ஒ
ரு மொழியின் மரணம் என்பது மிகவும் சோகமான நிகழ்வு. ஒரு மொழி இறக்கும்போது, ஒரு வாழ்க்கைமுறையே மரணிக்கிறது, ஒருவகை சிந்தனையே மறைகிறது, வார்த்தைக்கும் உலகுக்குமான தொடர்பு அறுந்துபோகிறது. இன்று நாம் ஒரு மொழியைப் பேசிய கடைசிப் பேச்சாளனின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். அழிந்துகொண்டிருக்கும் மொழியைப் பேசும் மிகச் சிலரில் ஒருவர் என்று ஒருவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம், அதற்கு முன்னால் அந்த மொழிக்காரர்களின் கலாச்சாரம் இறந்துவிட்டதைக் குறிப்பிட மறந்துவிடுகிறோம்.
அழிந்துவிட்ட அல்லது அழியும் நிலையில் உள்ள மொழி தொடர்பாக முரண்பட்ட உணர்ச்சிகளும், மிகை யான உணர்ச்சி வெளிப்படுத்தல்களும்தான் நவீனத் துவத்தில் நிலவுகின்றன. ஒரு மொழியின் இறப்பு என்பது எண்ணிக்கையில் ஒன்றாகத்தான் கருதப்படுகிறதே தவிர, அதன் பின்னாலுள்ள கதைகள் உணரப் படுவதில்லை. அடுத்த பத்தாண்டுகளில் 3,000 மொழி கள் அழிந்துவிடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறுபான்மைச் சமூக மக்களின் மொழிகளும், வாய்மொழியாகப் பேசப்படும் மொழிகளும் அழியும் வரிசை யில் முதலில் நிற்கின்றன. மொழிகளைப் பற்றிய கணக்கெடுப்பு என்பதே மொழிகளுக்கு இரங்கல் தெரிவிக் கும் நடவடிக்கையாகத்தான் இருக்கிறது.
மொழிகளை அழிக்கும் வளர்ச்சி
வளர்ச்சியும் வளர்ச்சிக்கான நிறுவனங்களும் சிறுபான்மைச் சமூகங்களின் மொழியும் எழுத்துவடிவங்களும் அழிவதற்கே காரணங்களாகிவிடுகின்றன. பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையினத்தவர் மொழியில் மட்டுமே பாடங்களை நடத்துகின்றனர். ‘எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளி ஐந்து அல்லது ஆறு மொழிகளில் பேசுகிறார். கான்வென்ட்டில் படிக்கும் குழந்தைக்கு ஒரு மொழியில்தான் பேச முடிகிறது’ என்று கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்திய மக்களின் மொழிகளைக் கணக்கெடுக்கும் அமைப்பு (பிஎஸ்எல்ஐ) மட்டுமே, எல்லா மொழிகளை யும் தொடர்ந்து வாழவைக்கப் போராடிக்கொண்டிருக் கிறது. இதன் தலைவரும் இலக்கிய விமர்சகருமான கணேஷ் என்.தேவி, அரசின் குமாஸ்தா பார்வையிலான விளக்கங்கள் ஏராளமான மொழிகளைச் சாகடித்துவிடும் என்று அஞ்சுகிறார். எழுத்தில் இருக்கும் மொழிகளை மட்டும் மொழியாக ஏற்க மத்திய அரசு முடிவு செய்தவுடன், வாய்மொழியாகவே மக்களால் பேசப்படும் பல மொழிகள் அழிய வழிசெய்யப்பட்டுவிட்டது என்கிறார். பன்மைத்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இப்போது நாம் புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். எது பேச்சுமொழியாக மட்டும் இருக்கிறதோ அதை எழுத்தில் பதிவுசெய்வதுடன் டிஜிட்டலாகவும் மாற்றிச் சேமிக்க வேண்டும். அப்போது தான் பன்மைத்துவம் நிலைபெறும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழிதான் ஆட்சி மொழி, தொடர்பு மொழி என்று அறிவித்ததால் பழங்குடிகள் மவுனமாகிவிட்டனர். ஒரு மொழியின் மரணமும் மொழிச்சூழலின் அழிவும் ஒரே சமயத்தில் நிகழ்ந்துவருகின்றன. இந்தியாவின் கரையோரப் பகுதிகளின் வாழ்க்கை முறைகளை அரசு தனது திட்டங்களால் மாற்றியமைத்ததால், அங்கு புழங்கிய மொழிகள் அழிந்தன. கடலோரப் பகுதிகளில் பெருநிறுவனங்கள் முதலீடுகளுடன் கால் வைத்ததும், கரையோரம் வசித்த மக்கள் இருப்பிடத்தையும் பாரம் பரியத் தொழிலையும் இழந்து இடம்பெயர்கின்றனர். புதிய இடங்களில் பழைய மொழிகள் இறந்து, அப்பகுதி மொழி அவர்களுக்குள் குடியேறுகிறது.
பெரு நிறுவனங்களின் லாபத்தில் 5% ‘நிறுவனங்களின் சமூகப் பொறுப்புறுதி’ (சிஎஸ்ஆர்) சட்டப்படி அப்பகுதிகளின் முன்னேற்றத்துக்குச் செலவிடப்பட வேண்டும் என்கிறது. அந்த 5% செலவை, அழியும் மொழிகளைக் காப்பாற்றச் செலவிடலாம் என்று மானிடவியலாளர் என்ற வகையில் விரும்புகிறேன். அந்தந்தப் பகுதி மொழி மட்டுமல்ல கைவினைகளும் காப்பாற்றப்பட வேண்டும்.
அழிவது மொழி மட்டுமல்ல
ஒரு மொழியை இழப்பது பிரபஞ்சத் தோற்றத்தின் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமம். மொழியுடன் இணைந்த நம்பிக்கைகள், சடங்குகள், தகுதி வளர்ப்புகள் இதில் அடக்கம். ஒரு மொழி அழிவதால் சமூகத்துக்கு ஏற்படும் லாபங்கள் அல்லது இழப்புகள் குறித்துப் பெரு நிறுவனங்களின் பாணியில் யாரும் கணக்குப் பார்ப்பதில்லை. புதிய மொழி வந்ததால் பழைய மொழிகள் வழக் கொழிந்து போய்விட்டன என்றே கருதுகிறார்கள்.
உலகிலேயே அதிக மொழிகளின் பிறப்பிடம் இந்தியா. நம்முடைய வேளாண்மையிலும் மொழிக் குடும்பங்களிலும் உள்ள பாரம்பரியச் செல்வங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். 1,40,000 வகை அரிசி இனங்களும் 780 மொழிகளும் கொண்ட நாம், பன்மைத்துவத்தின் காவலர்கள். நம்முடைய மொழிகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கும் குடித்தன்மையை நம்முடைய ஜனநாயகத்தின் அங்கமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். கலாச்சாரத்தை நுணுகி ஆராய்ந்து கண்டுபிடிக்காத நாடு சாதாரணமான, இறுகி கெட்டித்தட்டிப்போன அலகாக மாறிவிடும். மொழி என்பது பேசுவதற்கான தொடர்புச் சாதனம் மட்டுமல்ல; பல கலைகளையும் பயிற்றுவித்த மூலாதாரம்; பல கருவிகளையும் கண்டு பிடிப்புகளையும் வடித்துத் தந்த ஊற்று. மொழியே, மக்கள் குழுக்களென்று தனி அடையாளத்தையும் தனித் திறனையும் அளித்து வாழ வழிசெய்துள்ளது. இப்படி ஒரு இனத்தையே வாழ்வதை உறுதிசெய்த மொழி பேச்சுவழக்கிலிருந்தும் மறைந்துபோவது நல்லதல்ல. புதிய தலைமுறை நவீனத்துவத்தை ஏற்கும்போது பாரம்பரிய நினைவுகளையும், வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறன்களையும் தங்களுடைய மொழியுடன் சேர்த்தே இழக்கின்றன.
அழியும் மொழிக்காகத் தனி பிரார்த்தனை தேவைப்படுகிறது. வெகு சில மூத்த குடிமக்கள் மட்டுமே பேசும் மொழிகள் பல. மொழியைத் தெரிந்த கடைசிக் குடி மகனும் இறந்த பிறகு மார்பில் அடித்துக்கொண்டு அழுவது தொடங்குகிறது. ஆனால், இப்படி பாரம்பரிய மொழிகள் அருங்காட்சியகப்படுத்தப்பட்டு, அடையாளம் இல்லாமல் போவதற்கு நவீனக் கலாச் சாரம்தான் காரணமாக இருக்கிறது.
மொழிப் பன்மைத்துவம்
அருங்காட்சியகம் என்றாலே இறப்பும், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மால்டிஹைடு நெடியும்தான் நினைவுக்குவருகிறது என்றார் கலை விமர்சகர் ஆனந்த குமாரசுவாமி. இதே கண்ணோட்டத்தில்தான் சமூகமும் மறைந்த மொழிகளைப் பற்றி நினைக்கிறது. இறந்த மொழியின் ஒலி நாடா சேகரிக்கப்படுகிறது, அதன் இலக்கணம் உறையவைக்கப்படுகிறது, அந்தச் சமூகம் மரணிக்க அனுமதிக்கப்படுகிறது. வளர்ச்சியை ஆராதிக் கும் நவீனத்துவம் மொழியிறப்பு குறித்து சடங்கைக் கடைப்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறது.
‘புள்ளிவிவரங்கள் ரத்தம் சிந்துவதில்லை’ என்று ஆல்பர்ட் காம்யூ கூறியிருக்கிறார். 14 நாட்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் மொழிகள் அழிகின்றனவாம். ‘ஆபத்தில் இருக்கும் உலக மொழிகள்’ என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள உலக வரைபடத்தைப் பார்த்தால் இதை உணரலாம். 1950 தொடங்கி 230 மொழிகள் வழக்கொழிந்துவிட்டனவாம். அந்த மொழிகளைப் பேசிய சமூகத்தின் அவதானிப்புகளைப் பற்றிய தகவல்கள் ஏதுமில்லாமல், வெறும் தகவலாகவே இது பதியப்படுகிறது. பல மொழிகளும் கலந்து பேசப்படுவதையும் புழங்கப்படுவதையும் கொண்டாட வேண்டும். பேச்சாளர் ஒரே மொழியில் மணிக்கணக்காகப் பேசி மனங்கவர்வது மெக்காலே கல்வித் திட்டம் உருவாக் கிய விளைவு. வெவ்வேறு மொழிகள் உலவும் இடங்களே மக்களுக்குத் தேவை. அவர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் சரளமாக மாற வேண்டும்.
மொழிபெயர்ப்பும்கூட குடிமைத்துவத்தின் முக்கிய மான அம்சம். மூன்றாவது உலக நாடுகளுக்கு, மொழிபெயர்ப்புக்காகவே புதிய மாதிரியிலான யுனெஸ்கோ தேவை என்று அனந்தமூர்த்தி ஒரு முறை கூறியிருக் கிறார். உள்ளூர் மொழிகளும் மாநில மொழிகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழி லிருப்பதை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அபூர்வமாகத்தான் யாருக்காவது தோன்றுகிறது. பன்மைத்துவக் கண்ணோட்டம் நீடிக்கப் பல மொழிகளும் ஆராதிக்கப்படுவதும் அறியப்படுவதும் அவசியம்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago