ஸ்டீபன் ஹாக்கிங்: காலத்தில் கலந்த காலம்!

By டெனிஸ் ஓவர்பை

கே

ம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளரும், அதிக அளவில் விற்ற நூல்களின் ஆசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! தனது சக்கர நாற்காலியில் இருந்தபடி அண்டத்தில் உலா சென்றவர் ஸ்டீபன் ஹாக்கிங். “ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு, பொதுமக்களின் சிந்தையை ஸ்டீபன் ஹாக்கிங் அளவுக்குக் கொள்ளை கொண்ட, உலகெங்கும் கோடானு கோடி மக்களால் நேசிக்கப்பட்ட வேறொரு அறிவியலாளரை நம்மால் காண முடியாது” என்கிறார் கோட்பாட்டு இயற்பியலாளர் மிஷியோ காக்கு.

இந்தப் புகழை ‘காலத்தின் சுருக்கமான வரலாறு: பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை’ (எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்: ஃப்ரம் பிக் பேங் டு ப்ளாக் ஹோல்ஸ்’) என்ற 1988-ல் வெளியான நூலின் மூலம் ஹாக்கிங் பெற்றார். இதுவரை ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நூல் விற்றிருக்கிறது.

அறிவியலைப் பொறுத்தவரை விநோதமான ஒரு கண்டுபிடிப்புக்காக ஹாக்கிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார். ஜென் பவுத்தத்தின் முரண்கேள்வியான ‘கோவான்’ வடிவில் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி இப்படிச் சொல்லலாம்: கருந்துளை எப்போது கருப்பாக இருக்காது? அது வெடிக்கும்போது!

முதல் மைல்கல்

நவீன இயற்பியலின் திருப்புமுனை எங்கு நிகழ்ந்தது தெரியுமா? 1973 இறுதியில் ஹாக்கிங்கின் மூளையின் சுவர்களில் நிகழ்ந்தது! அணுவுலகின் உள்ளே ஆட்சிசெய்யும் குவாண்டம் கோட்பாட்டைக் கருந்துளை களுக்கு ஹாக்கிங் பொருத்திப் பார்க்க முயன்றபோது அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது.

நீண்ட நெடிய நேரம் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு கணக்குகள் போட்டுப்பார்த்த பிறகு, ஹாக்கிங் கண்டுபிடித்த ஒரு விஷயம் அவரையே குழப்பத்தில் ஆழ்த்தியது. கருந்துளைகள் உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை என்று அவர் கண்டறிந்தார். அவற்றிலிருந்தும் ஒருகட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசிய ஆரம்பித்து இறுதியில், வெகு நீண்ட யுகங்களுக்குப் பிறகு, கருந்துளை வெடித்து மறைந்துவிடும் என்று ஹாக்கிங் கண்டறிந்தார்.

ஒளி உட்பட எதுவுமே தப்பிக்க முடியாது என்று கருதப்பட்ட கருந்துளைக்குள்ளிருந்து அணுத்துகள்கள் தப்பிக்கின்றன என்பதை ஹாக்கிங் உட்பட யாருமே முதலில் நம்பவில்லை. “உண்மையில், நான் இந்த விஷயத்தைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. தற்செயலாகத்தான் இதை நான் கண்டறிந்தேன்” என்று ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.

தனது கணிப்பை ‘நேச்சர்’ இதழில் ‘கருந்துளை வெடிப்புகள்?’ என்ற தலைப்பில் 1974-ல் கட்டுரையாக எழுதினார் ஹாக்கிங். இயற்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த ஒற்றைக் கோட்பாட்டை நோக்கிய, அதாவது ஒன்றுக்கொன்று முரண்படும் சார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் முயற்சியை நோக்கிய பயணத்தில் முதல் மைல்கல் என்று அறிவிய லாளர்களால் இந்தக் கட்டுரை புகழப்படுகிறது.

‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ‘அழிவுசக்திகள்’ என்ற அடையாளத்தைக் கொண்டிருந்த கருந்துளை களுக்கு ‘படைப்புசக்திகள்’ என்ற அடையாளத்தை, அல்லது ‘மறுசுழற்சியாளர்கள்’ என்ற அடையாளத்தை ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு வழங்கியது.

“கருந்துளைக்குள் யாராவது குதித்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். குதித்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். கருந்துளைக்குள் குதித்தவரின் உடலைக் கட்டமைத்திருந்த அணுக்களும் திரும்பி வராது. ஆனால், அவருடைய நிறையின் ஆற்றல் திரும்பக் கிடைக்கும். இது ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் பொருந்தும்” என்று 1978-ல் ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.

‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ குறித்த சூத்திரத்தைத் தனது கல்லறையில் பொறித்துவைக்க வேண்டும் என்று 2002-ல் ஹாக்கிங் கூறினார்.

வியக்கவைத்த உத்வேகம்

தனது அறிவு வாழ்க்கையில் மட்டுமல்ல, தனது பணி வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் தனது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டவர் ஹாக்கிங். அறிவியல் மாநாடுகளுக்காக இந்தப் பூமியைச் சுற்றிவந்தவர் அவர். அண்டார்க்டிகா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களுக்கும் சென்றிருக்கிறார்; இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார்; மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனார்; ‘த சிம்ப்ஸன்ஸ்’, ‘ஸ்டார் டிரெக்: த நெக்ஸ்ட் ஜெனரேஷன்’, ‘த பிக் பேங் தியரி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியிருக்கிறார்.

சூடான காற்று நிரம்பிய பலூனில் பறந்து தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 2007-ல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘போயிங் 727’ விமானத்தில் ‘பூஜ்ஜிய ஈர்ப்புவிசை’ பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை அனுபவித்தார். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் கனவுடனும் இருந்தார். ஏன் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஹாக்கிங் இப்படிப் பதிலளித்தார்: “உத்வேகத்தில் எந்த ஊனமும் இல்லாதபட்சத்தில் உடல் ஊனங்களால் முடங்கிப்போய்விடக் கூடாது என்று எல்லோருக்கும் காட்டுவதற்கு விரும்பினேன்.”

அவரது ஆத்ம உத்வேகம் பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறது.

இங்கிலாந்தில் 1942-ல் ஜனவரி 8-ம் தேதி ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். ‘கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து’ என்று ஹாக்கிங் சொல்லிக்கொள்ள விரும்புவார். பள்ளிப் படிப்பில் ஹாக்கிங் சராசரியான மாணவராகவே இருந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது கணிதமும் இயற்பியலும் மிகவும் எளிமையாக இருந்ததால் ‘பிரபஞ்சவியல்’ அவருடைய ஆர்வத்தை ஈர்த்தது. ஏனென்றால், “இந்தப் பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது என்ற பெருங்கேள்விக்கு ‘பிரபஞ்சவியல்’ தானே விடை தேடுகிறது” என்றார் ஹாக்கிங்.

வாழ்வின் நோக்கம்

பட்டப் படிப்புக்குப் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வறிஞராகச் சென்றார். 1963-ல், அவரது 21-வது பிறந்த நாளுக்குச் சில நாட்கள் கழித்து, அவருக்கு ‘ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்’ என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மிஞ்சிப்போனால் மூன்று ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பார் என்றும் கூறினார்கள். கடுமையான மன இறுக்கத்துக்கு ஆளானார் ஹாக்கிங். தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக ஹாக்கிங்குக்குக் கனவெல்லாம் வந்தது. பிறகு, எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, அவரது நோய் ஒருவித ஸ்திரத்தன்மைக்கு வந்தது.

தனது தசை மீதான கட்டுப்பாட்டை ஹாக்கிங் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தாலும் குறுகிய தூர நடை, எளிய வேலைகள், உடை மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களைக் கொஞ்சம் சிரமப்பட்டு அவரால் செய்ய முடிந்தது. வாழ்வதற்கு ஒரு புது நோக்கத்தை அவர் உணர்ந்தார். “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக் குப் புரிபடும்” என்றார் ஹாக்கிங்.

1965-ல் ஜேன் வைல்டு என்ற மொழியியல் மாணவியை ஹாக்கிங் மணந்துகொண்டார். அப்போது, பிழைப்பை நடத்துவதற்கும் தனது முனைவர் பட்டத்துக்காகப் பணியாற்றுவதற்கும் பணத் தேவை இருந்ததால், வேலை தேட வேண்டிய கட்டாயம். நீள நீளமான சமன்பாடுகள்தான் பிரபஞ்சவியலாளர்களின் முக்கியமான கருவிகள். ஆனால், ஹாக்கிங்கின் நோயானது நீளமான சமன்பாடுகளை எழுத முடியாத நிலைக்கு அவரை ஆழ்த்திவிட்டது.

இந்த ஊனத்தை அவர் தனது பலமாக மாற்றிக்கொண்டார். சிந்தனைப் பாய்ச்சல்கள் நிகழ்த்தும் விதத்தில் அவர் தனது ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டிக்கொண்டார். பிற்காலத்தில், தனது சிந்தனைப் பாய்ச்சல்களைச் சரியான கணித மொழியில் மாற்றும் வேலையை மற்றவர்களுக்கு ஹாக்கிங் விட்டுவைத்தார்.

பிரபஞ்ச முட்டுச்சந்து

ஈர்ப்புவிசை குறித்த ஐன்ஸ்டைனின் ‘பொதுச்சார்பியல் கோட்பா’ட்டின் விளைவான கணிப்புதான் கருந்துளைகள். படுத்திருக்கும் நபரால் மெத்தையில் குழிவு ஏற்படுவதுபோல், நிறையும் ஆற்றலும் அண்டவெளியை (ஸ்பேஸ்) எப்படி ‘வளை’க்கின்றன என்பதைப் பற்றி பொதுச்சார்பியல் கோட்பாடு விவரிக்கிறது. ஈர்ப்புப்புலம் (கிராவிட்டேஷனல் ஃபீல்டு) ஒன்றை ஒளிக்கதிர்கள் கடக்கும்போது வளையும், நடுவில் பள்ளமாக இருக்கும் மெத்தையின் மேல் கோலிக்குண்டுகளை உருட்டினால் படுத்திருக்கும் நபரைச் சுற்றி வளைவாக அந்த கோலிக்குண்டுகள் உருளும் அல்லவா, அதுபோல!

ஒரு இடத்தில் மிக மிக அதிக அளவிலான நிறையோ ஆற்றலோ இருந்தால் சுற்றியுள்ள இடம் (அதாவது அண்டவெளி) முடிவே இல்லாமல் வளையும்; மாயாஜாலக்காரர் தன் மேல் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு மாயமாக மறைவதைப் போல, குலைந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய விண்மீன் போன்ற, மிகமிக அடர்த்தியான பொருளானது தன்னைச் சுற்றியுள்ள இடத்தை வளைத்துக்கொண்டு காணாமல் போகும்.

அதாவது, முடிவற்ற அடர்த்தியைக் கொண்டு மிக நுண்ணியதாகத் தனக்குள்ளே குறுகி, ‘ஒருமை’ (சிங்குலாரிட்டி) என்ற நிலையை அடையும். ஒருவகையில் பிரபஞ்ச முட்டுச்சந்து, இயற்பியல் விதிகளெல்லாம் அங்கே அர்த்தமிழந்துபோகும். இதுதான் கருந்துளை. இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கருந்துளைகள் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

விரிவடைந்துகொண்டிருக்கும் பிரபஞ்சத்தைப் படச் சுருள்போலப் பின்னோக்கி ஓட்டினால் மேற்கண்டதுபோல் ஒரு ‘ஒருமைநிலை’யை நான் காணலாம் என்று 1966-ல் தனது முனைவர் பட்ட ஆய்வில் ஹாக்கிங் கூறினார். இடமும் காலமும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் முடிபு.

சர்ச்சையில் விளைந்த திருப்புமுனை

ஹாக்கிங் ஏற்படுத்திய பிரத்யேகத் திருப்புமுனையானது இஸ்ரேலிய கோட்பாட்டு இயற்பியலாளர் ஜேக்கப் பெக்கன்ஸ்டைனுடன் ஹாக்கிங் போட்ட சண்டையின் விளைவுதான்! கருந்துளைகளின் வெப்பத்தைப் பற்றிய விவாதம்தான் அது. கருந்துளைகள் ‘வெப்ப ஆற்றல் சிதறல்’ (என்ட்ரோப்பி) என்ற பண்பைக் கொண்டிருப்பதாக பெக்கன்ஸ்டைன் கூறியதை மறுத்த ஹாக்கிங் ‘கருந்துளையிலிருந்து எதுவும் தப்ப முடியாது. ஆகவே, அதன் வெப்பநிலை பூஜ்ஜியமாகத்தான் இருக்க வேண்டும்’ என்றார்.

இந்த விவாதத்துக்கு விடை காண்பதற்காக ‘அணுவளவு கருந்துளை’களின் இயல்புகளை ஆராய்வதென ஹாக்கிங் முடிவுசெய்தார். இதற்காக, அணுவுலகின் புதிரான விதிகளின் தொகுப்பான குவாண்டம் கோட்பாட்டுடன் ஈர்ப்புவிசையை முடிச்சுப்போட வேண்டியிருந்தது. அதுவரை யாருமே வெற்றிகரமாக இந்த முடிச்சைப் போட்டிருக்கவில்லை. அவரது கணக்கீடுகள் ஒரு திசையைச் சுட்டிக்காட்டின. கருந்துளைகளிலிருந்து அணுத்துகள்களும் கதிர்வீச்சும் உமிழப்படுகின்றன என்பதுதான் அது. ஆக, பெக்கன்ஸ்டைன் சரி என்பதை ஹாக்கிங்கின் கண்டு பிடிப்பு உறுதிசெய்தது.

குவாண்டம் கோட்பாட்டின் இயல்பான அம்சமாக இருக்கும் ‘ஒழுங்கின்மை’ (ரேண்டம்னஸ்) குறித்து ஐன்ஸ்டைன் கூறியதை ஹாக்கிங் சற்று விரிவாக்கி இப்படிச் சொன்னார், “கடவுள் இந்தப் பிரபஞ்சத்துடன் பகடை உருட்டி மட்டும் விளையாடவில்லை, யாராலும் பகடைகளைப் பார்க்க முடியாத இடத்தில் சில சமயம் அவற்றை எறிகிறார்.”

ஹாக்கிங்கின் கருத்து குவாண்டம் இயற்பியலின் அஸ்திவாரத்தையே அசைப்பதாக இருக்கிறது என்று இயற்பியலாளர்கள் கருதினார்கள். குவாண்டம் கோட்பாட்டைப் பொறுத்தவரை, ‘தகவல்’ என்பது எப்போதும் காப்பாற்றப்படக் கூடியது, மீட்டெடுக்கப்படக் கூடியது; எந்தத் தகவலும் தொலைந்துபோவதே இல்லை.

2004-ல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் ஹாக்கிங்! கருந்துளைக்குள் சென்ற தகவல்களெல்லாம் கருந்துளை வெடிக்கும்போது மீண்டும் வெளிவந்துவிடும். அவர் இப்படி ஒப்புக்கொண்டாலும் இந்தத் ‘தகவல் முரண்’ பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. கருந்துளைக்குள் தகவல்கள் எப்படிப் போகின்றன, எப்படி வெளிவருகின்றன என்பதை இன்னும் அறிந்துகொள்ள முடியவில்லை என்கிறார்கள் இயற்பியலாளர்கள்.

1974-ல் ‘ஃபெல்லோ ஆஃப் ராயல் சொஸைட்டி’யாக ஹாக்கிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் மிகப் பழமையான அறிவியல் அமைப்பு ‘ராயல் சொஸைட்டி’. 1982-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதத்துக்கான ‘லூக்காஸியன் இருக்கை’க்காக ஹாக்கிங் நியமிக்கப்பட்டார். நியூட்டன் இருந்த பதவி அது. “இது நியூட்டனின் இருக்கை என்று சொல்வார்கள், ஆனால் நிலைமை நிச்சயம் இப்போது மாறிவிட்டது” என்று அடிக்கடி பொடிபோட்டுப் பேசுவதுண்டு ஹாக்கிங்.

தொழில்நுட்பக் குரல்

1974 வரை ஹாக்கிங்கால் பிறருடைய உதவியின்றி உணவு உண்ணவும் படுக்கையிலிருந்து எழவும் முடிந்தது. கையை ஊன்றி, தன் உடலை இழுத்துக்கொண்டு நகருவார். கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் தசை வலுவைக் காத்துக்கொள்வதற்காகச் சில ஆண்டுகள் இப்படிச் செய்தார். 1980-லிருந்து செவிலியரின் தயவில் வாழ வேண்டிவந்தது. 1985 வரை ஹாக்கிங்கால் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பேச முடிந்தது. ஒருமுறை, சுவிட்ஸசர்லாந்துக்குச் சென்றிருந்தபோது ஹாக்கிங்குக்கு ‘நுரையீரல் அழற்சி’ (நிமோனியா) ஏற்பட்டது. ‘உயிர்க்காப்புச் சாதன’த்தை (லைஃப் சப்போர்ட்) நிறுத்திவிடலாமா என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, ஹாக்கிங்கின் மனைவி ஜேன் மறுத்துவிட்டார். ஹாக்கிங்கின் உயிரைக் காப்பாற்று வதற்காக சுவாசக் குழாய் ஒன்றை மருத்துவர்கள் செருகினார்கள். ஹாக்கிங் பிழைத்துக்கொண்டார், அவரது குரலோ நிரந்தரமாக மௌனமானது.

ஆங்கில எழுத்துகள் அடங்கிய பலகையில் எழுத்துகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் அவரது தகவல்தொடர்பு கொஞ்ச காலம் நீடித்தது. வால்ட்டர் வோல்டோஸ் என்ற கணினி நிபுணர் ஹாக்கிங்கின் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டு, தான் எழுதிய ‘ஈக்குவலைஸர்’ என்ற கணினிநிரலைத் தந்து ஹாக்கிங்குக்கு உதவினார். இன்னும் அசைக்க முடிகிற வகையில் இருக்கும் விரல்களைக் கொண்டு ஒரு பொத்தானை அமுக்குவதன் மூலம் ஆங்கில எழுத்துக் களும், 2,500-க்கு மேற்பட்ட எழுத்துகளும் அடங்கிய அட்ட வணையை ஹாக்கிங்கால் பயன்படுத்த முடிந்தது.

ஒவ்வொரு சொல்லாக, ஒவ்வொரு எழுத்தாக வாக்கியங்களைக் கணினித் திரையில் ஹாக்கிங் உருவாக்குவார். கணினியிலிருந்து அந்த வாக்கியங்கள் ‘பேச்சு உருவாக் கிக் கருவி’க்கு அனுப்பப்பட்டுக் குரல் போன்று ஒலிக்கும். ஒட்டுமொத்த சாதனங்களும் ஹாக்கிங்கின் இயந்திர சக்கரநாற்காலியுடன் இணைக்கப்பட்டிருந்தன.

விரலை அசைக்கக்கூட முடியாத அளவுக்குப் பலவீன மாக இருந்தால் அகச்சிவப்புக்கதிர் மூலமாகக் கணினியுடன் அவரால் தொடர்புகொள்ள முடியும். வலது கன்னத்தைச் சுருக்குவதன் மூலமோ, கண்ணிமையை மூடித்திறப்பதன் மூலமோ இந்தத் தொழில்நுட்பத்தை இயக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி, பிறருடைய உதவியின்றி அவர் தனது அலுவலகக் கதவைத் திறக்கவும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் அவருக்கு வழிசெய்து தரப்பட்டது.

ஒரு நிமிடத்துக்கு 15 சொற்கள் வரை அவரால் உருவாக்க முடிந்தது. “குரலை இழக்கும் முன் பேசியதைவிட கணினி மூலம் ஓரளவு நன்றாகவே பேச முடிகிறது” என்றார் ஹாக்கிங். அவரது ஒரே புகார் என்னவென்றால் இங்கிலாந்துக்காரரான தனது செயற்கைக் குரலில் அமெரிக்க ஆங்கில வாடை அடித்ததுதான். அந்தப் பேச்சுக்கருவி கலிஃபோர்னியாவில் தயாரிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்!

‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலைத் தான் எழுத நேர்ந்ததற்குக் காரணம், இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய கண்டுபிடிப்புகள் குறித்த தனது பரவசத்தைத் தனது ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கிய பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான் என்றார் ஹாக்கிங். புத்தகத்தின் அசாதரணமான வெற்றி அவரைப் பணக்காரராகவும், உலகெங்கும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நாயகராகவும் ஆக்கியது.

‘எதைப் பற்றி நீங்கள் அதிகம் நினைத்துக்கொண்டிருப்பீர்கள்?’ என்று ‘நியூ சயன்டிஸ்ட்’ இதழ் ஒருமுறை ஹாக்கிங்கிடம் கேட்டது. “பெண்கள். அவர்கள்தான் எனக்குப் பெரிய புதிர்!” என்று பதிலளித்தார் ஹாக்கிங்.

நோபலை மிஞ்சிய கண்டுபிடிப்பு

1982-ல் ‘பிரிட்டிஷ் பேரரசின் கமாண்டர்’ என்ற கௌரவப் பதவி ஹாக்கிங்குக்கு அளிக்கப்பட்டது. 2012, லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்வின் நாயகர் ஹாக்கிங்தான். அவருக்கு அளிக்கப்படாத ஒரே ஒரு கௌரவம் நோபல் பரிசுதான். அதைப் பற்றியும் கனக்கச்சிதமாக ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “ஆராய்ந்து பார்த்து உறுதிசெய்யப்பட்ட கோட்பாட்டியல் பணிகளுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படு கிறது. நான் எந்த விஷயம் குறித்துக் கோட்பாடுகளை உருவாக்கினேனோ அதை ஆராய்ந்து பார்ப்பது மிக மிகக் கடினம்!”

மனித குலம் நீடிப்பதற்கு விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முக்கியம் என்றார் ஹாக்கிங். “உலகளாவிய அணுஆயுதப் போர், மரபணுத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட வைரஸ், இன்னும் நாம் கற்பனையே செய்திராத ஆபத்துகள் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவால் பூமியில் உயிர்வாழ்க்கைத் துடைத்தழிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று ஹாக்கிங் 2007-ல் கூறினார்.

கடவுளையும் மதத்தையும் பற்றி ஹாக்கிங் கூறியவை பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டன. பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் வெளியில் உள்ள, கடவுள் போன்ற எதன் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஹாக்கிங்.

‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “மனித மூளையைக் கணினியைப் போலவே நான் கருதுகிறேன். அதன் அங்கங்கள் எல்லாம் வேலையை நிறுத்திக்கொள்ளும் போது அதுவும் (மூளை) வேலையை நிறுத்திக்கொள்ளும். முற்றிலும் பழுதுபட்டு இயக்கம் நின்றுபோன கணினிக்கு சொர்க்கமோ அடுத்த பிறவியோ கிடையாது. சொர்க்கம், அடுத்த பிறவி என்ற கதையெல்லாம் இருட்டைப் பார்த்துப் பயப்படுபவர்களுடையது.’

தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கருந்துளை களையும் பிரபஞ்சப் பேரழிவையும் ஆராய்வதற்காகச் செலவிட்ட ஹாக்கிங்குக்கு இருட்டைப் பார்த்துப் பயம் கிடையாது. அவர் சொன்னார், “கருந்துளைகள் என்ற பெயரை அவற்றுக்கு வைத்திருப்பதற்குக் காரணம், தாங்கள் அழிக்கப்படுவதைக் குறித்தும் ஏதோ ஒன்றால் தாங்கள் விழுங்கப்படுவது குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் அச்சம்தான். கருந்துளைகளுக்குள் எறியப் படுவது குறித்து எனக்குப் பயமேதும் கிடையாது. அவற்றை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு வகையில் அவற்றின் எஜமானனாக நான் என்னை உணர்கிறேன்!”

- ‘தி நியூயார்க் டைம்ஸ்’,

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்