‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், காவிரி வடிநிலம், கங்கை வடிநிலம், இமயமலை முன்நிலம் உட்பட நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில், 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டில் உலகளாவிய நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதல் அனுமதி வரும் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளது. இதற் கான ஏல நடைமுறை சந்தடியின்றி கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அண்மையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
அவர் தெரிவித்தபடி, இதுவரை எடுக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும், ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licensing Policy) எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், இனி ஹைட்ரோ கார்பன்களில் மேற்கூறிய எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான திறந்தவெளி அனுமதி அளிப்பதற்கான ஏல நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே காவிரி டெல்டாவில் ஆபத்தான நீரியல் விரிசல் (ஹைட்ராலிக் ஃபிராக்சர்) சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட விவரமும் அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்துள்ளன.
உலக அளவில் பெட்ரோலியம், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் நுகர்வில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக, 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்தியா, இவற்றில் 80 முதல் 85 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இதனால், நாட்டின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் மரபு சார்ந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தியோடு, மிக ஆபத்தான நீரி யல் விரிசல் நடைமுறைகளை உள்ளடக்கிய நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் ஆகியவற்றை எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக, முந்தைய ‘நெல்ப்’ (NELP- New Exploration Licensing Policy) கொள்கையின்படி, தனியார் நிறுவனங்களும் எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கண்டறிந்து எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே ரிலையன்ஸ், எஸ் ஸார் போன்ற இந்திய பெரு நிறுவனங் கள் நிலத்திலும் கடலிலும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, 2022-க்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் திட்டத்தோடு, எரிசக்தி துறையில் தனியார் அதிக அளவில் ஈடுபடும் வகையில், நாடு முழுவதும் 65 இடங்களில், ‘கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வயல்களை’ (Discovered small and marginal fields), கடந்த 2017 பிப்ரவரியில் ஏலம் விட்டது. அதில் ஒன்றுதான், நெடுவாசல். காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல எண்ணெய் வயல்கள் இதன்படியே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நெல்ப் (NELP) முறையை மாற்றி, ஹெல்ப் (HELP) என்ற ஒற்றை உரிமம் அனுமதியை மத்திய அரசு கொண்டுவந்தது. தற்போது, மேலும் தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம் (Open Acreage Licensing Policy- OALP) என்ற புதிய கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அர சால் கண்டறியப்பட்ட மிகப்பெரும் புதிய வட்டாரங்களை, வருவாய் பங் கீடு அடிப்படையில் தனியாரிடம் விற் கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017 ஜூலையில் தொடங்கியுள்ளது.
இதற்கேற்ப, எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகமே அடையாளம் செய்து, அதை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் வழக்கத்தை மாற்றியுள்ளது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எரிபொருள் வளங்கள் குறித்த மிகத் துல்லியமான இருபரிமாண (2டி), முப்பரிமாண (3டி) வரைபடங் கள் கொண்ட தேசிய தகவல் தொகுப்பகத்தை (National Data Repository), நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் இடங்களை நிறுவனங்களே தேர்ந்தெடுக்கவும் அரசு அனுமதி அளித் துள்ளது.
இதற்கேற்ப, முன்னர் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் காஸ், ஹைட்ரேட்கள் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்களை எடுக்க தனித்தனி உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ‘ஹெச்இஎல்பி- ஓஏஎல்பி’ கொள்கைப்படி ஒரே உரிமம் பெற்றாலே போதும். எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்கலாம் என தற் போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச டெண்டர்
அதன்படி, நாடு முழுவதும் புதிய எண்ணெய் வளப் பகுதிகளை அடையாளமிட்டு, அங்கு ஆய்வு மற்றும் துரப்பண பணிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச டெண்டர், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (DGH) மூலமாக கடந்த ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்பட்டது. 100 சதவீதம் அந் நிய முதலீட்டு நிறுவனங்கள் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, வருவாய் பங்கீடு அடிப்படையில் ஆய்வு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி பணிகளைத் தொடங்க வரும் ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்படும்.
இதில், மிகவும் கவலை கொள்ளச் செய்வது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வட்டாரங்களில் இமயமலை, கங்கை, காவிரி, கோதாவரி, தாமோதர், காம்பே, கட்ச் வடிநிலப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதே.
இங்கு ஏற்படும் எந்த சிறிய சூழலியல் மாறுபாடும், ஒட்டுமொத்த சமூக, பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆபத்தான நடைமுறைகளை பயன்படுத்தி வரும் பன்னாட்டு தனியார் பெரு நிறுவனங்களின் வருகையால் என்னவெல்லாம் நிகழுமோ என்ற அச்சம், விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் கவ்வியுள்ளது.
அரசின் கொள்கை ஆபத்தானது
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகியும், மீத்தேன், ஷேல், ஹெல்ப் திட்டங்களின் பாதிப்புகள் பற்றி பேசி வருபவருமான மன்னார்குடி வ.சேதுராமன் கூறியதாவது:
நாட்டின் எரிபொருள் வளத்தைப் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், எந்த இடங்களில் இருந்து இவற்றை எடுப்பது என்பது முக்கியம். காவிரி டெல்டாவை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிட முடியாது. முழுவதும் விவசாயத்தையும் மீன்பிடியையும் சார்ந்த பகுதி இது. இதன், அடிப்படையில் தான் ஜெயலலிதா தலைமையிலான அன்றைய தமிழக அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, மீத்தேன் திட்டத்துக்கு நிரந்தரத் தடை விதித்தது. பிரச்சினைகள், எதிர்ப்புகள் எழும்போதெல்லாம், இங்கு மீத்தேன், ஷேல் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் சொல்லி வந்தது. ஆனால், கட லூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஓஎன்ஜிசி கைவிட்ட எண்ணெய்க் கிணறுகளில் இருந்துதான், ஹெச்ஓஇஎல் என்ற தனியார் நிறுவனம் தற்போது எண்ணெய், எரிவாயு எடுக்கிறது.
இதேபோல, வரும் காலத்தில் ஓஎன் ஜிசி போன்ற அரசுத் துறை நிறுவனங் கள் தங்களது பணிகளை குறைத்துக்கொண்டு, நாட்டின் வளத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலை ஏற்படும். அதற்கேற்பவே, ‘ஹெல்ப்’ என்ற திறந்தவெளி அனுமதி மூலம் ஒரே உரிமம் கொண்டு, மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் காஸ், நிலக்கரி உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்களில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற் காக நீரியல் விரிசல் போன்ற எந்த நடைமுறையையும் பயன்படுத்தலாம் என்ற அரசின் கொள்கை ஆபத் தானது.
இதனால், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி டெல்டாவின் நில வளம், நீர் வளம் பாதிக்கப்படும். காவிரி நீர் வராதது, கடல் நீர் உட்புகு தல் போன்ற காரணங்களால் நிலத் தடி நீரும், நிலமும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. நீரியல் விரிசல் போன்ற ஆபத்தான நடைமுறைக ளால் அவை மேலும் பாழாகி, எதற்கும் பயனற்றதாகிவிடும். இதனால், தமிழகத்தின் உணவு உற்பத்தி, சமூக வாழ்நிலை பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீரியல் விரிசல் முறை என்பது..
பூமியில் மிக ஆழத்தில் தேங்கியிருக்கும் இயற்கை எரிவாயுவை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து முழுமையாக கொண்டுவர உருவாக்கப்பட்டதுதான் நீரியல் விரிசல் முறை.
இதன்படி 10 ஆயிரம் மீட்டருக்கும் அப்பால் வரை பூமிக்குள் ஆழமாக துளையிடப்படும். பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா திசைகளிலும் துளை போடப்படும். பின்பு பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண் துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே அடைபட்டு கிடந்த எரிவாயு நீரில் ஒன்றாகக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல்பரப்புக்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும். செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி எரிவாயு சேகரிப்பதுதான் நீரியல் விரிசல் முறை.
புதிய இடங்கள், வட்டாரங்கள்
1. ராஜஸ்தான் வடிநிலம் - 9
2. அசாம் மற்றும் அரக்கான் வடிநிலம் - 19
3. கிருஷ்ணா, கோதாவரி வடிநிலம் - 5
4. காம்பே வடிநிலம் - 11
5. மும்பை வடிநிலம் - 2
6. சவுராஷ்டிரா வடிநிலம் - 2
7. கட்ச் வடிநிலம் - 2
8. காவிரி வடிநிலம் - 3
9. கங்கை வடிநிலம் - 3
10. இமயமலை முன்நிலம் - 1
55 வட்டாரங்களில், மொத்தம் 59,282 சதுர கி.மீ. பரப்பளவில், முதல்கட்டமாக 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்க ஏலம் விடப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago