கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016-ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை மே 31-ல் சமர்ப்பித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன்-30 வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை, கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப, அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கட்டாய இந்தி மட்டுமே பிரச்சினை அல்ல. கஸ்தூரிரங்கன் கல்விக் குழு முன்வைக்கும் அடிப்படைப் பரிந்துரைகள் மீது எழுகின்ற கேள்விகளில் சில...
பள்ளிக் கல்வி அமைப்பு முறை
மூன்று வயது தொடங்கி ஏழு வயது வரை ஆரம்பக் கல்வி 5 ஆண்டுகள். அதாவது, பிரீ.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை ஆதாரக் கல்வி. பிறகு, 3 முதல் 5 வகுப்பு வரை மூன்றாண்டுகளுக்குத் தொடக்கநிலைக் கல்வி. பின்பு, 6 முதல் 8 வரை மூன்றாண்டுகள் நடுநிலைக் கல்வி. 9 வகுப்பு முதல் 12 வரையான நான்காண்டுகள் உயர்நிலைக் கல்வியாக அமைக்கப்படும் (பக்கம் 75, அத்தியாயம் பி4.1.1) என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
உலகின் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தையின் பள்ளி செல்லும் வயது ஐந்து என்று ஏற்கப்பட்டுள்ளது. காந்தியடிகள் முதல் தற்போதைய ஐரோப்பியக் கல்விக் கொள்கை, யுனெஸ்கோ பரிந்துரை உட்பட அனைத்தையும் பின்தள்ளி மூன்று வயது மழலைக்கு 5 ஆண்டுக் கல்வி என அதைப் பள்ளிக் கல்வியோடு இணைப்பது சரிதானா? குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் எனும் நீண்ட காலக் கோரிக்கை என்ன ஆனது? இது குறித்து கல்விக் குழு அறிக்கை ஏதும் குறிப்பிடாதது ஏன்?
9-ம் வகுப்பிலேயே மேனிலைக் கல்வி
8-ம் வகுப்போடு பொதுக்கல்வி அமைப்பு முடிந்து, வகுப்பு 9 முதல் 12 வரையிலான நான்காண்டுக் கல்வி தற்போதைய மேனிலைக் கல்வி போன்று பாடத்தொகுதிகளாக மாற்றி அமைக்கப்படும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான்காண்டுகள் எட்டு பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தங்களது எதிர்காலத்துக்கான பாடத் தொகுதியை ஒன்பதாம் வகுப்பிலேயே மாணவர்கள் தேர்வுசெய்யலாம். சில பாடங்கள் பொதுவானவை. ஆனால், பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் சிறப்புப் பிரிவுகள் அடிப்படையில் பாடங்கள் அமையும். (பக்கம் 76 அத்தியாயம் பி4.1.1) என்கிறது பரிந்துரை.
தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விருப்பப்பாடத் துறை ஒன்றைத் தேர்வுசெய்ய 8-ம் வகுப்பு முடிக்கும் 13 வயதுக் குழந்தையால் முடியுமா? ஒரு அர்த்தத்தில் 9-ம் வகுப்பு முதலே பொதுத்தேர்வுபோல உள்ளதே. தற்போது தமிழகத்தில் அறிமுகமாகி உள்ள 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பதே கடந்த இரண்டாண்டுகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களைப் பள்ளிகளை விட்டுக் காணாமல்போக வைத்திருக்கிறதே. 9-ம் வகுப்பு முதலே தொடங்கும் செமஸ்டர் முறை பள்ளி இடைநிற்றலை அதிகரித்துவிடாதா?
3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வோடு கூடுதலாக 3, 5, 8 வகுப்புகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி – திறன்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அடுத்த வகுப்புக்குச் செல்ல இத்தேர்வுகள் அவசியம். குறிப்பாக, 3-ம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு அடிப்படைக் கல்வி அறிவுக் கணக்கீட்டுத் திறன் மற்றும் ஏனைய கல்வித் திறன்களைப் பரிசோதிக்க உதவும் (பக்கம் 107, பி4.9.4) என்கிறது மற்றொரு பரிந்துரை.
தேசிய அளவில் 6 வயது முதல் 18 வயது வரையில் ஒட்டுமொத்தப் பள்ளி சேர்ப்பு விகிதம் ஆரம்ப வகுப்பில் 95.1% ஆக இருப்பது 2017 கணக்கீட்டின்படி 9, 10 வகுப்புகளில் 79.3% ஆகக் குறைந்து 11, 12 வகுப்புகளில் வெறும் 51% ஆகி விடுகிறது. கல்விக் குழு அறிக்கையின்படி இன்றும் (பக்கம் 65) 6.5 கோடிக் குழந்தைகள் பள்ளி செல்வது இல்லை. மேற்கண்ட (மிரட்டல்) தேர்வுகள் மேலும் குழந்தைகளை வடிகட்டினால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களை மட்டுமே உயர் நிலைக் கல்வி நோக்கிச் செல்லவைக்கும் அபாயம் உள்ளதே. இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது இல்லையா?
தனியாருக்குத் தாராளம்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கவும் (பக்கம் 72, பி 3.13) பள்ளிக் கல்வியில் உதவும் மனம்கொண்ட தனியாரை அனுமதிக்கவும் (பக்கம் 71, பி 3.12) பரிந்துரைக்கிறது புதிய கல்விக் கொள்கை.
இலவச கட்டாயக் கல்வி என்பது என்ன? 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு எத்தகைய கட்டணமும் இன்றி தொடக்கக் கல்வியை வழங்குதல் என்பதுதானே? ஆனால், தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பில் 25% இடங்களைச் சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவு குழந்தைகளைச் சேர்த்து, அதன் கட்டணத்தை அரசே செலுத்தும் முறை. இந்தச் சட்டத்தின் மூலம் அமலாகி, ஆண்டுக்கு இரண்டு லட்சம் குழந்தைகளை (தமிழகத்தில் மட்டுமே) நாம் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இதனால் மூடப்படும் அரசுப் பள்ளிகள் ஒன்றிரண்டல்ல. கல்வி உரிமைச் சட்டத்தின் உண்மையான அர்த்தப்படி, தரமான கல்வி முற்றிலும் விலையின்றி வழங்கப்பட வேண்டுமானால் தனியாரின் கட்டணக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டாமா?
ஒரே நாடு... ஒரே பாடத்திட்டம்...
பள்ளிப் பாடமுறையின் படியான பயிற்றுவிப்பு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின்படி அமையும் (பக்கம் 101 பத்தி 4.8) பாடப்புத்தகங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மூலம் வெளியிடப்படும். மாநிலக் கல்வி நிறுவனங்கள் பாடநூல் தயாரிக்கலாம். ஆனால், என்சிஇஆர்டி பாடத்திட்டப்படியே அவை இருக்க வேண்டும் (பக்கம் 102 ,பத்தி பி 4.8.2) என்று வலியுறுத்துகிறது புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு.
கல்வியை முழுக்கவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை அலட்சியப்படுத்தும் செயல் இது. மேற்கண்ட பரிந்துரை மாநிலங்கள் தங்களது மக்களுக்குத் தாங்கள் விரும்பும் கல்வியை வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தவில்லையா? இந்தியா புவியியல் கலாச்சாரரீதியில் பலதரப்பட்ட மக்களால் ஆனது. ஒரே பாடத்திட்டம், ஒரே புத்தகம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் நாட்டின் அடிப்படையைத் தகர்த்து, ஒரே இடத்தில் அதிகாரத்தைக் குவித்துவிடவில்லையா? இந்தக் கேள்விகள் பள்ளிக் கல்வி தொடர்பாக எழுபவை. உயர்கல்வித் துறைக்கான பரிந்துரைகள் குறித்தும் விவாதிக்க நிறையவே இருக்கிறது.
- ஆயிஷா இரா.நடராசன்,
பள்ளித் தலைமையாசிரியர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago