கோ
யில் சொத்துகளுக்கு அறநிலையத் துறை பொறுப்பு. ஆனால், கோயில்களே கலாச்சாரச் சந்தையின் வணிகப் பண்டமாகிவிட்டால், அந்தத் துறைதான் என்ன செய்ய முடியும்? கோயில்கள் இருக்கும். இருந்துகொண்டே அவை கலாச்சார நுகர்பொருளாக விலையாகிக்கொண்டும் இருக்கும். இந்த மாயச் சந்தையில் தானும் கலந்துகொள்வதைத் தவிர, அறநிலையத் துறைக்கு வேறு வழியில்லை. திலீப் குமாரின் ‘ரமாவும் உமாவும்’ என்ற குறுநாவலில் ஒரு பாத்திரம் ‘கடவுளைப் பிரார்த்திப்பதைவிடக் கையாள்வதுதான் சிரமமானது’ என்பார். அறநிலையத் துறை அந்த சிரமத்தையே அறியாது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, கோயிலுக்கு முன் கூடிய பெண்கள் வாய்விட்டுக் கதறினார்கள். தரையில் தலைவைத்து ஒரு பெண் அழுவது நாளேட்டில் படமாக வந்தது. கண்ணிமைப்பில் விண்மீன்களாகப் புவனங்களை வானத்தில் பூக்கச்செய்யும் மீனாட்சிக்கு எதுவும் நேராது. அந்தப் பெண்களுக்கும் இந்த நம்பிக்கை இல்லாமலிருக்காது. கடைகள் எரிந்து, பழமையான மண்டபமும் சேதமானது எவ்வளவு இழப்பு என்று கணக் கிடவும் தோன்றியிருக்காது. அவர்களுக்கு இவ்வளவு துயரம் பிறகு எப்படி வந்தது? ‘யாரை நான் குறை சொல்வேன்? எதைச் சொல்லிப் புலம்புவேன்? இதையுமா பார்ப்பதற்கு இருந்தேன்!’ என்ற வகையைச் சேர்ந்தது அவர்களின் துயரம்.
பொங்கிவந்த அத்துயரின் தூய்மைக்கு அறநிலை யத் துறை அஞ்ச வேண்டும். நிழலா, நிஜமா என்று நமக்குத் தெரியாத சூட்சுமமான மனவெளியில் மலைகளாக நிலைபெற்றிருக்கின்றன கோயில்கள். அவற்றை நிர்வகிக்கலாம். ஆள முடியாது. அதுவும் சட்டத்தைக் கொண்டு ஆள முடியாது!
கலாச்சாரச் சந்தை
மீனாட்சி கோயில் நிகழ்வு அறநிலையத் துறை தன்னை விரிவாகவே பரிசோதித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. கோயிலுக்குள் கடைகள் என்பது எப்போதா வது பிரச்சினையாகலாம். ஆனால், கலாச்சாரச் சந்தை யில் கோயில்களே நுகர்வுப் பண்டங்களாவது பண்பாட்டுச் சிக்கல். இறை நம்பிக்கையின்மை என்ற தளத்தில் நின்றுகொண்டு இதை நான் சொல்லவில்லை. அந்த நம்பிக்கைக்கு உள்ளேயே நின்றுகொண்டு ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு என்ன தெரி கிறதோ அதைச் சொல்கிறேன்.
அறநிலையத் துறை வழக்கமான அரசுத் துறைகளைப் போன்றதல்ல. அது ஒரு சட்டத்தின் வழியாகப் பிறந்தது. அரசின் கட்டுப்பாட்டைத் தவிர்த்து, அந்தத் துறைக்குத் தன்னாட்சி வழங்கும் நோக்கத்தோடு சட்டம் தொடங்குகிறது. துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோயில்களை அவற்றின் அறங்காவலர்கள் நிர்வகிக்கும் சுதந்திரம் உண்டு. கோயில் மரபின் பன்மைத்தன்மையை ஏற்பதுபோல் ஓர் ஏற்பாடும் இருக்கிறது. விரும்பும் கோயில்கள் சட்டத்தில் உள்ள வழக்கமான நிர்வாகமாக இல்லாமல், தங்களுக்குத் தனி நிர்வாகத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படி அந்தத் துறையும் அரசிடமிருந்து சற்றுத் தள்ளி சுதந்திரமாக நிற்கும். அதன் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களும் ஓரளவு சுதந்திரமாக இயங்கும். இதுதான் தெளிந்த நீரோடையின் அடியிலிருக்கும் மணல் ரேகையாக அந்தச் சட்டத்தில் தெரிவது. இப்போது அது கலங்கிய நீர்.
கோயில் நிர்வாகத்தில் மக்களுக்குப் பங்கு வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அறங்காவலர்கள் குழு. ஆனாலும், குழுவின் தீர்மானங்களை அந்தந்த மட்டத்து அதிகாரிகள் நிறுத்தி வைக்கலாம், மறுபரி சீலனை செய்யச் சொல்லலாம். திருத்திய தீர்மானங்கள் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணக்கமாக இல்லையானால், அதிகாரிகளே மீண்டும் உத்தரவு பிறப்பிக்கலாம். அந்த உத்தரவுகளே இறுதியானவை. இந்த நிலை மாற வேண்டும். அதேசமயம், கோயில் அறங்காவலர் குழுவானது உண்மையான ஜனநாயகத்தன்மையையும் பெற வேண்டும். அப்படிப் பெற்றால், அரசாங்கத்தின் தலையீட்டைத் தவிர்க்க உரிமையோடு கூறலாம். ஆனால், நம்முடைய கோயில்களின் அறங்காவலர்கள் குழு உண்மையாகவே ஜனநாயகத்தன்மையைப் பெற்றிருக்கின்றனவா? எல்லாச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், எல்லா வர்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அதில் உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா? 1959-ல் அச்சட்டம் உருவானதிலிருந்து இதுவரை 49 முறை திருத்தப்பட்டிருக்கிறது. சமூகத்தில் முழு ஜனநாயகம் இருந்தால்தானே கோயில்களிலும் முழு ஜனநாயகம் இருக்கும்?
ஆர்ப்பாட்டம் ஆலயமாகாது
சிதம்பரத்துக்கு அருகில் சிவபுரி என்ற சிவத்தலம். ஒரு முறை அந்திப் பூஜையின்போது அங்கு இருந்தேன். பூஜை முடிந்தது. சிவபுரி பத்மநாபன் என்ற நாதஸ்வரக் கலைஞர் ஒரு கீர்த்தனையை வாசித்துக்கொண்டு பிராகாரத்தில் மெல்ல வலம் வந்தார். நான் பின்னால் நடந்துகொண்டிருந்தேன். மின் விளக்குகள் ஒன்றிரண்டுதான். எண்ணெய் விளக்குகளும் அதிகமில்லை. காதுக்கு எட்டும் இசையும் கால் பாவும் கல்லும் கண்ணுக்குப்படும் விளக்கும் தங்களுக்கென்று உடம்பைப் பெற்றவை. மனம் மட்டுமே பற்றக்கூடியது தனக்கென்று ஒரு உடம்பைப் பெறாதது. இவை இரண்டு வகையும் அன்றைக்கு அதுவும் அதுவுமாக இல்லாமல் முக்கால் மணி நேரம் ஒன்றுக்குள் ஒன்றாக முயங்கிவிட்டன.
இந்த இசைவில் வந்த இசையைக் கண்ணால் பார்த்தேன். இசை உருவானது, பின்னர் அதை இறைவன் கேட்டார் என்பதாக அன்று இல்லை. இறைவன் காதுக்குக் கேட்டதால் அது இசையாகப் பிறந்தது. இந்த அனுபவம் பின்னர் எனக்கு வாய்க்கவில்லை. அப்போது வரை கோயில்கள் நமது கலாச்சார நுகர்பொருளாக மாறியிருக்கவில்லை. அந்தச் சிறிய கோயிலுக்கு இப்படி ஒரு மகத்தான இருப்பு. ஆலயங்கள் இன்று ஆர்ப்பாட்டமான கட்டிடங்களாகின்றன. அங்கே எதுவும் ஒன்றோடு ஒன்று பொருந்துவதில்லை.
நுகர்வோராகிறோமே ஏன்?
இன்ன பரிகாரத்துக்கு இன்ன தலம் என்று கோயில் கள் இருந்தன. இப்போது சர்வபரிகாரத்தலம் ஒன்று வந்துள்ளது. இன்னொன்றில், எந்த நாட்களில் வழிபாடுசெய்தால் இகத்திலும் பரத்திலும் என்ன கிடைக்கும் என்பதைக்கூட விவரமாக எழுதியிருப்பார்கள். கலாச்சாரச் சந்தையில் புண்ணியம் என்ற நம்பிக்கை ஒரு விளம்பரமாக மாறிக்கொள்வதும் அது கோயில்களை நுகர்வுப் பண்டங்களாக்குவதும் அவற்றுக்கே பகை. பிராகாரத்தில் துணை தெய்வங்கள் தங்களைப் புதிதாகக் கண்டுபிடித்துக்கொள்கின்றன. ஒரு பரிகாரப் பின்புலத்தைப் பொருத்திக்கொண்டு, தங்களுக்கு வேண்டிய நுகர்வாளரை அவை படைத்துக்கொள்ளும். மேம்பாட்டுப் பணி என்று கோயிலுக்குள் பெரும் கூரை வளைத்து மண்டபங்கள். அவற்றின் பகட்டே விளம்பரமாகிவிடுகிறது. திருவிழாக்களுக்கும் பெருவிழாக் களுக்கும் சுவரொட்டிகள் உண்டு. நான் அந்த விளம்பரங்களைச் சொல்லவில்லை. அந்த விழாக்களே விளம்பரங்களாக உருமாறி திருவிழாக்கள் மெய்மை இழக்கின்றன.
கோயில் சொத்துகளை நாம் மீட்டுக்கொண்டே இருக்கலாம். அவை மீண்டும் மீண்டும் தொலைந்துகொண்டுதான் இருக்கும். கோயிலுக்கு எதைச் செய்தாலும் அதுவே கலாச்சாரச் சந்தை ஒன்றை உருவாக்கும் விந்தை ஒன்று வினையாற்றுகிறது. அங்கே கோயில் தானாகவே நுகர்வுப்பொருளாகிறது. அற நிலையத் துறை இதற்கு அஞ்ச வேண்டும். அற நிலையத் துறை அஞ்ச வேண்டும் என்றால், அரசு அஞ்ச வேண்டும். அரசு அஞ்ச வேண்டும் என்றால், மக்கள் அஞ்ச வேண்டும். எல்லோரிடமுமே இந்தச் சந்தைக் கலாச்சார உணர்வு மும்முரமாக இயங்கும்போது, கோயில் நிலங்களையும் கடைகளையும் மீட்டு என்ன பயன்? கோயில்களையே நுகர்வுப் பண்டமாக்கி விலை கூறுகிறோமே!
- தங்க.ஜெயராமன், பேராசிரியர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago