பேரிடரை எதிர்கொள்ள நவீன் பட்நாயக் காட்டும் வழி!

By ச.கார்த்திகேயன்

வறட்சி, வெள்ளம், புயல் என்று மாறி மாறி அலைக்கழியும் மாநிலம் ஒடிஷா. வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் பெரும்பாலும் கரையேறும் மாநிலம். இருபதாண்டுகளுக்கு முன்பு 1999-ல் ஒரு தடவை அதிதீவிரப் புயல் தாக்கி, ஒடிஷா மாநிலமே முடங்கியது. புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை கடந்த 2004-ல் அமலுக்கு வந்ததால், 1999-ல் ஒடிஷாவைத் தாக்கிய புயலுக்கு அப்போது பெயர் வைக்கவில்லை. அதைத் தொடர்ந்து 2013-ல் பாய்லின், 2018-ல் தயே மற்றும் தித்லி ஆகிய புயல்கள் ஒடிஷாவைத் தாக்கியுள்ளன.

தித்லி மற்றும் தயே புயலால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அதேநேரத்தில் 9 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாகவும் அம்மாநிலம் அறிவித்தது. அந்த 9 மாவட்டங்களில் உள்ள 30 ஒன்றியங்களில் வழக்கமாகப் பெய்யும் மழையில் 19-39%, 5 ஒன்றியங்களில் 39-59% மழை மட்டுமே பெய்துள்ளது. இதுதான் ஒடிஷாவின் தனித்த நிலவமைப்பு. வறட்சி ஒருபக்கம், புயலும் மழையும் மறுபக்கம்.

482 கிமீ நீளக் கடற்கரையைக் கொண்டிருக்கும் ஒடிஷா, அதன் காரணமாகவே எப்போதும் பேரிடரைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்திய மாநிலங்களிலேயே புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்படும் மாநிலம் ஒடிஷாதான். இயற்கைச் சூழலே, அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு பெருந்தடையாக முன்னே நிற்கிறது.

உயிர்க்காவலர் நவீன்

19 ஆண்டுகளாக ஒடிஷாவின் முதல்வராகப் பதவிவகிக்கிறார் நவீன் பட்நாயக். அரசியலில் அவர் எதிர்கொண்ட சவால்களைக் காட்டிலும் இயற்கையோடான மல்லுக்கட்டல்கள்தான் அதிகம். 1999 அக்டோபர் 29 அன்று அதிதீவிரப் புயல் ஒன்று மணிக்கு 260 கிமீ வேகத்தில் ஒடிஷாவைத் தாக்கியது. பேரிடர் மேலாண்மை என்ற வார்த்தைகளே அறிமுகமாகாத நாட்கள் அவை. அதிதீவிரப் புயலின் தாக்கம் எப்படி இருக்கும், அதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஒடிஷா அரசிடம் எந்தத் திட்டமோ அனுபவமோ இல்லை. மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்கும் வகையில் போதுமான நிவாரண மையங்கள் அரசிடம் இல்லை. வெறும் 21 நிவாரண மையங்கள் மட்டுமே அப்போது இருந்தன. அந்தப் புயலின் கோரதாண்டவத்தால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர். ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சின்னாபின்னமாகியது. ஏராளமான கிராமங்கள் சுவடு தெரியாமல் அழிந்துபோயின. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கட்டிட இடிபாடுகள், வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் சிக்கிக்கொண்டனர். இந்தியாவில் நடந்த தேசியப் பேரிடர்களிலேயே மோசமானது அது.

1999 புயலிலிருந்து ஒடிஷா பாடம் கற்றுக்கொண்டது. இந்தியாவிலேயே முதல் முறையாகத் தன்னாட்சி அமைப்பாக மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. கடந்த 2013-ல் பாய்லின் புயலை எதிர்கொண்ட அம்மாநிலம், அந்த ஆணையத்தின் செயல்பாடுகளால், புயல் பாதிப்பால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை 44 ஆகக் குறைத்தது. இயற்கையின் எந்தத் தாக்குதலையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறது ஒடிஷா.

புயலை எதிர்கொண்ட விதம்

ஃபானி புயல் ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 29-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவித்தது.

30-ம் தேதி மாலை 4.30 மணியளவில் பூரி நகரம் அருகே 3-ம் தேதி அதிதீவிரப் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதிசெய்து அறிவிக்கப்பட்டது. அப்போதே, காற்றின் வேகம் ஏறத்தாழ 205 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

உடனே, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை முடுக்கிவிட்டார். போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளைத் தொடங்க உத்தரவிட்டார். முதலில் மக்களுக்குத் தகவலைத் தெரிவித்து, அவர்களை வெளியேற்றும் பணிகளில் ஆணையம் இறங்கியது. அப்பணியில் 1 லட்சம் அரசு அலுவலர்கள், 45 ஆயிரம் தன்னார்வலர்கள்,

2 ஆயிரம் அவசரகாலப் பணியாளர்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழு, மாநில அதிவிரைவுப் படை, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தினர், இளைஞர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் என அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து 7 ஆயிரம் சமையல்கூடங்கள், 9 ஆயிரம் நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டன.

முன்னேற்பாட்டுக்கு முன்னுதாரணம்

கடலோர மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் பேரை 24 மணி நேரத்தில் ஆணையம் வெளியேற்றியது. அதிகபட்சமாக, கன்ஜம் பகுதியிலிருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் பேர், பூரி பகுதியிலிருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றியிருப்பது இந்தியப் பேரிடர் வரலாற்றில் இதுவே முதல் முறை.

வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே மே 3 காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பூரி அருகே புயல் கரையைக் கடந்தது. கடலோர மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் சேவையும் தகவல் தொடர்பும் முற்றிலும் முடங்கியது. ஒடிஷா மாநில வரலாற்றிலேயே இதுபோன்ற ஆக்ரோஷமான அதிதீவிரப் புயலை எதிர்கொண்டதில்லை. 16 பேர் மட்டுமே புயல் பாதிப்பில் உயிரிழந்திருக்கிறார்கள்.

புயலின் தாக்குதலில் பொருளாதாரச் சேதங்கள் பல கோடிகள் இருந்தாலும் மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணர் நவீன் பட்நாயக். இருபதாண்டுகளுக்கு முன்பு வீசிய ஒரு புயலிலிருந்து ஒடிஷா பாடம் கற்றுக்கொண்டது. அம்மாநிலத்தை வழிநடத்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவரும் இருக்கிறார். தமிழகமும் சமீப ஆண்டுகளில் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களுக்கு ஆளாகிவருகிறது. ஒடிஷா நமக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

தொடர்புக்கு: karthikeyan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்