ஆபத்தானவையா விமானப் பயணங்கள்?

By ஜூரி

உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கியதில் விமானப் போக்குவரத்துக்கும் ஒரு இடம் உண்டு. கப்பலில் புறப்பட்டு மாதக்கணக்கில் பயணித்துப் போய்ச்சேர்ந்த இடங்களுக்கெல்லாம் இப்போது சில மணி நேரத்துக்குள்ளும் உலகின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கே அதிகபட்சம் ஓரிரு நாட்களிலும் சென்றுவிட முடிகிறது.

விமானங்கள் பெரியதாகவும் வசதிகள் மிக்கதாகவும் நவீன வடிவங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போதே நமக்கும் போக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அதேசமயம் பஸ்கள், ரயில்கள்போல தரையில் அல்லாமல், கப்பல்கள்போல கடலிலும் அல்லாமல் ஆகாயத்தில் போவதாலேயே வான் பயணம் என்றால் பெரும்பாலானோருக்கு அச்சமும் ஏற்படுகிறது.

சமீபத்தில், மார்ச் 10 எதியோப்பிய விமான விபத்தில் 157 பேர், ஏப்ரல் 11 அல்ஜியர்ஸ் விமான விபத்தில் 257 பேர், மே 8 ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் இறந்ததும், ‘போயிங் 737’ ரக விமானம் அடுத்தடுத்து இரண்டு விபத்துகளில் சிக்கியதும் உலகெங்கும் இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 30 நாடுகள் ‘போயிங் 737’ ரக விமானங்களையே போக்குவரத்தில் ஈடுபடுத்தாமல் நிறுத்திவைத்துள்ளன. ஆக, விமானப் பயணம் எந்த அளவுக்கு வசதிகள் நிரம்பியதோ அந்த அளவுக்கு ஆபத்தும் நிரம்பியது என்ற எண்ணம் வலு பெறுகிறது. ஆனால், இந்த அச்சம் எந்த அளவுக்கு நியாயமானது?

விமான விபத்துகள் அரிதானவை

உண்மையில், ஏனைய எந்த வாகனத்துடனும் ஒப்பிடுகையில் விமானங்களுக்கு ஏற்படும் விபத்துகளே எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு என்று புள்ளிவிவரங்களுடன் கூறுகிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இடர் எதிர்கொள்ளல் நிபுணர் டேவிட் ரோபிக். உதாரணமாக, 5,000 கார் நடைகளில் ஒன்று விபத்தைச் சந்திக்கிறது என்றால், 1,10,000 விமான நடைகளில் ஒன்றுக்கே விபத்து ஏற்படுகிறது. இங்கே கவனிக்க வேண்டியது எல்லா விபத்துகளுமே உயிர் பறிக்கும் விபத்துகள் அல்ல.

உலகிலேயே விமானத்தை அதிகம் பயன்படுத்தும் பயணிகள் உள்ள நாடு அமெரிக்கா. அங்கேயே 1982 முதல் 2010 வரையில் விமான விபத்துகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,288. ஆண்டுக்கு சராசரியாக 110 பேர் உயிரிழக்கிறார்கள். 1950-களிலும் 1960-களிலும் 2 லட்சம் விமான நடைகளில் ஒன்று விபத்தில் சிக்கியது. இப்போது அந்த அளவு 20 லட்சம் நடைகளில் ஒன்று என்பதாக வெகுவாகக் குறைந்துவிட்டது. விபத்துகளில் விமானம் சிக்கும் வாய்ப்புகளைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். விபத்துகள் நடந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

அச்சங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன

விமானத் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி என்பதே விமானப் பயணங்கள் மீதான அச்சங்களுக்குப் பதில் அளிப்பதும், அச்சங்களிலிருந்து மக்களை விடுவிப்பதும் என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் சங்கதி. பயணிகளுக்கு என்னென்ன சந்தேகங்களெல்லாம் வருமோ, எந்தெந்த வகைகளிலெல்லாம் விபத்துகள் நேரிட சாத்தியங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத்தக்க விமானங்களை வடிவமைப்பதையே விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் இலக்காகக் கொண்டிருக்கின்றன. உள்ளபடி, பலவிதங்களிலும் கடுமையான சோதனைகளை எதிர்கொண்டே விமானங்கள் உருவாகின்றன.

பெருமழை பெய்து, விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளமெனத் தண்ணீர் தேங்கினால் என்னவாகும்? ஒரு டன் எடையுள்ள தண்ணீரை விமானத்தின் எதிரில் வேகமாகப் பீய்ச்சுவார்கள்! கடுமையான வெப்பம் அல்லது கடுமையான குளிர் இரண்டு பருவநிலைக்குள்ளும் விமானம் நுழைந்தால் என்னவாகும்? அத்தகைய தட்பவெப்பநிலையைச் செயற்கையாக உருவாக்கி சோதனைக்குள்ளாக்குவார்கள்.

விமானத்தின் இறக்கை வளைந்துவிட்டால் என்னவாகும்? வெவ்வேறு கோணங்களில் வளைப்பார்கள்; 90 டிகிரி அளவுக்குக்கூட வளைப்பார்கள்; அவ்வளவு ஏன், சோதனைகளின்போது சில விமானங்களில் இறக்கைகளை ஒடித்தேகூடப் பார்ப்பார்கள். எந்த அழுத்தத்தில், எந்தப் புள்ளியில் உடைகிறது என்பதைப் பதிவுசெய்து அதை எதிர்கொள்ள இச்சோதனையைச் செய்கிறார்கள்.

விமானம் பறக்கும்போது பறவை அதன் என்ஜினுக்குள் மோதினால் விபத்து நேரும் என்ற அச்சம் பலருக்கு உண்டு. விமான என்ஜின்களை முழு வேகத்தில் இயக்கிவிட்டு அவர்களே இறந்த கோழியை – சிறு விலங்குகளையும்கூட வெகுவேகமாக என்ஜினை நோக்கிச் செலுத்தி, என்ஜின் ஓட்டம் தடைபடுகிறதா என்று பார்ப்பார்கள்.

படுவேகமாக இயங்கும் விமானத்தைத் திடீரென பிரேக் போட்டு நிறுத்த முடியுமா; அது எப்படி நிற்கும்? சோதிப்பார்கள். இதுவல்லாமல் குறைந்த எரிபொருளில் எப்படி இறங்குகிறது, என்ஜின் பழுதாகிவிட்டால் எப்படி இயக்குவது எல்லாச் சோதனைகளும் உண்டு.

நிம்மதிகொள் நெஞ்சமே

பெரிய விமானங்களில் இரண்டு என்ஜின்கள் உண்டு. அந்த என்ஜினில் ஒன்று பழுதானால் இன்னொன்று போதும் விமானத்தைத் தரை இறக்குவதற்கு; அந்த இன்னொன்றும் பழுதாகிவிட்டால் என்று கேட்கிறீர்களா? இரண்டு என்ஜின்களுமே இயங்காவிட்டாலும்கூட விமானத்தை அப்படியே தொடர்ந்து பறக்க வைத்து உயரத்தைக் குறைத்து, பறவையைப் போல அப்படியே காற்றில் மிதக்கவிட்டு - தாழ இறக்கி அருகில் உள்ள விமான நிலையம் வரை கொண்டுவந்து ஓடுபாதையில் பத்திரமாக இறக்கிவிட முடியும். என்ஜின் இயங்குவது அவசியமே இல்லை.

என்ஜின் இல்லாமல் விமானத்தை இறக்க முடியும் என்பதை நம்ப மறுப்பவர்களுக்கு ஒரு உண்மை உதாரணம். ‘ஏர் டிரான்ஸாட் ஃபிளைட் 236’ என்ற விமானம் அட்லான்டிக் பெருங்கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் பழுதடைந்துவிட்டன. பயணிகளுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே அதை விமானி 75 மைல் தொலைவில் இருந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் பத்திரமாக இறக்கினார்.

பறந்துகொண்டிருக்கும்போதே உயரத்தை இழப்பது, ஓடுபாதையிலிருந்து விலகி அல்லது சறுக்கி ஓடுவது, காற்றழுத்தம் குறைவான வான்பரப்பில் சிக்கி அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்படுவது போன்றவை விபத்துகளுக்கு இட்டுச்செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள். திறமையுள்ள விமானிகள் இதிலிருந்து விமானத்தை மீட்டுவிடுகின்றனர்.

அதிகமானோர் அஞ்சுவது நடுவானில் இடி-மின்னல் தாக்கினால் விமானம் என்னாகும் என்பதுதான்! மின்னல் தாக்கினால் விமானத்துக்கு ஒன்றும் நேராது. இடி வெறும் ஓசைதான். ஆனால், 13,000 நடைகளில் ஒரு முறை மட்டும்தான் மின்னல் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சில புரிதல்கள், சில யோசனைகள்

தனக்குத் தெரியாத, தெரிந்தாலும் தன் கையில் இல்லாத விஷயங்களையெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்வதைக் காட்டிலும் தன் பொறுப்பில் உள்ள விஷயங்களில் நல்ல புரிதலோடு நடந்துகொள்வது பயணிகளின் பயணத்தை நெஞ்சுக்கு இனிதானது ஆக்கும்.

வேறு எந்தப் பயணத்திலும் இல்லாத வகையில், எவ்வளவு உயரத்தில் பறக்கிறோம், என்ன மாதிரியான தட்பவெப்ப நிலை வெளியே நிலவுகிறது, வேறு ஏதேனும் சவாலான சூழல்கள் நிலவுகின்றனவா என்றெல்லாம்கூட விமானப் பயணத்தில் பயணிகளிடம் விமானிகள் அறிவிப்புகள் வழியே பகிர்ந்துகொள்வது உண்டு. பதற்றப்பட ஏதுமில்லை. அந்த அறிவிப்புகளின் பின்னுள்ள அபாரமான நம்பிக்கையே எதையும் சமாளிக்கும் திறன் விமானிகளுக்கு உண்டு; நீங்கள் பாதுகாப்பான கரங்களின் கீழ் இருக்கிறீர்கள் என்பதுதான். ஆக, விமானத்தில் ஏறும்போது இன்னும் கூடுதல் நம்பிக்கையோடு வண்டி ஏறுங்கள்; அச்சத்தை நிலத்திலேயே விட்டுவிடுங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்