அளவில் உவர்நீரை நன்னீராக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவும் இஸ்ரேலைப் பின்பற்றலாம். கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதையோ, உவர்நீரை நன்னீராக்கும் திட்டங்களையோ விட்டுவிடுவோம். அதற்கான சாத்தியங்கள் இங்கும் உண்டு என்றாலும், அதற்கான தொழில்நுட்பச் செலவுகள் நமக்கு பெருஞ்சுமையாக இருக்கக்கூடும். ஆனால், பாசன நீரைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டை நிச்சயமாக நம்மால் வகுத்துக்கொள்ள முடியும். அத்தகைய கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசு தயங்குவதற்குக் காரணம், விவசாயிகளின் வாக்கு வங்கிகளைக் கண்டு எல்லா அரசியல் கட்சிகளுமே பின்வாங்குகின்றன என்று சுட்டுக்காட்டுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

விவசாயிகளுக்கு மாற்றுவழி சொல்லுங்கள்

இந்தியாவில் பாசன நீருக்குக் கட்டுப்பாடு விதிப்பதில் உள்ள பிரதான சிக்கல், அதைக் கண்காணிப்பதற்காக இதுவரையிலும் எந்த அமைப்புகளும் இல்லை. நன்னீரில் பெரும்பகுதி விவசாயத்துக்காகச் செலவிடப்படுவதாக விவசாயிகள் மீது குற்றம்சொல்லப்படுகிறதேயொழிய, குறைந்த நீரில் விவசாயம் செய்வதற்கான வழிகாட்டும் செயல்திட்டங்கள் உருவாக்கப்படவே இல்லை. நெல் வேண்டாம், கம்பு பயிரிடுங்கள் என்று மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைப்பது தீர்வாகாது.

தமிழ்நாட்டில் 2003-ல் இயற்றப்பட்ட நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம் அந்த வகையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதை முறைப்படுத்தும் வகையிலும் அதைக் கண்காணிப்பதற்கு தமிழ்நாடு நிலத்தடி நீர் ஆணையம் அமைத்திடவும் அச்சட்டம் வகைசெய்தது. ஒரு குதிரை சக்திக்கும் அதிகப்படியான மோட்டார் பம்புசெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று அச்சட்டம் வலியுறுத்தியது. ஆனால், வழக்கம்போலவே விவசாயிகளின் கோபத்தைச் சுமப்பதற்கு அரசு தயாராக இல்லை. அச்சட்டம் 2013-ல் நீக்கப்பட்டுவிட்டது. நிலத்தடி நீரை நிர்வகிப்பதற்கு அரசிடம் சட்டமும் இல்லை; திட்டங்களும் இல்லை.

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்