குடி சுனாமி

By சமஸ்

பூம்புகார். பண்டைக்காலச் சோழப் பேரரசின் பொலிவான காவிரிப்பூம்பட்டினம். கடல் கொண்ட புகார் நகரம். நிச்சலனமாக இருக்கிறது. கடல், அலைகள், இரைச்சல் எல்லாமே அந்த இரவில் கண் முன்னே நிலைத்து நிற்கும் ஒரு ஓவியம்போல இருக்கின்றன. மனம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோடி எங்கோ ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கடல் மிகப் பெரிய வரலாற்றுக் கிடங்கு. ஏதோ ஒரு தருணத்தில் அது வரலாற்றினூடே நம்மை இழுத்துக்கொள்கிறது. அந்தக் கணங்களில் பேச முடிவதில்லை. யோசிக்க முடிவ தில்லை. மனம் நிச்சலனமாக இருக்கிறது. திடீரெனக் கடலில் கண்ணகியும் கோவலனும் கடந்து போகிறார்கள். திடீரெனக் கடலில் சுனாமி கொண்டுசென்ற உயிர்கள் படபடவென்று மீன் கூட்டம்போலத் தவ்வி எழுகின்றன. திடீரென எதுவும் அசைவற்று சூனியமாய் மாறுகிறது.

பூம்புகார் வருவதற்குச் சில நாட்கள் முன்பு நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கு மனம் நிலைகொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தது. திடீரென சுனாமி நினைவுகள் பேரலை எடுத்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தன. நாகப்பட்டினம் கடற்கரை ஒருபோதும் மறக்க முடியாத 2004 டிசம்பர் 26 காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன. 6,065 உயிர்கள். யார் அழுவதென்றும் தெரியவில்லை. யார் தேற்றுவதென்றும் புரியவில்லை. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்தன பிணங்கள். பெருங்குழிகள் தோண்டி கொத்துக்கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். குழந்தை, பெண், ஆண், ஏழை, பணக்காரர், சாதி, மதம், மொழி, இனம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் எல்லாப் பாகுபாடுகளையும் அருகருகே கோத்து, மண்ணோடு மண்ணாக்கி மூடியது மண். அப்போதும் சரி, அதற்குப் பின் ஒவ்வொரு டிசம்பர் 26 அஞ்சலி நிகழ்ச்சியிலும் கடற்கரையில் நின்று கண்ணீர் பொங்க கடலில் பால் குடத்தைக் கவிழ்க்கும் பெண்களைப் பார்க்கும்போதும் சரி, கடல் மரணத்தின் மாபெரும்

குறியீடாக மாறி மறையும். எவ்வளவு அற்பமானது இந்த வாழ்க்கை?

இருட்டைக் கிழித்த நான்குருக்கள்

எங்கெங்கோ ஓடும் எண்ணங்களை ஒரு குரல் அறுத்து வீசுகிறது. பெண் குரல். திரும்பிப் பார்க்கும் முன் இரு உருவங்கள் கடக்கின்றன. ஓட்டமும் நடையுமாக. பின்னாடியே இரண்டு சின்ன உருவங்கள். அழுகையும் விசும்பலுமாகத் தடதடவென்று ஓடுகின்றன. என்னவென்று ஊகிக்கும் முன்னே இருட்டில் அந்த முதல் உருவம் கீழே விழுகிறது. அனேகமாக ஆண். தட்டுத் தடுமாறி எழுகிறது. பின்னால், துரத்திச் சென்று தூக்கும் பெண் உருவத்தைத் தள்ளிவிடுகிறது. மிதிக்கிறது. மறுபடியும் கீழே விழுந்து எழுந்து மீண்டும் ஓங்கி ஓங்கி உதைக்கிறது. அலறல். இனம் காண முடியாத அலறல். இதற்குள் பின்தொடர்ந்து ஓடிய இரு சின்ன உருவங்கள் உதைக்கும் கால்களைக் கட்டிக்கொள்கின்றன. அவையும் சேர்ந்து ஓலமிட்டு அழுகின்றன. ஆண் உருவம் அவற்றைப் பிய்த்தெறிய முற்படுகிறது. ஒரு சின்ன உருவத்தைப் பிடித்துத் தூக்கி மணலில் வீசி எறிகிறது. திடுக்கிடும் ஏனைய இரண்டு உருவங்களும், வீசியெறியப்பட்ட சின்ன உருவத்தை நோக்கி ஓட, ஆண் உருவம் தான் ஏற்கெனவே ஓடிய திசையில் மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது. ஓடி... ஓடி இருட்டில் கரைகிறது.

ஓடிப்போய் அருகில் நெருங்கினால், அடிபட்ட குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு, மண்ணை உதறிவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஒரு பெண். மூவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அடித்து உதைத்துவிட்டு ஓடியது சாந்தியின் கணவர். சாந்தியின் பிரச்சினை தமிழகக் கடற்கரைப் பெண்கள் பெரும்பாலானோரைக் கதறவைக்கும் அதே பிரச்சினை. குடி!

அழுகும் குடும்பங்கள்

“ஒரே ஊருதாண்ணே. ரெண்டு பேரும் விருப்பப்பட்டுதாம் கல்யாணம் கட்டிக்கிட்டோம். நல்ல மனுசன். தானுண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பாரு. இப்பதாம்ணே ரெண்டு வருசமா... இந்த பாழாப்போன குடிப் பழக்கம். ஆரம்பத்துல கடலுக்குப் போயி, கரைக்குத் திரும்பயில மட்டும் குடிச்சிட்டு வந்தாரு. அப்பொறம், கடலுக்குப் போவயிலயே குடிக்க ஆரமிச்சுட்டாருண்ணே. அப்பொறம், கடலுக்குப் போவாத நாள்லயும் கடக்கரயில உக்காந்து குடிக்க ஆரமிச்சாரு. அப்பொறம், வீட்டுலயே உக்காந்து குடிக்க ஆரமிச்சாரு. இப்பம் எந்நேரமும் குடி... குடி... குடிதான்!

ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கொடலு, ஈரலு எல்லாம் வெந்துபோயி ஆஸ்பத்திரியில சேத்தோம். உயிரு போயி உயிரு வந்துச்சு. பத்து நா கட்டுப்பாடா இருந்த மனுசன் திரும்பவும் குடிக்க ஆரமிச்சுட்டாரு. தாலிய மொதக்கொண்டு வித்து குடிய மறக்குற வைத்தியத்துக்கு அழச்சுக்கிட்டுப் போயிருந்தேண்ணே. ‘திரும்பக் குடிச்சிட்டு வந்தீன்னா செத்துருவ’ன்னு சொல்லித்தான் வைத்தியம் செஞ்சி அனுப்புனாங்க. இப்பம் திரும்பவும் ஆரம்பிச்சிட்டாருண்ணே” என்று அழும் சாந்தியைப் பார்த்துப் பிள்ளைகள் மேலும் அழுகின்றன.

“அவரு நல்ல மனுசன்ணே. நடுராத்திரில விசுக்குனு எந்திரிச்சு உட்காந்துக்குறாரு. தலயில அடிச்சுக்கிட்டு அழுவுறாரு. ‘என்னால, குடிக்காம இருக்க முடியல சாந்தி, என்னக் கொன்னுடு’ன்னு சொல்லி தலயிலயும் மாருலயும் அடிச்சிக்கிட்டு அழுவுறாருண்ணே. புள்ளைங்கன்னா, அவருக்கு உசுரு. என்னயும் அடிச்சதில்ல. புள்ளைங்களயும் அடிச்சதில்ல. இப்பம் ஒரு வாரமா என்கிட்டயும் புள்ளைங்க கிட்டயும் யாரோ ஆம்பளைங்ககிட்ட பேசுற மாரி பேசுறாருண்ணே. ‘என்னய கடல்ல வெச்சிக் கொல்லதானடா திரிஞ்சீங்க. நேத்திக்கு நீதானடா அடிச்ச?’ன்னு என்னென்னமோ பேசுறாரு. அடிக்கிறாரு. குடிக்கக் காசு கொடுக்காட்டி வீட்டக் கொளுத்திடுவேன்னு கேஸத் தொறந்துவுடுறாருண்ணே. வெளியிலயே அவர அனுப்பாதீங்கன்னு ஆஸ்பத்திரியில படிச்சுப் படிச்சுச் சொல்லிருந்தாங்க. இப்பம் கடலுக்குப் போனாலே போவேன்னு ஓடுறாருண்ணே. ஐயோ... செல்லம்... அப்பா நம்மள வுட்டு ஓடுறாருடா... நான் என்ன பண்ணுவேன்னே தெரியலியே...” - பிள்ளைகளை அணைத்துக்கொண்டு அழும் சாந்தியின் குரல் கடல் காற்றில் கலக்கிறது.

கடற்கரை முழுக்கக் குரல்கள்

இந்தப் பயணத்தில், ஒவ்வொரு கடற்கரையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்கும்போது ஆண்கள் பட்டியலிடும் பிரச்சினைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். பெண்களைப் பொறுத்த அளவில் அவர்களுடைய பிரதான பிரச்சினை குடி ஒன்றுதான்.

“கடக்கரயில இன்னைக்குக் குடிக்காத ஆம்பிளயத் தேடணும் பாத்துக்கிடுங்க. குடிச்சிட்டு தொழிலுக்குப் போறதில்ல. வூட்டுல உள்ள பொம்பள எதனாச்சும் காசத் தேத்தி வெச்சிருந்தா, அதையும் அடிச்சிட்டுப் போயி குடிக்கிறது. வூட்டுல உள்ளவங்களைப் போட்டு அடிக்கிறது, கடசியா வயிறு வீங்கிச் சாவுறது... இதாம் கடக்கர சேதின்னு ஆயிடுச்சு. சாவு சேதின்னு வந்தா ஒண்ணு, புத்து இல்லன்னா, காமால சாவு. கடக்கரயில உசுர மட்டும் இல்லீங்க, குடும்பத்தயும் சேத்துக் குடி கொன்னுக்கிட்டிருக்கு. போற உசுரு வெறும் உசுரா மட்டும் போறதில்ல. வூட்டுல உள்ள சொத்து பத்து, நக நட்டு எல்லாத்தயும் அழிச்சுட்டு, ஊரு முழுக்க அஞ்சு காசு, பத்து காசு வட்டிக்குக் கடன் வாங்கி வெச்சிட்டு, குடும்பத்த சந்தில நிக்கவெச்சிட்டுப் போவுது. ஆம்பள இல்லாம இவ்வளவு கடனோட ஒரு பொம்பள எப்படிய்யா தனிச்சு நின்னு கர சேக்க முடியும்? சின்ன பொண்ணுங்க சிக்கித் தவிக்குதுங்க. மருங்கி மருங்கிச் சாவுதோம்யா...” - கொஞ்சம் வயது முதிர்ந்த அம்மாக்கள் யாரிடம் பேசினாலும் குடியைப் பற்றித்தான் கொட்டித் தீர்க்கிறார்கள்.

கோடித்துணி கேட்கும் கோடி

தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுத் தொழிலைக் கையில் எடுத்த 2002-03-ல் மாநிலத்தின் மது விற்பனை ரூ. 2,828 கோடி. இப்போது 2013-14-ல் ரூ. 21,680 கோடி. குடி நம் மக்களிடமிருந்து கோடிகளை மட்டும் பறிக்கவில்லை; அவர்கள் உயிரையும் குடும்பத்தையும் சேர்த்தே பறித்துக் கொண்டிருக்கிறது. யாருக்கும் தெரியாத சுனாமியாய் மஞ்சள் காமாலை என்ற பெயரில் எல்லோர் கண்களையும் மூடி தமிழ்நாட்டின் ஈரலையே அழுகடித்துக்கொண்டிருக்கின்றன ‘லிவர் சிரோசிஸ்’ மரணங்கள். தவிர, அதீத ஆல்கஹால் பயன்பாடு ஏற்படுத்தும் மனச்சிதைவும் சேர்ந்து பாதிக்கப் பட்டவர்களைச் சீரழிக்கிறது.

குடி ஒரு போதைப் பழக்கம் என்பதைத் தாண்டி குடிநோயாகிச் சீரழிப்பதைக் குடிப்பவர்களும் உணர்கிறார்கள். ஆனால், வெளியே வர வழி தெரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.

“எப்படியாச்சிம் வெளிய வந்துரணும்னுதாம் பாக்குறோம்ணே. முடியல. வூட்டை நெனச்சாலே வெறுப்பா இருக்கு. நம்ம தொழிலுக்கு ஒடம்புதாம் மொதலீடு. அது கெட்டுப்போச்சு. புள்ளைங்க கிட்ட போனா மூஞ்சத் திருப்புது. வேலையும் ஒழுங்கா பாக்க முடியல. வேல பார்க்குற எடத்துல மருவாத இல்ல. பொஞ்சாதிக்கும் சொமயாக்கிட்டிருக்கோம். கடன் மேல கடனா சேருது. குடி குடியைக் கெடுத்து நாசம் பண்ணுதுன்னு புரியிதுண்ணே. ஆனா, வெளிய வர வழி தெரியலே...” - கையில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழும் மனிதனைத் தேற்ற வார்த்தைகள் இல்லை. கடல் எல்லாப் பாவங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்