வீட்டுக் கேணியான மேட்டூர் அணை

By தங்க.ஜெயராமன்

குட்டையிலும் குளத்திலும் தொட்டுத் துடைத்துக்கொள்ள தண்ணீர் இல்லாத அருங்கோடை. தை பிறந்தது முதல் இன்று வரை ஒரே ஒரு நாள் கால் மணி நேரம் சிறு தூறல். புயலும் மழையைக்கூட மறுத்துவிட்டு வடக்கே நகர்ந்தது. கோடை நெல் என்று நட்ட பயிர், வைத்தது வைத்தபடியே வயலில் திரங்கிவிட்டது. மர நிழலில் உட்கார்ந்து ஒரு முதியவர் கீற்று முடைவார். “ஏன் சில நாட்களாக உங்களைக் காணவில்லை?” என்றதற்கு, “மட்டை ஊறவைக்கக் குட்டையில் தண்ணீர் இல்லை” என்றார். “நான் பார்க்காத கோடையா?” என்று அலட்சியம் பேசும் காவிரிக் கரைப் பெரியவர்களையும் அதிரவைக்கும் வெயில் இது.

ஜனவரி இறுதி முதல் இன்று வரை மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கான நீர்ச் செலவு 18 டி.எம்.சி. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி. மேட்டூர் கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்குக்கு மேல். அன்றாடம் விநாடிக்கு ஆயிரம் கன அடி. பிறகு, அவ்வப்போது இரண்டாயிரம், ஐயாயிரம். ஏப்ரலில் ஒரு முறை எட்டாயிரம் கன அடியை எட்டியது இந்தச் செலவு. வழக்கமாக அணையை மூடும் ஜனவரி 28-ல் 71 அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம், இன்று ஏறத்தாழ 45 அடி. இவ்வளவு நீர்ச் செலவுக்கு இது சாகுபடிக் காலமல்ல. வீட்டுக் கேணியிலிருந்து வாளியில் தண்ணீர் எடுப்பதற்கு மாறாக மேட்டூரிலிருந்து குடிக்கவும், புழங்கவும் குழாய் வழியே நமக்குக் காவிரி நீர்! ஏப்ரலில் இதற்காகவே வீராணம் ஏரிக்கு வந்த மேட்டூர் நீர், அங்கிருந்து சென்னைக்குக் குழாய் வழியே ஒரு நாளுக்கு 18 கோடி லிட்டர் சென்றது. சென்னைக்கு இப்போது மேட்டூரும் இன்னொரு குடிநீர் ஆதாரம். மேட்டூர் நீர் தெற்கேயும் ராமநாதபுரம் வரை குடிநீராகிறது. காவிரியிலும் கொள்ளிடத்திலும் பெரிதும் சிறிதுமாக ஏகப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

இருக்கும் கொஞ்சம் நீரில் எதற்கு முன்னுரிமை என்று போட்டி. விவசாயமும் குடிநீரும் போட்டித் தேவைகளாயின. கிராமங்களும் நகரங்களும் போட்டியாளர்கள். தானாகவே குடிநீர்த் தேவை போட்டியில் முந்திக்கொள்கிறது. வீராணத்துக்கு ஏப்ரலில் கொண்டுவந்த நீரை விவசாயிகள் பாசனத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்றுகூட அறிவிப்பு இருந்தது. நியாயமான தேவைகள் இரண்டும் ஏன் போட்டித் தேவைகளாகின்றன என்பது ஆராய வேண்டியது. சேர்ந்து துய்க்க வேண்டியவர்கள் ஏன் போட்டியாளராகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியதுதான்.

மேலாண்மை நுட்பம்

இத்தனை திட்டங்கள் செயல்பட்டாலும் காவிரிக் கரை மக்கள், கொள்ளிடம் குழாயிலிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் தண்ணீர் வரும் என்று சொல்கிறார்கள். நகரத்தில் இருப்பவர்கள், “இரண்டு வேளை வந்தது, இப்போது ஒரு வேளை மட்டும், ஒரு மணி நேரம் வரும்” என்கிறார்கள். திட்டங்களைச் செம்மையாக்கலாம். அவற்றை இன்னும் திறமையாகச் செயல்படுத்தலாம். மக்களாகவே அள்ளிக்கொண்டதை நிர்வாகம் இப்போது கிள்ளித் தரலாம். ஆனால், நிர்வாகச் சாமர்த்தியம், மேலாண்மை நுட்பமெல்லாம் நீரை உற்பத்தி செய்யாது. தண்ணீர் இருந்த இடம் உண்டு, இல்லாத இடமும் உண்டு. அததற்குப் பொருந்தும் கலாச்சாரம் உருவாகி நீர்ச் செலவை நெறிப்படுத்தியது. கலாச்சாரம் சுமந்ததைத் தன் பொறுப்பாக்கிக்கொண்ட நீர் மேலாண்மை முரட்டுத் தீர்வுகளைச் சொல்லிவருகிறது. அது உருவாக்கும் நூதனக் கலாச்சாரத்தில் தண்ணீர் என்பது சந்தை மதிப்பு கூடிக்கொண்டே வரும் நுகர்பொருள்.

அந்தந்த இடத்தின் குடிநீர்த் தேவைக்கு அங்கங்கேயே எளிமையான நீராதாரங்கள் இருந்த காலத்தில் கோடை என்பது கழிக்க மனம் வராத பருவம். காலப் போக்கில் உருவாகியிருந்த குட்டைகளும் குளங்களும் ஊரின் பரிணாம வளர்ச்சி. மனிதர்களுக்குக் கை, கால்களைப் போல அவை ஊரின் புவி உறுப்புகள். நீர் மாசுபடுவதைப் பற்றி அப்போது எவ்வளவு கவலைப்பட்டார்கள். உடுத்திய துணிக்கும் மேலுக்கும், நீரில் இறங்கி சோப்பு போடாமல் கண்காணிக்க எங்கள் ஊர் குளத்துக்குக் காவல் இருந்த காலம் ஒன்று உண்டு.

உளையில் சிக்கியவர்கள்

பொது விநியோகத்தில் வரும் பற்றாக்குறையை அவரவர்கள் வீட்டின் ஆழ்துளைக் கிணற்று நீரால் இட்டு நிரவுகிறார்கள். அந்தக் கிணறுகளையும் ஆண்டுக்கு ஆண்டு ஆழமாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். “இறங்கிக்கொண்டே இருக்கும் நீர் மட்டத்தோடு போட்டிபோட்டு நாமும் இறங்க முடியுமா?” என்பார்கள். கோடையில் உற்பத்தியாகும் நெல்லின் மதிப்பு அதற்குச் செலவாகும் நீரின் மதிப்புக்குக் கொஞ்சமும் ஈடாகாது என்பதை விவசாயிகள் அறிவார்கள். ஆனாலும், தாங்கள் செய்வதையேதான் அவர்களால் மீண்டும் செய்ய இயலும். ஒரு காலை எடுத்தால் மறு கால் புதைந்துபோகும் உளையில் சிக்கியவர்கள் மீளத் தவிக்கும் பரிதாபம் அது.

காவிரிக் கரையின் பல இடங்களில் துளைக் கிணறுகளின் ஆழம் 200 அடிக்கு மேல். “நானோ 1,000 அடிவரை சென்றிருக்கிறேன். அரை மணி நேரம் இறைக்கும்” என்றார் சேலத்து நண்பர் ஒருவர். அவரையே, “மாட்டுக்கெல்லாம் தண்ணீருக்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். “மனிதனுக்கே இல்லை; மாட்டுக்கு யார் கவலைப்படுவார்கள்?” என்று பதில் சொன்னார். மாட்டுக்குக் குளமும் குட்டையும் இல்லை என்றால், அது சூழலியல் கண்ணி ஒன்று அறுந்துபோனதன் அடையாளம். அப்போதுதான் மனிதர்களுக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரும். மனிதர்களையே மையமாக்கும் சிந்தனைக் கலாச்சாரம் மாட்டை முன்னிலைப்படுத்துமா? அந்தச் சிந்தனைதான் மேலாண்மை என்ற பெயரில் நுட்பம் அறியாத முரட்டுத் தீர்வுகள் வருவதற்குக் காரணம். அந்தச் சிந்தனைதானே மேட்டூர் அணையையும் நம் வீட்டுக் கேணியாக்கியது!

- தங்க.ஜெயராமன்,

‘காவிரி வெறும் நீரல்ல’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்