மாநில வரலாறு
சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றாக இருந்த பிரதேசம். 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை, சாஹமான் அல்லது சவுஹான் மன்னர்களால் ஆளப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் அக்பரின் ஆளுகையின் கீழ் சென்றன. பின்னர், மராத்தாக்களும் ராஜஸ்தானை ஆண்டனர். அதன் பின்னர், ஆங்கிலேயர் ஆட்சி. சுதந்திரத்துக்குப் பிறகு 1948-ல் அல்வர், பரத்பூர், தெளல்பூர், கரெளலி போன்ற சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலமானது. பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன.
புவியியல் அமைப்பு
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம். பரப்பளவு 3.42 லட்சம் சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ.) 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ராஜஸ்தானின் மக்கள்தொகை 6.8 கோடி. மக்கள்தொகையில் ஏழாவது இடம். நாட்டின் மக்கள்தொகையில் இம்மாநிலத்தின் பங்கு 5.66%. இந்துக்கள் 88.49% பேர். இந்துக்களைப் பொறுத்தவரை ஜாட் சமூகத்தினர் 12% பேர் என்றும், குர்ஜர் சமூகத்தினரும் ராஜபுத்திரர்களும் தலா 9% வரை இருப்பார்கள் என்றும், பிராமணர்களும் மீணா சமூகத்தினரும் தலா 7% இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. பட்டியலின சமூகத்தினர் 18%, பழங்குடியினர் 13%. முஸ்லிம்கள் 9.07%. சீக்கியர்கள் 1.27%, பெளத்தர்கள் 0.02%, சமணர்கள் 0.91%.
சமூகங்கள்
இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில், ஒரு காலத்தில் சமஸ்தானங்களை ஆண்டுவந்தவர்கள், குறிப்பாக ராஜபுத்திரர்கள் தங்கள் பிரதிநிதிகளை நிற்கவைத்தனர். ஜாட் சமூகத்தினரும் பிஷ்னோய் சமூகத்தினரும் பிறகு செல்வாக்கு பெறத் தொடங்கினர். இன்றைய தேதியில் ராஜபுத்திரர்களும் ஜாட்டுகளும்தான் அரசியல் போக்கைத் தீர்மானிப்பவர்கள். இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களும் இம்மாநில சமூக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை.
ஆறுகள்
சம்பல், லூணி பிரதான நதிகள். மத்திய பிரதேசத்தின் மஹூ பகுதியில் உற்பத்தியாகி ராஜஸ்தானுக்குள் நுழையும் சம்பல் நதிதான், இம்மாநிலத்தின் வற்றாத ஒரே நதி. அஜ்மேர் அருகே ஆரவல்லி பகுதியில் உற்பத்தியாகிறது லூணி நதி. கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் பணாஸ் மற்றும் சம்பல் நதிகள் மூலம் வடிகால் வசதியைப் பெறுகின்றன. தபதி, காளி, பார்வதி, காம்பிரி, மாஹி, சாபர்மதி, கக்னி போன்றவையும் இம்மாநிலத்தின் முக்கிய நதிகள்.
காடுகள்
ராஜஸ்தானில் 32,737 சதுர கிமீ வனப் பகுதிகள் உள்ளன. இது மாநிலத்தின் பரப்பளவில் 9.57%. நாட்டிலேயே வனப் பகுதிகள் குறைவாக உள்ள மாநிலம் இது. உதய்பூர், ராஜ்சமந்த், கோட்டா, சித்தோர்கர், அல்வர் போன்ற மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் காடுகள் உள்ளன. மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வனப் பகுதிகள் இல்லை. வெப்பமண்டல முள் காடுகள், வெப்பமண்டல வறண்ட இலையுதிர்க் காடுகள், மூங்கில் காடுகள், மத்திய இந்திய துணை வெப்பமண்டல மலைக் காடுகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாநிலத்தின் ஜிடிபியில் வனப் பகுதிகளின் பங்களிப்பு ரூ.716 கோடி.
நீராதாரம்
நாட்டின் நீராதாரத்தில் ராஜஸ்தானின் பங்கு வெறும் 1%. பருவமழை 2 மாதங்கள் மட்டுமே. மொத்த மேற்பரப்பு நீர் 21.71 பில்லியன் கன மீட்டர். இதில், 11.84 பில்லியன் கன மீட்டர் நீரை ராஜஸ்தான் ஏற்கெனவே பயன்படுத்திவிட்டது. விவசாயம் மற்றும் பிற பயன்பாட்டுக்கான நீரின் தேவை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், 2050-வாக்கில் விவசாயப் பயன்பாட்டுக்கான நீரை 70% வரை குறைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மாஹி பஜாஜ் சாகர் அணைத் திட்டம், நர்மதை அணைத் திட்டம், ராணா பிரதாப் சாகர், மேஜா, ஜவாய், பிலாஸ்பூர் அணைத் திட்டம் ஆகியவை முக்கியமானவை.
கனிம வளம்
கனிம உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம். டங்ஸ்டன், மாங்கனீசு, வொலஸ்டோனைட் ஆகியவை பிரதானம். ஈயம், கால்சைட், ஜிப்சம், வெள்ளி, பளிங்கு, டோலோமைட் போன்றவை அதிகளவில் கிடைக்கின்றன. நாட்டின் உலோகம் அல்லாத கனிம உற்பத்தியில் இதன் பங்கு 24%. துத்தநாக உற்பத்தியில் பிரதானமான மாநிலம். தாமிர உற்பத்தியில் 40%, ஈய உற்பத்தியில் 85%, ஜிப்ஸம் உற்பத்தியில் 94%, பாறை உற்பத்தியில் 65% பங்கு வகிக்கிறது. பன்ஸ்வாரா, உதய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 11.48 கோடி டன் தங்கப் படிமங்கள் இருப்பதைப் புவியியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பொருளாதாரம்
நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் ராஜஸ்தான் 5.49% பங்கு வகிக்கிறது. எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 21.31%. கால்நடைகள் 4.9 கோடி உள்ளன. பால் உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம். கடுகு, கம்பு, கொத்தமல்லி போன்றவை அதிகம் விளையும் பூமி. உலகின் கொத்தவரங்காய் உற்பத்தியில் 72% பங்கு வகிக்கிறது. நாட்டின் பார்லி உற்பத்தியில் 60%. சிமென்ட் உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம். இந்தியாவின் உப்பு உற்பத்தியில் 10-ல் ஒரு பங்கு ராஜஸ்தானுடையது. 2016-17-ல் ராஜஸ்தானின் ஜிடிபி ரூ.7.67 லட்சம் கோடி.
அரசியல் சூழல்
ராஜஸ்தானில் 1972 வரை காங்கிரஸின் கையே ஓங்கியிருந்தது. நெருக்கடிநிலைக்குப் பின்னர், 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஷெகாவத் முதல்வரானார். இந்திரா மீண்டும் பிரதமரானதும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1989-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக – ஜனதா தளம் கூட்டணி 25 இடங்களிலும் வென்றது. சட்டமன்றத் தேர்தலில் 140 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. ஷெகாவத் மீண்டும் முதல்வரானார். 1998-ல் மீண்டும் காங்கிரஸ். 2003-ல் பாஜக. 2008-ல் காங்கிரஸ்.
2013-ல் பாஜக. 2018-ல் மீண்டும் காங்கிரஸ்.
முக்கியப் பிரச்சினைகள்
2018 தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காங்கிரஸ் விவசாயக் கடன்களை ரத்துசெய்து உத்தரவிட்டது. எனினும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்துசெய்யவில்லை என்று விவசாயிகள் குரல் எழுப்புகிறார்கள். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்திய இந்தப் பிரச்சினை தற்போது காங்கிரஸுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை இன்னொரு முக்கியப் பிரச்சினை. குடிநீர்ப் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளும் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago