ஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்தியாவின் பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்வானது வழக்கமான நிமித்தத்தைத் தாண்டி, சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பெற்றதற்கு இரு காரணங்கள் இருந்தன. உறுப்பினர்கள் பதவியேற்றபோது அதிகாரபூர்வ உறுதிமொழியோடு தத்தமது அரசியலைப் பிரகடனப்படுத்தும் முழக்கங்களையும் சேர்த்துக்கொண்டது முதன்மைக் காரணமானது. அதிகமான உறுப்பினர்கள் இம்முறை தத்தமது தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பதில் காட்டிய ஆர்வம் அடுத்த காரணமானது.
உலகில் இன்று எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட அட்டகாசத்தைப் பார்க்க முடியாது. “முழக்கங்கள் எழுப்புவது மரபல்ல; அவைக் குறிப்பிலும் முழக்கங்கள் இடம்பெறாது” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டபோதும் எவர் காதிலும் அது விழுந்ததாகத் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடக்கிவைத்தவர்கள் ஆளும் பாஜகவினர். பிரதமர் மோடி பதவியேற்க வந்தபோது “மோடி, மோடி, மோடி” என்று முழங்கியவர்கள் அடுத்து, தமக்குப் பிடித்தமானவர்கள் வந்தபோது “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை முழங்கலாயினர். மேலும், தங்களுடைய பதவியேற்பு உறுதிமொழியோடு “பாரத் மாதா கீ… ஜே!”, “ஜெய் ஸ்ரீராம்!”, “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரு!”, “ஹரஹர மஹாதேவ்” என்றெல்லாம் முழுக்கங்களைச் சேர்த்துக்கொண்டனர். தொடர்ந்து, தங்களுக்குப் பிடிக்காத, எதிர் வரிசையில் உள்ளவர்கள் பதவியேற்க வரும்போதும், அவர்களைச் சீண்டும்விதமாக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை பாஜகவினர் ஒலிக்கலானபோது, எதிர்க்கட்சியினரும் முழக்கங்களைக் கையில் எடுத்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் காகோலி கோஷ் தஸ்திதர், “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்துக்கு ஈடுகொடுக்க “ஜெய் மா காளி!”, “ஜெய் மா காளி!” என்று முழங்கியபடியே உறுதிமொழி எடுக்க வந்தார். முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி உறுப்பினரான அஸாதுதீன் ஓவைஸி பதவியேற்க வந்தபோது, பாஜகவினரின் முழக்கம் உச்சம் தொட்டது. தன் இரு கைகளையும் உயர்த்தி பாஜகவினரின் சீண்டலை வரவேற்பது போன்ற சைகையுடன் வந்தவர் “ஜெய் பீம்”, “ஜெய் மீம்”, “தக்பீர்”, “அல்லாஹூ அக்பர்”, “ஜெய் ஹிந்த்!” என்று சொல்லித் தன் உறுதிமொழியேற்பை முடித்தார். சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் எஸ்.டி.ஹசன் உறுதிமொழிக்குப் பின் “ஜெய் ஹிந்துஸ்தான்” என்று சொல்லி பாஜகவினருக்கே அதிர்ச்சி அளித்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பகவத் மன் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கினார். பாஜக கூட்டணியிலுள்ள சிரோன்மணி அகாலி தளத்தின் சுக்பீர் சிங் பாதலைக்கூட அன்றைய சூழல் எங்கோ சீண்டியிருக்க வேண்டும். சீக்கிய மத குருவை வாழ்த்தும் “வஹே குருஜீ கா கால்சா, வஹே குருஜீ கி ஃபதே” முழக்கத்தை முழங்கிய அவர் தன்னுடைய உறுதிமொழியை நிறைவுசெய்தார்.
தமிழ்நாட்டின் எதிர்வினை
தமிழ்நாட்டின் உறுப்பினர்களில் அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் மட்டும் “எம்ஜிஆர் வாழ்க, அம்மா வாழ்க, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்” என்று சொல்லித் தன் உறுதிமொழியை முடிக்க, திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிக - மதிமுக - உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் “பெரியார் வாழ்க”, “கலைஞர் வாழ்க”, “அம்பேத்கர் வாழ்க”, “காமராஜர் வாழ்க” என்று தத்தமது தலைவர்களுக்கான வாழ்த்துகளோடு, “தமிழ் வாழ்க” எனும் வாழ்த்தையும், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”, “மதச்சார்பின்மை வாழ்க”, “இந்திய ஒற்றுமைப்பாடு ஓங்குக”, “தமிழ்நாடே என் தாய்நாடு; தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்றெல்லாம் முழங்கியது ஒரு ஆச்சரியத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது. ஏனைய சமூகங்கள் மதரீதியிலான முழக்கங்களை மதரீதியிலாகவே எதிர்கொள்ள முற்படும்போது, ஒரு மொழி மட்டும் எப்படி கடவுளுக்கு இணையான இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதும், அது மதத்துக்கு அப்பாற்பட்ட விழுமியங்களை எப்படி முழக்கங்களாகத் தர வழிவகுக்கிறது என்பதும்தான் அது.
நாடு முழுக்க இந்த ‘முழக்க அரசியல்’ விவாதிக்கப்பட்டாலும், இந்தக் கோணத்தில் விவாதங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் மதவழி தேசியத்தை எதிர்கொள்ள மொழிவழி தேசியம்தான் வழியா என்பதும், இந்தப் போக்கு எப்படிச் செல்லும் என்பதும் விவாதித்திருக்க வேண்டிய ஒரு விஷயம். மேலும், இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தில் உறுப்பினர்கள் காட்டிய ஆர்வத்தோடு சேர்த்து விவாதித்திருக்க வேண்டிய விஷயமும்கூட இது.
மொழிப்பன்மை அரசியல்
பெரும்பாலான உறுப்பினர்கள் அவரவர் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் விதமாகவே இம்முறை தங்கள் உறுதிமொழிக்கான மொழியைத் தேர்ந்தெடுத்தனர். பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் பெரும்பாலான அமைச்சர்களும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், ஸ்ரீபாத நாயக், அஸ்வினி சௌபே, பிரதாப் சந்திர சாரங்கி உள்ளிட்டோர் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்க, அவருடைய தாய் சோனியா காந்தி இந்தியில் உறுதிமொழி ஏற்றார்.
தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அனைவரும் தமிழில்தான் உறுதிமொழி ஏற்றனர். வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா - தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கணிசமானோர் தத்தமது தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்பதில் ஆர்வம் காட்டினர். ஒடியா, பஞ்சாபி, டோக்ரி, அசாமி, கொங்கணி, காஷ்மீரி, மைதிலி என்று வெவ்வேறு மொழிகளில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருந்தபோது, இந்தி பிராந்தியங்களிலிருந்து வந்திருந்த உறுப்பினர்களில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத சிலருக்கு அவர்களுடைய தாய்மொழியில் உறுதிமொழி ஏற்கும் ஆசை வந்தது.
விவாதமாகும் அடையாள இழப்பு
இந்தி என்ற பொதுமைப்படுத்தலின் கீழ் உள்ள தனித்த அடையாளமும் நீண்ட பாரம்பரியமும் கொண்ட தங்களுடைய மொழியிலேயே உறுதிமொழி ஏற்கும் விருப்பத்தைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டவர்களில் சிலர் மக்களவைச் செயலரை அணுகினார்கள். பிஹாரிலிருந்து வந்திருந்த ஜனார்தன் சிங் சிக்ரிவால், போஜ்புரி மொழியில் உறுதிமொழி ஏற்க விரும்புவதைத் தெரிவித்தபோது, “போஜ்புரி மொழி எட்டாவது அட்டவணையில் இல்லை” என்ற காரணத்தைச் சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஜனார்தன் மிஸ்ரா, பெஹேலி மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவர் இந்தியில் எடுத்துக்கொள்ளப் பணிக்கப்பட்டார்.
இருவருமே பாஜக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்தியின் பெயரால் நம் மொழியின் அடையாள இழப்பையும், அழிவையும் வேடிக்கை பார்த்திருப்பதா?” என்பது இன்று இம்மொழி மக்களிடையே விவாதம் ஆகியிருக்கிறது. போஜ்புரி, பெஹேலி மட்டும் அல்ல; மஹதி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி என்று இந்தி என்கிற பொதுப் பகுப்பின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் பல மொழியினரிடம் இன்று இந்தக் கேள்வியும் சிந்தனையும் மெல்ல மேலெழுந்துவருகிறது. சிறிய குழுக்கள் அல்ல இவர்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி போஜ்புரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5.05 கோடி. சத்தீஸ்கரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.62 கோடி. மஹதியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.27 கோடி. வெறும் 24,821 பேரால் தாய்மொழியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க முடியும் என்றால், ஏன் நமக்கு அந்த உரிமை கிடையாது என்று ஒரு போஜ்புரிக்காரர் எழுப்பக்கூடிய கேள்வி மெல்லக் கருகிவிடக் கூடியது அல்ல.
இந்தி நடத்தும் வேட்டை
பிஹாரி பத்திரிகையாளர் ரோஷன் கிஷோர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ‘ஒரு பிஹாரி தன் தாய்மொழியை எப்படி இழந்தார்?’ என்ற அந்தக் கட்டுரையில், இந்தி எப்படி ஏனைய மொழிகளை வேட்டையாடுகிறது என்பதை ஆழமாக எழுதியிருக்கும் அவர், இந்திப் பகுப்பிலுள்ள போஜ்புரி உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை மாநிலங்கள் அளவில் எப்படியானதாக மாறுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். நாம் பிஹாரை இந்தி மாநிலம் என்கிறோம்; ஆனால், பிஹாரில் மூன்றில் ஒரு பங்கினர் போஜ்புரியையும் ஐந்தில் ஒரு பங்கினர் மஹதியையும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்; அதாவது, கால்வாசிப் பேருக்குக்கூட இந்தி தாய்மொழியாக இல்லை என்கிறார் ரோஷன் கிஷோர். “இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக இங்கே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், மஹதி, போஜ்புரி போன்ற மொழிகளை நிதானமாக அரித்து அழித்து செரித்துக்கொண்டிருக்கும் இந்தியின் அச்சம் தரும் மேலாதிக்கச் செயல்திட்டம் குறித்தும் இனி பேச வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.
இந்தக் கதையின் மிக முக்கியமான கண்ணி, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தித் தொகுப்பில் உள்ள 52.83 கோடிப் பேரில், இந்தியைத் தாய்மொழி என்று குறிப்பிட்டிருப்போரின் எண்ணிக்கை 32.22 கோடி என்பதுதான். ஆக, இந்தி பேசத் தெரியாத மக்கள் மட்டும் இந்தி ஆதிக்கத்தைப் பற்றிப் பேசிய காலம் போய் இந்தி தெரிந்த, இந்தி என்ற பெரும் பகுப்புக்குள் உள்ள, ஆனால் தனித்துவமிக்க மொழியினர் இந்தி ஆதிக்கத்தைப் பற்றிப் பேசும் காலகட்டத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். இந்தியாவுக்கு ஏன் ஆட்சிமொழியாகப் பன்மொழிகள் தேவை என்ற தமிழ்நாட்டின் நியாயத்துக்குக் காது கொடுக்கப்படுவதற்கான சூழல் இந்தி பிராந்தியங்களிலேயே இன்று உருவாகியிருக்கிறது. கேள்வி என்னவென்றால், நாம் அவர்களிடம் எந்த மொழியில் பேசப்போகிறோம்?
ஆட்சியாளர்களுக்குத் தனி மொழிக் கொள்கை
தமக்கெனத் தேவைப்படுவோர் எத்தனை மொழிகளேனும் கற்றுக்கொள்ளட்டும்; தாய்மொழியாம் தமிழ் - சர்வதேச மொழியாம் ஆங்கிலம் இரண்டு தவிர, ஏனைய மொழிகளை மக்கள் மீது திணிக்க வேண்டாம் என்பதே தமிழ்நாட்டுக்கு அண்ணா வகுத்துத்தந்த இரு மொழிக் கொள்கை. மக்களுக்கு இரு மொழிகள் போதும்; ஆட்சியாளர்களுக்கு? அதிலும், டெல்லி செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு?
டெல்லியைக் களமாகக் கொண்டு இயங்கும் நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது ஒன்றையே தம் வேலை என இதுவரை கருதிவந்திருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். அவர்கள் வெறுமனே நாடாளுமன்றத்துக்கான தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுடனும் உரையாடுவதற்கான தமிழ்நாட்டின் பிரதிநிதிகள். உத்தர பிரதேசத்தின், ராஜஸ்தானின், பிஹாரின் ஒரு சாமானியனுடன் ஆங்கிலத்தில் நாம் உரையாட முடியாது. அதற்கு இந்தி தேவை. ‘இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்நாடு எதிர்க்கிறது?’ என்று இந்திக்காரர்களுக்குச் சொல்லவும்கூட இந்தி தேவை.
பன்மை மொழிக் கலாச்சாரம்
பிரிட்டிஷாரை எதிர்த்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியர்களின் ஆங்கில மோகத்தையும் கடுமையாகச் சாடியவர் காந்தி. ஆனால், பிரிட்டிஷாரிடம் ஆங்கிலத்தின் வழிதான் அவரால் உரையாட முடிந்தது. காந்தியோ, நேருவோ ஆங்கிலம் அறியாதவர்களாக இருந்திருந்தால் வரலாற்றில் அவர்களுடைய இடம் என்னவாக இருந்திருக்கும்? அம்பேத்கர் ஆங்கிலத்தை அறியாதவராக இருந்திருந்தால், இந்தியாவில் தலித்துகளின் நிலை என்னவாக இருந்திருக்கும்?
அண்ணாவைப் போலவே பன்மை மொழிக் கலாச்சாரம் - இரு மொழிக் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் இன்றைய சிங்கப்பூரைக் கட்டமைத்தவரான லீ குவான் யூ. பிறப்பால் சீனராக இருந்தபோதிலும், மேட்டுக்குடி குடும்பப் பின்னணி என்பதாலும், தொடக்கக் கல்வி ஆங்கிலவழிப் பள்ளிகள் - உயர்கல்வி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என்பதாலும், சீன மொழியை அறியாதவராக இருந்தார் லீ. சிங்கப்பூர் அரசியலில் தீவிரமாக ஈடுபடலானதும், பெரும்பான்மை மக்களிடம் மேலும் நெருக்கமாகப் பேச மாண்டரீனைக் கற்க லீ முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. மலேசியர்களுடன் உரையாட ஏதுவாக மலாயும் கற்றார் அவர். சிங்கப்பூர் - மலேசியா பிரிவு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை மலேசிய நாடாளுமன்றத்தில் மலாயில்தான் ஆற்றினார் லீ.
பன்மொழி உருவாக்கும் சாத்தியங்கள்
ஆஸ்திரிய பத்திரிகையாளர் ஆர்மின் உல்ஃப் எடுத்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இடையிடையே ஜெர்மனில் பதில் அளித்தார் ரஷ்ய அதிபர் புதின். ஜெர்மானியர்கள் அதிகம் விவாதித்த புதினின் நேர்காணலானது அது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அவையில் தேசியவாதத்துக்கு எதிரான தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆங்கிலத்தில்தான் நிகழ்த்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரோன். ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பிரிட்டனுடன் பேசுகையில் ஆங்கிலத்திலும், ரஷ்யாவுடன் பேசுகையில் ரஷ்ய மொழியிலும் பேசக்கூடியவர். உலகத் தலைவர்களுக்கான அத்தியாவசியத் திறன்களில் கலாச்சாரப் புரிந்துணர்வும் கலாச்சாரப் பரிவுணர்வும் முக்கியமானவை. பன்மொழிப் புலமை அதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது.
தமிழ்நாட்டுப் பிரதிநிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த கணம் பெருமைக்குரியது. இந்தியாவில் இந்திக்கு இணையான இடத்தில் ஏனைய தேசிய இனங்களின் மொழியை அமர்த்த நாம் முதலில் எல்லோருடனும் உரையாட வேண்டும்; முக்கியமாக, ஆதிக்க நிலையில் உள்ள இந்திக்காரர்களிடம். இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்நாடு எதிர்ப்பதற்கான நியாயத்தையும், அண்ணாவின் இரு மொழிக் கொள்கையின் பின்னுள்ள தொலைநோக்கையும் இந்திக்காரர்களிடம் இந்தியில் பேசுகையில் உரையாடல் கதவுக்கு அது வழி திறக்கும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago