இ
ந்த ஒரு வாய்ப்போடு டொனால்டு டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடிந்துவிட வேண்டும் என்று கருதும் நம் போன்றவர்கள்கூட ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், ‘உண்மைகள்’ என்று சிலவற்றை டிரம்ப் நினைப்பதும் - சில வேளைகளில் - உண்மைகளாகவே இருந்துவிடுகின்றன! அதில் ஒன்றுதான் சீனத்துடன் அமெரிக்காவுக்கு வர்த்தக உறவில் பிரச்சினைகள் உள்ளன என்பது. அமெரிக்காவுக்கு உள்ள உலக வர்த்தகப் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு மடங்கு சீனாவுடனானதுதான்!
டிரம்பின் உள்ளுணர்வு சரியாக இருந்தாலும் தொழில் - வர்த்தகம் தொடர்பான தரவுகளில் பலவீனமாக இருக் கிறார். எந்த ஒரு பிரச்சினை குறித்தும் அவரிடம் கடைசியாகப் பேசுகிறவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சரி என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். நிலக்கரி, உருக்கு, அலுமினியம் தொழில்களில் தோள்வலி மிக்க தொழிலாளர்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதால், இத் தொழில்களைப் பாதுகாக்க நினைக்கிறார். கொள்கை வகுப்பில் குழப்பங்களை ஏற்படுத்தி, எல்லாவற்றையும் உலக அரங்கில் தீர்மானிக்கும் பொறுப்பை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார். அந்நாட்டுடனான வர்த்தகப் பேச்சில் கூட அமெரிக்காவுக்கு நன்மை ஏற்படும் வகையில் பேசுவார் என்ற நம்பிக்கை ஏற்பட மறுக்கிறது.
சீனாவும் அமெரிக்காவும் கொழிக்கும் வகையிலேயே தடையற்ற வர்த்தகங்களை இரு நாடுகளும் தொடர முடியும் என்றாலும், சீனா நியாயமாக நடந்துகொள்ள மறுக்கிறது. இதை டிரம்பால் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்க மக்களுக்கு இல்லை. இதுதான் இப்போதைய சிக்கல்!
அமெரிக்காவின் இழப்புகள்
எம்.ஐ.டி. பொருளாதார நிபுணரான டேவிட் ஆட்டர், சீன வர்த்தகத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஆராய்ந்திருக்கிறார். உலக வர்த்தக அமைப்பில் 2001-ல் சேர்ந்த சீனா, அமெரிக்காவின் தொழில்துறை உற்பத்தியாளர்களுக்கு அளித்த அதிர்ச்சிதான் முதல் பிரச்சினை என்கிறார் ஆட்டர். அமெரிக்கா உள்ளிட்ட உலக சந்தை சீனாவுக்குத் திறந்துவிடப்பட்டது. 2000 முதல் 2007 வரையிலான காலத்தில் அந்நாட்டிலிருந்து மலிவான விலையில் பொருட்கள் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவில் குவிக்கப்பட்டன. அமெரிக்க உற்பத்தி நிறுவனங்கள் அப்போதே 40% அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. அது மட்டுமின்றி ஓஹையோ, மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா வில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். வேலையிழப்பு மட்டுமின்றி, சமூகச் சிதைவு, திருமணங் கள் குறைவது, போதைப்பொருள் பயன்படுத்தல் அதிகரிப்பு ஆகியவையும் நிகழ்ந்தன. வேலை இழந்தவர்கள் அரசின் உதவித்தொகைக்குக் காத்திருக்கத் தொடங்கினர்.
அடுத்ததாக, அமெரிக்கப் பொருட்களை சீனச் சந்தை யில் விற்க முடியவில்லை. உலக சந்தையில் சேர்ந்ததால் சீனாவும் சீர்திருத்தம் அடைந்து, சந்தைகளைத் திறந்துவிடும் என்று பிற நாடுகள் எதிர்பார்த்தன. சீனா சீர்திருத் தம் அடைந்தது உண்மைதான். ஆனால், சந்தையின் கதவுகளைப் பிற நாடுகளுக்கு இழுத்து மூடிவிட்டது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கார்களின் மீது 25% இறக்குமதி வரி விதித்தது. சீன கார்களுக்கு அமெரிக்கா விதித்த வரியோ 2.5%. கார்களுக்கு மட்டுமல்ல, கார்களின் பாகங்களுக்கும் இப்படிக் கறாராக வரிகளை உயர்த்தியது சீனா. தன்னுடைய நிறுவனங்களுக்கு ஆபத்து வராமல், தடுப்புச் சுவரைப் போல பலவிதக் கட்டுப்பாடுகளை விதித்தது. அரசின் நிதியை வழங்கி அவற்றை வளர்த்தது, அவை போட்டிக்குத் தயாரானதும் சர்வதேசச் சந்தையில் விற்க அனுமதித்தது. அதற்குப் பிறகே அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் நிறுவனங்க ளுக்கு அனுமதி தரப்பட்டது. டெட்ராய்ட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய கார்களை சீன மண்ணில் உருவாக்கி, பிறகுதான் அமெரிக்காவுக்கும் விற்கின்றன. இதன் மூலமும் வர்த்தகப் பற்று வரவில் அமெரிக்காவுக் குப் பெரிய இழப்பே.
சீனாவின் கெடுபிடி
சீனாவில் தயாரிப்பில் ஈடுபடுவோருக்கு உதவ ஆப்பிள் போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்றன. தரவுகளை எல்லாம் சீன ‘சர்வர்’களில்தான் சேகரிக்க வேண்டும், சீன நிறுவனங்களைச் சேர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுடன், அதை ஏற்கவும் வைத்திருக்கிறது சீனா. அமெரிக்காவிலோ அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சீனாவில் நிறுவனத்தைத் தொடங்கினாலும் அமெரிக்க நிறுவனங் கள் அதில் 50%-க்கும் மேல் பங்குதாரராக இருக்க முடியாது. ஆனால், அமெரிக்காவில் சீனாவின் ஐந்து பெரிய நிறுவனங்கள் 100% பங்குகளைத் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ளன.
சீனாவில், அமெரிக்க மின்சார பேட்டரி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களைக் கூட்டாளியாக வைத்துக்கொள்வதுடன் தொழில்நுட்பத்தையும் கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதை ‘டெஸ்லா’ நிறுவனத் தலைவர் ஏலான் மஸ்க் சுட்டிக்காட்டியிருக்கிறார். மின்சார வாகனங்கள் தயாரிப்புதான் அடுத்த தலைமுறைக்கான வளரும் தொழில் துறை. அதையும், பிற நாடுகள் ஆதிக்கம் செலுத்தாமல் சீனா கட்டுப்படுத்திவிடும். அதி நவீன துறை களிலும் சீனா முதலீடுகளை அதிகப்படுத்திவருகிறது. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் மனிதவள ஆற்றலிலும்கூட பாராட்டத்தக்க வகையில் முதலீடு செய்துவருகிறது. சீனா கடைப்பிடிக்கும் விதிமுறைகளை மற்றவர்களால் புறக்கணிக்க முடியாது.
அமெரிக்கா நெருக்குகிறது என்பதால், அதனிடம் நிறைய வாங்க சீனா தயாராக இருக்கிறது. ஆனால், சீனாவுக்கு விற்கும் நிலையில் அமெரிக்கா இப்போது இல்லை. எண்ணெய், உணவு தானியங்கள், விமானங்கள் ஆகியவற்றை மட்டுமே அதிகம் விற்கும் நிலையில் அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையே, ஜெட் விமானங்களைச் சோதனை முறையில் தயாரித்து வெள்ளோட்டம் விடும் நிலைக்கு சீனா வந்துவிட்டது.
கோட்டைவிட்ட டிரம்ப்
புத்திசாலியான அமெரிக்க அதிபராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? டிபிபி (டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் டிரேட் அக்கார்ட்) வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அமெரிக்கா ஏற்றுமதிசெய்யும் பல்வேறு பொருட்கள் தொடர்பான 18,000 காப்பு வரிகளை நீக்குகிறது இந்த ஒப்பந்தம்.
இந்த அமைப்பில் நன்றாக இயங்கும் பொருளாதாரத்தைக் கொண்ட 12 பசிபிக் கடலோர நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. டிரம்ப் இதில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக, ஒப்பந்தத்தில் சேர மறுத்து கிழித்துப்போட்டுவிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் முடிவெடுத்ததைப் போல, ஆசியாவிலிருந்து அமெரிக்கா விலக நேர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையிலேயே மிகவும் முட்டாள் தனமான செயல் இது. டிபிபியில் சீனா இல்லை. சீனாவை நெருக்கி வழிக்குக் கொண்டுவருவதற்கான அமைப்பு இது. இதை அவ்வளவு அலட்சியமாகத் தூக்கி வீசிவிட்டார் டிரம்ப்.
புத்திசாலியான அதிபராக இருந்தால் டிபிபியில் சேர்வது மட்டுமின்றி, சீனத்துடன் ரகசிய வர்த்தக உடன்பாட்டுக்குப் பேசியிருப்பார். ‘உங்களுடைய வர்த்தக விதிகள் ஆதிக்கம் செலுத்துவதால், அதையே நாங்களும் பின்பற்ற முடிவுசெய்துவிட்டோம். சீனாவில் உள்ள உங்கள் நிறுவனங்களுக்கு இவை முதலில் அமலுக்கு வரும். உங்களுடைய கார்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்போம். உங்களுடைய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனத்தைக் கூட்டாளியாக வைத்துக்கொள்ள வேண்டும், அறிவுசார் சொத்துரிமைப்படி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், நிறுவனத் தரவுகளை அமெரிக்க ‘சர்வர்’களில்தான் சேகரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருப்பார்.
அமெரிக்கா தனது தோழமை நாடுகளுடனே வெளிப் படையாக ‘வர்த்தகப் போரை’ நடத்துவதால், அதன் உற்பத்தியாளர்களுக்கே உற்பத்திச் செலவு அதிகமாகிறது. அத்துடன் அமெரிக்காவின் வளரும் தொழில்களுக்கும் அது நல்லதல்ல. நாட்டின் நலனுக்கு இதுவெல்லாம் அவசியம் என்பதுடன் தடையற்ற வர்த்தகத்துக்கு மக்களின் ஆதரவும் அவசியம்; திடீர் வர்த்தக அதிர்ச்சியால் அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையிழக்காமல் இருக்க, ஊதிய காப்புறுதியும் சமூக மறுமுதலீட்டுக் கொள்கைகளும் அவசியம். அதே சமயம் அமெரிக்கர்கள் தொடர்ந்து தங்களுடைய தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான சூழ்நிலைகளையும் பராமரிக்க வேண்டும். போட்டி சீனாவிடமிருந்தோ, இயந்திர மனிதரிடமிருந்தோ வந்தாலும் சமாளிக்க இது உதவும்.
1% பணக்காரர்களிடம் 99% செல்வம் குவிகிறது என்பதிலேயே அமெரிக்கர்கள் அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறார் ஆட்டர். திறனை வளர்த்துக் கொண்டால் நிறைய ஈட்டலாம் என்பதிலேயே சிந்தனை போவதில்லை என்கிறார். தகுதிக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என்பதல்ல இப்போதைய பிரச்சினை. திறமையை வளர்த்துக்கொள்ள முடியாமல் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருப்பதுதான் பிரச்சினை. நல்ல கல்வியும் பணித்திறனும் சேர்ந்தால் பலன் நிச்சயம். கல்வி எதைத் தருகிறது? சில திறமைகளை வளர்த்துக்கொள்வதுடன் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மையையும் ஏற்படுத்துகிறது. பல்கலைக்கழகங்களைக் கொண்ட பெரிய நகரங்களும், சிறு நகரங்களும் தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு வலுப்படுத்த உதவுகின்றன. உயர் கல்வி என்பது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, கல்லூரி இருக்கும் ஊர்களுக்கும் பயன்தருவது.
‘சுவர்களும் உத்தரமும் வேண்டாம் என்றால், முதலில் தரையை வலுப்படுத்துங்கள்!’ - அமெரிக்காவுக்கு நான் சொல்ல விரும்புவது இதைத்தான்!
தமிழில்: சாரி,
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago