அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரை அறிந்துகொண்டவர்களில், பின்னாளில் இந்திய அளவில் ஊடகத் துறையில் ஜொலிப்பவராக மாறிய ஒரு தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான என்.ராம்தான் அவர். அப்போது அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர். அண்ணாவுடனான சந்திப்புதான் ராமுக்கு, அண்ணா மீது மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் மீதான வலுவான ஈர்ப்புக்கும் காரணமாகிறது. திராவிட இயக்கத்தை ஆய்வுநோக்கில் ஆராயத் தொடங்கியவர், காலப்போக்கில் அந்த இயக்கத்துக்கான தேவையையும் நியாயத்தையும் பேசுபவர் ஆனார். திராவிட இயக்கத்தவரால் ‘மவுன்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று குறிப்பிடப்பட்ட ‘தி இந்து’ நாளிதழின் வரலாற்றுப் போக்கில் பிற்பாடு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியவரான ராம், அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற 1967-ல் நீங்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குள் செல்கிறீர்கள். 1968-ல் அமெரிக்கா வரும்போது அவரைச் சந்திக்கிறீர்கள். அண்ணா அப்போது எப்படித் தெரிந்தார்?
அமெரிக்காவில்தான் முதல் முறையாக அண்ணாவைச் சந்தித்தேன். இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்றால், அங்கே ஜி.பார்த்தசாரதி வீட்டில் அண்ணா தங்கினார். ஜிபி அப்போது ஐ.நா. சபைக்கான இந்தியத் தூதுவராக இருந்தார். உறவினர் என்பது போக, எங்கள் குடும்பத்தில் எல்லோராலும் மதிப்போடு பார்க்கப்பட்டவர் அவர். ‘தி இந்து’வில் வேலைபார்த்தவர். அண்ணா வருகையையொட்டி நியூயார்க்கில் இந்தியர்களுக்காக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்திருந்தார்கள். அதற்கு நான் போயிருந்தேன். அண்ணா வாஷிங்டன் டிசி போனபோது அங்கும் நான் போனேன். அண்ணாவைக் காண வந்த கூட்டம், அண்ணாவின் பேச்சு, அவரது எளிமையான அணுகுமுறை இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தேன்.
ஒரு பிராந்தியத் தலைவராகத்தான் அப்போது அவர் அறியப்பட்டிருந்தார். அப்படிப்பட்டவரிடமிருந்து வெளிப்பட்ட தத்துவ அடிப்படையிலான, ஆழ்ந்த அறிவார்த்த பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது. காங்கிரஸை வீழ்த்தி அவர் ஆட்சிக்கு வந்திருந்தார்; ஆனால், இந்தியாவுக்கு வெளியே வந்திருந்தவர் அங்கு காங்கிரஸ் மீதோ, பிரதமர் இந்திரா மீதோ, இந்திய அரசின் மீதோ கடுமையான விமர்சனங்கள் எதையும் வைக்கவில்லை. இலங்கை விவகாரம் உள்ளிட்ட இந்தியாவுக்கு வெளியேயிருந்த எந்த விவகாரத்திலும் மிகுந்த நிதானமான கருத்துகளைச் சொன்னார். தெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் அவர் வெளிப்பட்டார். அவரது ஆளுமையைக் கண்டு, குறிப்பாக அவருடைய ஆங்கிலத்தைக் கண்டு எல்லோரும் திகைத்தார்கள்; நானும்தான். பெரிய ஆகிருதி என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ரொம்ப எளிமை.
சென்னையில் நீங்கள் கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில்தான் அண்ணா, பெரும் மக்கள் தலைவராகி ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். மாணவர்கள்தான் அண்ணா மற்றும் திமுகவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆக, இயல்பாக நீங்கள் தமிழ்நாட்டிலிருந்தபோதே அண்ணாவை எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்திருக்க வேண்டும். அப்படி நடக்காமல்போக, அதாவது தமிழ்நாட்டில் இருக்கும்போதே அண்ணாவை நீங்கள் நெருங்காமல்போக என்ன காரணம்?
முக்கியமான காரணம், அண்ணாவை, திமுகவை, திராவிட இயக்கத்தை இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற ஒரு பார்வையை நான் அமெரிக்காவிலிருந்த காலகட்டம்தான் எனக்குள் உருவாக்கியது. 1968 என்பது ஒரு கொந்தளிப்பான காலகட்டம். வியட்நாம் போருக்கு எதிரான போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ‘பிளாக் பவர் மூவ்மென்ட்’ நடந்துகொண்டிருந்தது. இவையெல்லாம் எனக்குள் பெரும் தாக்கத்தையும் உத்வேகத்தையும் உண்டாக்கின. உள்ளபடி, அதற்கு முன்னே தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்திலெல்லாம் திமுகவைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளாமல் இருந்தேன். அண்ணாவின் பேச்சையே முதல் முறையாக அமெரிக்காவில்தான் கேட்டேன்.
அப்படியென்றால், கொலம்பியாதான் உங்கள் கண்திறப்பு...
ஆமாம். அதுதான் திருப்புமுனை.
மாணவப் பருவத்தில் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
அப்போது நான் நேரு அபிமானி. இப்போதும் நேரு எனக்குப் பிடித்தமானவர்தான். ஆனால், பிற்பாடு காங்கிரஸ் மீதான அபிமானம் போய்விட்டது; இடதுசாரி இயக்கத்தை நோக்கி நான் நகர்ந்தேன். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தபோது அதில் பங்கெடுக்கவில்லை எனினும், போராட்ட நியாயத்துக்கு ஆதரவு மனநிலையிலேயே இருந்தேன். என்னைப் பொறுத்தவரை எல்லா மொழிகளும் சமம்; வெறுக்க ஏதும் இல்லை; ஆனால், திணிப்போ, ஆதிக்கமோ எதிர்க்கப்பட வேண்டியவை.
அண்ணா வளர்ந்துவந்த காலகட்டத்தில் பிரதான ஊடகங்கள், குறிப்பாக, ‘தி இந்து’ உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் பலவும் பாரபட்சமாகவே அவரை அணுகியிருக்கின்றன என்பதை அவருடைய உரைகள், எழுத்துகளைப் படிக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் காலகட்டத்தைத் திரும்பிப்பார்க்கையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
இது ரொம்ப நியாயமான விமர்சனம், குற்றச்சாட்டுதான். ஒரு பெரிய பாரபட்சமும் பக்கச்சார்பும் அண்ணாவுக்கு எதிராக இருந்தது. நீங்கள் அவசியம் இதைப் பதிவுசெய்ய வேண்டும். நம்முடைய ‘தி இந்து’ நாளிதழே அப்படி இருந்திருக்கிறது. முக்கியமான காரணம் இந்துவினுடைய இந்திய தேசிய உறுதிப்பாடும், காங்கிரஸ் சார்பும். அண்ணா ‘திராவிட நாடு’ கேட்டார் இல்லையா? தொடக்கம் முதலாகவே ஒரு எதிர் நிலைப்பாடு இருந்திருக்கிறது. பெரியார் சம்பந்தமான செய்திகள்கூட ஒன்றிரண்டு எப்போதாவது பிரசுரிப்பார்கள்; அண்ணாவை ஓரங்கட்டிவிடுவார்கள்.
பிறகு இதெல்லாம் மாறியது. காலச் சூழல், முன்அபிப்பிராயங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்தது. என்னுடைய சித்தப்பாவும் ‘தி இந்து’ முன்னாள் ஆசிரியருமான ஜி.கஸ்தூரி, அண்ணாவின் கூட்டத்தை சென்னை உட்லண்ட்ஸில் ஒரு முறை கேட்டிருக்கிறார். அதில் சின்ன குறிப்புகூட இல்லாமல் கச்சிதமான ஆங்கிலத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினாராம் அண்ணா. இதைச் சொல்லிச் சொல்லி ரொம்ப மெச்சினார் கஸ்தூரி. அதற்குப் பின் அண்ணாவைத் தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தவர், அண்ணாவின் மேதமைக்கு ஒரு அபிமானியாகிவிட்டார். திராவிட இயக்கத்தை இனவாத இயக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. பிராமணியத்தை எதிர்ப்பார்களே ஒழிய, தனிமனித பிராமண வெறுப்பு அவர்களிடம் கிடையாது. திராவிட இயக்கத்தின் தேவையையும் அதற்கான நியாயத்தையும் புரிந்துகொள்ள நமக்கே ரொம்பக் காலம் பிடித்தது. எல்லோரும் இப்படி மாறிவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன்.
அண்ணாவின் கோட்பாடுகள், திட்டங்களை இன்றைய இந்தியாவோடு எப்படி ஒப்பிடுவீர்கள்?
மிகக் குறைந்த காலமே அண்ணா முதல்வராக இருந்தார் என்பது ஒரு சோகம். ஆனால், தீர்க்கமான மாற்றங்களுக்கு அவர் வித்திட்டிருக்கிறார். அண்ணா முன்னெடுத்த சமூக நீதி - சமூக நல அரசியல் தமிழ்நாட்டைத் தாண்டி இன்று இந்தியா முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அவரது பாணியை நகல் எடுக்கிறார்கள். அண்ணாவின் முக்கியமான முழக்கமான மாநில சுயாட்சியின் தேவை இன்று அதிகமாக உணரப்படுகிறது. இரு திராவிடக் கட்சிகளுமே அண்ணாவின் கொள்கைகளைத் தேசிய அரங்கு நோக்கிக் கொண்டுசெல்ல முடியும். ஏனென்றால், அண்ணா இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago