தேரகம், குட்டுலுகள் எங்கே போயின?

By சமஸ்

உழைப்புக்கு அஞ்சாத உடல். துடுப்புப் போட்டு விரிந்த கைகள் குத்திட்டிருக்கும் கால்கள் மீது கோத்திருக்கின்றன. முகத்தைப் பார்க்காமல், கடலைப் பார்த்தவாறே பேசுகிறார் சம்மாட்டி அருளானந்தம்.

“நீங்க கடக்கர ஊருக்கு வந்திருக்கீங்கள்ல, எங்கேயாச்சும் நல்ல மீன் சாப்பாடு கெடைக்குதான்னு விசாரிச்சுட்டு வாங்களேன். ராமேசுவரம் தீவு முழுக்கச் சுத்தினாலும் கெடைக்காது. மீனு கெடைக்கிற எடத்துல மீனு வெலயான வெல குதர வெலயா இருக்கும். உள்ளூர்க்காரங்களே வெளிக் கடக்கர மீனத்தான் வாங்க வேண்டியிருக்கு. கடல்ல மீனு அத்துப்போய்க்கிட்டிருக்கு.

ஒருகாலத்துல ராமேசுவரம் மீனு ருசி ராசபோக ருசிம்பாங்க. இங்கெ கிடைக்கிற மீனுங்க வேற எங்கெயும் கெடைக்காது. அப்படிக் கெடைச்சாலும் இங்கெ கெடைக்கிற மீனுக்குள்ள ருசி தங்காது. தேரகம்னு ஒரு மீனு. அவியக் கொழம்பு வைப்பாங்க. அள்ளும் பாருங்க ருசி. கொழம்பு மீனு, வருவ மீனு கேள்விப்பட்டிருப்பீங்க. சுட்டுத் திங்கிறதுக்குன்னே சில மீனுங்க உண்டு. குட்டுலு மீனு அந்த ரகம் பாத்துக்குங்க. செங்கனி, உலுவ, வேலா இப்பிடி அடுக்கிக்கிட்டே போவலாம். இப்போம் இந்த மீனயெல்லாம் கண்ணால பாத்தவங்களத் தேடணும். நாஞ் சொல்றது சாதாரண விசயமில்ல. நீங்க எழுத வந்திருக்குற எல்லா சேதிக்கும் அடிப்பட விசயம் இதான். தீவு முழுக்கப் போங்க… நீங்களே புரிஞ்சுக்குவீங்க” - அருளானந்தம் பிரச்சினையைச் சொன்னார். அதற்கு மேல் பேசவில்லை.

தீவையும் தீவைச் சுற்றியும் சுற்ற ஆரம்பித்த அடுத்த சில நாட்களில் எல்லாக் கதைகளும் புரிபட ஆரம்பித்தன.

பெரியவர் வேலாயுதம் புட்டுப்புட்டுவைத்தார்.

“தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவ மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு.

இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்க்கம், காலங்காலமா கடலை நம்பிப் பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்னா பண்ணுச்சுன்னா, காச வெச்சி அடிச்சு மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்க்கம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சுட்டான்” என்கிற பெரியவர், கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு வலையைக் கையில் எடுக்கிறார்.

“நார்வேக்காரன் கொண்டாந்து வுட்ட தொழில்நுட்பம் இது. இழுவ மடின்னு பேரு. இந்தக் கண்ணிய பாத்தீங்களா? சனியன். எல்லாத்தையும் சல்லீசா அரிச்சு அழிச்சுரும். இதாம்பி நம்ம கடலுக்கு மொத எமன். இத இப்பம் ரெட்ட மடியாக்கி வேற போடுதாம். கூடவே, டிராலரை வேற கொண்டாந்து ஓட்டுதாம். எல்லாம் எமனுவோ. கடலு எப்பிடித் தம்பிக் கடலா இருக்கும்?” என்றவரை மறித்தேன்.

“ஐயா, எனக்குப் புரியல...”

“வெளக்கமாச் சொல்லுறன். சுதந்திரத்துக்கு முன்னாடி வரைக்கும் கடக்கரையில ஐஸ் கட்டியே கெடையாது தம்பி. அப்போம்லாம் புடிக்கிற மீன சுத்துப்பட்ட ஊருகள்ல கொண்டுபோய் விப்பம். மிச்சப்பட்ட மீனுக கருவாடாகும். மீனு கொண்டுபோவ முடியாத ஊருக்கெல்லாம் கருவாடு போவும். இப்பிடித்தான் போச்சு. இந்த ஐஸு வந்துச்சு பாத்துக்கங்க, கடலோடிங்க வாழ்க்கையில பெரிய மாத்தம் வந்துடுச்சு. கடக்கரைக்கு லாரிக வந்துச்சு. யாவாரிங்க வந்தாங்க. மீனு வெளிய போவ ஆரம்பிச்சிச்சு. வசதி பெருகினப்போ, தேவையும் பெருகுமில்ல? அரசாங்கம் விசைப்படகைக் கொண்டாந்து வுட்டுச்சு. கூடவே, இந்த இழுவ மடியையும் கொண்டாந்துட்டுச்சு.

இந்த விசைப்படகுல ரெண்டு ‘வசதி’. படகையும் எந்திரம் இழுக்கும், வலையையும் எந்திரம் இழுக்கும். இந்த இழுவ மடி ரெண்டாம் ஒலகப் போருல, கடலுக்கு அடியில எதிரிங்க பொதச்ச கண்ணிவெடிங்கள அரிச்சு அள்ள கண்டுபுடிச்ச மடி. அதாவது, சின்னச் சின்ன மீனுக் குஞ்சுவோ வரைக்கும் இதுல சிக்கிப்புடுங்க.

பாரம்பரியக் கடலோடிங்க தினுசு தினுசா மீனுங்களுக்கு ஏத்த மாரி வல வெச்சிருப்பம். இப்பம் சீலா மாரி பெருவட்டான மீனு புடிக்கப் போறவன் அதுக்கேத்த மாரி வலய வெச்சிருப்பாம். வலயோட வாயி பெருசா இருக்கும். சின்ன மீனுங்க சிக்குனா தானா வெளியே ஓடியாந்துருங்க. இந்த விசைப்படகுகள்ள கணக்கே வேற.

அதுவும் எறாலுக்குன்னு வெளிநாட்டு பவுசு கெடைச்சு ஏத்துமதி ஆவ ஆரம்பிச்சுப் பாருங்க, அவனவன் எறாலுக்காவ எதையும் அழிக்கலாமுன்னு துணிஞ்சுட்டாம். விசைப்படகெல்லாம் தாண்டி இன்னிக்கு டிராலர் வந்துடுச்சு. பெருஞ்சனியன். சின்ன கப்பல் அது. அதே மாரி இழுவ மடியைத் தாண்டி ரெட்ட மடி வந்துட்டு. ரெண்டு படகுங்க நடுவுல மடியைக் கட்டி, அப்பிடியே கடலை அடியோட அரிக்கிறது. பவளப்பாறை, செடி கொடிங்க, இண்டு இடுக்கு எல்லாம் அழிஞ்சுபோவுது. மீனுங்க கூடிப் பெருக்கம் பண்ண எடம் கெடையாது இன்னிக்கு. மீனுக் குஞ்சு, முட்டை சகலத்தையும் மடிங்க அரிச்சு அழிச்சுடுது. அப்புறம் எப்பிடிக் கடல்ல மீன் கெடைக்கும்? கடலையே அழிச்சுக்கிட்டிருக்காங்க தம்பி...”

“ஐயா, அப்போ விசைப்படகு, டிராலர் எல்லாமே வீண்ணு சொல்றீங்களா? இன்னிக்கு மீனவக் குப்பங்கள்ல கொஞ்ச நஞ்சம் இருக்குற மச்சு வீடுங்களுக்கெல்லாம் நவீன மாற்றம்தானே காரணம்? தப்பா நெனைக்காதீங்க. நீங்க எல்லாத்தையும் சேர்த்து ஒதுக்கிறீங்களோன்னு தோணுது...”

“தம்பி. நீங்க சொல்லுறதுல நியாயம் இருக்கு. ஒத்துக்கிடுதேன். நவீன வசதிங்க எங்காளுங்கள மேம்படுத்தி இருக்கு. நெசம்தான். இன்னிக்கும் சொந்தக் கட்டுமரம் வெச்சிருக்கவனுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூவா உத்தரவாதமில்ல. விசைப்படகுல பங்குக்குப் போறவன் எப்பிடியும் ஆயிரம் ஐந்நூறு பாத்துடுதாம். நெசந்தாம். விசைப்படகு, டிராலரு எல்லாமே எங்க வசதிக்குத்தான். ஏத்துக்கிடுதேன். ஆனா, இந்த விசைப்படகை எங்க ஓட்டணும்? டிராலரை எங்க ஓட்டணும்? இதெல்லாம் ஆழ்கடல்ல ஓட்ட வேண்டிய படகுங்க தம்பி. கடல்ல நூறு பாவம் ஆழம் இருக்குற எடத்துல ஓட்ட வேண்டிய படகை அஞ்சு பாவம் ஆழத்துல ஓட்டுனா என்னாவும்? எல்லாரும் தப்பு பண்ணலை. ஆனா, சிலரு இல்ல; பலரு தப்புப் பண்ணுதாம். குறிப்பா, இந்தப் பக்கக் கடல்ல. இதுல ஒளிச்சுப் பேச ஒண்ணுமில்ல. ஊர் அறிஞ்ச உண்ம. தம்பி, நாளக்கி பகப் பொழுதுல வாங்க. நேருல ஒரு விசயத்தக் காட்டுறேன். உங்களுக்கே எல்லாம் புரியும்...”

மறுநாள் காலை அவர் காட்டிய காட்சி மனதை உடைத்து, சிதைத்துப் போட்டது.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்