சித்தாந்தச் சுமையை நாங்கள் சுமக்கப்போவதில்லை என்று சொல்லிவந்த ஆம் ஆத்மி கட்சி இவ்வளவு சீக்கிரம் சீரழிந்துபோகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சாமானியர்களின் கட்சி என்று சொல்லிக்கொண்டுவந்த அந்தக் கட்சி, கொஞ்சம் கொஞ்சமாக சாதி சார்ந்த கட்சியாக உருமாறிவருகிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் பெரு வெற்றிகளைக் குவித்த கட்சிகள், சீக்கிரமே ஒன்றுமில்லாமல் கரைந்து காணாமல்போவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மிகச் சிறந்த உதாரணம், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் பேருரு கொண்டு, காங்கிரஸை வீழ்த்தி 1977-ல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து, பிற்பாடு உடைந்து சிதறி, இன்று எதிர்காலம் என்னவாகும் என்ற இருட்டில் சிக்கியிருக்கும் ‘ஜனதா’ கட்சி.
இடதுசாரிகளுக்கு மாற்றா?
காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு எதிராக உருவான இயக்கமாக உருவெடுத்த அண்ணா ஹசாரேவின் மக்கள் இயக்கத்திலிருந்து உருவெடுத்ததுதான் இன்றைய ஆஆக. ஊழலை ஒழிக்க ‘ஜன்லோக்பால் சட்டம்’ கொண்டுவரப்பட்டால் அது பெரும்புரட்சியை உண்டாக்கும் என்று சொல்லி நடத்தப்பட்ட அந்த மக்கள் இயக்கத்தின் முன்னணித் தளகர்த்தர்களில் ஒருவராக இருந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். அரசு அதிகாரியான அவருடைய பின்னணி, படிப்பு, நேர்மை, நோக்கம் ஆகியவை மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டன. ஊழல் எதிர்ப்பு இயக்கம் அரசியல்சார்பு பெறுவதை அண்ணா ஹசாரே விரும்பவில்லை. “அரசியல் பங்கேற்புதான் இறுதித் தீர்வு” என்றார் கேஜ்ரிவால். யோகேந்திர யாதவ், பிரசாத் பூஷண், ஆனந்த்குமார், ஷாசியா இல்மி என்று பலரும் கைகோக்க ‘சாமானியர்களுக்கான அரசியல் கட்சி’ என்ற பொருளில் 2012-ல் பிறந்தது ஆம் ஆத்மி கட்சி.
ஊழலில் ஊறித் திளைத்த காங்கிரஸ், மதவாத பாஜக இரண்டுக்கும் ஒரு மாற்றாக இடதுசாரிகளால் கம்யூனிஸ்ட் கட்சியை அந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்த முடியவில்லை; ஆனால், ஆஆக அந்த இடத்தைப் பிடித்துவிடும் என்றே பலரும் அன்றைக்கு நம்பினர்; வரவேற்றனர். “எங்களுடைய கட்சி வலதுசாரியோ, இடதுசாரியோ அல்ல; மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு எந்த சாரியில் இருந்தாலும் எடுத்துக்கொள்வோம்” என்றார் கேஜ்ரிவால்.
தேர்தல் வரலாறு
2013 டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களில் வென்ற ஆஆக எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாஜக ஆட்சியில் அமர்வதைத் தவிர்க்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க ஆட்சி அமைத்தார் கேஜ்ரிவால். வெறும் 49 நாட்களே அந்த ஆட்சி நீடித்தது டெல்லி மக்களிடம் ஒரு பரிவுணர்வை உண்டாக்கியிருந்தது.
2014 மக்களவைத் தேர்தலைத் தேசிய அளவில் அணுக முற்பட்ட கேஜ்ரிவால், நாடு முழுக்க 434 மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். மோடி அலை வீசியடித்த அந்தத் தேர்தலில் 414 வேட்பாளர்கள் காப்புத்தொகையை இழந்தனர். டெல்லியிலேயே கட்சி ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்றாலும், ஆச்சரியமூட்டும் வகையில் பஞ்சாபிலிருந்து மட்டும் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆஆக மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மொத்தத்தில் டெல்லியிலும் பஞ்சாபிலும் கட்சிக்கு ஒரு ஆதரவுத் தளம் உருவாகியிருப்பதை வெளிப்படையாகக் காண முடிந்தது.
உருவானார் ஒரு சர்வாதிகாரி
இதனிடையே கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகாரியாக உருவெடுத்தார் கேஜ்ரிவால். டெல்லி முதல்வராக அவர் உறுதியாக உட்கார்ந்த பிறகு, அவருடைய அதிகாரம் அறுதியிடப்பட்டதானது. வெளிப்படையான செயல்பாடு என்பதை உறுதியாகப் பேசிவந்த கட்சி, தன்னுடைய சொந்த நிதி விவரங்களையேகூட வெளியிட மறுத்தது. 2013-ல் ரூ.20 கோடியும், 2015-ல் ரூ.18 கோடியும் நிதி திரண்டதாகக் கூறிய ஆஆக, அந்த நிதி எப்படித் திரண்டது எனும் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. இதனிடையே கட்சிப் பிரமுகர்கள் சிலர் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் ரொக்கமாகப் பெருந்தொகையை நன்கொடையாக வாங்கியதும் அம்பலமானது. முடிவுகளை எடுக்கும்போது கலந்து பேசுவதில்லை; முக்கியமான விவகாரங்களை விவாதிப்பதில்லை என்றெல்லாம் பேச்சுகள் அடிபடலாயின. தலைவர்களுக்குள் ஏற்பட்ட பூசல் விரைவிலேயே வெடித்தது.
கட்சி முதல் முறையாக டெல்லியில் ஆட்சிக்கு வந்தவுடனேயே கட்சித் தலைமையின்போக்கு பிடிக்காமல் ஷாசியா இல்மி விலகினார். கேஜ்ரிவாலும் அவருக்கு நெருங்கியவர்களும் மட்டும் கூடிப் பேசி கட்சி, ஆட்சி விவகாரங்களைத் தீர்மானிப்பதை யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் கேள்விகள் கேட்டனர். பிறகு, அவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கட்சிக்குள் கேஜ்ரிவாலின் ஆதிக்கம் அதிகரித்தது.
முழு மாநில அரசுக்கான அதிகாரங்கள் அற்ற டெல்லியின் முதல்வர் பதவியிலிருந்து சாதிக்கப் பெரிதாக ஏதுமில்லை என்பது போக பெரிய கற்பனைகள் - முயற்சிகளும் ஆஆகவிடம் இல்லை. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி ஆட்சிக்குவந்திருந்த கட்சி, அவர்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. ஒருகட்டத்தில் பாஜகவுடன் யுத்தம் நடத்துவது; மத்திய அரசுடன் மோதுவது என்பதையே அரசியலாக அது உருமாற்றத் தொடங்கியது. கட்சி வெகு வேகமாகச் செல்வாக்கை இழப்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. எல்லா சமூகங்களின் ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை வெளிப்படையாக உயர் சாதியினரின் கட்சியாக உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியது.
பனியாக்களின் அதிகாரத் தேட்டம்
இந்தியாவின் செல்வாக்கு மிக்க சமூகங்களில் ஒன்று பனியா சமூகம். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் உத்தேசமாக ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதத்தினரே பனியாக்கள் என்றாலும், இந்தியாவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின், பெரும் பகுதியைக் கொண்டிருக்கும் சமூகம் அதுவே. நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ‘ரிலையன்ஸ்’ தொடங்கி, துறைகள்தோறும் பனியாக்களின் நிறுவனங்களைப் பட்டியலிடலாம். மருந்துத் துறை என்றால், அதில் பிரதானமான ‘சன் ஃபார்மா’, தகவல் தொடர்புத் துறையில் ‘ஜியோ’, ‘ஏர்டெல்’, ‘வோடபோன்’; கனிமத் துறையில் ‘வேதாந்தா’, ‘எஸ்ஸார்’, ‘ஆர்சிலர் மிட்டல்’, ‘ஜிண்டால் ஸ்டீல்’; கட்டுமானத் துறையில், ‘டால்மியா சிமென்ட்’, ‘அம்புஜா சிமென்ட்’, ‘அல்ட்ராடெக் சிமென்ட்’, ‘ஜேகே சிமென்ட்’; மோட்டார் துறை என்றால், ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’, ‘பஜாஜ் ஆட்டோ’ என்று பனியா சமூகம் கால் பதிக்காத துறையே கிடையாது.
முக்கியமான ஊடகங்களைக் கைகளில் வைத்திருப்பதால், கருத்துத் தளத்திலும் அவர்களுடைய கை ஓங்கியே இருக்கிறது. நாட்டின் பெரிய பொழுதுபோக்கு தொலைக்காட்சிக் குழுமமான ‘ஜி டிவி’ தொடங்கி வட இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’; இந்தியில் அதிகம் விற்பனையாகும் ‘தைனிக் ஜாக்ரன்’, ‘தைனிக் பாஸ்கர்’ என்று இங்கும் அவர்களுடைய பட்டியல் நீளமானது.
தொடக்கக் காலத்தில் காங்கிரஸிலும், பின்னர் பாஜகவிலும் தங்களுக்கான செல்வாக்கை பனியா சமூகம் நிலைநாட்டி வைத்திருந்தாலும், அதற்கு என்று தனித்த அரசியல் சக்தி இல்லை. அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு தனித்த தலைவராக உருவெடுத்தபோது ஆஆகவை அவர்கள் தங்களுடைய அரசியல் பலமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். கேஜ்ரிவால் தன்னுடைய தொடக்கக் காலத்தில் வெளிப்படையாகத் தன்னுடைய சாதிப் பாசத்தை வெளிக்காட்டாவிட்டாலும் விரைவிலேயே வெளிக்காட்டலானார்.
அசுதோஷின் அனுபவம்
ஆஆக உதயமானவுடன் அதில் ஆர்வத்துடன் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அசுதோஷ். நாடறிந்த பத்திரிகையாளர். தேர்தலில் அவரைக் களம் இறக்கியபோது, அவரைச் சாதி அடையாளத்தின் கீழ் கேஜ்ரிவால் தள்ளினார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் பத்திரிகைத் துறையில் இருந்தபோது, தனது சாதிப் பின்னொட்டைப் போட்டுக்கொள்ளாத அவரை சாந்தினி சவுக் வேட்பாளராக நிறுத்திய கேஜ்ரிவால், சுவரொட்டிகளில் அவருடைய சாதிப் பெயரைப் பின்னொட்டாகப் போடுமாறு வலியுறுத்தினார். “ஊழலை ஒழிப்பதற்கான கட்சிக்கு எதற்கு சாதிப் பற்று?” என்ற அசுதோஷால் நீண்ட காலத்துக்கு ஆஆகவில் நீடிக்க முடியவில்லை. விஷயம் என்னவென்றால், அந்தத் தொகுதியில் நான்கு லட்சம் பனியா ஓட்டுகள் இருக்கின்றன. பனியா என்பதால்தான் அங்கு தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதை உணர்ந்த அசுதோஷ் பின்னாளில் இதை வெளிப்படையாகக் குறிப்பிடவும் தயங்கவில்லை.
சாதிப் பின்னொட்டுகளை எங்கே சேர்க்க வேண்டும் என்பதில் மட்டும் அல்ல; பெயர்களைக் கத்தரிப்பதிலும் கேஜ்ரிவாலுக்குக் கணக்குகள் இருப்பதை மர்லேனா விவகாரம் வெளிக்கொண்டுவந்தது. கிழக்கு டெல்லியில் அதிஷி மர்லேனாவை வேட்பாளராக அறிவித்த ஆஆக சில நாட்களுக்குப் பிறகு, அதிஷியிடம் அவருடைய பெயரின் பின்பாதியை நீக்கிவிடுமாறு கூறியிருக்கிறது. பதிலாக சிங் என்பதைச் சேர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ராஜ்புத் என்பது அதன் மூலம் வெளிப்பட வேண்டும் என்பது கட்சி மேலிடத்தின் விருப்பம். “மர்லேனா என்ற பெயர் ஐரோப்பியர் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும், வாக்குகள் கிடைக்காது” என்று விளக்கம் சொல்லப்பட்டாலும், அது இந்து பெயர்போல இல்லை; கிறிஸ்தவப் பெயர்போல இருக்கிறது என்பதே உண்மையான காரணம் என்கிறார்கள் (இடதுசாரி ஆர்வலரான அதிஷியின் தந்தை மார்க்ஸ் - லெனின் பெயர்களை இணைத்து மர்லேனா என்று பெயரிட்டிருந்தார்). ஹரியாணா ஆஆக தலைவராக நவீன் ஜெய்ஹிந்த் நியமிக்கப்பட்டபோது, “பண்டிட்டான அவர் கட்சியை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்வார்” என்று சாதியைக் குறிப்பிட்டே வாழ்த்தினார் கேஜ்ரிவால். அதில் அவருக்கு எந்த லஜ்ஜையும் இல்லை.
முன்னும் பின்னும் சாதி
ஆஆக உயர் சாதியினர் - உயர் நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாக உருவெடுக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிதாக முளைத்துவிடவில்லை. ஊழல் எதிர்ப்பு இயக்கமாக அது உருவானபோதே அண்ணா ஹசாரே தவிர, அவரைச் சுற்றி நின்ற பெரும்பாலானவர்கள் மேட்டுக்குடியினர். அடையாள நிமித்தமாக எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த சிலரை அவர்கள் தங்களுடன் நிறுத்திக்கொண்டிருந்தாலும், முடிவெடுப்பவர்களாக அவர்களே இருந்தனர். ஊழலுக்கு எதிராகப் பேசிய ஆஆகவின் வளர்ச்சியில் பெருநிறுவனங்களின் ஆசியும் இருந்தது. தொடக்கம் முதலாகவே சாதி - மதப் பிரச்சினைகளின்போது குரல்கொடுப்பதில் அடக்கியே வாசித்தது ஆஆக. மேலும், ‘ஊழல்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினை’ என்றும் அது நம்பவைக்க முற்பட்டது. இவையெல்லாமும் ஆரம்பத்திலேயே விமர்சிக்கப்பட்டன.
முக்கியமாக, உயர் சாதி - உயர் வர்க்க முகமையாக ஆஆக வளர்ந்துவருவதால்தான் ஊடகங்கள் ஆஆகவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றும் பேசப்பட்டுவந்தது.
தேர்தல் காலங்களில் எல்லாம் ஆஆக இதைக் கொஞ்சம் வெளிப்படையாகவே செய்தது. டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் வேட்பாளர்கள் தேர்விலும், கட்சிக்குள் அது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டுவந்த நிர்வாகிகள் பட்டியலில் ஆஆகவின் உயர்சாதிப் பாசம் வெளிப்பட்டது. பாஜகவை எதிர்கொள்ள அது செல்வாக்கு செலுத்தும் சமூகங்களின் ஓட்டுகளைத் தன்வசப்படுத்துவதுதான் வழி என்று கருதிய ஆஆக, ஒருகட்டத்தில் உயர் சாதியினரைப் பாஜக புறக்கணிக்கிறது என்று குற்றஞ்சாட்டவும் தயங்கவில்லை. 2018 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பனியாக்களில் ஒரு பிரிவினரான அகர்வால்கள் சார்பில் யாரையும் பாஜக வேட்பாளராக நிறுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆஆக, “அரசியல்ரீதியாக பனியாக்களை முஸ்லிம்கள் ஆக்குகிறது பாஜக” என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியது. மேலும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால் அகர்வால்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஆஆக, ‘இது பனியாக்கள் மீதான பாஜகவின் தாக்குதல்’ என்ற அளவுக்கு இறங்கியது.
ஆஆக தொண்டர்கள் மத்தியிலேயே இது அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. “அமித் ஷாவும் பனியா; அர்விந்த் கேஜ்ரிவாலும் பனியா; இரண்டு பனியாக்கள் தங்களுக்குள் நடத்திக்கொண்டிருக்கும் விளையாட்டு ஆகிவிட்டதே அரசியல்” என்று பேசுகிறார்கள். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. டெல்லியின் அதிகாரபீடத்தில் அரசு உயர் அதிகாரிகளில் மொத்தமுள்ள 81 செயலாளர்களில் 2 பேர் மட்டுமே தலித்துகள், 3 பேர் மட்டுமே ஆதிவாசிகள்; இது ஒருநாளும் பிரச்சினை ஆகவில்லை. ஏப்ரல்
2018-ல் வன்கொடுமைத் தடைச் சட்டத்தைப் பலவீனமாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை இதற்குக் கடும் எதிர்வினையாற்றின. பாஜகவும் பிரதமர் மோடியும் கூட இதற்கு எதிராகப் பேசினார்கள்; மத்திய அரசு சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தது. ஆனால், டெல்லி ஆஆக அரசோ அமைதிகாத்தது. அமைச்சரவையின் ஒரே தலித் அமைச்சரான ராஜேந்திர பால் கவுதம் மட்டுமே அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது. “மனு ஸ்மிருதியால் நாடு முழுக்க தலித்துகள் 4,000 ஆண்டுகளாகக் கொடுமைகளை அனுபவித்துவருகின்றனர்” என்று பேசினார் கவுதம். அதற்குப் பதிலடி கொடுப்பதுபோலப் பின்னர் பேசினார் ஆஆகவின் பிராமண உறுப்பினரான சௌரவ் பரத்வாஜ். “தலித்துகளைப் பிராமணர்கள் ஒடுக்கினார்கள் என்பதற்கு ஆதாரங்களே கிடையாது” என்றார்.
முதல்வர் கேஜ்ரிவாலோ, இந்த இரண்டு பிரச்சினைகளின்போதும் வாயை மூடிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தார். அப்போது மட்டும் அல்ல; 2014 தொடங்கி தலித்துகள் மீதான தாக்குதல், அவர்களுடைய கோரிக்கைகள், அவர்களுடைய பிரச்சினைகள் எப்போதெல்லாம் விவாதம் ஆகியிருக்கிறதோ அப்போதெல்லாம் மௌனமாகவே இருந்திருக்கிறார் கேஜ்ரிவால். ஆனால், ஆதாரமே இல்லாமல், பனியாக்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பதாகக் குரல்கொடுக்க அவர் தயங்குவதே இல்லை. டெல்லி வாக்காளர் பட்டியலில் 4 லட்சம் பனியாக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியதும், “இதற்கு ஆதாரம் என்ன?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வாக்காளர் பட்டியலில் சாதிப் பின்னொட்டுகள் இல்லை என்பதே ஆதாரம்தான்” என்று சொன்னதும் ஒரு உதாரணம்.
ஊருக்கு ஒரு பேச்சு
அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைப்பதில் தொகுதியிலுள்ள சாதிக் கணக்குகள் பாஜகவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாஜகவில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள் இந்த வகையில் அதிகரிப்பதால் உயர் சாதியினருக்கு இடங்கள் குறைவதால் கேஜ்ரிவால் அவர்களையே குறிவைக்கிறார். டெல்லியில் பனியாக்கள் செல்வாக்கு கணிசமான அளவுக்கு உண்டு. முக்கியமாக பொருளாதார, அதிகார மட்டங்களிலும் ஊடகங்களிலும் அவர்களுடைய செல்வாக்கு அதிகம். கூடவே, கேஜ்ரிவாலின் சொந்த சமூகத்தினர் அவர்கள். ஆகையால் அவர்களின் குரலாக ஆஆகவை அங்கே முழங்கவைக்கிறார். பஞ்சாபில் தலித்துகள் அதிகம் என்பதால், அங்கே ஆஆக அவர்களுடைய பிரச்சினையை அதிகம் பேசும், ஹரியாணாவில் பசு காப்பகம் அமைப்பதற்குக் குரல்கொடுக்கும்; ஊருக்கு ஒரு குரல்; எல்லாமே ஓட்டுக்கானவை; சாதிகளைக் கணக்காகக் கொண்டவை என்கிறார்கள். “தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள் டெல்லியின் அதிகார இடத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள்” என்ற கேஜ்ரிவாலின் பேச்சையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், தான் யார் பக்கம் என்பதை வெளிக்காட்ட எப்போதுமே கேஜ்ரிவால் தயங்கியதே இல்லை. 2015-ல் கேஜ்ரிவாலைக் குறிவைத்து, பாஜக வெளியிட்ட கட்சி விளம்பரத்தில் அவரை ‘உபத்ரவி கோத்திரக்காரர்’ (தொல்லை தருகிறவர்) என்று கேலிசெய்தது. கேஜ்ரிவாலோ அதைச் சாதிமயமாக்கினார். “என்னை அல்ல; ஒட்டுமொத்த அகர்வால்களையும் (பனியா சமூகத்தின் ஒரு பிரிவு) பாஜக அவமதித்துவிட்டது’ என்று முழங்கினார் கேஜ்ரிவால். தேர்தல் வாக்குறுதிகளில் வணிகர்கள் நலன் சார்ந்து ஆஆக அளிக்கும் வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவையும் மறைமுகமாக பனியா சமூகத்தைக் கணக்கில் கொண்டதே.
அதன் உச்சங்களில் ஒன்றுதான், ‘வணிகவரித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வியாபாரிகளை அவர்களுடைய வணிகத் தலங்களுக்கோ, கிடங்குகளுக்கோ சென்று சோதனை நடத்தி கேள்வி கேட்கும் வழக்கத்துக்கு முடிவுகட்டப்படும்’ என்று அவர் வாக்குறுதி தந்தது.
ஆஆக சார்பில் மாநிலங்களவைக்கு இரு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வாய்ப்பு கிடைத்தபோது, அவரது சாதிப் பாசம் மேலும் வெளிப்பட்டது. ஆஆகவின் சார்பில் மாநிலங்களவைக்கு அவர் அனுப்பிய என்.டி. குப்தா, சுசீல் குப்தா இருவருமே பனியாக்கள்!
எதிர்காலம் என்னவாகும்?
2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்தைக்கூடக் கைப்பற்ற முடியாத நிலையில், பஞ்சாபிலும் கடந்த தேர்தலில் வென்ற நான்கு இடங்களுக்குப் பதிலாக ஓரிடம் என்ற அளவுக்கு இந்த முறை சரிவைச் சந்தித்திருக்கிறது ஆஆக. “இந்தச் சரிவுக்கான காரணம் என்ன என்பதை கேஜ்ரிவால் உணரவில்லை; எவ்வளவு பெரிய நம்பிக்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணரவேயில்லை; தன்னை மிகச் சிறிய இடத்தில் சுருக்கிக்கொள்கிறார்” என்கிறார்கள். கேஜ்ரிவாலோ எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவராகத் தன் பயணத்தைத் தொடர்கிறார். விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், ஆஆகவின் எதிர்காலத்தைச் சொல்லிவிடும். சீக்கிரமே அதன் முழு முகமும் வெளிப்பட்டுவிடும்!
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago