சற்றொப்ப 134 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு எப்படிப்பட்ட மொழிக் கொள்கை அவசியம், மும்மொழியா, இரு மொழியா, ஒரு மொழியா என்பதில் அடிக்கடி சண்டை. அதிலும் ‘இந்திதான் தேசிய மொழி, பாட மொழி, பயிற்று மொழி, தேர்வு மொழி, இணைப்பு மொழி’ என்று இந்திக்காரர்கள் கொக்கரிக்கும்போது உடனே தமிழ்நாட்டிலிருந்து அதைவிட வலுவாக எதிர்க்குரல் எழுகிறது. இது மக்களை ‘இணைப்பதற்காக’ என்பதைவிட ‘பிரிப்பதற்காக’ என்றே ஆகிவிட்டது. இதற்குக் காரணம், இந்தியை ஆதரிப்போரின் மூர்க்கமான பிடிவாதம் மட்டுமல்ல; இந்தியைத் திணிக்க நினைப்போருக்கும் தடுக்க நினைப்போருக்கும் உள்ள சுயமரியாதை உணர்வும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வடக்கு – தெற்கு பிளவு
வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டபோது படித்த மொழி என்பதற்காக ஆங்கிலத்தையே தொடர்ந்து ஆட்சி மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் வைத்துக் கொள்வதா என்று வடபுலத்தார் கேட்கின்றனர். ‘நம்மை ஆண்டவர்களுடைய மொழி என்பதாலோ, பழகிவிட்ட மொழி என்பதாலோ ஆங்கிலத்தை நாம் ஆதரிப்பதில்லை; ஆங்கிலம் சர்வதேச அளவில் பேசப்படும் மொழி, அதைப் பேசுவதால் மீண்டும் நாம் அவர்களுக்கு அடிமையாகிவிடப் போவதில்லை, இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் சுதந்திரத்துக்குப் போராடிய படிப்பாளிகள் ஆங்கிலத்தில் பெற்ற புலமையால்தான் தங்களுக்குள் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸை உருவாக்கவும் முடிந்தது. ஆங்கிலம் மூலமாக உலக வரலாறு, சட்டம், மானுடவியல், பொறியியல், மருத்துவம், தர்க்கம், வணிகவியல் என்று ஏராளமான துறைகளில் நாம் அறிவைப் பெற முடிகிறது. ஆக, உலகளாவிய வாய்ப்புக்காகவே ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தருகிறோம்’ என்பது நம்மவர்களின் பதில்.
உலகம் முழுக்கப் பேசப்படும் மொழிகள் 7,102 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் 22 பெரிய மொழிகளும் 720 பேச்சுமொழிகளும் உள்ளன. 13 எழுத்து வகைகள் உள்ளன. இந்தியாவைக் குட்டி உலகம் என்றால் மிகையாகாது. இவற்றில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது தமிழ். இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தி. வட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்பட்ட வெவ்வேறு விதமான, அதேசமயம் அதிக பொதுத் தன்மையுள்ள மொழியின் கலவை இந்தி.
இந்திக்காரர்களுக்குப் பிற மாநிலத்தவரோடு பேச முடியாமலோ தொடர்புகொள்ள முடியாமலோ இம்சை ஏதுமில்லை. இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை இந்தி தினத்தன்று, ‘இந்தியைத் தேசிய மொழியாக்க வேண்டும்’ என்று வலியுறுத்த அவர்கள் தயங்குவதே இல்லை. பிரச்சினை என்னவென்றால், ஒரு மொழிக்கு அரசின் சூரிய வெளிச்சம் பாய்ச்சப்படும்போது, ஏனைய பல மொழிகள் இருட்டில் தள்ளப்பட்டுவிடுகின்றன. ஓர் உதாரணம், காஷ்மீர மக்கள் இன்று தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று எப்படிப் போராடுகிறார்களோ அதேபோல, தங்களுடைய தனித்துவம் மிக்க மொழிகளைக் காக்கவும் போராடுகிறார்கள். டோக்ரி, லடாக்கி ஆகிய மொழிகளைப் பயன்படுத்த முடியாமல் மாநில அளவில் உருதும், ஆங்கிலமும் ஆக்கிரமித்துவிட்டன. இதேபோல, தேசிய அளவில் இந்தி மீது பாய்ச்சப்படும் அரச வெளிச்சம் நாளடைவில் ஏனைய எல்லா மாநில மொழிகளையும் அழித்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள் மொழியியலாளர்கள்.
தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி, பயிற்று மொழி, இணைப்பு மொழி எல்லாம் - அதிகாரபூர்வமாக. ஆனாலும், தலைமைச் செயலகத்திலும் நீதிமன்றத்திலும் ஆங்கிலம்தான் இன்னும் கோலோச்சுகிறது. பத்திரிகைகளுக்கு வரும் செய்தி அறிக்கைகள்கூட ஆங்கிலத்திலேயே தொடருகின்றன. இப்படி தமிழும் ஆங்கிலமும் மட்டும் வெளிச்சம் பெறும்போது ஏனைய மொழிகளின் நிலை என்ன? இந்தக் கேள்விக்கான பதில் துயரமானது.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இங்கே இணைந்த கன்னட, மலையாள, தெலுங்குப் பகுதி மக்களும் தமிழ்நாட்டின் உள்பகுதியிலேயே வாழும் கன்னட, மராட்டிய, தெலுங்க, மலையாளிகளும் தமிழையே படித்து தங்களுடைய மொழியை அறவே ஒதுக்கிவிட்டனர். வீடுகளில் தாய்மொழியில் பேச்சுமொழியாக வைத்திருந்த இரண்டாவது மூன்றாவது தலைமுறைக்குப் பிறகு அவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டில் மட்டும் புழங்குகின்றனர். தமிழ்நாட்டில் இன்றுள்ள ஏராளமான தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்குத் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியாது. இதே நிலைதான் நாளை இந்தி தேசிய மொழியாக்கப்பட்டால் ஏனைய இந்திய மொழிகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் அர்த்தமற்றதல்ல.
வரலாறு சொல்வது என்ன?
இந்தியாவின் வரலாற்றைப் பார்க்கும்போது இங்கே ஒற்றை மொழி ஆதிக்கம் என்றைக்குமே இருந்தது கிடையாது. மன்னர்களின் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்தந்த பிரதேச மொழிகளையும் சம்ஸ்கிருதம் போன்றவற்றையும் சேர்த்தே ஆதரித்தும், பிற மொழி அறிஞர்களுக்கு மரியாதை அளித்தும் வந்திருக்கின்றனர். ஆண்டாளின் திருப்பாவையின் சிறப்பால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணதேவராயர் ‘ஆமுக்த மால்யதா’ என்ற பெயரில் அதைத் தெலுங்கில் எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு
1956-ல் மொழி வாரி மாநிலங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு, மும்மொழித் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்ததால் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு விலக்குத் தரப்பட்டது. 50 ஆண்டுகளாக மும்மொழித் திட்டம் பெயரளவுக்கு அமலில் உள்ளது. இந்தியை அப்போது ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிரம், கர்நாடகம், வங்கம்கூட இப்போது இந்திக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன என்றால், அது ஏன் என்று மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
இந்தி மட்டும் வளமையாக, செழுமையாக, அறிவியல் - தொழில்நுட்பம் கற்க ஏற்ற மொழியாக இருந்திருந்தால் யாரும் திணிக்காமலேயே இந்நேரம் பரவியிருக்கும்; திணிப்பதற்குப் பதிலாக இந்தியை வளர்ப்பதற்கு முயற்சித்திருக்கலாம் வட இந்தியர்கள். அதேபோல, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி; ஆங்கிலத்துக்கு இணையாகக்கூட வேண்டாம்; மலையாளத்துக்கு இணையாகக்கூட தமிழை நம் அரசுகள் வளர்த்தெடுக்கவில்லையே என்ற கேள்வி விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறதே, பதில் என்ன? மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் ஆட்சிக்கு வந்தவர்களில் பலர் அடுத்த ஐம்பதாண்டுகளில் தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இந்தியும் கற்றுத்தருகிறார்களே; இது என்ன சித்தாந்தம் என்ற கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஒதுங்கிக்கொள்ள முடியாது.
இரு தரப்புக் கேள்விகளும் அர்த்தம் பொதிந்தவை
தென்னிந்திய சுயமரியாதைக்காரர்களைப் பார்த்து வடஇந்திய சுயமரியாதைக்காரர்கள் கேட்கிறார்கள், “எட்டரை கோடிப் பேர் மட்டுமே பேசும் தமிழைத் தேசிய மொழியாக ஏற்பதைவிட 52 கோடிப் பேர் பேசும் இந்தியை ஏற்றால் வேகமாகப் பரவும் அல்லவா, எந்த நாட்டிலும் அலுவல் மொழியாக அந்நிய மொழியை வைத்துக்கொள்வதில்லையே, நமக்கு இதில் சுயமரியாதை வேண்டாமா?”
அண்ணா வழிவந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது கேட்ட கேள்வியையே தென்னிந்திய சுமரியாதைக்காரர்கள் வட இந்திய சுயமரியாதைக்கார்களை நோக்கித் திரும்பக் கேட்கிறார்கள். “இந்தி முழுமையான மொழி அல்ல. கிரிக்கெட் வர்ணனைகளில்கூட கல்லி, ஸ்கொயர் லெக், டீப் மிட் விக்கெட் என்றெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தே சொற்களை இரவல் வாங்கும்போது, உங்களுக்கு எதற்கு தேசிய மொழி ஆசை?”
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடமேற்கிலும் மேற்கிலும் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பை எல்லை பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைத்தது ராணுவம். அங்கே தகவல் தொடர்புப் பணியில் இருந்தவர்களில் அதிகம் பேர் தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மலையாளிகள் பிற மொழிகளைக் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்குத் தமிழும் சரளமாகப் பேச வரும். எனவே, அவர்கள் சக வீரர்களான தமிழர்களுடன் வயர்லெஸ்ஸில் தமிழிலேயே பேசிக்கொண்டனர். இது அவர்களுடைய உரையாடலை இடைமறித்த பாகிஸ்தானியர்களுக்குப் பெரிய பிரச்சினையாகிவிட்டது. இந்தி, உருது, ஆங்கிலம் என்று எந்த மொழியில் பேசினாலும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பாகிஸ்தானியருக்குத் தென்னிந்திய மொழி தலைவலியானது. வெளிநாட்டினரைக் குழப்ப ஒரு ஆயுதமாக மொழியைக் கையில் எடுக்கலாம்; சொந்த மக்களிடமே மொழியை ஒரு ஆயுதமாகக் கையாள ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் என்றைக்கும் அது சிக்கல்தான்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago