பிரியங்கா தன்னுடைய அரசியல் வருகையை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் - இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸார் இந்த விஷயத்தைக் கொண்டாடலாம். அரசியலிலிருந்து விலகி இருந்தாலும், தேர்தல்களுக்குப் புதியவர் அல்ல பிரியங்கா. 2004, 2009, 2014 மூன்று பொதுத் தேர்தல்களிலுமே தன்னுடைய அன்னை சோனியா, அண்ணன் ராகுலுக்காக ராய்பரேலி, அமேதி தொகுதிகளில் பிரச்சாரங்களில் இறங்கியதோடு, அந்தத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டார். இம்முறை அவரைப் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்த முடிவெடுத்தார் ராகுல். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் இல்லாத சூழலில், சமீபத்திய ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 2009-ல் அது வென்ற 21 தொகுதிகளை இலக்காகக் கொண்டு பணியாற்றுவது; ஏனைய தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பைக் குலைப்பது என்ற இரட்டை இலக்கைக் கொண்டு அணுகுகிறது காங்கிரஸ்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், டெல்லி அரசியலில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் மாநிலமும்கூட. 2014 தேர்தலில் 282 இடங்களை வெல்ல பாஜகவுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 73 அக்கட்சி வென்றது. இம்முறை பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றால், உத்தர பிரதேசத்தில் அதற்கு காங்கிரஸ் அணை போட்டாக வேண்டும். ராகுல் நாடு முழுக்கச் செல்லும் நிலையில் உத்தர பிரதேசத்தை மட்டுமே கவனிக்க ஒருவர் அவருக்குத் தேவைப்பட்டார். அந்த இடத்துக்கே பிரியங்காவைத் தேர்ந்தெடுத்தார். ராகுலின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிரியங்கா.
இந்திராவை நினைவூட்டும் அணுகுமுறை
பிரமாண்ட பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்குப் பிரதான கவனம் அளிப்பதைத் தவிர்த்து மக்கள் மத்தியில் பயணிக்கும், அவர்களுடன் உரையாடும் பிரியங்காவின் பிரச்சார பாணி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, கிழக்கு உத்தர பிரதேசத்தின் 41 மக்களவைத் தொகுதிகளில் அவருடைய பிரச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று இப்போதே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
தன்னுடைய பாட்டி இந்திராவின் ஜாடை மட்டுமல்ல, அவருடைய அணுகுமுறையும் பிரியங்காவிடம் நிரம்பியிருக்கிறது. சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டிய தருணங்களில் மென்று விழுங்காமல் துணிச்சலாகச் சொல்கிறார்.
தேர்தல் பொறுப்பை ஏற்றவுடன் லக்னௌவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்களிடம் மிகவும் தெளிவாகப் பேசினார். “இப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் அற்புதங்களைச் சாதித்துவிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்; காங்கிரஸ் வெற்றிக்குக் கடுமையான உழைப்பைத் தவிர வேறு வழிகளே இல்லை” என்றார். அதேசமயம், பிரச்சாரக் களத்தில் தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதைத் துல்லியமாகக் காட்டினார். “மோடி தலைமையிலான ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் அடைந்துவரும் இன்னல்களிலிருந்து நாட்டைக் காக்க முதலில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அந்தப் பணிக்காகவே களத்தில் நான் நிற்கிறேன்” என்றவர், கண்ணியமாக அதேசமயம் கடுமையாகவே மோடியைப் பிரச்சாரத்தில் தாக்குகிறார்.
மக்களிடம் தன்னைக் கரைத்துக்கொள்ளும் தலைவர்
பிரியங்காவின் முக்கியமான நல்லியல்பே கட்சியின் சாதாரணத் தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரையில் அனைவரிடமும் எவ்வித பந்தாவும் இல்லாமல் பழகுவதுதான். மக்களுடைய பிரச்சினைகள் என்ன என்று நேரில் பேசி அறிந்துகொள்பவர், அதற்குத் தீர்வு எப்படி காணப்படும் என்பதை இதமான மொழியில் தெரிவிக்கிறார். “மோடி உங்களுடைய பேச்சில் அன்பு இல்லை, மக்களிடம் கனிவு இல்லை, மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்திருப்பதாகக்கூட நீங்கள் காட்டிக்கொள்வதில்லை” என்று ராகுல் ஒவ்வொரு மேடையிலும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலையில் அதற்கு மாறான அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதுபோல் இருக்கிறது பிரியங்காவின் அணுகுமுறை. மக்கள் மத்தியில் தன்னை இயல்பாக அவர் கரைத்துக்கொள்கிறார். எல்லையில் நடந்த சண்டையில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தவர் அதில் ஊடகங்களின் விளம்பர வெளிச்சம் வராமல் தவிர்த்தார். வறட்சி, கடன் சுமையால் வாடும் விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்க்க, கட்சி நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையூட்டினார். எல்லாக் கட்சி அரசியல் தலைவர்களோடும் நட்பைப் பராமரிக்க விரும்புகிறார்.
‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர ஆசாத் என்கிற ராவணுடனான சந்திப்பு ஓர் உதாரணம். அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசியல் ஆதாயம் பார்க்காமல் மனிதாபிமானத்தோடு சென்று பார்த்தார் பிரியங்கா. இதனால், மாயாவதியின் கண்டனத்தைக்கூட அவர் பெற நேரிட்டது. ஆனால், கட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட அவரது இந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் பேசுபொருளானது.
எதிர்காலக் கணக்குகள்
பிரியங்கா இம்முறையே தேர்தல் போட்டிக்குத் தயாராக இருந்ததாகவும், அப்படி வாராணசியில் அவர் போட்டியிடும் சூழல் ஏற்படின் மூன்று சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - அவருடைய முழு கவனமும் வாராணசி நோக்கி திருப்ப வேண்டியிருக்கும், ஏனைய தொகுதிகளில் காங்கிரஸ் வாய்ப்புகளும் நோக்கமும் பாதிக்கப்படும், ஒருவேளை தோற்றால் அவருடைய அரசியல் வாழ்வைத் தோல்வியிலிருந்தே தொடங்கியாக வேண்டியிருக்கும் என்ற நிலையில்தான் காங்கிரஸ் அத்திட்டத்தைக் கைவிட்டது என்று சொல்கிறார்கள்.
ராகுல் இரு தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் அமேதியில் அவர் ராஜினாமா செய்வார் - அந்த இடத்தில் பிரியங்கா போட்டியிடுவார். எப்படியும் உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தாமல் காங்கிரஸ் பலம் பெற முடியாது; அந்தப் பணியை பிரியங்காவே முன்னெடுப்பார் என்கிறார்கள். 2014 தேர்தலில் அமித் ஷா எப்படி உத்தர பிரதேசத்தைக் களமாகக் கொண்டு பாஜகவை டெல்லி நோக்கி நகர்த்தினாரோ அப்படியேதான் 2024-ல் தனித்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸின் கனவுக்கு உத்தர பிரதேச அடித்தளம் கொடுக்கும் பணியை பிரியங்கா ஏற்றிருக்கிறார்.
பிரியங்கா மக்கள் மத்தியில் உண்டாக்கும் பேச்சுகள் ஓட்டுகளாக காங்கிரஸுக்குத் திரும்புகிறதோ இல்லையோ; உத்தர பிரதேச பாஜகவைப் பதற்றத்தில் தள்ளுவதில் அவர் வெற்றி பெறுகிறார். பிரியங்காவைப் பற்றி பேசக் கூடாது என்பது பாஜகவின் வியூகங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், பேசியாகும் நிர்ப்பந்தம் அதற்கு உருவாகியிருக்கிறது. பாம்பு பிடாரர்களுடன் அவர் நடத்திய உரையாடல் காணொலி ஓர் உதாரணம்.
விஸ்வரூபம் எடுக்கும் பிரியங்காவின் அவதாரம்
பாம்புப் பிடாரர்களிடம் பேசிய அவர், கூடையிலிருந்து அவர்கள் வைத்திருந்த பாம்பை அச்சமின்றித் தொட்டுப் பார்த்தார். கையில் எடுத்தார். அச்சமின்றி அனாயசமாக அவர் பாம்புகளைக் கையாண்டது காணொலியாக நாடு முழுக்கப் பரவியபோது பிரதமர் மோடியே அதுகுறித்துப் பேச வேண்டியதானது. “பாம்பாட்டிகளை வெளிநாட்டுக்காரர்களுக்குக் காட்டி மகிழ்ந்தவர் நேரு; அவருடைய நான்காவது தலைமுறை மீண்டும் அத்தகைய பெருமைகளையே நாட்டுக்கு அளிக்கப் பார்க்கிறது. இப்போது மவுஸ்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றுவிட்ட இந்திய இளைஞர்கள்தான் உலகுக்கு வியப்பளித்துவருகின்றனர்” என்றார். பிரியங்காவுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே ஏராளமான பிரபலங்களின் பட்டாளங்களையும் உத்தர பிரதேசத்துக்கு அனுப்பிவருகிறது பாஜக. ராகுலை எதிர்த்து அமேதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி, ராகுலுக்கு இணையாக இப்போது பிரியங்காவையும் தாக்கிவருகிறார்.
இந்தத் தேர்தலில் பிரியங்கா ஏற்படுத்தவிருக்கும் விளைவு எப்படியிருக்கும் என்பதைத் தேர்தல் முடிவுக்கு முன் சொல்ல முடியாது. ஆனால், காங்கிரஸுக்கு மேலும் ஒரு செல்வாக்குள்ள தலைவர் கிடைத்துவிட்டார் என்பதும், அடுத்தடுத்த தேர்தல்களில் பிரியங்கா பெரும் விஸ்வரூபம் எடுப்பார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago