மாநில வரலாறு
புவியியல்ரீதியாக வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான இணைப்பாக இருக்கும் மாநிலம் ஆந்திரம். ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா பிராந்தியங்கள் சென்னை மாகாணத்தில் இருந்த நிலையில் சென்னையைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கை, ஒருகட்டத்தில் போராட்டமாக வெடித்தது. தொடக்கத்தில் பிரதமர் நேருவால் புறக்கணிக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, 1951-ல் சுவாமி சீதாராம் மேற்கொண்ட உண்ணாவிரதம் மூலம் தீவிரமடைந்தது. அடுத்து, 1952 அக்டோபர் 19-ல் சாகும் வரை உண்ணாவிரம் தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிரிழந்தார். போராட்டங்கள் வெடித்தன. 1953 அக்டோபர் 1-ல் ஆந்திரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் தலைநகர் கர்னூல். 1956 நவம்பர் 1-ல் ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர பிரதேசம் உருவானது. மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வித்திட்ட மாநிலம் என்றும் இதைச் சொல்லலாம். ஆனால், தங்கள் பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டதாகச் சுட்டி, அதே ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முரண்பாடான சமகால வரலாறு.
புவியியல் அமைப்பு
இந்தியாவின் தென் கிழக்கில் அமைந்திருக்கும் ஆந்திரம், 1,62,968 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாட்டின் ஏழாவது பெரிய மாநிலம் இது. இந்தியாவின் பரப்பளவில் ஆந்திரம் 4.95%. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 303 பேர் என்று மக்கள் அடர்த்தி கொண்டது (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). மக்கள்தொகை 4,95,77,103. இந்துக்கள் 88.46%. தெலங்கானா உருவாக்கத்துக்குப் பிறகு, காப்பு சமூகத்தினர் 26% ஆக உயர்ந்திருக்கிறார்கள். பிராமணர்கள், ரெட்டிக்கள், கம்மா சமூகத்தினர், கோமதிக்கள், ஷத்ரியர்கள், வெலமாக்கள் ஆகியோர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 46.1% இருக்கிறார்கள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 17%. இவர்களில் மடிகா சமூகத்தினர் 7.3%, மாலா சமூகத்தினர் 9.7%. மக்கள்தொகையில் 9.56%, கிறிஸ்தவர்கள் 1.34%. சமணர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
சமூகங்கள்
பெருமளவு எண்ணிக்கையில் இருக்கும் காப்பு சமூகத்தினர், அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. கம்மா சமூகத்தினரும் ரெட்டி சமூகத்தினரும்தான் கோலோச்சுகிறார்கள். இந்நிலையில், இடஒதுக்கீடு கோரிவரும் காப்பு சமூகத்தினரின் கோரிக்கைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு செவிசாய்த்திருக்கிறார்.
ஆறுகள்
கோதாவரியும் கிருஷ்ணாவும் பிரதான ஆறுகள். இந்தியாவின் நீராதாரத்தில் இந்த இரண்டு ஆறுகளின் பங்கு 30%. கங்கைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரி மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி தெலங்கானா, ஆந்திரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிஷா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாய்கிறது. கிருஷ்ணா இந்தியாவின் நான்காவது நீளமான நதி. இதுவும் மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகும் நதிதான். துங்கபத்ரா, பெண்ணாறு, நாகவள்ளி உள்ளிட்ட ஆறுகளும் இம்மாநிலத்தில் பாய்கின்றன.
காடுகள்
ஆந்திர வனப் பகுதிகளின் மொத்தப் பரப்பளவு 22,862 சதுர கிமீ. தக்காண பீடபூமி, மத்திய பீடபூமி, கிழக்கு பீடபூமி, கிழக்குக் கடற்கரைச் சமவெளி என்று இம்மாநிலத்தின் வனப் பகுதிகள் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலை, நல்லமலை, வங்காள விரிகுடாவின் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றில் வனப் பகுதிகள் செழித்திருக்கின்றன. 13 சரணாலயங்கள், ஒரு தேசியப் பூங்கா இங்கு உண்டு.
நீராதாரம்
மொத்த நீராதாரம் 867.04 டிஎம்சி. இம்மாநிலத்தின் நீராதாரத் தகவல் மற்றும் நிர்வாக அமைப்பு நாட்டின் சிறந்த அமைப்புகளில் ஒன்று எனும் பாராட்டைப் பெற்றது. பெரிய, நடுத்தர அணைத் திட்டங்கள், நீர்ப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றை செயற்கைக்கோள் உதவியுடன் அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது. 142 முழுமையடைந்த அணைக்கட்டுகள், கட்டுமானப் பணி நிலுவையில் இருக்கும் 25 அணைக்கட்டுகள், 89 நீர்த்தேக்கங்கள், 38,413 சிறு பாசன அமைப்புகள் உள்ளன.
கனிம வளம்
கனிம வளங்கள் உற்பத்தி சராசரியாக ரூ.16,587 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நிலக்கரி, இயற்கை வாயு, இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல் கணிசமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. 2010-11 கணக்கின்படி, இந்தியாவின் கனிம வளத்தில் ஆந்திரத்தின் பங்கு 7.81%.
பொருளாதாரம்
பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்துவரும் மாநிலம் ஆந்திரம். மாநிலத்தின் 2017-18 நிதியாண்டு ஜிடிபி மதிப்பு ஏறக்குறைய ரூ.8.5 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. விவசாயம் 34%, தொழில் துறை 22%, சேவைத் துறை 44%. 2017-18 நிதியாண்டு தனிநபர் வருமானம் ரூ.142,054. 62% மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவது விவசாயத்தின் மூலமே. நாட்டின் கோகோ பீன்ஸ் உற்பத்தியில் ஆந்திரத்தின் பங்களிப்பு 70.7%. மீன், புகையிலை, மிளகாய், வாழை, எலுமிச்சை உற்பத்தியிலும் கணிசமான பங்கு வகிக்கிறது. வர்த்தகத்தில் இலகுவான சூழலைக் கொண்ட மாநிலம் என்று உலக வங்கியால் பாராட்டப்பட்ட பெருமை ஆந்திரத்துக்கு உண்டு.
அரசியல் சூழல்
1983 வரை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய மாநிலம்.
என்.டி.ராமாராவால் 1982-ல் தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி, ஒரே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு, 1995-ல் கட்சியைக் கைப்பற்றி முதல்வரானார். 1999 தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரானார். 2004, 2009 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்தது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி செல்வாக்கு மிக்க முதல்வராக இருந்தார். 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். காங்கிரஸுடனான மோதலில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸை வளர்த்தெடுத்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பாஜகவும் சவால்களாக முன்னிற்கின்றன. காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண்கிறது. நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
முக்கியப் பிரச்சினைகள்
2014 பிப்ரவரியில் மாநில மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அது நிறைவேறவில்லை. இத்தேர்தலில் பிரதான பிரச்சினை அதுதான். 2014-15 முதல் மத்திய அரசு இதுவரை வழங்கியிருக்கும் நிதியுதவி மிகக் குறைவு என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டுகிறார். கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம், வேளாண் துறை பிரச்சினைகள், பட்டியலின சமூகத்தினருக்கு நலத் திட்டங்கள் போன்றவை இத்தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் பிற பிரச்சினைகள்.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago