பழங்குடி மக்களைக் காப்பாற்றுங்கள்!

By பெ.சண்முகம்

மீபத்தில் சேலம் மாவட்டம் கல்வராயன் மலையைச் சேர்ந்த ஐந்து பேர், ஆந்திரத்தின் கடப்பா ஏரியில் பிணமாக மிதந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்த அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். 2015 ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான சம்பவம் இது. சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஆந்திர மாநில வனத் துறையினர், காவல் துறையினரால் அந்த 20 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அந்த வழக்கு என்ன ஆனது என்பதுகூட தெரியவில்லை. இப்போது, மீண்டும் ஐந்து பேரை இழந்திருக்கிறோம்.

வாழ்வை இழந்த மக்கள்

வரலாறு எழுதப்படாத காலம்தொட்டு, மலைகளிலும் வனங்களிலிலும் இயற்கையோடு வாழ்ந்துவந்தவர்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள். அம்மக்களின் பொருளாதாரம் காடுகளை அடிப்படையாகக் கொண்டது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இயற்கையின் மடியில் இயைந்து வாழ்ந்துவந்த மலைவாழ் மக்கள் காலனி ஆதிக்கத்தால் அடிமைகளைவிடவும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தனியாருக்குச் சொந்தமில்லாத நிலம் அனைத்தும் அரசின் சொத்து என்னும் கொள்கையின் அடிப்படையில் காலனிய அரசு செயல்பட்டது. பழங்குடி மக்களின் பாரம்பரியக் கூட்டு உரிமை அங்கீகரிக்கப்படவில்லை. பழங்குடிச் சமூகத்தின் வேளாண் நிலம், மேய்ச்சல் காடு, வனசிறு மகசூல், நீர்நிலைகள் என அம்மக்கள் பாரம்பரியமாக அனுபவித்துவந்த அனைத்தும் காலனியாதிக்கப் பார்வையில் சட்டத்தை மீறிய ஆக்கிரமிப்புச் செயல்களாகவே பார்க்கப்பட்டன. சாலை, போக்குவரத்து வசதி இல்லாத சூழலில் அப்போது பழங்குடி மக்களைப் பற்றி அவ்வளவாக யாரும் கவலைப்படவில்லை. பிறகு பெரும்பாலான மலைக் கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து வசதி போன்றவை ஏற்பட்ட பிறகு, சமவெளிப் பகுதிகளிலிருந்து வியாபாரம், வட்டி தொழில் போன்றவற்றுக்காக பழங்குடியினர் அல்லாதார் அங்கு குடியேறினர். பிறகு, தொழிலில் கிடைத்த லாபத்தையும் பழங்குடி மக்களின் அறியாமையையும் பயன்படுத்தி அவர்களின் நிலத்தை வாங்கி மேலாதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் நிலத்தை இழந்து நின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை கடந்த மார்ச் 2-ல் சந்தித்து என்ன நடந்தது என்று விசாரித்தோம். “ஐந்து பேரும் மைசூருக்கு வேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். பிறகு செய்தி சேனல்கள் மூலம்தான் அவர்கள் இறந்த செய்தியைத் தெரிந்துகொண்டோம்” என்று கிராங்காடு, அடியனூர், ஆவாரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். இரவு இரண்டு மணிக்கு மேல்தான் சடலங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே, புதைக்கச் சொல்லிவிட்டார்கள். தண்ணீரில் விழுந்து சேற்றில் சிக்கி அவர்கள் இறந்துவிட்டதாக ஆந்திரக் காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

விரிக்கப்படும் வலை

சேலம் கல்வராயன், விழுப்புரம் கல்வராயன், குத்தியாலத்தூர், பர்கூர், கொல்லிமலை ஆகிய மலைகளிலிருந்து பொங்கலுக்குப் பிறகு, காப்பிக் கொட்டை பறிக்கவும், மிளகு பறிக்கவும் கர்நாடகம், கேரள மாநிலங்களுக்குக் கூலி வேலைக்குச் செல்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது, ஆண்களுக்கு ரூ. 600-ம், பெண்களுக்கு ரூ.550-ம் கூலியாகத் தருகிறார்கள். இரண்டு மாத காலம் தங்கி இந்தப் பணியில் ஈடுபடுவதன் மூலம் கணிசமான தொகை கூலியாகக் கிடைக்கும். இதற்காக, மனைவி, குழந்தைகளைவிட்டுக் கணவனும், கணவனைவிட்டுப் பிரிந்து மனைவியும் வாழும் அவலநிலை. தாங்கள் வாழும் மலைகளில் வேலையும் போதுமான வருமானமும் இல்லாத நிலையில் இத்தகைய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்படுகின்றனர்.

அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ‘சில நாட்களிலேயே கூடுதலான பணம் சம்பாதித்துவிடலாம்’ என்று ஆசை வார்த்தை கூறி செம்மரம் வெட்டும் கூலி வேலைக்குத் தரகர்கள் மூலம் அழைத்துச் செல்கின்றனர். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த சிலரே ஆள்பிடித்து கொடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தலைக்கு ரூ.200 இவர்களுக்குக் கிடைக்குமாம். பின்னர், வேறு சில தரகர்கள் வாகனங்கள் மூலம் தொழிலாளர்களை ஆந்திராவுக்கு அழைத்துச்செல்கின்றனர்.

அங்குள்ள பெரும் மரக் கடத்தல்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் இவர்களைப் பயன்படுத்தி செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். கூலிக்குச் சென்றவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டால் சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அவர்களைக் கொல்வதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது என்று தெரியவில்லை. இத்தகைய சட்டமீறல்கள் குறித்து ஆந்திர அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. தமிழக அரசும் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை.

தமிழகத்திலிருந்து பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அடைபட்டுள்ளனர். எந்தவிதமான விசாரணையுமின்றி பிணையும் கிடைக்காமல் குடும்பத்துக்குத் தகவலும் தெரிவிக்க முடியாமல் வதைபடுகின்றனர். இவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள்தான்.

என்ன செய்ய வேண்டும்?

அரசு நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதுடன், உயிரிழப்புக்களையும் தடுக்க முடியும். செம்மரம் வெட்ட ஆட்களை அழைத்துச் செல்லும் தரகர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய்த் துறை, காவல் துறை மூலம் மலைகளில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, யார் எங்கு சென்றுள்ளார்கள் என்று அவர்களின் இருப்பை உறுதிசெய்வது பலன்தரும். லாரிகளில் இரவு நேரத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடுவது அவசியம். இந்த மரணங்கள் இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சினை என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள பெரும்புள்ளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தால் இந்தக் குற்றங்களை அறவே ஒழித்துவிட முடியும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமும் நிரந்தர வருமானத்துக்கான வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து அந்தக் குடும்பங்கள் தவிக்கும் தவிப்பைக் கருணையுடன் கவனிக்க வேண்டும். இரு மாநில அரசுகளும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூட்டாகப் பேசி வழி முறைகளை உருவாக்கிட வேண்டும்.

பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலேயே போதுமான வருமானம் ஈட்டும் வகையில், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது, நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்குவது, உரிய கூலியை உத்தரவாதப்படுத்துவது, வனஉரிமைச் சட்டம் 2006-ஐப் பயன்படுத்தி நில உரிமை வழங்குவது போன்றவை பெரிய அளவில் அம்மக்களுக்குப் பயன் தரும். வன சிறுமகசூல்கள் சேகரிக்க அனுமதிப்பது, அதற்குக் கட்டுபடியான நல்ல விலை கிடைப்பதை உறுதிசெய்வது, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவது என்பன போன்ற வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடி மக்களின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக இருப்பதை அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது!

- பெ.சண்முகம்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்