அபாயக் கட்டத்தை நெருங்குகிறது நிலத்தடி நீர்

By அ.நாராயணமூர்த்தி

நிலத்தடி நீர் பற்றி சமீப காலங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழுவின் 23-வது (2017-18) அறிக்கை,  2020-ல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக ஆற்று நீரையும், குளத்து நீரையும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திய நாம், 1970-களுக்குப் பிறகு, படிப்படியாக அனைத்துத் தேவைகளுக்கும் நிலத்தடி நீரைப் பெரும்பாலும் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. உலகிலுள்ள நாடுகளில் அதிகமாக நிலத்தடி நீரை இன்று உறிஞ்சும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. தற்போது 2.1 கோடி கிணறுகள் மூலமாக ஓர் ஆண்டில் ஏறக்குறைய 253 கன கிலோ மீட்டர் (பிசிஎம்) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. அதாவது, ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிட்டுள்ள மொத்த நிலத்தடி நீர் 411 பிசிஎம், இதில் 62%-த்துக்கும் மேலாகத் தற்போது உறிஞ்சப்படுகிறது. தமிழகத்தில், ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரின் அளவு 18.59 பிசிஎம், இவற்றில் 77%-த்துக்கும் மேலாகத் தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்டது.

அதிகரிக்கும் நீர்த் தேவை

நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டும் பெரிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. கணக்கிடப்பட்டுள்ள 32 தமிழக மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80%-த்துக்கும் மேலாகச் சுரண்டப்பட்டுவிட்டதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு மேல், இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது பெரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்களோடு நிலையான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டது. ஆழ்குழாய்க் கிணறு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியால், 1990-க்குப் பிறகு நிலத்தடி நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்தது. பயிர்களுக்கான ஆதார விலை நிர்ணயத்தில் நீர்ப் பயன்பாட்டைக் கணக்கில் எடுக்காத காரணத்தால், அதிக நீர் தேவைப்படுகின்ற நெல், கோதுமை, கரும்பு, வாழை போன்ற பயிர்களின் சாகுபடி அதிகரித்தது. தோட்டப் பயிர்களான காய்கறிகள், பழங்கள் சாகுபடியிலும் 2000-01க்குப் பிறகு நிலத்தடி நீர்த் தேவை மேலும் அதிகரித்தது. இந்தக் காரணங்களால், 1960-61ல் 7.30 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு, 2016-17ல் 71 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துவிட்டது. அதாவது, மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில்  நிலத்தடி நீரின் பங்கு 29%-லிருந்து 68%-ஆக அதிகரித்துள்ளது.

விவசாயத் தேவைகள் மட்டுமல்லாமல், 1990-91க்குப் பிறகு ஏற்பட்ட அபரிமித நகர வளர்ச்சியாலும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக ஏற்பட்ட தொழில் வளர்ச்சியாலும் நீரின் தேவை பன்மடங்காக அதிகரித்துவிட்டது. இதே காலகட்டத்தில் மேற்பரப்பு நீராதாரங்களான அணைகள், குளங்கள் மூலமாகக் கிடைக்கும் நீரினளவில் பெரிய வளர்ச்சியில்லாத காரணத்தால், நிலத்தடி நீரை அனைத்துத் தேவைகளுக்கும் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. நாசாவின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் நிலத்தடி நீர் ஒவ்வொரு ஆண்டும் 0.3 மீட்டர் குறைந்துவருகிறது.

வற்றும் கிணறுகள்

2017-ல் வெளியிடப்பட்டுள்ள குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பு, 2006-07-க்கும் 2013-14-க்கும் இடைப்பட்ட காலத்தில் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் இந்தியாவில் உபயோகப்படுத்த முடியாமல் போய்விட்டதாகக் கூறுகிறது. தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2000-01ல் மொத்தமாக 18.33 லட்சம் கிணறுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 1.59 லட்சம் கிணறுகள் உபயோகத்துக்குப் பயன்படாமல் போய்விட்டன. அதிக அளவு நிலத்தடி நீரை இவை உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி அவை பயனற்றுப் போய்விட்டன.

நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருவதால் விவசாயிகளால், பழைய ஆழ்துளைக் கிணறுகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இதனால் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். இது விவசாயிகளுக்குத் தேவையில்லா செலவுகளை அதிகரித்து, பெரும் கடனில் சிக்கிவிடுவதாகப் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் கூறுகின்றன. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், பல கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து, நிலத்தடி நீரின் தன்மையை மாற்றி விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டது. நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 1,139 வட்டங்களில், 96  வட்டங்களில், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

என்ன செய்ய வேண்டும்?

மொத்த இந்திய விவசாய உற்பத்தியில், நிலத்தடி நீரின் பங்கு மட்டும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர்ப் பாசனப் பரப்பு அதிகம் என்பதால், இதன் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். குடிநீர் மற்றும் தொழில் துறைப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருப்பதால், தொடர்ந்து அளவுக்கு அதிகமாகச் சுரண்டுவதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

ஒவ்வொரு துளி மழை நீரையும் வீணடிக்காமல் வாய்க்கால்கள் மூலமாகக் குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்ச் சுரப்பை அதிகரிக்க வேண்டும். மழை நீர்ச் சேமிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் அமல்படுத்த வேண்டும். பயிர்களின் நீர்ப் பயன்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் தற்போது பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. நீர்ச் சுரண்டலைத் தடுக்க, குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களுக்கு அதிகவிலை அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் மொத்தமாகவுள்ள 6,584 வட்டங்களில், 32% வட்டங்களில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் அளவுக்கு அதிகமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது போன்ற பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தடி நீர்த் தேவையைக் குறைக்க முடியும். விவசாயத்தில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும்  நீர்த் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

- அ.நாராயணமூர்த்தி,

பொருளியல் பேராசிரியர்,

தொடர்புக்கு: narayana64@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்