நவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி அறிவுஜீவியுமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கியது என்பதையும் மிக விரிவாகப் பேசினார். பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.
அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா?
அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகுமக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில்தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது தீவிரமான கவனம் கொடுத்தது.
என்னுடைய சிறுவயது நினைவிலிருந்து சொல்கிறேன். திருநெல்வேலியில் அப்போதே மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது. ‘திராவிட நாடு’, ‘முரசொலி’, ‘நம்நாடு’, ‘மன்றம்’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘போர்வாள்’ இப்படி நிறையப் பத்திரிகைகள் வரும். பள்ளிக்கூட மாணவர்களே சொந்தக் காசிலிருந்து ‘திராவிட நாடு’ வாங்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்கு ஒரு மவுசு இருந்தது. வாங்குவது மட்டுமல்ல; மனப்பாடமே செய்துவிடுவார்கள். அண்ணாவின் மொழிநடையும் இயல்பாகவே மனப்பாடமாகும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என்று நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் பற்றி தேர்வில் ஒரு கேள்வி வந்தது. ‘சேரநாடு செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து வளர்ந்து வளம் கொஞ்சும் நாடு... எழிலுறத் திகழும் பொழில்கள், அப்பொழில்களைச் சுற்றி அடுக்கடுக்கான மாளிகைகள். அம்மாளிகைகளின் உள்ளே கலகலவென ஒலியெழுப்பிக் களிப்படையும் காரிகைகள், இத்தனையும் படைத்துச் செல்வத் திருநாடாய் இன்பத் திருவீடாய் இருந்தது சேர நாடு…” இப்படி! (கடகடவென ஒப்பிக்கிறார்)
விடைத்தாள் கொடுக்கும்போது ஆசிரியர் என்னை அழைத்தார். எனக்கோ பயம். “திராவிட நாட்டைப் படிச்சி மனப்பாடம் பண்ணுனியா?” என்றார். தலையாட்டினேன். விடைத்தாளைக் கையில் கொடுத்துவிட்டார். இப்படி ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபோல் படிக்கும் சூழல் அன்றிருந்தது. பேச்சுப் போட்டி என்றால், திமுக பாணியில்தான் மாணவர்கள் பேசுவார்கள். நாடகப் போட்டி என்றால் அண்ணா, கருணாநிதி எழுதிய நாடக வசனங்களைத்தான் பேசினார்கள். பொதுவாக, அந்நாட்களில் மூன்று இயக்கங்கள் மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரிய அளவில் திமுக, சிறு துளி மாதிரி தமிழரசுக் கழகம், இரண்டுக்கும் நடுவே பொதுவுடமை இயக்கம். காங்கிரஸுக்குப் பெரியவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. பெரியாருக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதேசமயம், அது பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியிலேயே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. ஒரு சரியான தருணம் முகிழ்ந்தபோது சமூக மறுமலர்ச்சி இயக்கமான அதிலிருந்து அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, அரசியல் களத்தை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டார். திமுக கூட்டங்களிலும் சரி, பத்திரிகை களிலும் சரி, பெரிய வசீகரம் தமிழ்.
தமிழ்நாட்டின் அறிவியக்கத்தில் பொதுவுடமை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் இவற்றினூடாக திராவிட இயக்கம் – குறிப்பாக, அண்ணாவின் திமுக – செய்த முக்கியமான மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்? நவீனத் தமிழ்ச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் அண்ணா நடத்திய அறிவியக்கம் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியது?
திராவிடர் இயக்கம்தான் தன்மான உணர்வை அடித்தட்டு மக்கள் வரை கொண்டுசேர்த்தது. எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன அக்ரகாரமுண்டு. ஆனாலும், ‘சூத்திரர்கள்’ என்ற வார்த்தையை நான் கேட்டதில்லை. நான்காம் வகுப்பு படிக்கையில் சென்னை மயிலாப்பூர் கோயிலுக்குப் போனபோதுதான் முதல் முறையாக ‘சூத்திரா ஒத்திக்கோ’ என்று பிராமணர்கள் சொல்லக் கேட்டேன். விதவை மாமிகள் அப்படிச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். அப்போது அதற்கு எனக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டேன். “சூத்திரர் என்றால் பிராமணர் அல்லாதவர்” என்று சுருக்கமாகச் சொல்லிக் கடந்துவிட்டார். ஆனால், படிக்கப் படிக்க சாதியின் பின்னுள்ள அரசியல் புரிபட்டது. “சூத்திரன் என்றால் தேவடியா மகன்னு அர்த்தம்டா. யாராச்சும் சூத்திரன்னு சொன்னா, யார்டா தேவடியா மகன்னு எதிர்த்துக் கேளு” என்று பெரியார் அன்று சொன்னது நேரடி அர்த்தப்பாட்டுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம்; ஆனால், அவ்வளவு சாதிய இழிவுகள் அன்று பிராமணரல்லாதோர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இன்றைக்கு யாருமே ‘சூத்திரா ஒத்திக்கோ’ என்று சொல்ல மாட்டார்கள்; திராவிட இயக்கத்தின் விளைவு அது. அதேபோலதான் புராணம் என்ற பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அதை அடிப்படையாகக் கொண்டு நடந்த ஊழல் சமூக அமைப்பையும் கேள்வி கேட்கவைத்தார் பெரியார். பேச்சு வழியாக மட்டும் அல்லாமல், இதையெல்லாம் பத்திரிகைகள், சிறு பிரசுரங்கள் வழியாகவும் பேசியது திராவிட இயக்கம். மேலைச் சிந்தனையாளர்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. ஆக, திராவிட இயக்கப் பத்திரிகைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் தமிழ் உணர்வு, சமத்துவம் இவற்றை மட்டும் அவை பேசாமல் ஏனையோர் பேசத் தயங்கிய சமூக நீதியையும், பகுத்தறிவுக் கோட்பாட்டையும் பேசின. கடவுளையே விமர்சிக்கலாம் என்ற சூழலை உருவாக்கியதன் மூலம், எதையும் விமர்சிக்கலாம் என்று கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை விரிவுபடுத்தின. பத்து, பன்னிரெண்டு வயது பையன்களெல்லாம் தீவிரமான பத்திரிகைகளைப் படிக்கும் சூழல் இந்தப் பின்னணியில்தான் ஏற்பட்டது.
பெரியார் காலத்திலேயே திராவிட இயக்கக் கூட்டங்களில் முக்கிய அம்சமாக, புத்தக விற்பனை வந்துவிட்டது. புத்தகங்களை விற்றுவிட்டுதான் பெரியார் பேச்சையே தொடங்குவார். இன்றைய புத்தகங்களின் பின் அட்டையில் அதைப் பற்றிய சிறு குறிப்பு எழுதுகிறோம் இல்லையா, அந்த மாதிரி புத்தகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சின்ன அறிமுகத்தைச் சொல்லிவிட்டு, “இந்தப் புத்தகத்தின் விலை ரெண்டணா. இந்தக் கூட்டத்தில் ஒன்றரையணாவுக்குக் கொடுக்கிறேன்” என்பார். அதைப் பகுத்தறிவாளர்கள் மட்டுமில்லை, ரொம்ப வைதீகமான ஆட்கள்கூட வாங்குவார்கள். கூட்டத்துக்கு நடுவே புத்தகங்களைச் சுமந்துகொண்டு வந்து திராவிட இயக்கத்தினர் விற்பார்கள். அதேபோல, ஒரு விஷயத்தைப் பேசும்போது ஆதாரபூர்வாகப் பேசுகிறோம் என்பதை உணர்த்துவதற்காக சம்பந்தப்பட்ட புத்தகத்தைக் காட்டி அதில் உள்ள பகுதியைப் பக்க எண் குறிப்பிட்டு வாசிக்கும் பழக்கத்தையும் பெரியார் கொண்டுவந்துவிட்டார். ஆக, புத்தக வாசிப்பின் மேல், அறிவின் மேல் ஒரு பசியை உண்டாக்குவது என்பது பெரியார் காலத்திலேயே திராவிட இயக்க மேடைகளில் தொடங்கிவிட்டது. வாசிப்பின் மீதான ஆர்வத்தை அடுத்து எழுத்தின் மீதான ஆர்வம் எல்லோரையும் தள்ளியது.
அண்ணா தலையெடுத்த பின் அவரை முன்னுதாரணமாகக் கொண்ட ஒவ்வொருவரும் மேடைப் பேச்சும், பத்திரிகை எழுத்தும் அரசியலுக்கான தகுதிகள் என்பதுபோல உணரலானர். ஆளாளுக்குப் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். இது திராவிட இயக்க இதழ்களின் எண்ணிக்கையை விசுவரூபம் எடுக்கவைத்தது. சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் திராவிட இயக்கத்தவரிடமிருந்து மட்டும் அப்போது வந்தன. தனித்தமிழ் இயக்கம் சார்பில் வெளிவந்த முதல் பத்திரிகை, பெருஞ்சித்திரனார் நடத்தி கடலூரிலிருந்து வெளிவந்த ‘தென்மொழி’; முக்கியமான பத்திரிகை. போலவே, இளைஞர்களுக்காக ‘தேன்சிட்டு’ என்று நடத்தினார்கள். பிறகு, லெனின் தங்கப்பா போன்றவர்கள் மாவட்டத்துக்கு ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். ஆனால், அது பெரிய மக்கள் இயக்கமாக மாறவில்லை. பொதுவுடைமை இயக்கத்தில் முதலில் ‘ஜனசக்தி’ வந்தது. 1958 டிசம்பரில் ‘தாமரை’ முதல் இதழ் வந்தது. தொழிலாளர்கள் காத்திருந்து வாசிக்கும் இதழாக ‘ஜனசக்தி’ இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மாணவர்கள் மத்தியில் திராவிட இதழ்கள் போன அளவுக்கு எதுவும் போகவில்லை.
பொதுவுடைமை இயக்கம் ஆகட்டும்; ஏனைய இயக்கங்கள் ஆகட்டும்; தனிநபர்கள் பத்திரிகைகள் நடத்துவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அவரவர் இஷ்டப்படி நடத்துகிறார்கள் என்று தடைபோட்டார்கள். ஆனால், அண்ணா எல்லா கருத்து முரண்பாடுகளையும் விவாதங்களையும் அனுமதித்தார். பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்த் தரப்பினரின் வாதத்தையும் திராவிட இயக்கத்தினரின் வாதத்தையும் ஒன்றாகப் பிரசுரித்து ‘எழுத்துப்போர்’ என்றெல்லாம் சிறு வெளியீடுகளை நடத்தும் கலாச்சாரம் உருவானது. ஊருக்கு ஊர் பூங்காக்கள் தொடங்கி டீக்கடைகள், சைக்கிள் கடைகள், சலூன்கள் வரை திராவிட இயக்கப் பத்திரிகைகளை வாய்விட்டு ஒருவர் வாசிக்க ஏனையோர் கேட்கும் சூழல் இருந்தது. எல்லாமுமாகச் சேர்ந்து சாமானியர்கள் மத்தியில் அரசியல் மீதான ஒரு ஈர்ப்பையும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கின. ஏனைய கட்சிகளிடமும் தாக்கத்தை உண்டாக்கின.
தமிழ்நாட்டின் அரசியல் மேடைகளை அண்ணா எந்த வகையில் மாற்றியமைத்தார்?
மேடைகளின் வடிவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
1950-களில் எல்லா கட்சி மேடைகளும் ஒரே மாதிரியாக, எளிமையாக இருந்தன. ஒரு பிளாட்பார்ம், ஒரு சின்ன ஏணியுடன் மேடைகள் இருக்கும். மேலே மேற்கூரை இருக்காது. பக்கவாட்டில் இரண்டு கம்பு, மேலே இரண்டு கம்பு. மொத்தம் ஐந்தாறு டியூப் லைட் அவ்வளவுதான். மின் விசிறிகூட இருக்காது. இரவில் ஒரு கட்டத்துக்கு மேல், நிறைய பூச்சிகள் வந்து விழும். இதற்காகவே விளக்கருகே எண்ணெய்த் தாளைத் தொங்கவிட்டிருப்பார்கள்.
பெரியாரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. தள்ளாத வயதிலும் தொடர்ந்து ஊர் ஊராகப் போய்க் கூட்டம் பேசினார். அவருடைய நேர்மையை எல்லா தரப்புகளிலும் ரசிப்பவர்கள் இருந்தார்கள். சிதம்பரத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு கூட்டம். பெரியார் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் போய்விட்டது. சட்டென்று ஒரு கமென்ட் அடித்தார், “பார்ப்பனர்களை விமர்சிக்க ஆரம்பிச்சா, கரென்ட்கூடப் போயிடுது. என்ன செய்ய? நம்மாள் போஸ்ட்ல ஏறி இறங்குனாலும் சுவிட்ச் இன்னமும் பார்ப்பனர்கள் கையிலதானே இருக்கு?” கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கும். கூட்டத்தில் பங்கேற்ற பிராமணர்களும்கூடத்தான்!
அப்புறம் பெரியார் பேச்சின் இன்னொரு விசேஷ அம்சம் என்னவென்றால், எந்த ஊரில் அவர் பேசினாலும், கொஞ்சம் உள்ளூர் விஷயங்களையும் எடுத்துக்கொள்வார். திருநெல்வேலியில் கூட்டம் என்றால், நெல்லையப்பர் திருவிழாவின் மோசமான புராணக் கதைப் பின்னணியைச் சொல்லித் திட்டுவார். நெல்லையப்பர் மானூர் என்ற ஊரில் எழுந்தருள்வதற்கு வைப்பாட்டி வீட்டுக்குப் போவதாக ஒரு கதை உண்டு. “வைப்பாட்டி வீட்டுக்குப் போகுது சாமி. முட்டாப் பசங்களா, அதுக்கு விழாவா?” என்று திட்டுவார். ஆனால், சிரிச்சுக்கிட்டே மக்கள் கேட்டுக்கொள்வார்கள். காங்கிரஸில் விபூதி வீரமுத்து என்று ஒருவர் இருந்தார். பெரியார் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடையில் நின்றபடி, “செருப்பால் அடிப்பேன்” என்பார். சொன்னபடியே, பெரியார் படத்தைச் செருப்பால் அடிக்கவும் செய்வார்; பெரியார் படத்தைக் கொளுத்தவும் செய்வார். பெரியார் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. “நானே நிறைய படம் அடிச்சி வெச்சிருக்கேன். என்கிட்டையே வாங்கிக்கோ” என்று இயல்பாய்ச் சொல்வார். கூட்டம் இதையெல்லாம் வெகுவாக ரசிக்கும்.
அந்தக் காலத்தில் அரசியல் கூட்டம் நடந்தால், பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் எழும். எப்படி என்றால், துண்டுச்சீட்டில் கேள்வியை எழுதி தலைவருக்குக் கொடுத்தனுப்புவார்கள். பெரியார் இப்படியான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஆர்வமாக இருப்பார். பாளையங்கோட்டையில் ஒரு கூட்டத்தில் திமுகக்காரர் ஒருவர், பெரியாரிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். “தந்தை பெரியார் அவர்களே, எங்கள் தலைவர் அண்ணா புத்தியைத் தீட்டச் சொல்கிறார்; நீங்களோ கத்தியைத் தீட்டச் சொல்கிறீர்கள். இதில் இருந்தே இரண்டு பேருக்குமுள்ள வேறுபாடு தெரிகிறதல்லவா?” கேள்வியை முழுமையாக வாசிக்கும் பெரியார், “இப்படி ஒருத்தர் கேள்வி கேட்டிருக்கார். ஏன்யா, எவன் எவனுக்கு எது எது பஞ்சமோ அதைத்தானே தீட்டணும்!” என்று போகிற போக்கில் அடித்துவிட்டுப் போய்விடுவார். அப்போது சிரித்தேன். பல வருஷம் கழித்து யோசித்த பிறகு, அந்த ஆள் திமுகவில் இருந்தாலும் பெரியாருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து, ‘தந்தை பெரியார் அவர்களே…’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்; இந்த மரியாதையை எப்படி திமுகவினரிடம் அண்ணா உருவாக்கினார் என்று யோசித்திருக்கிறேன்.
அரசியல் மேடைப் பேச்சுகளை வெறும் பிரஸ்தாபமாக அல்லாமல், இலக்கிய நடையோடும் புள்ளிவிவரங்களோடும் பேசும் தீவிரமான இடமாக அண்ணா உருமாற்றினார்; தமிழின் பெருமையையும் தமிழர்களின் வீழ்ச்சியையும் மேடைப் பேச்சின் மையத்துக்குக் கொண்டுவந்தார். நிறையப் புள்ளிவிவரங்களைப் பேச்சில் தருவார். தமிழ்நாடு எந்தெந்த விஷயங்களிலெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது என ஆதாரபூர்வமாகப் பெரிய பட்டியலே போடுவார் (இதை மீண்டும் சிந்திக்கும் காலத்தில் இன்றைக்கு இருக்கிறோம்). அவருடைய இயக்கத்துக்கு அப்பாற்பட்ட ஆட்களும் பங்கேற்கும் கூட்டங்களாக அண்ணாவின் கூட்டங்கள் அமைந்தன. நட்சத்திரப் பேச்சாளர் என்றால், அவர்தான். அண்ணா கூட்டங்களுக்கு வெள்ளம்போல மக்கள் வருவார்கள்.
ஒரு பேச்சாளராக அண்ணாவுக்குத் தமிழ்நாட்டில் இருந்த செல்வாக்கை ஒப்பிடலாம் என்றால் அகில இந்திய அளவில் நேருவுக்கு இருந்த செல்வாக்கோடு ஒப்பிடலாமா?
தாராளமாக! எங்கள் அப்பா நேரு பக்தர். நேரு இறந்தபோது இரு நாட்கள் அவர் சாப்பிடவில்லை. அப்படி ஒரு நேசம். வரலாற்று ஆர்வம் காரணமாக, நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ புத்தகத்தை ‘புக்ஸ் இண்டியா’ கம்பெனியில் வாங்கினேன். அந்த புத்தகத்தை ரூ.5, ரூ.7.50 என்று இரண்டு தரத்தில் வெளியிட்டிருந்தார்கள். நான் ஐந்து ரூபாய் பதிப்பை வாங்கிவந்தபோது என்னுடைய அப்பா “பைண்டட் வால்யூம் வாங்கிவா” என்று சொல்லிக் கூடுதலாகக் காசு கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, “எப்படி இருக்கிறது?” என்று கேட்ட அப்பாவிடம், “அண்ணாவின் பேச்சு இதற்கு இணையானது” என்று சொன்னபோது அவரது கடுமையான கோபத்துக்கு ஆளானேன். ஆனால், அதுதான் உண்மை. மாசிடோனியா என்ற நாட்டின் பெயரே அண்ணாவின் பேச்சின்மூலம்தான் எனக்குத் தெரியவந்தது.
நேருவின் அரசியல், அவரது ஆதரவாளர்கள் எல்லாவற்றிலும் மேட்டுக்குடித்தன்மை உண்டு. ஆனால், அண்ணா கீழ்நிலை மக்களிடம் அதைக் கொண்டுசென்றார். நேருவின் வாழ்க்கைச் சூழல், பொருளாதாரச் சூழல், உலக அனுபவங்கள் இது எதுவும் அண்ணாவுக்குக் கிடையாது. ஆனால், நேருவின் இடத்தைச் சிந்தனையில் எட்டிப்பிடித்தவர் அண்ணா. ஐரோப்பியப் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் - ‘ஸ்கூல் ஆஃப் ஓரியன்டல் ஆப்ரிக்கன்ஸ்’ அமைப்பில் செயல்பட்டவர் - ஒரு பொதுப் பேச்சுக்கும் ஆய்வுக் கட்டுரைக்கும் உள்ள தொடர்பை அற்புதமாக வரையறுக்கிறார். அதைப் படித்தபோது எனக்கு அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ நினைவுதான் வந்தது. காலனிய கால வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீடுகளைத் துல்லியமாகப் பட்டியலிட்டு, தெற்கின் மக்கள் முதலீடுகள் எப்படி வடக்கின் தொழில் முதலீடுகளாக மடைமாற்றப்படுகிறது என்பதை விவாதிக்கும் புத்தகம் அது. கிராமத்து மேடைகளில் அவர் பொருளாதாரத்தை எளிமையாகப் பேசினார். மாணவர்கள் மத்தியில் சென்றபோது அதை மேலும் விரிவாக்கினார். அறிவுஜீவிகள் மத்தியிலான விவாதத்துக்கான தேவையை உணர்ந்து ஆய்வுக் கட்டுரைகளாக எழுதியபோது அதைப் புத்தகமாக்கினார். ஒரே விஷயத்தை வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு ஆழத்தில் விரிவாக அவரால் விவாதிக்க முடிந்தது.
இரவில் வெகுநேரம் படிப்பது, எழுதுவது; காலையில் தாமதமாக எழுந்திருப்பது; ஒரே நாளில் பல கூட்டங்களில் பங்கேற்பது என்ற பழக்கம் அண்ணாவிடம் இருந்தது. இது உண்டாக்கிய குறைபாடு என்னவென்றால், கூட்டத்துக்குச் சரியான நேரத்துக்கு அண்ணா வர மாட்டார். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் தாமதமாகும். அதனால், அண்ணா வரும் வரை கூட்டத்தைத் தக்கவைக்க இயக்கப் பாடல்கள், நாடகம் போன்ற கலை வடிவங்களைத் திமுகவினர் மேடையில் புகுத்தினார்கள். கூடவே, கட்சியின் உள்ளூர்த் தலைவர்களுக்கு அந்த நேரத்தில் பேச வாய்ப்பளிக்கும்படி அண்ணா சொன்னார். மேடையில் அவர் உண்டாக்கிய இன்னொரு கலாச்சாரம், கூட்டத்துக்குப் பங்களித்தவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி விளித்து அங்கீகரிப்பது. ‘நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே’, ‘கலைஞர் கருணாநிதி அவர்களே’ என்று ஆரம்பித்து, கட்சியின் சாதாரண நிர்வாகிகள் வரை ‘பழக்கடை பாண்டி அவர்களே’, ‘பூக்கடை முருகன் அவர்களே’ என்று எல்லோரையும் விளிப்பார்கள். இது சாமானிய மக்களிடத்திலே ஒரு பெரிய அங்கீகாரமாக அமைந்தது. அதுவரை எந்தக் கட்சியிலும் இது கிடையாது; பெரியாரிடத்திலும்கூடக் கிடையாது. மேடையில் துண்டு போர்த்தும் கலாச்சாரத்தின்மூலம் சாதிகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரையொருவர் கட்சியின் பெயரால் அணைத்துக்கொள்ளும் கலாச்சாரத்தையும் அண்ணா ஊக்குவித்தார். இவையெல்லாம் திமுகவைத் தாண்டியும் எல்லா கட்சி மேடைகளையுமே மேலும் ஜனமயப்படுத்தின!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago