“என் பையனுக்கு எப்படி வேலை கிடைக்கும்?” நான் அதிகம் கேள்விப்படும் கேள்வி இதுதான்; கூகுள் நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும் லாஸ்லோ பாக் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் பேசிக்கொண்டிருந்தேன். வாரத்துக்குக் குறைந்தபட்சம் 100 பேரை அவர் வேலைக்குச் சேர்த்துக்கொண்டிருக்கிறார். “எந்த மாதிரியான தகுதியுள்ள இளைஞர்களை நீங்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறீர்கள், கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்காதவர்களைக்கூட இப்போதெல்லாம் அதிகம் சேர்த்துவருகிறீர்களே?” என்று கேட்டேன்.
“நீங்கள் எங்கே படித்தீர்கள், என்ன படித்தீர்கள் என்பதெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை; அந்த விஷயமெல்லாம் கூகுள் இயந்திரத்துக்கே தெரியும். உங்களுக்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு ஆக்கபூர்வமாக உங்களால் என்ன செய்ய முடியும் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்” என்று முன்னர் அவர் கூறியது எல்லாப் பெற்றோர்களுக்கும் திகைப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது (அமெரிக்க) கல்லூரிகளில் படிப்பு முடிந்து பட்டம் வழங்கப்படவிருக்கும் நேரம் என்பதால், மீண்டும் பாக்கைச் சந்தித்தேன். கூகுளில் மட்டுமல்ல, வேறு நிறு வனங்களில் வேலை தேடுவதாக இருந்தாலும், வேலை தரும் நிறுவனங்கள் இளைஞர்களிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கின்றன என்று கேட்டேன்.
எங்கள் உரையாடலின் சுருக்கம் இதோ:
“யாரும் கல்லூரிக்குப் போகக் கூடாது என்பதல்ல எங்களுடைய கருத்து” என்றார் பாக்.
“நம்முடைய மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே நாங்களும் (கூகுள்) விரும்புகிறோம். அப்படிச் செய்வது சமூகத்துக்கு நல்லது. பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காகவோ, படிப்பது நல்லது என்பதற்காகவோ மட்டும் கல்லூரிகளுக்குச் செல்லாதீர்கள். படிப்புக்கு நீங்கள் செய்யும் செலவுக்குப் பிரதிபலனாக எதை எதிர்பார்க்கி றீர்கள் என்று யோசித்த பிறகு முடிவெடுங்கள். விரும்பியும் வெளிப்படையாகவும் படிப்புகுறித்து முடிவெடுங்கள். கல்லூரிப் படிப்புக்காக நீங்கள் உங்களுடைய பணம், நேரம், உழைப்பு ஆகிய மூன்றையும் செலவிடப்போகிறீர்கள். எனவே, திட்டமிட்டுக்கொள்வது மிகமிக அவசியம்.”
“இன்றைய உலகில் மதிக்கப்படும் தொழில் திறமை களையும் உலக அறிவையும் உங்களுடைய படிப்பின் மூலம் பெறுவதை உறுதிசெய்யுங்கள். உங்களுடைய கல்லூரிப் பட்டம் என்பது உங்களுக்கு அறிவும் திறமையும் ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் பதிலி அடையாளம் அல்ல.”
“வேலைக்கும் மனித ஆற்றல் மேம்பாட்டுக்கும் இன்றியமையாதவை என்ன?”
“தகுதி”.
சவால்கள் முக்கியம்
அந்த வாரம் வேலைக்கு எடுத்த 100 பேரின் மனுக்களைக் கைகளில் வைத்து அளைந்துகொண்டே பேசினார் பாக்.
“ஒரு மாணவன் கணினி அறிவியலிலும் கணிதத்திலும் இரட்டைப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தான். பொருளியலை எடுத்துப் படிக்க விரும்புவதாகக் கூறினான். கணினி அறிவியல் பாடத்தைப் படிக்கக் கடினமாக இருக்கிறது என்றான். நீ கலைப் பாடத்தை எளிதாகப் படித்து ‘ஏ’ கிரேடு வாங்குவதைவிட, கணினி அறிவியலைக் கஷ்டப்பட்டுப் படித்து ‘பி’ கிரேடு வாங்குவதுதான் நல்லது என்று அவனுக்கு அறிவுறுத்தினேன். காரணம், உன்னுடைய சிந்திக்கும் திறனும் சவால்களைச் சந்திக்கும் திறனும் வளரும் என்று சுட்டிக்காட்டினேன். இப்போது அந்த மாணவன் எங்கள் நிறுவனத்திலேயே வேலைக்கான பயிற்சி பெறச் சேர்ந்துள்ளான்” என்றார்.
2011-ல் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் வந்த இந்தச் செய்தியைப் பாருங்கள்: சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தும் கல்லூரி மாணவர்கள் படிக்க எளிதாக இருக்கும் பாடப் பிரிவுகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அந்தச் செய்தி தெரிவிக்கிறது. மின்னியல், கணினிப் பொறியியல் பாடவகுப்பில் சேர்ந்த ஒரு மாணவி உளவியல் பாடப்பிரிவுக்கு மாறிக்கொண்டாள். அந்த மாணவி கூறுகிறாள்: “பொறியியல் பாடங்களைப் படிக்கக் கடினமாக இருக்கும்; மனிதவளத் துறை அல்லது மக்கள் தொடர்புத் துறையில் வேலைபார்க்க விரும்புகிறேன். எனவே, உளவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார் அவர்.
“அந்த மாணவி தொழிலாளர் வர்க்கத்திலேயே உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்குப் பதிலாக விலகிச் செல்கிறார். நல்ல பயிற்சியும் வாய்ப்பும் கிடைத்தும் மனித ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இழக்கிறார் அந்த மாணவி” என்றார் பாக்.
“கூகுள் நிறுவனம் இளைஞர்களிடம் எதிர்பார்ப்பதே புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக் குள்ள ஆர்வம், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களுக் குள்ள விருப்பம் ஆகியவற்றைத்தான். ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ளவும் அதைத் தீர்க்கவும் உதவும் ஆற்றலை வளர்ப்பது அறிவியல் பாடப்பிரிவுகளே. அவற்றை விட்டு எளிதான கலைப் பாடங்களைப் படிக்கப்போவதாகச் சொல்வது அவர்களுக்கு உழைப்பதிலும் படிப்பதிலும் உள்ள ஆர்வக் குறைவையே காட்டுவதால், அவர்களை வைத்து வேலை வாங்குவதும் சரியில்லை அல்லவா”? என்கிறார்.
புத்தக அறிவுடன் சொந்த அறிவும்
கணிப்பொறியியலோ, அறிவியலோ எந்தப் பாடம் படித்தாலும் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. பிரச்சினைகள் என்ன, அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதை நூலறிவுடன் சொந்த அறிவும் சேர்த்துச் செயல்படுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். நான் கல்லூரியில் புள்ளியியல்தான் எடுத்தேன். ஆனால், அதையொட்டிய பகுப்பாய்வுப் பயிற்சி என்னுடைய திறமையை வளர்த்தது. எந்த வேலையும் இந்த இடத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் இல்லை.
“நீங்கள் இருக்கும் ஊரிலேயே அல்லது இடத்திலேயே வேலை கிடைக்க வேண்டும் என்றால், உங்களுக்கு அசாதாரண வேலைத்திறமை இருக்க வேண்டும். இருக்கும் இடத்துக்கு ஏற்ப வேலைகளைச் செய்யும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதையெல் லாம் செய்வதற்கு உங்களுக்குப் பகுப்பாயும் திறமை அவசியம்.”
படைப்பாற்றல்
“படைப்பாற்றல்குறித்து என்ன சொல்கிறீர்கள்?”
“மனிதர்கள் இயற்கையாகவே படைப்புத்திறன் மிக்கவர்கள். ஆனால், தர்க்கரீதியாகவோ, கட்டமைப்பைச் சார்ந்தோ சிந்திக்கப் பழக்கப்படாதவர்கள். இவையெல்லாம் நீங்கள் கற்றுப் பழக வேண்டிய திறன்கள். படைப்புத்திறனும், பிற திறன்களும் ஒருங்கே உங்களிடம் இருந்தால், உங்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உண்டு முன்னேற. இதில் ஏதாவது ஒன்று மட்டும் இருந்து, அதையும் முறையாகப் பயன்படுத்தினால் பலன் இருக்கும். வெகுசிலரிடம்தான் தர்க்கரீதியாகவும் கட்டமைப்பு சார்ந்தும் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.”
“கலைப்பாடப் பிரிவுகள் இப்போதும் முக்கிய மானவைதானா”?
“தனிச்சிறப்பு வாய்ந்த அவை முக்கியமானவை. முக்கியமாகப் பிற துறைகளுடன் அவற்றைச் சேர்க்கும்போது அவை முக்கியத்துவம் பெறுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தைசார் பொருளியலைப் பற்றிய பேச்சே அதிகம் இருந்ததில்லை. சமூக அறிவியலைப் பொருளியலுடன் சேர்த்தால் புதிய களம் கிடைத்துவிடுகிறது. இருவேறு துறைகள் சந்திக்கும் இடங்களில் ஆர்வத்தைத் தூண்டும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றைப் பின்பற்ற உங்களுக்கு இருதுறைகளிலும் திறமை இருக்க வேண்டும். பொருளியலையும் உளவியலையும் அல்லது புள்ளியியலையும் இயற்பியலையும் சேர்க்க வேண்டும். எல்லாத் துறைகளையும் இணைத்துச் சிந்திப்பவர்களும், கலைப்பாடப் பிரிவைப் பற்றிய பின்னணி உள்ளவர்களும், ஆழ்ந்த செயல்பாட்டுத் திறன் உள்ளவர்களும் திட்டமிடலுக்கு அவசியம். அப்படியொரு சமநிலையை எட்டுவது கடினம். ஆனால், அப்படிச் செய்யும்போதுதான் சிறந்த சமூகத்தையும் அமைப்புகளையும் உருவாக்க முடியும்”.
“கல்வி, அனுபவம்குறித்த சுய விவரக்குறிப்பை நன்றாகத் தயார் செய்வது எப்படி?”
“உங்களுடைய ஆற்றலைக் கோவையாகவும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பட்டியலிட வேண்டும். ‘ஒய்' தொடர்பான, ‘எக்ஸ்' வேலையை, ‘இசட்' வழிமுறையைக் கையாண்டதன் மூலம் செய்தேன் என்று எழுத வேண்டும். பெரும்பாலானவர்கள் எழுதுவார்கள், ‘நியூயார்க் டைம்’ஸில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்' என்று. அதற்குப் பதிலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இன்னின்ன தலைப்புகளில் 50 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று குறிப்பாகத் தெரிவிக்க வேண்டும். அது உங்களுடைய அறிவு, திறமைகுறித்துத் தெரிந்துகொள்ள வழிவகுக்கும். பெரும்பாலானவர்கள் தங்களுடைய திறமை, அனுபவம் குறித்து நேரடியாகவும் முறையாகவும் தெரிவிப்பதே இல்லை” என்றார் பாக்.
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago