எரிந்துபோன பாரிஸின் இதயம்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஈ பிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.

ஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.

“கத்தோலிக்கர்களின் புனிதத் தலம் என்பதைத் தாண்டி பிரான்ஸ் நாட்டின் அரசியல், சமூக, பண்பாட்டு, இலக்கிய வரலாற்றிலும் அந்தத் தேவாலயத்துக்கு இடம் உண்டு. 1793-ல் பிரெஞ்சு புரட்சி நடந்தபோது அந்தத் தேவாலயத்துக்குள் இருந்த சில மதகுருக்களின் தலைவர்கள் சிலைகளை அரசர்களின் சிலை என்று நினைத்து 27 சிலைகளின் தலைகளை பிரெஞ்சு புரட்சியாளர்கள் வெட்டினார்கள். அவை தற்போது இன்னொரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1944-ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டபோது இந்தத் தேவாலயத்துக்குள்தான் பெரும் கொண்டாட்டமொன்று நடந்தது. விக்டர் ஹ்யூகோ 1831-ல் இந்தத் தேவாலயத்தை மையமாகக் கொண்டு கூனமுதுகு கொண்ட க்வாசி மோதோ என்ற கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார். நிறைவேறாத காதல், தியாகத்தின் உருவம் அவன். விகாரமான உருவத்துக்குள் துணிச்சலான இதயம் ஒன்று குடியிருக்க முடியும் என்பதுதான் விக்டர் ஹ்யூகோ எழுதிய ‘நோத்ர தாமின் கூனன்’ நாவலின் செய்தி” என்கிறார் பிரெஞ்சு சமூகத்தோடு தொடர்புடைய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வெ.ஸ்ரீராம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பாரிஸுக்குச் சென்ற அனுபவத்தை ‘பிக்காஸோவின் ஆடு’ என்ற பெயரில் கட்டுரையாக எழுதியுள்ளார். ஒரு சிறந்த சிறுகதையைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும். நோத்ர தாம் தேவாலயத்தின் கலை நுணுக்கங்களின் பிரமாண்டத்தைப் பார்த்து, ஒரு எழுத்துக் கலைஞனாக இருப்பதற்கு வெட்கப்பட்டிருப்பார் சுந்தர ராமசாமி. நாத்திகரும் பிரெஞ்சு நவீனத்துவத் தாக்கமும் கொண்டவரான சுந்தர ராமசாமி, அந்தத் தேவாலயத்துக்குள் மண்டியிட்டுக் கண்ணீர்விட்டதை நெகிழ்ச்சியுடன் எழுதியிருப்பார். அவர் வழியாகத்தான் நோத்ர தாம் தேவாலயம் எனது கனவுப் பிராந்தியங்களில் ஒன்றாக மனதுக்குள் நுழைந்தது. எப்போது பாரிஸுக்குப் போகச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இந்தத் தேவாலயத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடம் அது.

கூர்மாட பாணி (Gothic Architechture) கட்டிடக் கலையின் உச்சம் என்று கொண்டாடப்படுவது நோத்ர தாம் தேவாலயம். பிரமாண்டமான தூண்கள், பொன் வேலைப்பாடு கொண்ட சிலைகள், ஓவியங்கள், கன்னிமாடங்கள், அடிவளைவுடன் கூடிய சுதைக்கட்டுமானங்களைக் கொண்டது. இங்கேயுள்ள பல வண்ணங்களில் சூரிய ஒளி ஊடுருவும் கண்ணாடி பதிக்கப்பட்ட ஜன்னல்கள் மிகவும் புகழ்பெற்றவை. கோதிக் நாவல் என்ற வகைமையில் மர்மமும் புதிர் முடிச்சுகளும் கொண்ட எத்தனையோ திகில் கதைகளுக்கும் இந்தத் தேவாலயம் மையமாக இருந்துள்ளது.

பிரான்ஸ்வாசிகளின் ஆன்மா சொல்லும் செய்தி

பாரிஸின் நடுவே சேன் நதி இரண்டு கிளைகளாகப் பிரிந்து உருவாக்கிய தீவில் நோத்ர தாம் உள்ளது. மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நகரத்தின் மையத்தில் பிரெஞ்சு மக்களின் பகுத்தறிவுவயப்பட்ட சிந்தனைக்கு வெளியே அது உயர்ந்து நிற்கிறது. அனைத்துக்கும் மத்தியில் மர்மமும் அறியவொண்ணாத ஒன்றும் இருப்பதை உணர்த்தியபடி அந்தக் கோபுரங்கள் பிரமாண்டமாக நின்றுகொண்டிருப்பதாக எழுதுகிறார் பாரிஸைச் சேர்ந்த இதழியலாளர் பமேலா ட்ரக்கர் மேன்.

நோத்ர தாமின் இரண்டு கோபுரங்களும் சிதையாமல் உயிர்ப்புடன் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இன்னும் ஐந்தாண்டுகளில் மீண்டும் தேவாலயத்தைக் கட்டியெழுப்புவோம் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். நம்புவோம். சேன் நதியில் வந்த வெள்ளம், சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து, பாரிஸின் மீது இன்னொரு இடி விழுந்துள்ளது. இதை பிரெஞ்சு அதிபர் மெக்ரான், பாரிஸ் குடிமக்கள் உணரும் ‘அக நடுக்கம்’ என்று குறிப்பிடுகிறார். வெறுமையுணர்வையும் காரணம் புரியாத இழப்பின் கையறு நிலையையும் உணர்த்துவதற்கு இதைவிடத் துல்லியமான பிரயோகம் இருக்க முடியாது.

சதையிலிருந்து ஆன்மாவை நோக்கி உயர்ந்து எழத் துடிக்கும் மனித இதயங்களுக்குக் கோபுரங்கள் வெறும் சமய அடையாளங்கள் மட்டும் அல்ல. அதனால்தான், மத நம்பிக்கையைப் பெருமளவு கடைப்பிடிக்காத மக்கள் வாழும் பிரான்ஸ் தேசத்தினரை, தீப்பற்றி எரிந்த நோத்ர தாம் தேவாலயம் பரிதவிக்க வைத்துள்ளது!

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்