கா
விரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 16-ல் அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டது. பல ஆண்டுகளாக நீடித்துவரும் சிக்கல்களை உச்ச நீதிமன்றம் களைந் தெறியும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்பார்த்திருந்த சூழலில், இந்தத் தீர்ப்பு சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கையும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
2007-ல் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி என்பதை 177.25 ஆகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ஆறுவார காலத்துக்குள் ஒரு ‘திட்ட’த்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உண்மையில், காவிரி நதிநீர்ச் சிக்கலுக்கான தீர்வு என்று உச்ச நீதிமன்றம் சொன்ன இந்த இரண்டு உத்தரவுகளுமே தமிழகத்துக்குப் பாதகமானவைதான். பெங்களூரு வின் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டும், தமிழகத்தின் நிலத்தடி நீர் அளவைக் கணக்கில் கொண்டுமே, தமிழகத்தின் பங்கிலிருந்து 15 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகத்துக்கு ஒதுக்கியது ஒப்பந்த அம்சங்களுக்கு எதிரானது.
கர்நாடகத்தின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்தபிறகு எஞ்சியிருக்கும் நீரைப் பகிர்ந்துகொள்வது என்பது ஒப்பந்தம் அல்ல. காவிரியில் இருக்கின்ற நீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். அதுமட்டுமின்றி, பெங்களூருவின் நீர்த் தேவையைக் கணக்கில் எடுத்த உச்ச நீதிமன்றம் தமிழக நகரங்களின் நீர்த் தேவையைக் கணக்கில் எடுக்காதது ஏன் என்பது புரியாத புதிர்.
வெற்றுக் காகிதமா, தீர்ப்பு?
அடுத்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது மற்றொரு பாதக மான அம்சம். உண்மையில், 2007-ல் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்ட காவிரி நடுவர் மன்றம், அந்தத் தீர்ப்பு செயல்வடிவம் பெற காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற இரண்டு அமைப்புகள் அவசியம் என்பதை அழுத்தமாகச் சொன்னது.
அத்தோடு, காவிரி மேலாண்மை வாரியத்தில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும், அவர்களுடைய துறைசார் தகுதிகள், அனுபவம், அந்தஸ்து ஆகியவற்றை விரிவாகச் சொன்னதோடு, அந்த வாரியத்தின் அதிகாரம், அதிகார எல்லை ஆகியவற்றையும் தெளிவாக வரையறுத்திருந்தது. மேற்சொன்ன மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்படாத பட்சத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெற்றுக் காகிதமாகவே இருக்கும் என்பதையும் பதிவுசெய்திருந்தது இறுதித் தீர்ப்பு.
இந்த விவகாரத்தை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் ‘திட்டம்’ என்பது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கானது. அந்தத் திட்டத்துக்கு ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு என்பது முதல் கோணம்.
அடுத்து, திட்டம் என்றுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் என்று துல்லியமாகச் சொல்லவில்லை. ஆகவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்பது மற்றொரு கோணம். இது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரிக்கும் வாதம்.
மத்திய அரசின் நிலைப்பாடு
உண்மையில், உச்ச நீதிமன்றம் சொன்னபடி ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றுதான் தமிழக அரசு தொடங்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் கணித்தார்கள்.. சொன்னார்கள். ஆனால், மத்திய அரசோ, காவிரி மேலாண்மை வாரியம் பற்றிப் பேசாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்து வோம் என்று பொடிவைத்தே பேசியது. அதையே பாஜக தலைவர்களும் வழிமொழிந்தார்கள்.
அப்படிச் சொன்னதன் பொருள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை என்பதுதான். இதே நிலைப்பாட்டைத்தான் கர்நாடக அரசும் எடுத்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்லவில்லை. ஒருவேளை, மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அதை எதிர்ப்போம் என்றது கர்நாடக அரசு.
இந்நிலையில்தான் மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், “வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், அப்படியொரு உத்தரவை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்கவே உத்தரவிட்டுள்ளது” என்று அழுத்தமாகச் சொன்னார்.
மத்திய அரசிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்ட நிலையில், கர்நாடகம் களத்தில் இறங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் 11 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும், 6 பேர் கொண்ட காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியது கர்நாடக அரசு.
ஆக, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கர்நாடக அரசும், சாதகமற்ற நிலைப்பாட்டை மத்திய அரசும் எடுத்துவிட்ட நிலையில், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவைக்கு வரைவு ஒன்றை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த ஆணையத்தில் தலைவர் உள்ளிட்ட ஐவர் நிரந்தர உறுப்பினர்களாகவும் நால்வர் தற்காலிக உறுப்பினர்களாகவும் இருப்பார் கள் என்றும் செய்திகள்வருகின்றன.
நடப்பு அரசியலையும் நிகழ்வுகளையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சில தெளிவுகள் கிடைக்கின்றன. ஒன்று, உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல ஆறு வார காலத்துக்குள் அதிகாரம் வாய்ந்த மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், உச்ச நீதிமன்றமோ, நடுவர் மன்றமோ சொன்னதுபோல வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசின் அதிகார அகந்தை இடம்கொடுக்காது. ஆகவே, உத்தரவிடும் அதிகாரம் ஏதும் இல்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இரண்டு, நடுவர் மன்றம் சொன்னதுபோல அதிகாரி கள் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தைக்கூட மத்திய அரசு அமைக்கலாம். ஆனால் அந்தப் பெயரில் அமைக்காமல், கண்காணிப்பு, மேற்பார்வை என்பன போன்ற வார்த்தைகளைக் கொண்ட அமைப்பையே உருவாக்குவார்கள். காரணம், மாநில அரசியல். காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரிலேயே அமைப்பை உருவாக்கிவிட்டால், கர்நாடகத் தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். அதன்மூலம் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கனவு முற்றிலுமாகத் தகர்ந்துவிடும்.
ஆகவே, மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக வேறொரு பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கித்தரும் பட்சத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கள்போல, ‘இதோ பாருங்கள், காவிரி பிரச்சினையைத் தீர்க்க நடுவர் மன்றம் சொன்னபடி அமைப்பை உருவாக்கிவிட்டோம்’ என்று தமிழக வாக்காளர்களையும், ‘அதோ பாருங்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை’ என்று கர்நாடக வாக்காளர்களையும் கவர முடியும். இந்த அரசியல் விளையாட்டுதான் இப்போதைக்கு நீடிக்கும், கர்நாடகத் தேர்தல் முடியும்வரை!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘காவிரி: அரசியலும் வரலாறும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago