மோடி பேரலை 2.0

By வ.ரங்காசாரி

ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி இருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளுமன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று வெற்றியைத் தந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2014 தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணியை வெற்றிபெறச் செய்ததோடு, தனக்குப் பக்கத்தில் அல்ல; தூரத்தில்கூட எந்த எதிர்க்கட்சியாலும் இன்று நிற்க முடியாது என்ற சூழலையும் உருவாக்கியிருக்கிறார்.

மோடி தன்னுடைய ஐந்தாண்டு பிரதமர் பயணத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களின் பட்டியல் மிக நீளமானது. அவற்றில் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு என்கிற இரு பொருளாதார நடவடிக்கைகளும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடியை உண்டாக்கின. விவசாயத் துறையின் வீழ்ச்சியும், உற்பத்தித் துறையின் சுணக்கமும், வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசின் முன் ஒரு பெரும் சவாலாக்கியிருந்தன. பெரிய வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்து, அவற்றில் பெரும்பாலானவற்றைச் சாத்தியப்படுத்த முடியாத எந்த ஒரு கட்சியும் இப்பேர்ப்பட்ட சூழலைக் கடந்து வெற்றிக் கோட்டைத் தொடுவது என்பது உள்ளபடி இமாலய சவால். ஆனால், மோடி அதைச் சாத்தியமாக்கியிருப்பதோடு, புதிய வரலாற்றையும் படைத்திருக்கிறார்.

பாஜக 2014-ல் பெற்ற வெற்றியைக் காட்டிலும், 2019-ல் பெற்றிருக்கும் வெற்றி பல வகைகளில் மிகப் பெரியது. 2014 தேர்தலில் மன்மோகன் சிங் அரசு மீதான கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்தது. ஊழல்களால் வெறுத்துப்போயிருந்த மக்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணியதோடு, அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆக, பாஜகவின் 2014 தேர்தல் வெற்றியில் முந்தைய அரசு மீதான அதிருப்திக்கும் முக்கியமான ஓரிடம் இருந்தது. ஆனால், 2019 வெற்றி அப்படிப்பட்டதல்ல. இது முழுக்க மோடி உருவாக்கிய இடம். நாடு முழுக்கவுள்ள எதிர்க்கட்சிகள் – ஓரணியில் அவை ஒன்றாகத் திரளாவிட்டாலும் – அவ்வளவு பேரின் எதிர்ப்பையும் எதிர்கொள்பவராக மோடி இருந்தார். தன் மீது குவிக்கப்பட்ட எதிர்ப்பையே தன்னுடைய மூலதனமாக அவர் உருமாற்றினார். பிரதமர் தேர்தலைக் கிட்டத்தட்ட அதிபர் தேர்தல்போல ஆக்கிய அவர், இந்தத் தேர்தலையே தனதாக்கிக்கொண்டிருக்கிறார்.

முழுக்கவுமே இந்தத் தேர்தல் மோடியினுடையதுதான். “எங்கள் கட்சியில் ஏழெட்டுப் பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் எட்டாவது இடத்தில் மோடி இருக்கிறார்” என்று பாஜக தலைவராக இருந்த சமயத்தில் சொன்னார் நிதின் கட்கரி. 2014-ல் அவர்கள் அத்தனை பேரையும் முந்திக்கொண்டு முன்னே வந்து பிரதமரானாலும், அப்போது மோடி பிரதமராவதில் அவர்கள் அத்தனை பேரின் பங்களிப்பும் கூடவே இருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் அவர்களில் சிலர் ஓரங்கட்டப்பட, ஏனையோர் செல்வாக்கு மங்கித் தேய்ந்திருக்க தனியொருவராகவே பிரச்சாரச் சுமைகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் மோடி. கட்சிக்குள் மட்டுமல்லாது, கட்சிக்கு வெளியிலும் தனக்கு இணையான மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவர் இன்று இல்லை என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டுகளில் இந்தியத் தேர்தலின் தன்மையே மாறியிருந்தது. ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் தேசியக் கவனம் பெற்றது. ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் பாஜக பெறும் வெற்றி – தோல்விகளும்கூட மோடி அரசின் மீதான தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. விளைவாக, ஒவ்வொரு மாநிலத் தேர்தலையுமே தீவிரமாகக் கருதி அணுகியது மோடியின் பாஜக. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரம்மாண்ட செல்வாக்கோடு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு அவரே எதிரே போரிட்டார்; அதன் விளைவையே நாடு தழுவிய பொதுத் தேர்தலில் அது இப்போது அறுவடைசெய்கிறது. 2014 தேர்தலைக் காட்டிலும் 2019 தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி எண்ணிக்கை மேலும் அகில இந்தியமயமாகியிருக்கிறது. நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸ், மாநிலங்களில் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேர்தல்கள்தோறும் புதிய மாநிலங்களில் அடியெடுத்துவைக்கும் பாஜகவை இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாக மட்டும் அல்லாமல், உலகின் மிகப் பெரிய கட்சியாகவும் உருமாற்றியிருக்கிறார் மோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்