மாநில வரலாறு
தொன்மையான, வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசம். கி.மு.2000-ல் இந்தப் பிராந்தியத்தில் ஆரியர்களின் வருகை நிகழ்ந்தது என்று கருதப்படுகிறது. பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் ஆட்சிசெய்தனர். மெளரியர்கள், நந்தர்கள், மகதப் பேரரசு, சுங்கர்கள், பாலப் பேரரசு, ராஷ்டிரகூடர்கள், டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. 16-ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை நிறுவினார் பாபர். சூரி சாம்ராஜ்யம், ஹேமுவின் அரசாட்சி, இரண்டாம் பானிபட் போரில் ஹேமுவை வீழ்த்தி அரியணை ஏறிய அக்பர் என்று பல்வேறு வரலாற்றுத் தருணங்கள் நிறைந்தது. முகலாயர்களின் வீழ்ச்சி காலத்தில் மராத்தாக்கள் வசம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1902-ல் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் என்று அழைக்கப்பட்டது. 1950 ஜனவரி 24-ல் உத்தர பிரதேசமானது.
புவியியல் அமைப்பு
இந்தியாவின் வடக்கு – மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் உத்தர பிரதேசம், நாட்டின் நான்காவது பெரிய மாநிலம். பரப்பளவு 2.40 லட்சம் சதுர கிமீ. தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ. இந்தியாவின் பரப்பளவில் இது 7.32%. நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம். 2011 கணக்கின்படி மக்கள்தொகை 19.98 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 828 (தமிழகத்தின் கணக்கு 555). இந்துக்கள் 79.73%. முன்னேறிய சாதியினரில் பிராமணர்கள் 10%. தாக்கூர்கள் 9%. இதர பிற்படுத்தப்பட்டோரைப் பொறுத்தவரை
200-க்கும் மேற்பட்ட சாதியினர் இருக்கிறார்கள். இவர்களில் யாதவர்கள், குர்மிக்கள், குஷ்வாஹா சமூகத்தினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். பட்டியலின சமூகத்தினர் 21.1%. பழங்குடியினர் 0.1%. முஸ்லிம்கள் 19.26%. சீக்கியர்கள் 0.32%. கிறிஸ்தவர்கள் 0.18%. பிற சமூகத்தினர் 0.51%.
சமூகங்கள்
இங்கே சாதியின் ஆதிக்கம் அதிகம். பிராமணர்களும் தாக்கூர்களும் அரசியல் களத்தில் செல்வாக்கு கொண்டவர்கள். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறுபவர்களில் இந்த இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 25%. பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைப் பொறுத்தவரை யாதவர்களே அதிகம், கிட்டத்தட்ட 9%. குஷ்வாஹா, மெளரியா, சைனி, ஷாக்யா சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். பட்டியலின சமூகத்தில் ஜாதவ்கள் கிட்டத்தட்ட 9%. யாதவர் சமூகம் சமாஜ்வாதி கட்சியின் வாக்குவங்கி. பகுஜன் சமாஜுக்கு ஆதவளிப்பவர்கள் ஜாதவ்கள். இரு கட்சிகளும் இம்முறை கூட்டணி அமைத்திருக்கின்றன.
ஆறுகள்
30-க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. இமய மலையிலிருந்து இறங்கிவரும் முக்கிய நதிகள் உத்தர பிரதேசத்தைக் கடந்தே பிற மாநிலங்களுக்குச் செல்கின்றன. யமுனை, கங்கை பிரதான ஆறுகள். திரிவேணி சங்கமம் பிரயாக்ராஜ் நகரில் அமைந்திருக்கிறது. காகரா, ராம் கங்கா, சரயு, சாரதா (காளி), ராப்தி, கண்டக், பேத்வா, சம்பல், சிந்து, கோமதி, தோன்ஸ் போன்ற நதிகளும் முக்கியமானவை.
காடுகள்
வனப் பகுதிகள் 14,679 சதுர கிமீ. இது மாநிலப் பரப்பளவில் 6.09%. மிகவும் அடர்ந்த காடுகள் 2,617 சதுர கிமீ. மிதமான அடர்த்தி கொண்ட காடுகள் 4,069 சதுர கிமீ. திறந்தவெளிக் காடுகள் 7,993 சதுர கிமீ. காப்புக் காடுகள் 72.79%. பாதுகாக்கப்பட்ட காடுகள் 6.98%. வகைப்படுத்தப்படாதவை 20.23%. 2017 புள்ளிவிவரப்படி, முந்தைய ஆண்டுகளைவிட 278 சதுர கிமீ காடுகள் அதிகரித்திருக்கின்றன.
நீராதாரம்
மாநிலப் பரப்பளவில் 90%-க்கும் அதிகமான பகுதி கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் வடிகால். கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் 30%. மேல் கங்கை கால்வாய் மூலம் உத்தர பிரதேசம் மட்டுமின்றி, உத்தராகண்டின் பல பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. மத்திய கங்கை கால்வாய், கீழ் கங்கை கால்வாய், ராம்கங்கா கால்வாய், கிழக்கு யமுனா கால்வாய், ஆக்ரா கால்வாய் போன்றவையும் மாநிலத்துக்குப் பாசன வசதி வழங்குகின்றன.
கனிம வளம்
நிலக்கரி, டோலோமைட், ரத்தினக் கற்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்றன, மாநிலத்தின் விந்திய மலைப் பகுதிகளில் ஏராளமான கனிமங்கள் கிடைக்கின்றன. நிலக்கரி, சிலிக்கா, சுண்ணாம்புக் கல், மாங்கனீசு, தாமிரம், ஜிப்ஸம் போன்றவையும் கிடைக்கின்றன. சோனேபத்ராவில் இயங்கிவரும் சிமென்ட் தொழிற்சாலைகள் மாநிலத்தின் கனிம வளத்துக்குச் சாட்சி. கனிம உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 40%-க்கும் மேல்.
பொருளாதாரம்
உணவு தானிய உற்பத்தியில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. 2016-17-ல் நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் இதன் பங்கு 17.83%. உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறை, கனிம உற்பத்தித் துறை, ஜவுளித் தொழில், கைத்தறி, உயிரித் தொழில்நுட்பம் போன்றவை பொருளாதாரத்துக்குத் துணை நிற்கின்றன. பால், தோல் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. 2017-18-ன்படி மாநிலத்தின் ஜிடிபி ரூ.16.89 லட்சம் கோடி. 2018-2019-ல் மாநிலத்தின் ஜிடிபி ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசியல் சூழல்
இந்திய அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய் என்று ஏழு பிரதமர்களைத் தந்த பூமி. மாயாவதியும் அகிலேஷ் யாதவும் மட்டுமே முதல்வர் பதவியில் முழுமையாக ஐந்தாண்டுகளை நிறைவுசெய்தவர்கள். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில்தான் மோடி, சோனியா, ராகுல் போன்ற முக்கியத் தலைவர்களின் தொகுதிகள் இருக்கின்றன. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்திருக்கின்றன. காங்கிரஸும், பாஜகவும் கடும் போட்டியைச் சந்திக்கின்றன.
முக்கியப் பிரச்சினைகள்
பேறுகால இறப்பு விகிதத்தில் இரண்டாவது இடம்; குழந்தை இறப்பு விகிதத்தில் முதல் இடம். கல்வியிலும் மோசமான நிலைமை. 2016 புள்ளிவிவரத்தின்படி ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் கிட்டத்தட்ட 50% பேரால் எழுத்துகளை வாசிக்க முடியவில்லை. 9 வரைக்குமான எண்களும் தெரியவில்லை. பள்ளிக்கு வராமல் இருப்பது, இடைநிற்றலும் அதிகம். 2015-16-ல் வேலைவாய்ப்பின்மை 1,000-க்கு 58 (தேசிய சராசரியான 37-ஐ விட அதிகம்). 2013-14, 2014-15-ல் தொழில் துறை வளர்ச்சி முறையே 1.95%, 1.93%. நாட்டின் விவசாயத்தில் 20% என்றாலும் விவசாய வளர்ச்சியும் மந்தம். போதாதக் குறைக்கு மதக் கலவரங்கள், கும்பல் கொலைகள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago