அது 1968. நான் அரசுக் கல்லூரி மாணவன். திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக் கல்லூரி மாணவர் விடுதி அருகில் மாணவர்கள் சைக்கிள் செயினால் தாக்கப்படுகிறார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது தமிழக அரசு. இதற்கிடையிலேயே சட்டக் கல்லூரி விடுதியில் ஒரு பயங்கரம் அரங்கேறுகிறது. போக்குவரத்து ஓட்டுனர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து தூக்கியெறியப்பட்டு இறந்துவிடுகிறார். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சட்டக் கல்லூரி விடுதியைச் சூழ்ந்து நிற்கிறார்கள். காவல் துறை திகைத்து நிற்கும் அந்தத் தருணத்தில் ஒரு தொழிலாளர் தலைவர் சூழலை அப்படியே மாற்றியமைக்கிறார்.
விடுதி வாயிலில் தரையில் தலை வைத்துப் படுக்கும் அந்தத் தலைவர் சொல்கிறார், “நீங்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்க நினைத்தால் என் பிணத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.” தொழிலாளர் கூட்டம் அப்படியே கலைந்து செல்கிறது. அதே காலகட்டத்தில்தான் நாளிதழ்களில் அவருடைய அறிக்கை ஒன்றையும் படித்தேன். தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒற்றுமையை வலியுறுத்திய அறிக்கை அது. தொழிலாளர் தலைவரான
வி.பி.சிந்தன் ஒரு மாணவனான எனக்குள் இப்படித்தான் வந்து அமர்ந்தார். மாணவர்கள் - போக்குவரத்துத் தொழிலாளர்கள் விவகாரத்தைக் கையாண்ட விதத்துக்காக அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் மனம் திறந்து வி.பி.சிந்தனைப் பாராட்டினார்.
யார் இந்த சிந்தன்?
நான் இணைந்து செயலாற்றிய மாணவர் சோஷலிஸ அமைப்பு நடத்திய கூட்டத்துக்கு ஒருநாள் வந்திருந்தார் சிந்தன். தும்பை நிற வேட்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்தபடி குறித்த நேரத்தில் கூட்டத்துக்கு வந்த சிந்தன் ஆற்றிய உரையும் அவருடைய நட்பார்த்த அணுகுமுறையும்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஒரு பெருமதிப்பையும் ஈர்ப்பையும் என்னிடம் உருவாக்கின. உள்ளூர் அரசியலில் மட்டும் ஊறித் திளைத்துக்கொண்டிருந்த எனக்கு உலக அரசியலைத் தொட்டுக்காட்டியவரும் அவர்தான். பாரீஸ் நகர மாணவர்கள் அரசியல் மாற்றத்துக்குப் போராடுவதையும், அமெரிக்க மாணவர்கள் வியட்நாம் விடுதலைக்குக் குரல் எழுப்புவதையும் சுட்டிக்காட்டிய சிந்தன், ஒரு போராட்டம் எத்தகைய நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று மையப்படுத்திச் சொன்னார்: “நோக்கமில்லாத போராட்டம் வீண்.”
அன்று முதலாக, தோழர் வி.பி.சி. நடத்தும் வாயிற்கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள், மே தின ஊர்வலங்கள் எல்லாவற்றிலும் பங்குகொள்ள ஆரம்பித்தேன். விரைவில், சோஷலிஸ்ட் மாணவர் அமைப்பைக் கலைத்துவிட்டு இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம். “மாணவர் சங்க வேலைகள் மட்டும் போதாது; தொழிற்சங்க இயக்கத்துடனும் சேர்ந்து வேலைபார்க்க வேண்டும்” என்று அடிக்கடி வலியுறுத்துவார் அவர்.
இந்த உலகம் இயங்க மகத்தான பங்களிக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பரிவு, அவர்களுடைய மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்பின் வாயிலாகவே தன்னுடைய சமூக வாழ்வை வடிவமைத்துக்கொண்டவர் சிந்தன். மிக உறுதியான தலைவர். ஆனால், தொழிலாளர்களுடனான உறவிலோ மிகக் கனிவாக வெளிப்படுவார். எந்த ஊரிலிருந்து, எந்த மட்டத்திலிருந்து வரும் ஒரு தொழிலாளியிடமும் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்க அவருக்கு நான்கு வார்த்தைகள் இருக்கும். அவர்களுடைய இன்ப - துன்பம் அவரைப் பாதிக்கும். எந்த அடக்குமுறைக்கும் அயராத அந்த மனிதர், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்க உதவிய ஓட்டுநர் ராகவன் இறந்த நாளில் குலுங்கிக் குலுங்கி அழுதது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
அடக்குமுறைக் காலகட்டத்தின் துணிச்சல் முகம்
தொழிலாளர்கள் குரல்கள் ஓங்கி ஒலித்த காலம் அது. சென்னையில் எண்ணூர் ‘அசோக் லேலண்ட்’ தொடங்கி பெருங்களத்தூர் ‘ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ்’ வரை போராட்டங்கள் வெடித்தவண்ணம் இருந்தன. கருணாநிதி ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கிறார். ஆவடி ஆடை நிறுவனத் தொழிலாளர் குடியிருப்பில் காவல் துறையின் அத்துமீறல். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற தலைவர்களை - வி.பி.சி. உட்பட – மூர்க்கமாகத் தாக்குகிறது காவல் துறை. அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர்கள் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்றனர். விசாரணையே இல்லாமல் ஒருவரைச் சிறையிலடைக்க வழிவகை செய்யும் சட்டம் அது. இப்படியெல்லாம் அடக்குமுறை கையாளப்பட்ட காலகட்டத்தில்தான் துடிப்பும் போர்க்குணமும் மிக்க தலைவராகச் செயல்பட்டுவந்தார் சிந்தன்.
துணிச்சலால் மட்டும் அல்ல; தன்னுடைய எளிமையால், நேர்மையால், அன்பால் முன்னுதாரணராகத் திகழ்ந்தவர் சிந்தன். பல தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்தபோதும், அரசுப் பேருந்துகளிலேயே அவர் தொடர்ந்து பயணித்தார். எல்லோரும் அணுகத்தக்கராகவும் எல்லோர் மத்தியிலும் எப்போதும் புழங்குபவராகவும் இருந்தார்.
ஒருமுறை மாதவரம் செல்ல பேருந்தில் ஏறிய அவரை மூலக்கடை அருகில் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர். சில குண்டர்கள் சவுக்குக் கட்டையால் அவரது மண்டையில் அடித்தனர். மயக்கமுற்று நினைவு திரும்பாத சிந்தன், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இப்படியெல்லாம் ஆபத்துகளை எதிர்கொண்டாலும் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டவர் இல்லை.
பேசு... அடக்குமுறை வழியல்ல!
1974. அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்கின்றன. காங்கிரஸ் அரசு கடுமையான தாக்குதலை ஏவுகிறது. ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரையும் கைதுசெய்யும்படியான அரசின் உத்தரவைக் காவல் துறை கையில் எடுத்துக்கொண்டு வீதிகளில் இறங்க, தொழிற்சங்க நிர்வாகிகளோ தலைமறைவாகிவிட்டார்கள். சிந்தன் நேரடியாக ரயில்வே சங்கத் தலைவராக இல்லாதபோதும், சென்னையில் அவர் வெளியே இருக்கும்பட்சத்தில் ரயில்வே தொழிலாளர் போராட்டம் வெற்றியடைவதைத் தவிர்ப்பது இயலாத காரியம் என்பதால் அவரையும் கைதுசெய்ய வலை வீசுகிறது காவல் துறை.
அடக்குமுறைகளைக் கொண்டு எல்லாவற்றையும் வென்றுவிட முடியாது என்று காங்கிரஸ் அரசு உணர ஒரு காரணமாக இருந்தார் சிந்தன். தொழிலாளர்கள் கோரிக்கைகள் சிலவற்றையேனும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட பின்னரே ரயில் சக்கரங்கள் சுழன்றன என்பது வரலாறு.
1975-ல் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மக்களுடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதுடன், ஏராளமான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டது. நாளிதழ்கள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மறுபடியும் சிந்தன் தலைமறைவு வாழ்க்கைக்குள் சென்றார். 1976 பிப்ரவரியில் நிலைமை மேலும் மோசமடைந்தது. தமிழ்நாட்டில் பல்வேறுபட்ட ஜனநாயக சக்திகளுக்கு இடமளித்ததன் விளைவாக, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மேலும் சூழல் கடுமையானது. கொடுமையான அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஜனநாயகத்துக்காகப் போரிட்டுக்கொண்டிருந்தவர்களில் சிந்தனும் ஒருவராக இருந்தார்.
மறக்க முடியாத டிவிஎஸ் போராட்டம்
தொழிலாளர்களே சுதந்திரமாகத் தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை எப்போதுமே டிவிஎஸ் நிறுவனம் மறுத்தே வந்திருக்கிறது. 1977-ல் நெருக்கடிநிலை முடிவுக்கு வந்த நிலையில் சிந்தனும் தலைமறைவு வாழ்க்கையைவிட்டு வெளியே வந்தார். தொழிலாளர்களால் ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் டிவிஎஸ் நிறுவனத் தொழிலாளர்கள் மத்தியில் சிவப்புச் சிந்தனைகள் பரவக் காரணமாக இருந்தார்.
இதன் விளைவாக, டிவிஎஸ் நிர்வாகத்தின் எதிர்வினைகளைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்னை பாடியிலுள்ள தொழிற்சாலைகள் ‘லாக் அவுட்’ செய்யப்பட்டன. தொழிலாளர்கள் அப்போது குண்டர்களையும்கூட எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விளைவாக, நிறுவனத்துக்கும் பாதுகாப்பு தேவைப்பட்டது. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், “தொழிலாளர் விரோத நிறுவனங்களைப் பாதுகாக்கக் காவல் துறையை அனுப்ப மாட்டேன்” என்று கூறினார். பிரதமர் மொரார்ஜி தேசாய் மத்தியக் காவல் படைப் பிரிவொன்றை டிவிஎஸ் நிறுவனங்களின் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பும் நிலை ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், டிவிஎஸ் நிறுவனத்தால் சுமார் 400 தொழிலாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சிந்தன் தலைமையிலிருந்த சங்கத்தின் அங்கீகாரமே ரத்துசெய்யப்பட்டது. மே தினத்தன்று நிறுவன வாசலில் செங்கொடி ஏற்றப்பட்ட கொடிக்கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மீண்டும் செங்கொடியை ஏற்ற முடியாத வகையில் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டது; நீதிமன்றத் தடையுத்தரவை சங்கம் வாதாடி உடைத்து வென்ற பிறகு புதிதாக நிறுவப்பட்ட இரும்புக் கொடிக்கம்பமானது கேஸ் கட்டர்கள் மூலம் இரவோடு இரவாக மறுபடியும் வெட்டப்பட்டது. உழைப்பாளர் நாள் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டுத் திரும்பிவரும் வழியில் குண்டர்கள் ‘ஆசிட் பல்பு’கள் கொண்டு தாக்கினர்.
இவ்வளவுக்கு இடையிலும் தொழிலாளர்களோடு உறுதிபட நின்றார் சிந்தன். உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையிலிருந்த நாட்களிலும்கூட டிவிஎஸ் தொழிலாளர்களைப் பற்றி விவரங்கள் கேட்டுக் கடிதங்கள் எழுத மறந்ததில்லை. அவரைப் பொருத்த அளவில் எளியோர் பக்கம் நிற்பதே அறம். அதற்காக எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்து உறுதிபட நின்றார்.
சட்டமன்றப் பிரவேசம்
1984 வரை தொழிற்சங்கத் தலைவராக மட்டும் அறியப்பட்டுவந்த சிந்தன் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாடறியும் சட்டமன்ற உறுப்பினராகவும் மிளிர்ந்தார். சட்டமன்ற விவாதங்களுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அசாத்தியமானது. ஒவ்வொரு துறை சார்ந்தும் ஆழ்ந்து வாசிப்பார்; அந்தந்தத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை கலப்பார். சட்டம் தொடர்பில் என்னிடமே நிறைய ஆலோசனை கலந்திருக்கிறார். தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கும், தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தடுப்பதற்கும் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான தன்னுடைய வாதங்களுக்கேற்ற குறிப்புகளை அனுப்பும்படி கேட்டு எழுதுவார்.
தன் சட்டமன்றப் பணிகளின் வாயிலாகத் தொழிலாளர் உரிமைகளை நிலைநிறுத்த முற்பட்ட சிந்தன் அடுத்த சில ஆண்டுகளிலேயே காலமானது கொடுமைதான். ரஷ்யாவில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற சிந்தன் அங்கேயே தனது கடைசி மூச்சை நிறுத்திக்கொள்வார் என்று யாருமே நம்பவில்லை. ‘விஷத்தில் பூத்த மலர்’ என்று கம்யூனிஸ்ட்டுகளைப் பெருமையாகக் குறிப்பிடுவார் சிந்தன். 8.5.1987 அன்று அந்த மலர்களிலேயே பெரிய மலர் ஒன்று இதழ்களை உதிர்த்துக்கொண்டுவிட்டது.
தமிழே தெரியாதவராகத் தமிழகத்தின் இடதுசாரி இயக்கத்தை வளர்க்க அனுப்பிவைக்கப்பட்டு, தமிழகத்தில் கால் ஊன்றியவர் சிந்தன். ஆனால், அவர் காலத்தில் தமிழில் சிறப்பாகப் பேசக்கூடிய நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் உருவெடுத்திருந்தார். மலையாளம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என்று அதற்கு முன் அவர் அறிந்திருந்த மூன்று மொழிகளுக்கு இணையாகத் தமிழிலும் உயர்ந்து நின்றார். தொழிலாளர் நலன், தொழிற்சங்க அரசியல்தான் சிந்தனுடைய முதன்மைப் பங்களிப்புகள் என்றாலும், எல்லாத் துறைகள் சார்ந்தும் தனித்த பார்வைகள் கொண்டிருந்தவர். அவரால் தாக்கம் பெற்ற இளைய தலைமுறையினர் பல்வேறு துறைகளிலும் பிற்காலத்தில் பங்களிக்கத் தொடங்கியபோது அவர் முன்னிறுத்திய விழுமியங்கள் காலம் தாண்டி நீண்டன.
மறைந்த சிந்தன் குடும்பத்தில் இன்று யாருமே உயிருடன் இல்லை. ஆனால், அவர் பெயர் சொல்லுமளவுக்குப் பல இளம் தலைவர்களை அவர் உருவாக்கிவிட்டுச் சென்றிருப்பதுடன், என்றென்றும் வழிகாட்டும் ஒரு வாழ்க்கையையும் அவர் வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
சொல், செயல், வாழ்க்கை மூன்றுக்கும் வேறுபாடின்றிச் செயல்பட்டவரின் பெயரைத் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் இன்றும் தங்களது குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வோர் இருக்கிறார்கள் என்றால், அதற்கு சிந்தன் வாழ்வின் மகத்துவம்தான் காரணம்!
- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago