எப்படியிருக்கிறது இந்தியா?- மேற்கு

By வ.ரங்காசாரி

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்களும் கோவா, டையு-டாமன், தாத்ரா-நாகர்ஹவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளும் இந்தியாவின் மேற்கில் உள்ளன. பண்டைக் காலத்தில் குஜராத்தையொட்டிய நிலப்பரப்பை சிந்து, கூர்ஜரம், வல்லபி என்று பிரித்திருந்தனர். பிரிவினைக்கு முன்னால் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணமும் பலுசிஸ்தானும் மேற்குப் பகுதியாகவே இருந்தன. மேற்கில் உள்ள மக்களவைத் தொகுதிகள் 101. மக்கள்தொகை 24,34,07,963. இந்தியாவின் மக்கள்தொகையில் இது 20.8%.

மேற்கிந்தியா ஓர் அறிமுகம்

மகாராஷ்டிரம் மக்கள்தொகையில் நாட்டில் இரண்டாவது இடத்தையும், பரப்பளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மாநிலத்தின் பெரும் பகுதி தக்காணப் பீடபூமி. மேற்குப் பகுதியில் அரபிக்கடல். மகாராஷ்டிரத்தின் தலைநகரம் மும்பையில் மட்டுமே 1.8 கோடி மக்கள் வசிக்கின்றனர். கோதாவரி, கிருஷ்ணா மிகப் பெரிய நதிகள். நர்மதை, தபதி நதிகளும் ஓடுகின்றன. நகர் மயத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% மகாராஷ்டிரம் மூலம் கிடைக்கிறது. தொழில் உற்பத்தியில் 17%, சேவைத் துறையில் 16% மகாராஷ்டிரத்தின் பங்களிப்பு. மகாராஷ்டிரத்தின் மொத்த உற்பத்தி ரூ.27.96 லட்சம் கோடி. அமராவதி, அவுரங்காபாத், கொங்கண், நாகபுரி, நாசிக், புணே என்று மகாராஷ்டிரம் ஐந்தாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் 1,600 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய மாநிலம். மொத்த உற்பத்தி ரூ.14.96 லட்சம் கோடி. குஜராத்தை - தெற்கு, வடக்கு, மத்திய குஜராத், சவுராஷ்டிரா-கட்ச் என்று - நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நிர்வகிக்கின்றனர். 20 பெரிய நகரங்கள் உள்ளன. பருத்தி, நிலக்கடலை, பேரீச்சம்பழம், கரும்பு அதிகம் சாகுபடியாகின்றன. பால் உற்பத்தி, பால் பண்டங்கள் தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. உலகின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஜாம் நகரில் உள்ளது. உலகின் மிகப் பெரிய கப்பல் உடைக்கும் துறைமுகம் அலங், குஜராத்தில்தான் உள்ளது.

ராஜஸ்தான் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாநிலம். வேளாண்மை, கால்நடைச் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது. கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துகள் சாகுபடியாகின்றன. பருத்தி, புகையிலையும் சில பகுதிகளில் விளைகிறது. உரோமத் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. மாநிலத்தின் பாசனத் தேவையைக் குளங்களும் கிணறுகளும் இந்திரா காந்தி கால்வாயும் பெரிதும் பூர்த்திசெய்கின்றன. கனிமம் சார்ந்த தொழில்களும் ஜவுளியும் முக்கியம். சலவைக்கல் என்று அழைக்கப்படும் பளிங்குக் கற்கள் மாநிலத்தின் வருவாயைப் பெருக்குகின்றன.

எதிர்கொள்ளும் சவால்கள்

மகாராஷ்டிரத்துக்குப் பிற மாநிலங்களி லிருந்து வேலை தேடி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரு கிறது. இது குடியிருப்பு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான தேவையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கேற்ப நகரின் அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் பராமரிக்கப்படவில்லை. சிறு மழைக்கே நகரில் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ரயில், பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது. மகாராஷ்டிரத்தில் இயற்கை வளம் வற்றிக்கொண்டிருக்கிறது. தண்ணீருக்குப் பெருத்த பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் வரம்பற்ற வன அழிப்பு கொங்கணம் உள் ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை சிதைத்துக் கொண்டிருக்கிறது. தனியார் வாகனங்களின் பெருக்கம், பிளாஸ்டிக் குப்பைகளின் பெருக்கம், நகர்ப்புறத் திடக்கழிவுகளை அகற்றுவதில் மெத்தனம் அதிகரித்துவருகின்றன. பிற மாநில மக்களின் வருகையால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும் வருவாயும் குறைகிறது. குடியிருக்கும் வீடுகளின் வாடகை உயர்கிறது. பொது விநியோக முறை மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அவசியப் பண்டங்களை விநியோகிக்கும் செலவும் மானியமும் அதிகமாகிறது. இது நிதி நிர்வாகத்தை மிகவும் பாதிக்கிறது. கலாச்சாரரீதியாக மராத்தி மொழிக்கான இடம் சுருங்கி இந்தி, ஆங்கிலம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

குஜராத்தில் தாராளவாத பொருளாதாரக் கொள்கை நடைமுறையால் தொழில், வாணி பம் பெருமளவில் விரிவடைந்தது. அத்துடன் சேவைத் துறையும் வளர்ச்சிபெற்றது. ஆனால், பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல் ஆகியவற்றாலும், அதிக வரி விகிதங்களாலும் குஜராத்தின் தொழில், வியாபாரத் துறைகள் பலமாக அடிபடத் தொடங்கின. வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் கிட்டத்தட்ட இழுத்து மூடப்பட்டன. இதனால், ஏழைகளிடத்தில் பணப்புழக்கமும் நுகர்வும் குறைந்து குஜராத் பொருளாதாரத்தைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் உற்பத்தித்திறன் அதிகரித்தும் விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. குஜராத்தின் வளர்ச்சிபெற்ற சமூகமான படிதார்கள் (படேல்கள்) நிரந்தர வேலையில் தங்கள் சமூகத்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கிளர்ச்சிசெய்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் விவசாயம் சார்ந்தது. பயிர் பொய்த்தாலும் விளைச்சல் அதிக மானாலும் விவசாயிகள் வருமான இழப்பைச் சந்திக்கிறார்கள். தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய பிரச்சினை. இதனால் வியாபாரம், தொழிலை விரிவுபடுத்த முடிவதில்லை. மின் சார உற்பத்தியும் போதவில்லை. நபர்வாரி வருவாய் குறைவு என்பதால் தொழில் முதலீட்டுக்கு நிதி திரள்வதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தரம் உயர்வதில்லை. இது ராஜஸ்தானியர்களின் வருவாயில் எதிரொலிக்கிறது. வறட்சியின் தொடர் விளைவாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கத் திட்டம் அனைத்துமே பாதிப்படைந்துள்ளன.

அரசியல் நிலைமை என்ன?

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனைக் கூட்டணிக்குப் பெரிய சவாலாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உருவெடுத்துவருகிறது. காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பணியாற்றினால் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புகள் அதிகம். குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சிசெய்து வருவதால் அதிருப்தி அதிகமாகிவருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நூலிழையில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பாஜக. ராஜஸ்தானில் மாநில ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட காங்கிரஸ், மத்தியிலும் ஆட்சிக்கு வர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜகவைவிட காங்கிரஸ் பெரிய கட்சியாக இருக்கிறது. மனோகர் பாரிக்கர் என்ற தனிநபரின் ஆளுமையால் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் பாரிக்கர் இல்லாதது கட்சியால் உணரப்படும். டையூ-டாமன், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய பகுதிகள் எப்போதும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியையே தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்துவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்