பகத் சிங்: பாரதத்தின் சிங்கம்

By சா.தேவதாஸ்

இந்திய விடுதலைக்காக மட்டுமல்ல… ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியவர்.

பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907

லாகூர் மத்திய சிறையில் 23.03.1931-ல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நாயகன் மட்டுமல்ல, தீவிர சிந்தனையாளனும்கூட. இளமையிலிருந்தே வாசிப்பு, சிந்தனை, செயல்பாடு என ஒருங்கிணைந்த இயக்கம் கொண்டிருந்த ஆளுமைதான் பகத் சிங். இதனால்தான் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்திடும் நாயகனாக இருந்துகொண்டிருக்கிறார். எனவேதான், உலக அரங்கில்

சே குவேரா வகிக்கும் பாத்திரத்தை இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் வகிக்கிறார்.

1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங்.

உலகியல் ஆசைகளுக்கு இடமில்லை

பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’

பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.

தூக்குக் கயிற்றை நோக்கி…

1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).

தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.

அரசியல் பரிணாமம்

இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். “அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்–கம்யூனிஸ்ட் என்றனர்.”

பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. இதனை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும்தான் இதைச் சாதிக்க வேண்டும் என்பதில்லை.”

மேலும், பகத் சிங் தன் சிறைக் குறிப்புகளில் வி.என்.ஃபிக்னர் என்பவரின் இந்த மேற்கோளைக் குறித்துவைத்திருந்தார்: “ஏசு கிறிஸ்துவின் சரிதத்தால் ஈர்க்கப்பட்டிருப்பவர் நிச்சயமாக ஒரு புரட்சியாளரைப் புரிந்துகொள்வார்.”

நினைவில் நிற்கும் மரணம்

தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: “ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.”

இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.

“ஒவ்வொருவரும் உலகை மாற்றுவதுபற்றி எண்ணு கிறார்களேயொழிய தன்னை மாற்றிக்கொள்வதுபற்றி யாரும் எண்ணுவதில்லை” என்பார் டால்ஸ்டாய். அப்படியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு, உலகை மாற்றுவதுபற்றி எண்ணியவராக/ செயல்பட்டவராக பகத் சிங் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் அவரை நாயகனாகக் கொண்டாடு வதற்கு அதுதான் காரணமாகிறது.

08.04.1929-ல் சட்டசபை குண்டு வீச்சுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தோழன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கைகுறித்து பகத் சிங்குக்கு இருந்த புரிதலைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: ‘இந்தக் கடிதத்தை நீ பெறும் வேளையில், நான் முடிவில்லாத தொலைதூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறெந்த நாளையும்விட இன்று நான் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். என் வாழ்வின் எல்லா அழகையும் தாண்டி, எல்லா இனிய நினைவுகளையும் தாண்டி, இந்தப் பயணத்துக்கு நான் தயாராகிவிட்டேன்...’

தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூடச் செய்ய இயலவில்லை என்பது மட்டுமே அவரது வருத்தமாயிருந்தது. ‘பல்வந்த் சிங்’ எனும் புனைபெயரில் எழுதிய பகத் சிங்கை ‘சர்தார்’ என்று சக தோழர்கள் அழைக்க, ‘பகன்வாலா’ (கடவுளின் அதிர்ஷ்டக் குழந்தை) என்று அவரது பாட்டி அழைத்து மகிழ்ந்தார். ஆனால், இந்தியா முழுவதும் அவரை ‘பாரதத்தின் சிங்கம்’ என்று அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

- சா. தேவதாஸ், சமூக விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,

‘பகத் சிங் சிறைக் குறிப்புகள்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்